Sunday, May 11, 2014

அவசரமாக தவறினை செ‌ய்வதை ‌விட தாமதமாக ச‌ரியாக‌ச் செ‌ய்வதே மேல்!



ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, கல்முனை கரையோர மாவட்டம், அல்லது அதற்குப் பதிலீடான சகல நிறைவேற்று அதிகாரமும் கொண்ட மேலதிக மாவட்ட செயலகம். ஆகிய நிபந்தனைகளுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கு ஆதரவளித்து கிழக்கு மாகாண சபையில் பங்கெடுத்துக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அன்றுதாம் முன்வைத்த இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் இப்போது மீண்டும் ஒரு ஞாபகமூட்டலுக்கு வந்துள்ளது.


கிழக்கு மாகாண சபை ஆட்சியமைத்து அரைவாசிக் காலம் போன நிலையில் அடுத்த அரைக் காலப் பகுதிக்கான முதல்வர் கதிரை தொடர்பில்  மந்திராலோசனைகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்த விடயத்தை முன்னர் போன்று வீரியத்துடன் முன்னெடுக்க முடியாத சில பலவீனங்களும் அந்தக் கட்சியிடம் காணப்படுகிறது. அண்மைக் காலங்களில் அரசுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமிடைலான உறவின் விரிசல் காரணமாக அரசாங்கத்தைப் பொறுத்த வரை போனால் போகட்டும் போடாஎன்ற மன நிலையுடன் உள்ளது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் நிலையோ உன்னை விட்டு ஓடிப் போக முடியுமா.. என்னால் முடியுமா.. இனி முடியுமா.. என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா.. தெரியுமா..  என ஒரு பாடலின் இடையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது போன்றுள்ளது.

எது எப்டியிருந்தாலும் அடுத்த அரைப் பகுதிக்கான முதலமைச்சர் பதவி தொடர்பில் இப்போது  முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் பலர் ஆர்வம் காட்வில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விடயத்தில் அவர்கள் உண்மையான தெளிவைக் கண்டுள்ளனர். முதலமைச்சர்கள் தொடர்பிலான அண்மைக் கால நேரடி நிகழ்வுகளால் இவர்கள் அதன்பால் ஈர்ப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டு வருகின்றனர்.

வடமாகாண முதலமைச்சராக சீ.விக்னேஸ்வரன் பதவியேற்ற போது தமிழ் மக்கள் தமக்கு இனி எல்லாம் சரி என்றும். தங்களது  காட்டில் இனி மழைதான் என்றெல்லாம் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், வடமாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் இன்று வரையும் இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளும் அங்கு மழையை அல்ல.. புயலையே கிளப்பிக் கொண்டுதானிருக்கின்றன.

வடமாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் சீ.விக்னேஸ்வரன் அண்மையில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது உடைந்த நாற்காலியை தம்மிடம் தந்து அதில் அமருமாறு அரசு கூறுகிறது என்பதே அவரது கருத்தாகவிருந்தது. அதவாது எந்த அதிகாரமும் இல்லாத வடமாகாண சபை என்பதனையே அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

இது ஒரு புறமிக்க, கிழக்கு மாகாண சபையில் தனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என அதன்  முதலமைச்சர் நஜப் ஏ. மஜீத் கூறாவிடினும் ஆளுந்தரப்பைச் சேர்ந்த மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக்க உட்படலான அனைத்து மாகாண சபை அமைச்சர்களும் கிழக்கு மாகாண  ஆளுநரின் நடவடிக்கைகளையும் ஒட்டு மொத்தமாக விமர்சித்திருதனர். தங்கள் பணிகளுக்கு அவர் தடையாக இருப்பதாக பகிரங்கமாகக் கூறியிருந்தனர்.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கூட அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநரை மிகக் கடுமையாக, பகிரங்கமாக விமர்சித்து கருத்துகளை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

எனவே, இவ்வாறான நிலைமைகளைக் கருத்தில்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் அடுத்த அரைக் கால பகுதிக்கான முதலமைச்சர்  என்ற விடயத்தில் பெரிதாக அக்கறை செலுத்தாமையையே அந்தக் கட்சியின் சில முக்கியஸ்தர்களின் கருத்துகள் மறைமுகமாகச் சுட்டுகின்றன. உண்மையில் இதுதான் அவர்களது நிலைப்பாடெனில் அதனைப் பாராட்டவும் வேண்டும்தான்.  ஏனெனில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலமைச்சர் பதவி என்பது ஜவுளிக்கடை ஒன்றில் பட்டுச் சேலை கட்டி வைக்கப்பட்டிருக்கும் பார்வைக்கு அழகான பொம்மைக்கு ஒப்பானது மட்டுமே தவிர அதனால் வேறு எந்தப் பயனும் இல்லை.

