ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அரச தரப்பு பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
சபை தல்வரும்அமைச்சருமான நிமல் சிரிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவில் 19 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த தெரிவுக் குழுவுக்கான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அவை கிடைக்கப்பெற்ற பின்னர் சபைக்கு அறிவிக்கப்படும் எனக் கூறினார்.
சபை தல்வரும்அமைச்சருமான நிமல் சிரிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவில் 19 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த தெரிவுக் குழுவுக்கான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அவை கிடைக்கப்பெற்ற பின்னர் சபைக்கு அறிவிக்கப்படும் எனக் கூறினார்.
இந்த நாடாளுமன்றக் குழுவில் அரசின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடம் வழங்கப்படாமை இன்று தமிழ் அரசியல் களத்தில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும்ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல.. ஏனைய சில முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் அரசு மீது அதிருப்தி கொண்டுள்ளன. இதற்கு மேலாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன் கூட முஸ்லிம் காங்கிரஸினை இணைத்துக் கொள்ளாமை தொடர்பில் தனது வேதனையை வெளியிட்டிருந்தார்.
பல முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸே முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சி என்ற உண்மையையும் மறைக்க முடியாது. இவ்வாறானதொரு நிலையில் இந்தக் கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள சங்கடம் அதன் தேசிய அரசியலில் ஒரு பின்டைவு என்றே கூற முடியும்.
பாம்புக்குப் பாலூட்டி வளர்த்தாலும் அது ஒரு நாள் தீண்டியே தீரும் என்பதனை முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைமை புரிந்து கொள்வதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவும் இதனை நோக்கலாம்.
முஸ்லிம் காங்கிரஸை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சேர்த்துக் கொள்ளாமைக்கான காரணம் பற்றி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். ஆளுந்தரப்பைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளுக்கும் இடமளிக்க முடியாமை காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரச தரப்பார் எந்த மூலையில் வைத்துப்பார்க்கின்றனர் என்பதனைவிளங்கிக் கொள்ள முடியும். தேசிய அரசியலில் அரசுடன் இணைந்திருக்கும் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் இன்று இந்த அரசினால் சாமரம் வீசுபவனாகவும் வாயிற் காவலனாகவுமே நோக்கப்படுகிறது என்பதனையும் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. இன்று எழுந்துள்ள நிலைமையானது முஸ்லிம் காஙகிரஸை விட அந்தக் கட்சியை ஆதரித்த மக்களுக்கே பலத்த வெட்கக் கேடானவிடயமாகப் போய்விட்டது.
அமைச்சர் அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் தேசிய அரசியலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைமை அடைந்த பாரிய தோல்வியும் ஏமாற்றமுமாகவே இதனைக் கருதலாம். ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க காலத்தில் உருவாக்கப்பட்ட உத்தேச அரசியல் தீர்வு யோசனைகளை எத்தனையோ சிங்கள சிரேஷ்ட அமைச்சர்களும் முக்கியஸ்தர்களுமிருக்க, அதனை அஷ்ரஃபே நாடாளுமன்றத்தில் வாசிக்க வேண்டுமென்று அன்றைய அரச தலைமையும் மற்றும் அவரது அமைச்சர்களும் விரும்பியிருந்து அதன் பிரகாரம் அமைச்சர் அஷ்ரஃபே உத்தேச அரசியல் தீர்வு யோசனையை சபையில் வாசித்து அனைத்துத் தரப்பினரதும் பாராட்டைப் பெற்றிருந்தார். அப்படிப்பட்ட ஒருவரின் தலைமையில் வழி நடத்தப்பட்ட கட்சியின் இன்றைய தலைமைக்கு அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கான நாடாளுமன்றக் குழுவில் கூட இடம்பெற முடியாத நிலை என்றால் இதனை விட வெட்கக்கேடான விடயம் எதுவும் இருக்கப் போவதில்லை.
