Sunday, June 29, 2014

இராமனைப் போல் ராசா இருந்தால்தான் அனுமான் போல் சேவகனும் இருப்பான்!

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அளுத்கமை, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பிரேரணை ஒன்றினை முன்வைப்பது குறித்து அண்மையில் கிழக்கு மாகாண சபையில் எழுந்த பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. சில வேளைகளில் பொதுபல சேனாவையும் முஸ்லிம்களையும் ஒரே மேசைக்குக் கொண்டு வந்து சமாதானமாக அனைத்தையும் தீர்த்து விடக் கூடியதாகவிருந்தாலும். கிழக்கு மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களிடையே இன்று எழுந்துள்ள அமளிதுமளியான நிலைக்கு தீர்வு காண்பது கஷ்டம் போல் தெரிகிறது.

அளுத்கமை, பேருவளை சம்பவங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் அவசரப் பிரேரணை ஒன்றை முன்மொழிந்து உரையாற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அனுமதி கோரியிருந்த நிலையிலும் தவிசாளரால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விடயத்தில் தவிசாளர் தவறு எதனையும் செய்யவில்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே அதற்கான அனுமதியை வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.

Sunday, June 22, 2014

சட்டமும் ஒழுங்கும் சிரித்துக் கொண்டிருந்த போது... அறியாமல் அழுது கொண்டிருந்த அளுத்கமை மக்கள்

ஏ.எச் .சித்தீக் காரியப்பர்
தமிழர்களுக்கு எதிரான 1983 ஜுலைக் கலவரத்தின் அகோரத்தை, அந்த இன சங்காரத்தை கொழும்பு கோட்டை ரயில் நிலைய பாலத்தின் மேல் நின்று நேரடியாகவே பார்த்துக் கொண்டிருந்த நினைவுகளையும் மியன்மார் முஸ்லிம்கள் மீது அந்நாட்டு பௌத்தர்கள் மேற்கொண்ட அநியாயங்கள் அக்கிரமங்களை ஊடகங்கள் மூலம் பார்த்து படித்த அண்மைக்கால ஞாபகங்களையும் கடந்த வாரம் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு மீட்டு விட்டது.
ஆயிரம், ஆயிரம் கோடிகள் நஷ்டம், மூன்று மனித உயிர்கள் பதறப் பதறப் பறிக்கப்பட்ட கொடூரம், நூற்றுக்கு மேற்பட்டோர் காயம். நூற்றுக்கணக்கில் வீடுகள்,  வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவங்கள்.

Saturday, June 7, 2014

ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ? செல்லம்மா எந்தன் செல்லம்மா...

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


கௌரவம் என்ற பழைய தமிழ் படம் ஒன்றில் ஒரு பாடல் வருகிறது.. நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?  காலம் மாறினால் கெளரவம் மாறுமா? அறிவை கொடுத்ததோ  துரோணரின் கெளரவம். அவர் மேல் தொடுத்ததோ அர்ச்சுனன் கெளரவம். நடந்தது அந்தநாள் முடிந்ததா பாரதம்? நாளைய பாரதம் யாரதன் காரணம்? என்பதே அந்தப் பாடல் இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடியதாக தீர்க்கதரிசனத்துடன் எழுதியுள்ளார் போல் தெரிகிறது. மேற்சொன்ன பாடல் வரிகள் போன்ற நிலைமையே  இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவுப் ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ளது.

Sunday, June 1, 2014

கடந்த சென்று விட்ட நேற்றைய நாள் இன்றைய நாளை பாழ்படுத்த கூடாது!



ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முகங்கொண்டு அதற்கான தீர்வினைக் காணும் விடயத்தில் அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலும் அதன் அவசியம் குறித்தும் மீண்டும் இப்போது பேசப்படுகிறது. அதாவது, ஒரு கை ஒருபோதும் ஓசையைத் தராது. இரு கைகள் இணைந்தாலே சத்தம் வரும் என்பது போன்றதாக செயற்பட வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் கருக்கட்டத் தொடங்கியுள்ளது.

Sunday, May 25, 2014

அறிந்தறிந்து செய்கின்ற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்!




                                                ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

தேர்தல் ஒன்று வருகிறது என்பதற்காகவோ அல்லது உண்மையில் மன வேதனை காரணமாகவோ தெரியாது அமைச்சர் ரவுப் ஹக்கீம் பல விடயங்களை மனம் திறந்து அதுவும் ஆக்ரோஷமான முறையில் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாகவே அவரது கருத்துகள் அமைந்திருந்தன.

