- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்டு இரு வருடங்களாகின்ற நிலையில் அதன் இறுதிப் பகுதிக்கான புதிய முதலமைச்சர் யார் என்ற விடயம் இப்போது தூசு தட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணங்கிக் கொண்டதன் அடிப்படையில் தற்போதைய முதலமைச்சரின் காலம் இரண்டரை வருடம் என்ற நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பிலும் முன்னைய ஒப்பந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர்தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவாரா என்ற இரு விடயம் குறித்தும் பேசப்பகிறது.
கிழக்கு மாகாண சபையின் இறுதிக்காலப் பகுதிக்கு முஸ்லிம் ஒருவர்தான் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்பது ஊர்ஜிதம் என்றாலும் அவ்வாறு நியமிக்கப்படுபவர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவராக இருப்பாரா என்பதே ஒரு கேள்வியாக இன்று எழுந்துள்ளது.
இவ்வாறான நிலைமை தோன்றியமைக்கு பிரதான காரணங்களாக மாற்றமடைந்து வரும் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைவரங்களே காணப்படுகிறன. வட மாகாணத்தில் தேர்தலை நடத்தி விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சியைக் கொடுத்துள்ளமை தொடர்பில் தற்போது பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசுக்கு இது புலி வால் பிடித்த கதை போல் உள்ளது.
வடமாகாண சபையின் இன்றைய சில அதிரடியான நடவடிக்கைகள் தெற்கில் இனவாதமாகச் சித்திரிக்கப்படுகிறது. இலங்கையின் அரசியல் யாப்பையே அந்த மாகாண சபை மீறுவதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்திருக்க வேண்டும். அதாவது ஹிட்லர் ஆட்சி சரிந்தவுடன் நாஸி கட்சி எவ்வாறு தடை செய்யப்பட்டதோ அவ்வாறே கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யாதது அரசின் பாரிய தவறு என்றெல்லாம் தெற்கில் பேசப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலையில் கிழக்கின் முதல்வர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்குக் கொடுத்தால் அங்கு என்ன நிகழுமோ என்ற ஒரு சந்தேகம் தெற்கில் பேரினவாத சிங்கள சக்திகளிடம் இப்போதிருந்தே எழுந்து விட்டது.
இந்த அடிப்படையில் வடக்கில் கூட்டமைப்பு, கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் என்ற இரு விடயங்களை தெற்கு அரசியல் ஜீரணித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கப் போவதில்லை ஏன் தெற்கில் உள்ள சில முஸ்லிம் அரசியல் சக்திகள் கூட சிங்கள பேரினவாதிகளின் நிலைப்பாட்டிலேயே உள்ளன.
இவ்வாறானதொரு நிலைமையும் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரை முதலமைச்சராக நியமிக்கும் விடயத்தில் அரசுக்கு இப்போதிருந்தே தலையிடியைக் கொடுத்துள்ளது.
இது ஒரு புறமிருக்க, கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அந்தக் கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டின் செற்படுவோர் அல்லர் என்பதும் அரசுக்கு ஆதாரங்கள் ஊடாகத் தெரிந்த விடயம். 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை இல்லாமல் செய்யக் கூடாது என்ற விடயத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு இது தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றிய துணிச்சலைக் கொண்டவர்கள். இந்த விடயம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு கறிவேப்பிலையாக இருந்தாலும் சாப்பிட்டேயாக வேண்டிய நிலை என்பதால் எதனையும் பேசவும், செய்யவும் முடியாத நிலை அன்று தோன்றியிருந்தது என்ற உண்மை மிக இரகசியமானது.
இருப்பினும் தாங்கள் தான் அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருமாறு உறுப்பினர்களைக் கேட்டிருந்தோம் என்று கூற வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்ததனையும் இங்கு கூறுவதில் என்ன குற்றம்?
முஸ்லிம் காங்கிரஸின் இவ்வாறான கடந்த கால நிலைமைகள் அனைத்தும் அரசின் “கற்றுக் கொண்ட பாடங்கள்” என்ற குறிப்பேட்டில் தெளிவாகவே பதிவிடப்பட்டுள்ளன.
எனவே, இந்த விடயத்தினையும் ஆளுந்தரப்பு கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரை கிழக்கின் முதலமைச்சராக நியமிப்பதில் மத்திய அரசு மிகுந்த நிதானத்துடனேயே செயற்பட வேண்டிய நிலை. அதாவது அரசைப் பொறுத்த வரையில் இது புலி வால் பிடித்த கதைதான்.
