எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு:தெற்கை நோக்கிய சொற்கணைகள்
வடக்கில் எறிகணைகளாக விழுமா? - ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
“எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு“ என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இவ்வாறான கூட்டணிகள், கூட்டமைப்புகள் உருவாவது புதிய வியடமல்ல. மிக அண்மைய காலத்தில் இரண்டு கூட்டணிகள் தோற்றம் பெற்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நின்றபோது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதியைக் களமிறக்குவதற்கென பெயரளவில் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பில் மக்கள் விடுதலை முன்னணி கூட இடம்பெற்றிருந்தது. இருப்பினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதும் அல்லது சரத் பொன்சேகா தோல்வியடைந்ததும் இதன் ஆயுட்காலமும் முடிவுக்கு வந்ததனை அறிவோம். இறுதியாக, சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தியது தாம் செய்த மாபெரும் தவறு என ஐக்கிய தேசியக் கட்சிகைசேதப்பட்டு அறிக்கை விடும் அளவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாம் இணைந்ததுதவறான முடிவு என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்திருந்ததும் அறிந்தவைகளே.. ஆக, மொத்தத்தில் இந்தக் கூட்டமைப்பானது தேர்தலை முன்வைத்த ஒரு கூட்டாக இருந்ததே தவிர வேறெந்த நோக்கத்துக்காவும் அல்லவென்பதும் தெரிய வந்தது.
இதன் பின்னர், சிறிது காலம் சென்று தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. “தமிழ்க் கட்சிகளின் அரங்கம்“ என அதற்குப் பெயரிடப்பட்டிருந்த்து.ஆனால், அதன் ஆயுள்கூட கெட்டியாக இருக்கவில்லை. கருத்து முரண்பாடுகள் காரணமாக அதுவும் இடைநடுவில் நின்று போனது.
இதனையடுத்து, நீண்ட கால இடைவெளியின் பின்னர் இப்போது “எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு என்ற ஒரு புதிய அமைப்பு உருவாகியுள்ளது. இதன் நோக்கம் எதுவாக இருப்பினும் அது நிச்சயமாக அரசியலை மையமாகக் கொண்டது என்பதில் தவறில்லை. கடந்த 11 ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகள் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி,மவ்பிம ஜனதா கட்சி, ருஹுனு ஜனதா கட்சி, எக்சத் ஜனதா பெரமுன மற்றும் முஸ்லிம் - தமிழ் முன்னணி ஆகியகட்சிகள் மட்டுமே கைச்சாத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நவ சிஹல உறுமயவும் கைச்சாத்திடவில்லை.
1. அரிசியல் ரீதியிலான குறைந்த பட்ச உடன்பாடு.
2. கட்சிகளுக்கிடையே உறவை மேம்படுத்தல் குறித்த உடன்பாடு. ஆகிய இரண்டு அம்சங்களையும் கொண்டதாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி சுமந்திரன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. தனது கட்சியின் தலைமைப்பீடம் கூடியே இந்த அமைப்பில் இணைவது தொடர்பில் முடிவெடுக்க வேண்டுமென அவர் அங்கு தெரிவித்திருந்தார். கூட்டமைப்பின் இந்தத் தீர்க்கதரிசனமான நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே.
தற்போது இந்த அமைப்பில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி மட்டுமே தமிழ்க் கட்சியாக உள்ளது. அஸாத் சாலியின் முஸ்லிம் - தமிழ் முன்னணிதேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறாத கட்சி. இந்தக் கட்சியின் மக்கள் செல்வாக்குக் குறித்தும்இப்போது எதனையும் கூற முடியாது.
ஆகவே, இப்படியானதொரு நிலையிலேயே “எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு“ கூட்டமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.