இவ்வாறு அமைச்சர் ரவுப் ஹக்கீம் மட்டுமல்ல.. முஸ்லிம் தரப்பு அரசியல்வாதிகளில் பலரும் சமூகம் சார்ந்த கருத்துகளையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்களின் கருத்துகள், இவர்கள் காட்டும் சமூக அக்கறையில் முஸ்லிம் மக்கள் பெருவாரியான நம்பிக்கை கொண்டவர்களாக தற்போது இல்லை என்ற யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, முஸ்லிம் அரசியல்வாதிகள் பனை மரத்தின் கீழிலிருந்து பாலைக் குடித்தாலும் அதனைப் பால் தான் என்று நினைக்காத, நம்பாத ஒரு  நிமையையே முஸ்லிம்களிடம் இன்று காணப்படுகிறது. இவ்வாறானதொரு நிலைமையைத் தோற்றுவித்தவர்களும் சில முஸ்லிம் அரசில்வாதிகளே.

Wednesday, May 21, 2014

அறிக்கைகள் மட்டுமே ஆகப் போனது ஒன்றுமில்லை

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


தம்புள்ளை பள்ளிவாசல், அளுத்கமவில் கடை எரிப்பு, கம்பளையில் எதிர்ப்பு பேரணி இவைகள் மூன்றும் கடந்த முப்பது நாட்களுக்குள் இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொண்ட சம்பவங்கள். பிரித்தானியாவில் எதிர்ப்பு பேரணி நடத்தினாலும்  சரி, ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினாலும் சரி முஸ்லிம்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்ற பாணியில் சிஙகள இனவாத அமைப்புகளினதும் சிங்கள இனவாத தனி நபர்களினதும் நடவடிக்கைகள் தொடர்கிறது. மறுபக்கத்தில் முஸ்லிம் தரப்புகளும் இவ்வறான செயல்கள் இடம்பெறும் போது மட்டும் உஷாரடைவதும் அறிக்கையிடவதும் பின்னர் வழமை நிலைக்கு திரும்புவதுமான நிலை. இவற்றினை மட்டுமே அவர்களால் செய்ய முடிகிறது.

முஸ்லிம் தரப்புகள் முடிந்தவற்றைச் செய்கிறார்கள். ஆனால் அவற்றுக்கான முடிவினை அவர்களால் காண முடியாது போகிறது. அரச தரப்பும் வாக்குறுதிகளை வழங்குக்கிறது. உடனடி நடவடிக்கை என்று கூறுகிறது. ஆனால், ஒன்று நடந்தபாடில்லை. இதுதான் உண்மை நிலைமை.

Sunday, May 11, 2014

அவசரமாக தவறினை செ‌ய்வதை ‌விட தாமதமாக ச‌ரியாக‌ச் செ‌ய்வதே மேல்!



ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, கல்முனை கரையோர மாவட்டம், அல்லது அதற்குப் பதிலீடான சகல நிறைவேற்று அதிகாரமும் கொண்ட மேலதிக மாவட்ட செயலகம். ஆகிய நிபந்தனைகளுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கு ஆதரவளித்து கிழக்கு மாகாண சபையில் பங்கெடுத்துக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அன்றுதாம் முன்வைத்த இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் இப்போது மீண்டும் ஒரு ஞாபகமூட்டலுக்கு வந்துள்ளது.

Saturday, May 3, 2014

அநியாயத்துக்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை! நியாயத்திற்கு இறைவன் கருணையே போதும்!!



 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களுக்கென தனியான தென்கிழக்கு அலகு ஒன்று தேவையென்ற விடயத்தில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் மிகுந்த அக்கறையுடன் காணப்பட்டார் என்ற விடயம் அறிந்ததே. அவர் இறக்கும் வரை தென்கிழக்கு அலகு ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றிருந்தார். இருப்பினும் அவரது மறைவினாலும் இணைந்த வடகிழக்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டதாலும் இந்த தென்கிழக்கு என்ற விடயம் பெரிதாகப் பேசப்படாத ஒன்றாகவும் கைவிடப்பட்ட கோரிக்கையாகவும் இன்று மாற்றமடைந்து காணப்படுகிறது.