எப்படியிருப்பினும் கிழக்கு முதல்வர் யார் என்ற பிரச்சினை மீண்டும் வரும்போது முஸ்லிம் காங்கிரஸானது விட்டுக் கொடுப்புடனேயே நடந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலைமை ஏற்படவே அதிக சாத்தியங்கள் உள்ளன. அரசினைப் பகைத்தல் என்பது இப்போது முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் நினைத்துப் பார்க்க முடியாத விடயம். கோழிக் கறி உண்டு பழகியவன் கருவாட்டுக் கறியில் ஆசைப்படமாட்டான் என்ற உண்மையையும் கூறியே ஆக வேண்டும். (கடந்த காலம் வேறு.. இன்றைய நாட்களும் நாளைய தினங்களும் வேறு)
அது மட்டுமல்ல... அண்மையில் தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற சதுரங்கம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எச். எம் ஹாரீஸ் இவ்வாறானதொரு கருத்தை மிக சூசமாகக் கூறியிருந்தார். மர்ஹும் அமைச்சர் அஷ்ரஃப் முஸ்லிம் காங்கிரஸை வளர்ப்பதற்காக பஸ்களில் ஏறி நின்று கூட பயணிப்பார். அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு இந்தக் கட்சியை அவர் வளர்த்தார். ஆனால்.. இன்று அவ்வாறான ................... என்று தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் உண்மையைத்தான் கூறியிருந்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் இறுதிக் காலப்பகுதி முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரை அரசு நியமிக்க முடியாத நிலையேற்பட்டால் நிச்சயமாக மத்திய அரசில் இரண்டு பிரதியமைச்சர்கள் பதவிகளைக் கொடுத்து முஸ்லிம் காங்கிரஸை சமாளித்துக் கொள்ளும் சாணக்கியம் அரசிடம் உள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் தற்போது கேட்டுக் கொண்டிருக்கும் இரு பிரதியமைச்சர்கள் பதவிகளையும் உடன் வழங்காமல் அரசு பின்னடிப்பதாகும். இப்போது இரண்டைக் கொடுத்தால் பின்னரும் இரண்டு கொடுக்க வேண்டி வரும் என்பதனால்தான் இந்த இழுத்தடிப்பு. நரிப் புத்தி கொண்ட அரசுதான்..
மறுபுறத்தில் இந்த இரு பிரதியமைச்சர்கள் பதவிகளையும் ஏற்றுக் கொண்ட நிலையில் முதலமைச்சர் விவகாரத்தில் நாங்கள் ஏன் விட்டுக் கொடுத்தோம் என்பதற்கான வியாக்கியானத்தையும் சொல்லிக் கொள்ளும் சாணக்கியம் முஸ்லிம் காங்கிரஸிடமும் இல்லாமல் இல்லை. இந்த விடயத்தில் நரிக்கே தண்ணி காட்டிய காகத்தின் தந்திரம் கொண்டதுதான் முஸ்லிம் காங்கிரஸ்.
இறுதியாகப் பாட்டி சொன்ன சின்னக் கதை ஒன்றினைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
இமயமலை உச்சியை சென்றடைய ஆசைப்பட்ட எறும்பு ஒன்று தனது சொந்தம், சுற்றம் அனைத்துக்கும் கூறி விட்டு மலை ஏறப் புறப்பட்டதாம். இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் அந்த எறும்பு திடீரென தனது இடத்துக்குத் திரும்பி வந்து விட்டதாம். அதனைக் கண்ட சொந்தங்களும் சுற்றங்களும் ஏன் திரும்பி வந்தீர்கள் எனக் கேட்டபோது, இல்லை.. இல்லை நான் இமயமலையில் ஏறிக் கொண்டுதான் இருந்தேன். அப்போது அந்த மலை எதிர்பாராத விதமாக ஆடத்தொடங்கி விட்டது. அது தானாக ஆடியதோ அல்லது நான் ஏறியதால் ஆடியதோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் சாணக்கியமாக இறங்கித் தப்பித்துக் கொண்டேன். அந்த மலை ஆடி விழுந்திருந்தால் சிலவேளை எனது உயிருக்கும் ஆபத்தாக போயிருக்கலாம் என்று தனது தோல்வியை சாணக்கியமாக மூடிமறைத்துக் கூறியதாம் அந்த முட்டாள் எறும்பு..
ஏனெனில், முதலமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் இப்படியானதொரு கதையைத் தான் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் மத்தியில் கூறப்போகிறது. மக்களும் அதனை அப்படியே நம்பி விடுவார். இதுதானே கடந்த கால வரலாறும்..
எது எப்படியோ அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்தானே!
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 16-02-2014

No comments:
Post a Comment