இந்த அமைப்பின் முதலாவது செயற்பாடாக அவசர, அவசரமாக அமைந்தது யாழ்ப்பாணத்துக்குச் சென்று உண்ணாவிரதத்தில் பங்கு கொண்டமையையும் வடபகுதித் தமிழ் மக்களைக் கண்டு பேசி குறைகள் கேட்டமையும் ஆகும்.“யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே“ என்பார்கள்.. அது போன்று வடபகுதி தேர்தலுக்கு முன்னர் அங்கு போய் தங்களது கள நிலைகளைச் சரி செய்யும் எண்ண்ணமும் இந்த அணிக்கு இருந்திருக்கலாம். வட பகுதி மக்களின் வாக்குகளுக்கான ஓர் இரை போடலாகவும் இதனைக் கருதலாம்.
இந்த அமைப்பில் உள்ள கட்சிகளில் 99 வீதமான சிங்களக் கட்சிகள். அவர்கள் ஏன் தெற்கிலோ அல்லது வேறு பிரதேசங்களுக்கோ செல்லாமல் முதலில் வடக்கை நோக்கி வந்தனர் என ஒரு கேள்வி எழுந்தால்அது நியாயமானதே. இந்த அமைப்பில் அங்கும் வகிக்கும் பெரும்பாலானகட்சிகள் சிங்களக் கட்சிகளே.இந்த நிலையில் சிங்கள அரசியல்வாதிகள்தமிழர்களின் மீட்பர்கள் அல்லர்என்பதனையும் கூறவேண்டியுள்ளது. தமிழர் பிரச்சினைக்கு எண்ணெய் ஊற்றியவர்களும் இந்த அமைப்புக்குள் உள்ளனர்.அரசுக்கும் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் எதிர்ப்பு என்பதற்காக அவர்கள் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என அர்த்தமாகக் கொள்ளப்படக் கூடாது.
ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபரை விட்டு விட்டு.. ஐக்கிய தேசியக் கட்சியை எடுத்து நோக்கினால், சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும் அவர்களின் பதினேழு வருட ஆட்சி காலத்தில் அவர்கள் நினைத்திருந்தால் தமிழர் பிரச்சினைக்கு நிலையான , நீதியான தீர்வை வழங்கியிருக்க முடியும்.அவ்வாறு நடந்திருந்தால் இன்று இந்தப் பேரவலம் நிச்சயம் நிகழ்ந்திருக்காது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமெனநினைத்திருப்பின் அதனை ஒரே இரவில் செய்திருக்கலாம். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் அதற்கு மேலும் நெருப்பு வைத்த பங்கு இந்தக் கட்சிக்கும் உண்டு. இது தொடர்பில் விளக்கமாக எதனையும் விலாசிக்கத் தேவை இல்லை. இந்தியாவின் அழுத்தம் இல்லாவிட்டிருந்தால் மாகாண சபை கூட கிடைத்திருக்காது.
சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போது கொண்டு வரப்பட்ட தீர்வுத் திட்ட ஆலோசனைக்கு நாடாளுமன்றத்திலேயே தீ வைத்தவர்கள் அன்று ரணிலின் கட்சியில் இருந்தவர்களே.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளராக தமிழர் ஒருவரைக் கட்சி மட்டத்தில் நியமிக்க முனைந்த போது, அதற்கே எதிர்ப்புத் தெரிவித்தஇவர்கள், அரசியல் ஆட்சி மட்டத்தில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவார்களா அல்லது அதனை அனுமதிப்பார்களா என்ற விடயங்களையெல்லாம் வரலாறு தெரிந்தவர்கள் புரிந்து கொள்வர்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாம் ஆட்சியமைப்போம் என அமைச்சர் ஹக்கீம் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஹக்கீமும் நாட்டைப் பிரிக்கப் போகிறார் என்று தென்னிலங்கையில் பிரசாரம் செய்த அதே சிங்கள அரசியல்வாதிகள்பின்னர் ஹக்கீம் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியமைத்த போது மஹிந்தவுடன் சேர்ந்து ஹக்கீம் நாட்டைத் திண்ணப் போகிறார் எனக் கூறியதனையும் நாம் அறியாமல் இல்லை.