Sunday, April 27, 2014

வடக்கில் புலி வேட்டை! தெற்கில் தேரர் வேட்டை!!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஒரே காலப் பகுதியில் இரு விடயங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. வடக்கில் புலி வேட்டை, தெற்கில் தேரர் வேட்டை,  அங்கு புலிகள் மீண்டும் உயிர் பெறுவதாக அரசு கூறிக் கொண்டு சட்ட ரீதியாக தனது தேடுதல்களையும் கைதுகளையும் துரிதப்படுத்திக் கொணடிருக்கும் அதேவேளை, தெற்கில் முஸ்லிம் மக்களில் அடிப்படைவாதிகள் தோற்றம் பெற்றுள்ளதாகவும் சிலர் தேரர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாகச் செயற்படுவதாகவும் கூறிக் கொண்டு பொதுபல சேனா உட்படலான சில அமைப்புகள் சட்டத்துக்கு முரணான வகையில் அமைச்சு ஒன்றுக்குள் அத்து மீறி நுழைந்து தேடுதல் நடத்தும் அளவுக்கு விடயங்கள் இடம்பெறுகின்றன. நாடு ஒன்று.  ஆனால்,  நடவடிக்கைகள் இரண்டான ஒரு கடை கெட்ட நிலைமைக்கு இன்று அனைத்தும் சென்றுள்ளன.

Sunday, April 20, 2014

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம்! உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்!!

                                                                         ஏ.எச்.சித்தீக் காரியப்பர்



ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணாஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா..நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு..என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு..என்பது அவன்தான மனிதன்படத்தில் வரும் கண்ணதாசனின் பாடல். இந்தப் பாடலை நினைக்கும்போது பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளுக்கான பின்னணிகளே நினைவுக்கு வருகின்றன.

இந்த அமைப்பின் முஸ்லிம் விரோத போக்குகள் அத்துமீறிப் போனமை தொடர்பில் இன்று அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களே இந்த அமைப்பினை வெறுப்புடன் விமர்சிக்கத் தலைப்பட்டுள்ளதுடன் இதன் பின்னணிகள் தொடர்பிலும் தங்களது கருத்துகளை பொத்தி, பொத்தி வைக்காமல் பகிரங்கமாகத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.

Saturday, April 12, 2014

கிணற்றில் தவறி வீழ்ந்ததை எண்ணியே வருந்தாமல் வாய்ப்பைப் பயன்படுத்தி குளித்துக் கொள்வதே சிறப்பு



ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தல்களின்போது சற்று அடங்கிப் போயிருந்த முஸ்லிம்களுக்கு எதிரான முன்னெடுப்புகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்கி விட்டன. இரு தேர்தல்களின் பின்னர் கொழும்பு, மாளிகாவத்தை மையவாடி காணியுடன் ஆரம்பித்த விவகாரம் இன்று வில்பத்து வரை சென்றுள்ளது.  அண்மையில் நடந்து முடிந்த விடயங்களை நோக்கும் போது இந்த நாட்டின் சட்டம், ஒழுங்கு எவர் கைகளில் உள்ளன என்பதும் இங்கு கேள்விகளாக முன்வைக்க வேண்டிய விடயங்களாகவே உள்ளன. அந்தளவுக்கு அத்துமீறல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கினறன.

மத நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் ஜாதிக பலசேனா என்ற அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்ததால் அங்கு பெரும் அமளி ஏற்பட்ட  நிலையில் அந்தக் கூட்டமும் கைவிடப்பட்டது.

Monday, April 7, 2014

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் தேர்தல் வெற்றிகள்... வடக்கு, கிழக்கில் போன்று மேற்கிலும் சாயம் வெளுக்குமா?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மேல்மாகாணத்தில் போட்டியிட்ட இரு முஸ்லிம் கட்சிகளும் தாங்கள் தோல்வியடையவில்லை என்று அவர்களே சொல்லக் கூடியபடி வெற்றி பெற்றுள்ளன. அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைக் கைப்பற்றி அதிர்ச்சி வெற்றியைப் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் இதற்கு முன்னரும் பல தடவைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு ஓரளவு ஆசனங்களை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் வடக்கு கிழக்குக்கு வெளியே இடம்பெறும் இவ்வாறான தேர்தல்களில் ஆசன அதிகரிப்பில் தொடர்ந்தும் தொய்வு நிலையே காணப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தல்களின்போது அந்தக் கட்சி இரண்டு ஆசனங்களை எதிர்பார்க்கவில்லை. அதனை விட அதிகமாகவே அந்தக் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.

