ஏ.எச்.சித்தீக்
காரியப்பர்
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை நிறுவி விட்டது. இன்று அதன் முன்பாக பாரிய பொறுப்புகள் உள்ளன. ஏனைய மாகாண சபைகள் போன்றல்லாது வடமாகாண சபைக்கு அதிக பணிகள் உள்ளன. முதன் முலாக வடக்கில் நிறுவப்பட்ட மாகாண ஆட்சி என்பதனால் அனைத்துப் பணிகளையும் ஆரம்பத்திலிருந்து புதிதாகச் செய்ய வேண்டிய கட்டாய நிலை அந்த மாகாண சபைக்கு உள்ளது.
இதற்கு மேலாக தென்னிலங்கை சிங்கள சக்திகளின் விமர்சனங்களையும் எதிர் அம்புகளையும் தாங்கிக் கொண்டே மறுபுறத்தில் மத்திய அரசின் கடுமையான பார்வையின் கீழ் செயற்பட வேண்டிய நிலை. இவை அனைத்துக்கும் மேலாக வடபுல மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களது அபிலாஷைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டிய கட்டாய நிலை. தமிழ் மக்கள் தங்களை எதற்காக ஆட்சி பீடமேற்றினார்களோ அதனைப் புரிந்து கொண்டு பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை, சர்வதேசத்தின் கழுகுப் பார்வையின் முன் களங்கம் ஏற்படாமல் நிர்வாகத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிதானம்.. இவைகள்தான் இன்று வட மாகாண சபையின் ஆட்சி நிர்வாக இயந்திரத்தின் சுழற்சி சக்கரங்களாக உள்ளன.
நிலைமைகள் எல்லாம் இவ்வாறாக இருக்க, இன்று நடப்பது தான் என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் பயணிக்கும் பாதை எதனை நோகிச் செல்கிறது? உள்வீட்டுச் சண்டையினால் இன்று உள்ள விடயங்கள் அனைத்தினையும் மறந்து செயற்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் ஐக்கியத்துடன் ஒன்றாகக் குரல் கொடுத்துச் செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வடக்கில் தமிழர் வாழ்புலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் முரண்பாட்டுக் கொள்கைக்குள் தன்னை ஆக்கிக் கொண்டுள்ளது.
1. மாகாண அமைச்சுகளில் பங்கு போடுவதில் சிக்கல்.
2. யாருக்கெல்லாம் அமைச்சு என்பதில் முரண்பாடுகள்.
3. யார் யாரிடம் சத்தியப் பிரமாணஞ் செய்து கொள்வது என்பதில் முரண்பட்ட தன்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைமையைக் கண்டு தென்னிலங்கை சிங்கள இனவாத சக்திகள் இன்று கைகட்டிப் பார்த்து நிற்கவில்லை. பதிலாகக் கைதட்டிச் சிரிக்கின்றன. தமிழருக்காகப் பேசிய சர்வதேசமோ மெளனித்துப் போயுள்ளது.
பதவிச் சண்டை, பதவிப் பிரமாணச் சண்டை என்றெல்லாம் வெட்கக் கேடான விடயங்கள் அரங்கேறி விட்டன. ஒரே கூட்டமைப்புச் சேர்ந்தவர்கள் இன்று பல கூத்துக்களை அரங்கேற்றி வருகின்றனர். முள்ளியவாய்க்காலிலும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் வெவ்வேறாகச் சத்தியப் பிரமாணஞ் செய்து கொண்டதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாற்றில் இப்போது ஒரு கரும்புள்ளி பதிவாகி விட்டது. தென்னிலங்கைச் சிங்கள அரசியல் கட்சிகள் கூட தங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இவ்வாறானதொரு சத்தியப் பிரமாணத்தைச் செய்வில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறாத நிலையில் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டு வட மாகாண முதலமைச்சராக தெரிவான சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையிலேயே சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள சில உறுப்பினர்கள் விரும்பவில்லை என்றால் இந்தக் கட்சிக்குள் இன்று எழுந்துள்ள பிரச்சினை எந்தளவு பாரியது என்பதனைப் புரிந்து கொள்ள முடியும்.
மத்திய அரசாங்கமானது மாவட்ட அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் தற்போது அதிக கவனத்தைச் செலுத்தியுள்ள நிலையில், வடமாகாண அமைச்சர்களை மாவட்ட அமைச்சர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே மாற்றி மத்திய அரசின் பணியை இலகுவாக்கி விடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மன்னாருக்கு ஓர் அமைச்சர் வேண்டும். வவுனியாவுக்கு இன்னொரு அமைச்சர் தேவை, முல்லைத்தீவு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சுகள் வேண்டுமென்றெல்லாம் கோரிக்கைள். ஆனால், அங்கெல்லாம் வாழ்பவர்கள் தமிழர்கள்தான் என்பதனைக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் இன்று மறந்து செயற்பட துணிந்து விட்டமையானது அவர்களது பிரதேசத வாதத்தின் வாசத்தையே பரப்பியுள்ளது.