இப்படியான பெரும்பாலானோரைத் தன்னகத்தே கொண்ட“எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு“ அமைப்பு வட பகுதிக்குச் சென்று அங்குவாழும் தமிழ் மக்களுக்குமேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது. தெற்கிலிருந்து வடக்கு செல்லும் அரசியல்வாதிகள் தங்கள் வாய்க்கு வந்தபடி எதனையும் பேசலாம். அவற்றில் உண்மைகளும் இருக்கலாம். ஆனால், அங்கு வாழப் போவோர் அவர்கள் அல்லர்.இவ்வாறான அரசியல்வாதிகளின் பேச்சு, நடவடிக்கைகள் காரணமாக அங்குள்ள மக்கள் நெருக்குதலுக்கு உள்ளாகும் ஒரு நிலையும் ஏற்படலாம். இந்த நெருக்குதலானது பல்வேறு பரிமாணங்களில் தோற்றம் பெறலாம். அவ்வாறானதொரு நிலைஉருவானால் எதிர்க்கட்சி எதிர்ப்பினாலும் வேலையில்லை. எவராலும் வேலை இல்லை. பாதிக்கப்படப் போவது வட பகுதித் தமிழர்களே. அவர்கள் நிலை“எய்தவன் இருக்க அம்பினை நொந்த“ கதையாகி விடும்.
ஏனெனில், தெல்லிப்பழையில் இடம்பெற்ற உண்ணாவிரதம் என்பது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்றல்ல. அது ஏலவே திட்டமிடப்பட்ட ஒன்று.இருப்பினும் இதில் இந்த அமைப்பு கலந்து கொண்டது தவறல்ல. ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த சிங்கள அரசியல்வாதிகள் தெற்கு அரசியலை நோக்கி எய்தசொற்கணை அம்புகள் சில வேளைகளில் திரும்பி வந்து வடக்கின் அப்பாவித் தமிழ் மக்ளுக்களைப் பதம் பார்க்கும் எறிகணைகளாக மாறிவிடக் கூடா.
எதிர் காலத்தில் இந்த விடயத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசனே அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், பல அரசியல் மற்றும் தொழிற் சங்கக் கூட்டமைப்புகளை உருவாக்குவதில் பிரதான செயற்பாட்டாளராக இவரே திகழ்கிறார். தமிழ் மக்கள் தொடர்பில் இவர் கொண்டுள்ள அக்கறையை மரியாதையுடன் ஏற்றுக் கொள்ள வேணடிய நிலையில் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் எல்லாம் முடிந்த கதையாகி விடும்.
தெற்கிலுள்ள சிஙகள அரசியல் சக்திகளை தமிழர் பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டங்களையும் சந்திப்புகளையும் நடத்துவதால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை. வெறும் பிரசாரம் மட்டுமே மிஞ்சியிருக்கும். கொழும்பிலிருந்தே எதனையும் செய்ய முடியாத கையாலாகதவர்களை தமிழர் பிரதேசங்களுக்குக் அழைத்துச் செல்வதிலோ அல்லது அவர்களாகச் செல்வதிலோ பயன் கிடைக்கப் போவதும் இல்லை. காயப்பட்ட மனங்களை மேலும் சுரண்டிப் பார்க்கக் கூடாது.அவர்களது மறந்து போன வேதனைகளை மீண்டும் திறந்து பார்க்கும் நிலையை ஏற்படுத்தக் கூடாது.
“எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு“ என்ற அமைப்பின் பிரதான நோக்கம் இன்றைய அரசை வீட்டுக்கு அனுப்புவது,ஜனாதிபதி மஹிந்தவை துரத்துவது என்பதேயாகும். இதுபாதிக்கப்பட்டதமிழர்களுக்குத் தேவையில்லாத விடயம் என்றும் சொல்லலாம் தெற்கில் ராஜபக்ஷகள் ஆண்டாலும் சரி பண்டாரநாயக்ககள் ஆண்டாலும் எல்லாம் ஒன்றுதான் என்ற விரக்தி நிலையிலேயே தமிழர் சமூகம் வாழ்கிறது. இந்த விடயத்தில் தமிழர்களைக் பகடைக் காய்களாக்கவே அவர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்யவோ கூடாது.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 24-02-2013
No comments:
Post a Comment