Saturday, March 29, 2014

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக அமைந்து விடக் கூடாது



                                                    ஏ.எச்.சித்தீக் காரியப்பர்



சினிமாப் படமொன்றில் வரும்.. ஆனா வராது.. என்ற டயலொக் போன்று அண்மைக் காலமாகப் பேசப்பட்ட ஒரு விடயம் நடந்து முடிந்து விட்டது. கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர், முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் என்றெல்லாம் இதுவரை அழைக்கப்பட்டு வந்த சிராஸ் மீராசாகிப் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸில் சேர்ந்து  விட்டார். இது தொடர்பான வைபவம் கல்முனையில் கடந்த வாரம் பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது.

Sunday, March 23, 2014

வெண்ணெய் திரளும் வேளையில் பானையை உடைத்துவிடாதீர்கள்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியர் ஆர். பிரபாகனின் தரிசனம் என்ற நூலின் வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட உரைகள் இன்று சகல தரப்பினரினதும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஒரு புத்தக வெளியீடுதானே என்று வழமையான நினைப்புடன் அங்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் உணர்ச்சி வசப்பட்டவர்களாகக் காணப்பட்டுள்ளனர். அங்கு இருவரால் ஆற்றப்பட்ட தங்களது இனம், சமூகம்,  தற்கால அரசியல் நிலைமைகள் சார்ந்த உரைகள் இன்று பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

Sunday, March 16, 2014

காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; காற்றைப் போல பறக்கவும் வேண்டுமென்ற நிலை உருவாகக் கூடாது

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியலிலும் சின்ன வீடு, பெரிய வீடு என்றதொரு பிரச்சினை எழுவது இன்று சர்வ சாதாரணமான விடயமாகி விட்டது. அதாவது கட்சியை விட்டு மாறுவதும் மீண்டும் அதில் சேருவதும் இலங்கை அரசியலில் அண்மைக்கால பாரம்பரியமாக போய்விட்டது.

கட்சிமாறிச் சென்ற சிலர் மீண்டும் தங்களது முன்னைய கட்சிகே வரும்போது தான் தனது தாய்க்கட்சிக்கே மீண்டும் வந்து விட்டேன் என்று சிலர் தங்களது போக்கை கௌரவமாக வர்ணித்துக் கொள்கின்றனர். தான் சார்ந்த கட்சியைப் பலவீனப்படுத்தும் பொருட்டு இன்னொரு கட்சிக்கு மாறி விட்டு அந்தக் கட்சியினால் தான் பலவீனப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படும்போது மீண்டும் தனது பழைய கட்சிக்கு தாவுவதற்காகக் கட்சியைப் பலப்படுத்தவே தாங்கள் மீண்டும் இணைந்து கொள்வதாக இன்னொரு சாரார் அறிக்கை விடுவர்.

Saturday, March 8, 2014

வடக்குப் பார்த்த மச்சு வீட்டை விட.. தெற்குப் பார்த்த குச்சு வீடே நல்லது!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் அதேவேளை சிறிலங்காவில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மீது அரசின் தரப்பிலிருந்து எதிரான குரல்கள் எழுந்துள்ளன. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மீது ஜனாதிபதி நொந்து  கொண்டமை தொடர்பில் செய்திகள் வெளிவந்திருந்தன. அரசுடன் இருப்பதாயின் சரியாக இருந்து கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்ற தொனியில் ஹக்கீமைப் பார்த்து ஜனாதிபதி தெரிவித்தார் என செய்திகள் வெளிவந்திருந்தன.

Sunday, March 2, 2014

முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறுவதா இல்லையா? விரைவில் முடிவை அறவிப்பேன்! அமைச்சர் ரிஷாத்தை சந்தித்து பேசியது உண்மையே!!

