Monday, March 4, 2013

குப்பை மேட்டுக் கோழிச் சண்டையில்முஸ்லிம்அரசியல் தலைமைகள்… பொதுபலசேனா Vs ஜம்மியத்துல்உலமா                                                                                                      ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஹலால் விவகாரம் தொடர்பில்  தொடர்ந்து முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களுக்கு ஜம்மியதுல் உலமா சபையானது தனது இறுதி முடிவைத் தெரிவித்து விட்டது. “இந்த ஹலால் விவகாரத்தை நாங்கள அரசாங்கத்திடமே ஒப்படைக்கிறோம். இனி அரசாங்கமே ஹலால் சான்றிதழ்களை வழங்கட்டும்” என்று கூறிவிட்டது. ஆரம்பத்தில் ஹலால் விடயத்தை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்றது ஜம்மியதுல் உலமாசபை. பின்னர் முஸ்லிம்களுக்கு மட்டும் விநியோகிப்போம் என்றது. இப்போது ஆளைவிட்டால் போதும் என்ற நிலைக்கு வந்து அந்தப் பொறுப்பிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டுள்ளது. ஆனால், பொதுபல சேனாவோ விடமாட்டோம் என்றுதெடர்ந்தும் ஒற்றைக் காலில் நிற்கிறது. அராசாங்கம் கூட இந்த வியடத்தைப் பொறுப்பேற்கத் தேவையில்லை. ஹலால் எமக்கு ஹராம் என்ற பிடிவாதத்தில் நிற்கிறது பொதுபலசேனா.
இதேவேளை, அரசாங்கமும் இதனைப் பொறுப்பேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஹலால் சானறிதழ்  இன்று அனாதரவான நிலையில் உள்ளது என்றே கூறலாம்.  

ஜம்மியதுல் உலமா சபையினதும்பொதுபலசேனாவினதும்நிலைப்பாடுகள்இவ்வாறிருக்க, இந்த நாட்டின் பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகளோ அரசுடனான தங்களது தேனிலவைவிட்டுக் கொடுப்பதாக இல்லை. ஹலால் தொடர்பில் இவர்களிடம் யாரேனும் கேட்டால் அதற்கு அவர்கள் வழங்கும் பதில்.. ”இந்த விடயத்தை ரொம்ப நிதானமாகக் கையாள வேண்டும், அவரசப்பட்டு விட்டால் நமது சமூகத்துக்குத்தான் அழிவு” என்றெல்லாம் சர்வதேச ராஜதந்திரம் போல் கதை விடுகிறார்கள். தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவம் முதல் ஹலால் விவகாரம் வரை இதே பல்லவியைத்தான் இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாடிக்கொண்டிருக்கின்றன.ஆனால், இது தேர்தல் காலமாக மட்டும் இருந்திருந்தால் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் ஹலால் விடயத்தை எப்படியும் காப்பாற்றியே இருப்பர் ஹலால் ஹலாலாகவே  இருந்திருக்கும் என்பது மட்டும் உண்மை.

ஆனால், பொதுபல சேனாவோ, தங்களது சமூகத்தின் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை ஊட்டி, வளர்த்து காரியங்களைக் கச்சிதமாக செய்து முடித்துக் கொண்டே வருகிறது. அவர்கள் ”ஆடுற மாட்டை ஆடியும் பாடுறமாட்டைப் பாடியும்” பால் கறப்பது போல் அவர்கள் தங்கள் காரியங்கள் நடக்கின்றன.இதற்கொரு உதாரணமாக  பௌத்த பலசேனா அமைப்பின்முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்த விடயம் ஒன்றினையும் இங்கு குறிப்பிடலாம்.