இதனை விட, அவரை அமைச்சராக நியமிக்க வேண்டும். இவரை அமைச்சராக நியமிக்கக் கூடாது என்ற கூத்தெல்லாம் கூட்டமைப்புக்குள் நிறையவே நடந்து விட்டன. இதற்காகத்தான் வடபுலத் தமிழ் மக்கள் இவர்களை ஆட்சியில் அமர்த்தினார்களா? வடபுல ஆட்சி என்பது எதிர்காலத்தில் குரங்கின் கையில் பு மாலையாகி விடுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இவ்வாறானதொரு நிலையை விட ஆளுந்தரப்பே வடக்கில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்குமென வடபுல மக்கள் சிந்திக்கும் காலம் கூட வருவதற்கான நதிமூலத்தை கூட்டமைப்பே இன்று தோண்டியுள்ளது.
60 வருட காலப் போராட்டம். அதில் 30 வருட ஆயுத மோதல். அஹிம்சையும் ஆயுதமும் தோற்றுப்போன நிலையில் இன்றைய தமிழினம் இன்னொரு அமைதிக்கான எதிர்பார்ப்புக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தளவு வெற்றியைக் கொடுத்திருந்தது. ஆனால், இன்று அந்த மக்கள் தாங்கள் தவறு செய்து விட்டோமோ என சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தங்களைத் தமிழ் அரசியல் தலைமைகள் ஏமாற்றி விட்டதோ என்று உணரத் தொடங்கியுள்ளனர். வடபுலத் தமிழ் சமூகம் எதனையோ தொலைத்தவர்கள் போல் இன்று காணப்படுகிறது.
கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து வடக்கில் எத்தனையோ அபிவிருத்தித்
திட்டங்களை அரசு முன்னெடுத்தும் அவை அத்தனையையும் நிராகரித்த நிலையிலே தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாகளித்தனர்.
நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் ஐக்கியத்தை சிங்கள அரசுக்கு காட்டினார்கள். வெறும் அபிவிருத்திகளால் தங்களை வெல்ல முடியாது என்ற செய்தியைக் கூறி வைத்தனர். அதேபோன்று சர்வதேசத்துக்கு தங்களது ஒற்றுமையை ஒட்டுமொத்தமாகக் காட்டி நின்றனர். ஆனால், அவர்களால் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ இன்று தங்களைத் துருவப்படுத்தி விட்டு தமிழ் மக்களை நிர்வாணமாக்கியுள்ளனர்.
இதற்குத்தானா வடபுல மக்கள் அச்சுறுத்தலுக்கும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இவர்களுக்கு வாக்களித்தார்கள். மிக வேதனையான விடயம்.
தாங்கள் வடபுல தேர்தலில் தோற்றுப் போனது நல்லதற்கே. தமிழ் மக்கள் இப்போது நிலைமைகளைப் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என மத்தியில் ஆளும் அரசாங்கம் இன்று நினைக்கும் அளவுக்கு வடக்கில் அரசியல் அசிங்கங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
தமிழனைத் தமிழன் ஆள்வதனை விட, சிங்களம் தமிழனை ஆள்வதனாலேயே தமிழனுக்கு நன்மை என்ற ஒரு புதிய அரசியல் கோட்பாடு இன்றைய வட புல அரசியலில் உருவாகி தென்னிலங்கையை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் சர்வதேச சமூகம் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை கண்டு யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவை தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளவும் இது வழிவகுக்கிறது.
முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அன்றைய இலங்கை அரசுக்குமிடையில் வெளிநாடொன்றில் பேச்சுவார்த்தை நடந்த கொண்டிருந்தபோது அதில் அமைச்சர் ஹக்கீம் அரசு சார்பில் பங்கேற்றார். அப்போது அமைச்சர் ஹக்கீமைப் பார்த்து அன்டன் பாலசிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
”முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதாயின் முதலில் உங்கள் கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு மேசைக்கு வாருங்கள். அதன் பின் நாம் பேசுவோம்.” என்றார். இது போன்றதொரு நிலைமை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்படுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ”உங்களது கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்து விட்டு வாருங்கள். அதன் பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் பற்றிப் பேசுவோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பார்த்து சர்வதேசம் சொல்லுகின்ற அளவுக்கு விடயங்கள் தலைக்கு மேல் வெள்ளமாகப் போயுள்ளது.
தமிழ்த் தேசியம், தியாகம் போன்றவற்றின் பெயரால் கேட்கப்பட்டு தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளின் அறுவடையால் கிடைத்த வெற்றியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய போக்கினால் தமிழர்கள் தங்கள் வாக்குரிமையிலும் தோற்று ஏமாந்து விட்டனரோ என்ற வரலாற்றுக்கு இட்டுச் செல்லுமோ என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 27-10-2013


No comments:
Post a Comment