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிராஸ் மீராசாகிப் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வி-   பேட்டி கண்டவர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை தரவைக்  கோவில் விவகாரம்  நான் மேயராக இருந்த காலத்திலும்  எனது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதனை நான் மிக இரகசியமாக வைத்திருந்தேன். இந்த விடயத்தை ஊதிப் பெருக்க வைப்பதால் இரு இன மக்களும் பாதிக்கப்படுவர். அது கல்முனை தொகுதியின் இன ஐக்கியத்துக்கு வேட்டு வைத்து விடலாம் என நான் உணர்ந்தேன். இதனடிப்படையில் இந்த விடயத்தை மிக நிதானமாகவே கையாள நான்  தீர்மானித்திருந்தேன். சம்பந்தப்பட்ட தரப்புகளை அழைத்து சுமூகமாகப் பேசித்த தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் துரமிர்ஷ்வசமாக பதவி விலகியதால் எதனையும் செய்ய முடியாதிருந்தது என கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிராஸ் மீராசாகிப் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டி வருமாறு 

Sunday, February 23, 2014

அரசியல் அறுவைச் சிகிச்சைக்குள் அகப்பட்டுள்ள கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை!

 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாது, இல்லாத பிரச்சினைகளை எல்லாம் இழுத்துப் போட்டு தானும் குழம்பி மக்களையும் குழப்பும் சாதனைமிக்க அரசியல் களமாக இன்று கல்முனை மாறிவிட்டது. அனைத்தும் அரசியல் மயம். தான் செய்தால் சாதனை. மற்றவர் செய்தால் அது தனக்குச் வேதனை. என்ற நிலைவரமே கல்முனையில் காணப்படுகிறது. இளம் அரசியல் தலைமுறைகளால் அந்தத் தொகுதி பந்தாடப்படுகிறது.

அங்கொரு புதிய பிரச்சினை இன்று பூதாகரம் பெற்றுள்ளது. அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இப்போது சில அரசியல்வாதிகளின் அறுவைச் சிகிச்சைக் கூடமாக மாறிவிட்டது. மனிதாபிமானம், பொதுச்சேவை, தன்னார்வத் தொண்டு என்ற பண்புகளைக் கொண்ட வைத்தியசாலைகளிலும் இன்று அரசியல் நன்றாகவே புகுந்து விளையாடுகிறது. ஆனால் வேதனையானது.

Sunday, February 16, 2014

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டானுக்கு இரைச்சல் இலாபமே

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்டு இரு வருடங்களாகின்ற நிலையில் அதன் இறுதிப் பகுதிக்கான புதிய முதலமைச்சர் யார் என்ற விடயம் இப்போது தூசு தட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணங்கிக் கொண்டதன் அடிப்படையில் தற்போதைய முதலமைச்சரின் காலம் இரண்டரை வருடம் என்ற நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பிலும் முன்னைய ஒப்பந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர்தான்  இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவாரா என்ற இரு விடயம் குறித்தும் பேசப்பகிறது.

Sunday, February 9, 2014

முஸ்லிம் காங்கிரஸின் பொதுத்தேர்தல் வியூகம் ஆப்பிழுத்த குரங்கின் கதையாக மாறிவிடுமோ?

                                                       ஏ. எச். சித்தீக்  காரியப்பர்

மேல், தென் மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி முடிவுற்ற நிலையில் அடுத்த மாதம் 29 ஆம் திகதி தேர்தல் இடம்பெறுமென அறிவிப்பும் செய்யப்பட்டு விட்டது. இது தேர்தல்கள் காலம்தான். இந்தக் காலத்தில் தொடர்ச்சியாக நாடாளுமன்றத் தேர்தல் ஜனாதிபதி தேர்தல் என்றெல்லாம் அடுத்த வருடம் வரை நீடித்துச் செல்லும் என்று கூறலாம்.

ஏதிர்வரக் கூடிய நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத் தேர்தல் களம் தொடர்பில் சில அரசியல் கட்சிகள் இப்போதே சிந்திக்கத் தொடங்கி விட்டன. விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயம் தொடர்பில் சூடு கண்ட பூனையாக உள்ளது. இந்த விடயத்தில் அவர்கள் நின்று, நிதானித்தே வியூகம் அமைக்க வேண்டிய நிலைமை. இதன் காரணமாகவே இப்போதே மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக் கட்சியை கட்டியெழுப்பும் பணிகளை விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Sunday, January 26, 2014

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்! குரங்குக்கு தேங்காய் கொண்டாட்டம் !!

 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

மேல்மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாணத்தில் தனித்துக் களமிறங்குவது என்பது புதிய விடயமல்ல. பலமுறை களமிறங்கி தனது கட்சி உறுப்பினர்களை மேல்மாகாண சபைக்கு அனுப்பியுள்ளது. 