“ஜனாதிபதி எமது கேள்விகளுக்கு சாதகமான பதில்களைத் தந்திருக்கிறார். பெளத்த மதம் தொடர்பில் ஜனாதிபதி கொண்டுள்ள ஆர்வம் எமக்கு நம்பிக்கையூட்டுகிறது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர் பணித்திருக்கிறார். பொதுபலசேனா ஓர் அரசியல் இயக்கம் அல்ல. அரசாங்கத்தை கவிழ்ப்பதும் எமது திட்டமல்ல என்று ஜனாதிபதியிடம் தெளிவாக விளக்கியிருக்கிறோம்.”இதுதான் அவர்களின் உள்ளுர் அரசியல் தந்திர நகர்வு. ஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகளோ இந்த விடயத்தை சர்வதேச ராஜதந்திரமாகக் கொண்டு செல்கின்றனராம்.
கொழும்பு, மாவட்டத்தின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் நானா நீயா? ஹஜ்ஜுக்குப் பொறுப்பானவர் நீயா நானா? கிழக்கின் அதிகாரமுள்ள “மாபெரிய“ அமைச்சர் நானா நீயா? என்ற குப்பை மேட்டுக் கோழிச் சண்டையிலேயே முஸ்லிம்அரசியல் தலைமைகள் இன்று தங்களது தாராள கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறான சுயநலமிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகளாலேயே இந்த நாட்டில் இன்னுமொரு மியன்மார் உருவாகும் சாத்தியம் உள்ளது.

இது இவ்வாறிருக்க, ஜம்மியதுல் உலமா சபையின் இந்த இறுதி முடிவு தொடர்பில் பொது பலசேனா தனது கருத்தையும் வெளியிட்டுள்ளது. இந்த முடிவுக்கு தாங்கள்கட்டுப்படப் போவதில்லை என்று அது அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டது. இந்தப் பணியை அரசிடம் ஒப்படைப்பதில் கூட தாங்கள் சந்தேகம் கொள்வதாக அது கூறியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் இறுதி முடிவு வரும்வரை காத்திருக்காமல் ஜம்மியதுல் உலமா சபையானது தனது முடிவினை அறிவித்தமை ஒரு குழப்பத்தை எற்படுத்தியுள்ளது. இவ்வாறான திடீர் முடிவானது மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பலவீனர்களாகவே காட்டி எதிராளிகளை உற்சாகப்படுத்துவதாகவும் அமையலாம்.

அதுமட்மன்றி, முஸ்லிம்களுக்கு எதிரான அடுத்த நகர்வுக்கு அவர்கள் பயமின்றி கால் வைக்கும் துணிச்சலையும் இந்தத்தீர்மானம் கொடுத்துள்ளது.

1. ஹலால் சான்றிதழ் விடயத்தை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது என்பது தொடர்பில் அரச தரப்புடன் ஏலவே கலந்துரையாடப்பட்டதா?
2. நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று இந்த விடயத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவினை அறிந்து கொள்ளாத நிலையில் ஏன் இவ்வாறு அறிவிப்புச் செய்ய வேண்டும்?
3. ஹலால் சான்றிதழ்களைப் பெறும் நிறுவனங்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா?
போன்றவை தொடர்பில் ஜம்மியதுல் உலமா சபையின்  செயற்பாடுகள் என்ன?

நாட்டில் இனமுரண்பாடு ஏற்படுவதனைத் தடுக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்படின், நாளை முஸ்லிம் பெண்கள் பர்தா அணியக் கூடாது. முந்தானை போடக் கூடாது என சிங்கள கடுங்கோட்பாளர்கள் போர்க்கொடி தூக்கினால்நிலைமைஎன்னவாகும்? ஹலால்களை எல்லாம் ஹராமாக்கும் பௌத்த கடுங்கோட்பாளர்களின் பிடிவாதம் இந்த  நாட்டில் எதிர்காலத்திலும் கோலோச்சுமானால் அப்போதும் இனமுரண்பாடுகள் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துக்காக பர்தாவையும் முந்தானையையும் விட்டுக் கொடுக்க வேண்டுமா? இவ்வாறானதொரு சம்பவம் கடந்த வாரம் தென் மாகாணத்தில இடம்பெற்றுள்ளது. பர்தா அணிந்து சென்ற சில பெண்கள், அந்த ஆடைகளைக் களையுமாறு சிலரால் வற்புறுத்தப்பட்டனர் எனச் செய்திகள் வெளிவந்திருந்தன.

எதிர்வரும் காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் விடயம் இந்த ஹலால் சான்றிதழுடன் முடிவடையப் போவதில்லை. இன்னும் பல்வேறு வடிவில் வெவ்வேறு பரிணாமங்களில் தோன்றிக் கொண்டேதானிருக்கப் போகிறது. இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் தரப்பின் இன்றைய விட்டுக் கொடுப்புகளின் ஊடான முஸ்லிம் தரப்புப் பலவீனங்கள் எதிராளிகளுக்கு மூக்கணாங் கயிறாக மாறிவிடும். ஆகவே, இந்த விடயத்தில் கவனமாகச் செயற்பட வேண்டியுள்ளது.

