ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அந்தக் காலங்களில் எம். ஜி. ஆரும் நம்பியாரும் நடித்த திரைப்படம் ஒன்று திரைக்கு வரப்போகிறது என்றால் அந்தப்படம் தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு, எதிர்ப்பார்ப்பினைச் சொல்லவே தேவை இல்லை. அப்படி ஒரு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் அந்தப் படத்துக்கு இருக்கும். நம்பியாருக்கு எம்.ஜி ஆர் குத்து விடுவார். அதனுடன் நம்பியார் கதை சரி என்ற மகிழ்ச்சிகரமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.
இப்படிப்பட்ட எதிர்பார்ப்புத்தான் கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்மட்டம் கூடுவதற்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் காணப்பட்டது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் இணைத்துக் கொள்ளப்படாமையால் இந்தக் கட்சிக்கு ஏற்பட்ட மானக்கேட்டால் அரசிலிருந்து இந்தக் கட்சி விலகப் போகிறது. முக்கிய முடிவுகளை எட்டப் போகிறது என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு பரபரப்பான சூழ்நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்பீடம் கூடியது. இப்போதான் முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டின் “ கௌரவப் பிரஜை“ ஆகப் போகிறது என்றெல்லாம் தொண்டர்கள் நினைத்துக் கொண்டார்கள்.. ஆனால், கூட்ட தீர்மானங்கள் தொண்டர்களின் தலையில் மண்போட்ட கதையில்தான் போய் முடிந்தது.
” நாங்கள் கட்சியிலிருந்து விலகமாட்டோம். அவர்களாக விரும்பினால் விலக்கிக் கொள்ளட்டும் என்ற தீர்மானத்தோடு இந்த விடயத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தது முஸ்லிம் காங்கிரஸ் தலைமை. இதனால் கட்சியின் தொண்டர்கள் நிலைமை முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகவும் போனது.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் இந்த அரசியல் உயர்பீடக் கூட்டம் தொடர்பில் அரசாங்கம் சரியான கணிப்பையே வைத்திருந்தது. இவர்கள் நிச்சயமாக விலகமாட்டார்கள் என்பதில் அரசாங்கம் மிக.. மிக நம்பிக்கை கொண்டிருந்தது. 29 ஆம் திகதி நாங்கள் கூடப்போகிறோம் முக்கிய விடயங்களைப் பேசப் போகிறோம். எங்களால் எடுக்கப்படக் கூடிய தீர்மானங்கள் கடுமையாகவும் தீர்க்கமிக்கதாகவும் அமையும் என்றெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் காட்டிய “கமிங் சூன்“ ( coming soon) குறித்து அரசாங்கம் அலட்டிக் கொள்ளவும் இல்லை. விரட்டிப் பிடிக்கவும் இல்லை. இதன்மூலம் இவர்களது நிலைமையை அரசு எவ்வாறு புரிந்து கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.
ஆனால், இந்தக் கூட்டத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் மட்டும் அன்றைய எம்.ஜி. ஆர் படம் போன்றிருந்தது. அதாவது எம்.ஜி. ஆர் நம்பியாரை படத்தில் அடி.. அடி என அடிப்பது.. ஆனால், நிஜ வாழ்க்கையில் இருவரும் நண்பர்களாக இருப்பது போன்ற சிறியதொரு காட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் அரங்கேறியிருந்தது. அதாவது, அமைச்சர்களான ஹக்கீமுக்கும் பஷீர் ஷேகுதாவுதுக்கும் ஏதோ கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், கூட்டம் முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் நெருக்கமாக அளவளாவிக் கொண்டிருந்த செய்தி வெளிவரவே இல்லை. இந்த இரு அமைச்சர்களுக்குமிடையிலான நெருக்கமான உறவு என்பது கண்பட்டாலும் கெட்டுப்போய் விடமாட்டாது என்பது பகிரங்கமானது. ஆகவே, இந்த விடயத்தை திருப்பித் திருப்பி பேசுவதில்லை அர்த்தமில்லை.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் குறித்துப் புதிதாகக் கூறுவதற்கு ஒன்றுமே இல்லை. 13 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவதில்லை. நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவது என்றெல்லாம் அங்கு முடிவுகள் எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவுகள் புதியவையல்ல.. ஆனால் புதினமானவை.
அரசுடன் இருந்து கொண்டே மாகாண சபைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது, பின்னர் அதன் முடிவின் அடிப்படையில் அலரி மாளிகைக்குச் சென்று சரணாகதி அடைவது. அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பது போன்றன முஸ்லிம் காங்கிரஸின் கடந்த 12 வருட கால வரலாற்றின் புதிய கதைகள் அல்ல. இதே நிலைதான் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களின் முடிவிலும் ஏற்படும்.
இது ஒரு புறமிருக்க, அமைச்சர் ஹக்கீம் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வழக்கமான ஆக்ரோஷத்துடன் சில விடயங்களைக் கூறியிருந்தார்.
அதாவது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றி தமது கபட நாடகத்தை அரங்கேற்ற பலர் காத்து நிற்கின்றனர். சில பேரினவாத சக்திகள் எம்மை இரண்டாகக் கூறுபோட திட்டமிட்டுள்ளன. அப்படியான பேரினவாத சக்திகளுக்கு தீனிபோடும் வேலையை நாம் செய்ய முடியாது.
அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவேண்டுமென சிலர் நினைப்பது கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை சுற்றுவது போன்ற ஒரு செயலாகும் ஒருவருக்கு தலையை மூடவும் வேண்டும். அதே நேரம் இருக்கும் சிறிய துணியைக் கொண்டு தனது மானத்தைப் பாதுகாக்கவும் வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர் தனது கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை அணிய மாட்டார். அதுபோலவே இருக்கின்ற சொற்ப அங்கத்தவர்களையாவது நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய வேறொன்றையும் மறைப்தற்கு அதனைப் பயன்படுத்த முடியாது. மானம் மிக முக்கியம். இதுபோல எமது கட்சிக்கும் சமூகத்திற்கும் எது முக்கியமோ அதனைத்தான் நாம் செய்ய வேண்டும். என ஹக்கீம் கூறியிருந்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றி விட்டு தமது கபட நாடகத்தை அரங்கேற்ற பலர் காத்து நிற்கின்றனர். சில பேரினவாத சக்திகள் எம்மை இரண்டாகக் கூறுபோட திட்டமிட்டுள்ளனர் என ஹக்கீம் கூறுகிறார். ஆனால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியின் பங்காளர்களாக இருக்கும் போதே அவர்கள் தங்களது கபட நாடகத்தை மேடையேற்றி வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பது அமைச்சர் ஹக்கீமுக்கு இன்னும் புரியாமல் உள்ளது போல் தெரிகிறது.
தம்புள்ளையிலிருந்து தெற்கு வரை நகர்ந்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள், முஸ்லிம்களுக்கு இன்று நேர்ந்துள்ள துன்பியல்கள், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம் வழங்காமை போன்ற அனைத்தும் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருக்கும் போதே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னரும் இதே முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரஃப் தலைமையில் சிங்கள அரசின் பங்காளியாக இருந்ததுதான். ஆனால், அவர் அரசுடன் இருந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மோசமான செயற்பாடுகள் இந்தளவுக்கு முன்னெடுக்கப்படவே இல்லை.
இன்று அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருக்கும் அதேவேளை, சம்பிக்க, விமல் போன்றவர்களும் அரசுடன் இருந்து கொண்டே அனைத்தினையும் ஆட்டிவிக்கிறார்கள். ஆகவே, இவ்வாறானதொரு நிலையில் தமது கபட நாடகத்தை அரங்கேற்ற சில பேரினவாத சக்திகள் சதி செய்வதாக ஹக்கீம் கூறுவது வேடிக்கையானது. சிலவேளைகளில் முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றினால் முஸ்லிம்கள் மீது கை வைக்க முடியாத நிலை ஏற்படலாம் என்றே அவர்கள் சிந்திக்கலாமே தவிர, முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றி விட்டுத் தங்களது கபட நாடகத்தை நடத்தலாம் என்று நிச்சயமாக பேரினவாத சிங்கள சக்திகள் சிந்திக்கமாட்டா. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றி விட்டு ஏதாவது செய்தால் அந்த விடயத்தை முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேசமயப்படுத்தி பிரச்சினையாக்கி தங்களையும் தங்களது அரசையும் சிக்கலுக்குள்ளாக்கி விடலாம் என்றே அவ்வாறான சக்திகள் சிந்திக்கக் கூடும். மேலும், முஸ்லிம் காங்கிரஸை உள்ளே வைத்துக் கொண்டே முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அவற்றினை முஸ்லிம் காங்கிரஸ் ஊதிப்பெருக்க விடாமல் உள்ளேயே சமாளித்து விடும் என்ற நம்பிக்கை இன்று தென்னிலங்கை சிங்கள பேரினவாத சக்திகளிடம் வலுவாகக் காணப்படுகிறது.
மேலும், அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவேண்டுமென சிலர் நினைப்பது கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை சுற்றுவது போன்ற ஒரு செயலாகும் ஒருவருக்குத் தலையை மூடவும் வேண்டும். அதேநேரம் இருக்கும் சிறிய துணியைக் கொண்டு தனது மானத்தைப் பாதுகாக்கவும் வேண்டுமெனக் கூறும் அமைச்சர் கால் இல்லாத ஒருவன் செருப்புக்கு ஆசைப்பட வேண்டிய தேவையே இல்லை என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். நாடளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம் வழங்கப்படாத அன்றைய தினமே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தலைப்பாகையும் கோவணமும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதனை அமைச்சர் ஹக்கீம் ஏற்றுக் கொள்வதே கௌரவமாகும். எது எப்படியிருப்பினும் அமைச்சரின் இந்தக் கூற்றானது “மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே..மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே“ என்ற அந்தக் கால சினிமா பாடலையே நினைவுபடுத்தி ஒப்புவிக்கிறது.
எது எப்படியிருப்பினும் எதனைத்தான ஹக்கீம் கூறினாலும் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றால் நிச்சயமாக அந்தக் கட்சி அரசுடன் இணைந்தே ஆட்சியமைக்கும் என்பது மட்டும் உண்மை.
இவ்வாறானதொரு நிலை ஏற்படும்போது அமைச்சர் ஹக்கீம் மீண்டும் இவ்வாறு கூறுவார் என இப்போதே எதிர்வும் கூற முடியும்
‘வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு பற்றி நான் இங்கு தெளிவுபடுத்த வேண்டும். 'தனிமரம் தோப்பாகாது' என்பதை நாங்கள் புரிந்து கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். இதற்காக தமிழ் மக்கள் எங்களை வஞ்சிக்க துணியமாட்டார்கள் என்று நம்புகின்றேன்.
இந்த நாட்டில் நாங்கள் தற்போது சூழ்நிலைக் கைதிகளாகவே இருந்து வருகின்றோம். இந்தச் சூழ்நிலையில் நாங்கள் சரியென நினைத்து எடுக்கும் முடிவுகளும் பிழையானதாக அமையும். அதேபோல பிழை என்று நினைத்து எடுக்கும் முடிவுகளும் சிலவேளை சரியானதாக அமையும். என்று அவர் மீண்டும் கூறலாம்.
பொறுத்திருந்துதான் பார்ப்போம்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 07-07-2013
No comments:
Post a Comment