ஆனால,; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திடீரென மேல்மாகாண சபைத் தேர்தலில் குதித்துள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரை அந்தக் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என மாற்றிய பின்னர் அனைத்து இன மக்களையும் உள்ளீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. இந்த அடிப்படையிலும் தங்களுக்குள்ள செல்வாக்கைக் காண்பிக்கவுமே இந்தக் கட்சி மேல்மாகாணத்தில் தனித்துப் போட்டியிடுவதாக நம்பலாம்.

Sunday, January 19, 2014

ஊர் உண்டு பிச்சைக்கு.. குளம் உண்டு தண்ணீருக்கு... என்ற நிலை எப்போது கல்முனை அரசியலில் மாறும்?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்­மு­னைக்கு இன்று பிடித்­துள்ள சனியன் இன்னும் கழிந்­த­பா­டில்லை. மேயர் பிரச்­சினை தீர்­வுடன் கெட்ட காலம் போய்­வி­டு­மென்றால் அது இப்­போதும் விட்­ட­பா­டில்லை. கல்­முனை இன்று அர­சியல் சது­ரங்க ஆடு­க­ள­மாக மாறிப் போய்­விட்­டது.இதன் கார­ண­மாக அந்தப் பிர­தேச மக்­கள்தான் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

இப்­போது கல்­முனைத் தேர்தல் தொகு­தியில் அபி­வி­ருத்திப் பணிகள் என்­பது அறவே இல்­லாத ஒன்­றாகிப் போய் விட்­டன. முன்னாள் அமைச்­சர்­க­ளான ஏ. ஆர் மன்சூர் மற்றும் மர்ஹ_ம் எம். எச். எம். அஷ்ரஃப் ஆகி­யோரால் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்­களே இன்று பெயர் சொல்லிப் பேசப்­ப­டு­கி­ன்றன. அவர்­களால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­ட­டங்­க­ளுக்கு வெள்­ளை­ய­டிப்­பதும் அவற்­றினைப் பழுது பார்ப்­ப­தும்தான் இன்று கல்­மு­னையில் இடம்­பெறும் மாபெ­ரிய அபி­வி­ருத்திப் பணிகள். புதி­தாக எந்தப் பணி­களும் அங்கு இல்லை. மன்­சூரின் ஓய்வின் பின்­னாலும் அமைச்சர் அஷ்­ரஃபின் மறைவின் பின்­னாலும் கல்­மு­னையும் இருண்டு விட்­டது.

Sunday, January 12, 2014

தொடரும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள்....அரசியல்வாதிகளின் நடனமும்... அதிகார தரப்பினிரின் தாளமும்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் நின்றபாடில்லை. அது தொடர்கிறது. முன்னர் இடையிடையே இடம்பெற்ற இந்தத் தாக்குதல்கள் அப்போது பிரபல்யம் பெற்று பெரிதாகப் பேசப்பட்ட நிலையில் தற்போது பரவலாக, தொடராக இடம்பெற்றாலும் அது தொடர்பான கவனம் பெரிதாக இல்லை. சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மட்டுமே அதன் பரபரப்பு. பின்னர் எல்லாம் மறந்து விடும் நிலை. இதான் இன்றைய நிலைப்பாடு.

Sunday, January 5, 2014

கரும்பைக் கடித்துப் பார்க்காமல் அது கசக்கும் என்று கூறுவதா?

ஏ.எச். சித்தீக் காரியப்பர்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வியாழன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதன்போது வடக்கில் மாகாண சபை ஆட்சி நிறுவப்பட்ட பின்னரான காலப் பகுதியில் நிர்வாக ரீதியாக எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில்  முதலமைச்சர் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியுள்ளார். எவ்வாறான பிரச்சினைகளை  சந்திக்கும் நிலைமையை தாம் எதிர்கொண்டுள்ளோம் என்பதனை நேரடியாகக் கூறியிருக்காவிடினும் அதனை ஜனாதிபதி உணர்ந்து கொண்டவராகவே இருப்பார்.

இந்தச் சந்திப்பைப் பொறுத்த வரையில் புதுவருட வாழ்த்துத் தெரிவிக்கும் சந்திப்பாக இருந்தாலும் ஜனாதிபதி இங்கு ஒரு குறைகேள் (ஒம்புஸ்டன்) அதிகாரி போன்றே செயற்பட்டிருக்கக் கூடும். ஏனெனில் வடமாகாண சபை நிர்வாக ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளே ஜனாதிபதியிடம் கூறப்பட்டுள்ளது.