இது இவ்வாறிருக்க, மல்வத்து பீடாதிபதி திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் சில கருத்துகளையும் வெளியிட்டுள்ளார். நாட்டில் பெரும்பான்மை பௌத்தசிங்கள மக்களிடம் முஸ்லிம்கள் குறித்து நிலவும் சந்தேகங்கள் நீக்கப்பட வேண்டும்என்றெல்லாம் கூறியுள்ள அவர், பௌத்த, சிங்கள மக்களிடையே இஸ்லாம் குறித்தும்முஸ்லிம்கள் குறித்து நிலவும் சந்தேகங்கள் தொடர்பிலும் சில விடயங்களை சூசகமாக ஜம்மியத்துல் உலமாவிடமே தெரிவித்துள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் என்பது இன்று சிங்கள கிராமங்களுக்குள் மட்டுமோ கொழும்புக்குள் மட்டுமோ மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விடமயாகக் கருத முடியாது. அது சிங்கள உயர் பௌத்த பீடங்கள் வரைபுற்று நோயாகப் பரவிச் சென்றுள்ளது என்பதே உண்மை.

ஆகவே, இந்த விடயத்தில் ஜம்மியத்துல் உலமா சபை கவனமாகச் செயற்பட வேண்டும். பாரிய விட்டுக் கொடுப்புகளைச் செய்தால் அவர்களின் காட்டில் மழைபெய்த கதையாகி விடும். 

ஜம்மியத்துல் உலமா சபை என்பது அரசியல் கலப்பற்ற உயர் நிறுவனம்.ஆனால், இந்த நாட்டின்பெரும்பாலானமுஸ்லிம் சாக்கடை அரசியல்வாதிகளால்தான் இன்று ஜம்மியதுல் உலமா சபை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இவர்களே இந்த அமைப்பை இன்று பலவீனப்படுத்தியுள்ளனர்.இந்த ஹராமான முஸ்லிம் அரசியல்வாதிகள் ஹலாலுடன் செற்பட்டிருந்தால் இவ்வானாதொருநிலை ஏற்பட்டிருக்காது. அலரிமாளிகையின் குசினி வழியாக உள்நுழையும் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் நாட்டுத் தலைமையுடன் இந்த விடயங்களைப் பேசித் தீர்த்திருக்கலாம். இதனை விடுத்து அறிக்கை விடுவதும் அமைச்சரவையில் சும்மா பேச்சுக்காகச் சத்தமிடுவதனாலும் பலனில்லை. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் பொரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் இந்த நாட்டு முஸ்லிம்கள் அனுபவபூர்வமாக அறிந்து வைத்துள்ளனர். சில முஸ்லிம் அரசியல்வாதிகளை விட தங்களது இனத்துக்காகவும் சமயத்துக்காகவும் நாட்டுக்காகவும் பாடுபடும் சிங்கள அரசியல்வாதிகள், கடுங்கோட்பாளர்கள் ஒரு வகையில் சிறந்தவர்கள்.அவர்கள் இனப்பற்றுள்ளவர்கள். மதப்பற்றுள்ளவர்கள்.

இந்த நாட்டு முஸ்லிம் மக்களின் உயர்பீடமான ஜம்மியத்துல் உலமா சபை என்றும் மதிக்கப்படும் ஒரு நிறுவனமாகும் எதிர்காலத்தில் இங்குள்ள முஸ்லிம் அரசியல் நயவஞ்சகர்களை முஸ்லிம் மக்கள் நம்பாத ஒரு நிலை நிச்சயமாகத் தோன்றலாம். இவ்வாறானதொரு நிலை உருவானால் அவர்கள் அனைத்துக்குமாக நம்பியிருக்கும் ஒரே ஒரு நிறுவனமாக ஜம்மியதுல் உலமா சபையாகவே இருக்கும் ஆகவே அதற்கேற்ற வகையில் இந்த அமைப்புத் தன்னை பலவீனமல்லாத நிலையில் தயார்படுத்தலே  இன்றையகுறைந்த பட்ச உடனடித் தேவையாகும். அத்துடன் இந்த அமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவையும் முஸ்லிம் சமூகத்தின் கடமையாகவுள்ளது.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு  03-03-2012



No comments:

Post a Comment