வடக்கு, கிழக்கில் ஆளுந்தரப்போ அல்லது அடுத்த தரப்போ எந்தத் தரப்பு ஆண்டாலும்
தமிழர், முஸ்லிம் இவர்கள்தான் பெரும்பாலும் முதலமைச்சராக வருவர். இப்படியானதொரு நிலையில் இந்த மாகாண சபைகளுக்கு  எந்த சிங்கள அரசுகளும் முழுமையான அதிகாரங்களை வழங்கப் போவதில்லை.

இவ்வாறானதொரு நிலையில்  கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸினால்  முன்வைக்கப்பட்ட இரு விடயங்களில் அந்தக் கட்சி கவனம் செலுத்துவதே சிறந்ததும் சமயோசிதம் கொண்டதுமாகும். இந்த விடயத்தில் அவசரமாக தவறு செ‌ய்வதை ‌விட தாமதமாக ச‌ரியாக‌ச் செ‌ய்வதே நல்லதுஎன்பதனைக் கருத்தில் கொள்வதே சிறந்தது.

நிரந்தரமில்லாத, அதிகாரமில்லாத முதலமைச்சர் பதவி தொடர்பில் அக்கறை கொள்ளாமல் கல்முனை கரையோர மாவட்டம் அல்லது அதனை அடையும் வரையிலான சகல அதிகாரங்களையும் கொண்ட மேலதிக மாவட்ட செயலகம் ஆகிய இவற்றில் ஒன்றினை விடாப்பிடியாகப் பெற்றுக் கொள்வதே சிறந்தது. இந்த இரு விடயங்களும் நிரந்தரமானதும் அதிகாரமிக்கதாகவும் காணப்படுகின்றன.

மர்ஹும் அமைச்சர் அஷ்ரஃப் காலத்தில்  முன்வைக்கப்பட்டு பின்னரான காலத்தில் தோற்றுப் போன தென்கிழக்கு அலகு என்ற  உள்ளடங்கலில் காணப்படும் சில விடயங்களை உள்ளடக்கியதான  கல்முனை கரையோர மாவட்டம் அல்லது சகல அதிகாரங்களும் கொண்ட மேலதிக மாவட்ட செயலகம் ஆகியனவற்றில் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை காலத்தில் அரசாங்கத்திடமிருந்து எதனையாவத பெற்றுத் தந்தார்களா என்று பலராலும் எழுப்பப்படும் கேள்விக்கு இவற்றில் ஒன்றையேனும் பெற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களின் கேள்விக்கு ஒரு பதிலையும் வழங்கலாமல்லவா?

ஆனால், இந்த இரு விடயங்களில் எதனையேனும் தருவதற்கும் அரசு மறுத்தால் அதனை மக்களுக்குப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் பொறுப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கடமையாகும். இன்னும் அரசாங்கத்தைப் புசி மெழுகிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.

அதேவேளை, அரைக்கால முதலமைச்சர் பதவியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினைச் சேர்ந்த சிலர் கண்வைக்காமலும் இல்லை. இவர்கள் இந்தப் பதவிக்காக  இப்போதிருந்தே களமிறங்கிச் செயற்பட தொடங்கியுள்ளனர். சில வேளைகளில் இவர்களின் தற்காலிக அரைக் கால முதலமைச்சர் பதவி ஆசையானது, கட்சிக்குள் சிக்கலை தோற்றுவிக்கவும் முடியும். அதற்குச் அரச்சார்பு சக்திகள் சிலவும் துணை நிற்கும் வாய்ப்புகளும் அதிகம் காணப்படுகின்றன. இது கடந்த கால அனுபவங்களின் வெளிப்பாடாகும்.

எனவே, இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நிதானமாகச் செயற்படுவது முக்கியமானதாகும்.
 
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 11-05-2014


No comments:

Post a Comment