முஸ்லிம் காங்கிரஸுக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்படக் காரணம் என்ன என்பதனையும் நாம் ஆராய வேண்டியே உள்ளது. ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸை இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளாமைக்காக இந்த விடயத்தில் முஸ்லிம்களை அரசு புறக்கணித்து விட்டது என்றும் கூற முடியாது.காரணம் தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுவில் வேறு சில முஸ்லிம் அமைச்சர்களும் பங்கு பெறாமலில்லை.
அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய பலம், பலவீனங்களை இரண்டினையும் நன்கு நாடி பிடித்துப் பார்த்து வைத்துள்ளது. பலம் என்பது தேர்தல் காலத்தில் மட்டுமேமுஸ்லிம்காங்கிரஸுக்குரியது என்ற விடயமும் பலவீனம் என்பது ஏனைய அனைத்துக் காலங்களிலும்அதற்குரியது என்பதனையும் அரசு நன்கு தெரிந்து வைத்துள்ளது. அத்துடன் சில விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ்மீது அரசுக்கு அதிருப்திகளும் இல்லாமல் இல்லை. இதனடிப்படையில் கீழ் வரும் விடயங்களைநோக்கலாம்
1. முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து விலகினாலும் அதனால் தங்களது பலம் குறைந்து விடப்போவதில்லை.
2. அவ்வாறு விலகினாலும் இந்தக் கட்சியைச் சேர்ந்த அனைவரும் தலைவர் ஹக்கீமின் பின்னால் போகப் போவதில்லை. ஓர் அமைச்சுப் பதவியையையும் இரண்டு பிரதியமைச்சுப் பதவியையும் வழங்கினால் அவர்களில் பெரும்பாலானோர் தம்முடனே இருப்பர் என்றஅனுபவத்தின் ஊடானஉறுதியான,நம்பிக்கையை அரசு கொண்டுள்ளது.
3. அமைச்சர் ஹக்கீமும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் சிலரும் அரசாங்கத்தைச் சிலவேளைகளில் கடுமையாக விமர்சிப்பது. (அது உண்மையோ போலியோ என்பது வேறு கதை)
4. “தெவிநெகும“ சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு தனது கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களைக் கோரியிருந்தமை
5. ஹலால் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டிருந்த உபகுழுவின் அறிக்கையில் கையொப்பமிடாமை.
6. 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் மேலும் திருத்தங்களைக் கொணடு வருவதற்கான ஆதரவை வழங்காமை போன்ற விடயங்களே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீது அரசுக்கு அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கலாம்.
இது இவ்வாறிருக்க, இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் என்ன என்பதே இன்றையக் கேள்வி. முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு ஏற்பட்டுள்ள் அவமரியாதை தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ளப்போகிறது? என்ன தீர்மானத்தை எடுக்கப் போகிறது என்பதனை அறிவதில் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள், தொண்டர்களை விட அரசாங்கமே அதிக எதிர்பார்ப்புடன் உள்ளது. மக்களைப் பொறுத்த வரையில் தேசிய அரசியலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன நடந்தாலும் அவர்கள் அரசுடனேயே ஒட்டிக் கொண்டிருப்பர் என்ற திட்டவட்ட நம்பிக்கை உள்ளது. அரசுக்கும் அப்படித்தான்.
ஆனால், இன்று நடந்துள்ளதனை முஸ்லிம் காங்கிரஸ் பொறுத்த வரையில் அதன் கௌரவத்துக்கும் பலத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகவே கொள்ள வேண்டும்.இந்த விடயத்தில் வெறும் வாய்ச் சவாடல்கள் விடுவதில்லை வேலையில்லை.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தங்களைச் சேர்த்துக் கொள்ளாமை தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் சில கருத்துகளை அண்மையில் தெரிவித்திருந்தார். தங்களது கட்சியைச் சேர்ந்திருந்தால் இந்தப் நாடாளுமனறக் குழு ஓரளவு அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும் என்றும் அந்தக் குழுவின் அறிக்கையைக் குப்பைக் கூடைக்குள்தான் போட வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார். தனக்கு எட்டாமல் போன திராட்சைப் பழத்தைப் பார்த்த நரி சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்று கூறியது போன்ற ஆறுதலாக இது அமைச்சர் ஹக்கீமுக்கு இருக்கலாம். மேலும்வீரபாண்டிய கட்டப் பொம்மனின் கதை வசனங்களும் பராசக்தி பட வாதங்களும் இன்று முஸ்லிம்களுக்குத்தேவையில்லை.
, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் காலத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்” என்ற தலைப்பில் அமைச்சர் ஹக்கீம் ஒரு சுயவிமர்சனத்தைச் செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளார். அதனடிப்படையில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் அவர் மனட்சாட்சியைக் கேட்க வேண்டியவராகவுள்ளார்.
1. இன்றைய ஆட்சியின் பங்காளராக இணைந்த பின்னர் மக்களுக்கு, விசேடமாக கிழக்கு மாகாணமுஸ்லிம் மக்களுக்காக அரசாங்கத்தின் ஊடாகப் பெற்றுக் கொடுத்தவைகள் என்ன?
2. வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளுக்கு தீர்வு காணப்பட்டதா?
3. கிழக்கு மாகண சபையில் ஆட்சிப் பங்களாராவதற்காக முன்வைக்கப்ட்ட கோரிக்கைகளை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றியதா?
4. தனது கட்சிசார் கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கு முழுமையான அதிகாரங்களை அரசு வழங்கியுள்ளதா?
5. தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படனவா?
6. வடக்கு, கிழக்குக்கு அப்பால் முஸ்லிம்களின் நலன் தொடர்பில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட நல்லனவைகள் என்ன?
7. ஹலால் விடயத்துக்காக நியமிக்கப்பட்ட உபகுழு தொடர்பான அறிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் திருப்தி கொள்கிறதா? இவ்வாறு பல விடயங்களை தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் விமர்சனம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறெல்லாம்நிலைமை இருக்கும்போது இன்னும் அரசுடன் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு வேறு காரணங்களை இந்தக் கட்சி கூறுமாயின்அவை தனது சமூகம் சார்ந்த்தாகஎதிர்காலத்தில் இருக்கப் போவதில்லை. மாறாக, அந்தக் காரணங்கள் பதவி, அந்தஸ்து, வசதி வாய்ப்பைக் கொண்ட சுயநலமிக்கவையாகவும் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கும் கவனிப்புக்கான விசுவாசமாகவே அமையும்.
இதுவே இன்று செஞ்சோற்றுக் கடனுக்குச் சேராத இடத்தில் தொடர்ந்து சேர்ந்திருக்கும் நிலைமையை இந்தக் கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது.
எதையாவது கூறி தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என இனியும் நினைத்துச் செயற்படுவதும் சரியல்ல. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் விமலுக்கும் சம்பிக்கவுக்கும் எதனைம் செய்ய முடியுமென்றால் ஹகீமுக்கு ஒன்றையும் செய்ய முடியாத நிலை ஏன்? கட்சியின் பலவீனமா, முஸ்லிம்கள் மீதான அரசின் இனவாதமா? முடிவெடுக்க வேண்டியது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையே. ஆளுங்கட்சியிலிருந்தால்தான எதனையாவது செய்ய முடிமென்று தொடர்ச்சியாகக் கூறி வந்த முஸ்லிம் காங்கிரஸுக்கு எதனையுமே செய்ய முடியாது என்ற நிலை தோன்றியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அதன் முடிவு என்னவாகஅமையப்போகிறது என்பதே இன்றையக் கேள்வி.
தங்களது பதவியையும் வசதி வாய்ப்புகளையும் துறந்து விட்டு ஆட்டோக்களிலும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களிலும் பயணிக்க எத்தனை பேர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தயாராகுகின்றனர் என்பதனை இருந்து பார்ப்போம்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 30-06-2013

No comments:
Post a Comment