ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் தொடர்பான பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது. யாரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது என்பது தொடர்பில் இரு தரப்பான கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இலங்கை தமிழ் அரசியல் களம் சூடு பிடித்துக் காணப்பட்டது. இந்த விடயம் தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலும் சிக்கலான தன்மையை ஏற்படுத்தியிருந்ததுடன் இந்த ஒரு காரணத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரண்டுபட்டு விடுமோ என்ற கவலை தமிழ் மக்களிடம் விருப்பம் சிங்கள கடுங்கோட்பாளர்களிடமும் காணப்பட்டது.
தென்னிலங்கையில் சிங்கள பேரினவாத சிந்தனையைக் கொண்ட அரசியல் சக்திகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் வேறுவிதமான எதிர்பார்ப்புகளைக் கொண்டதாகக் காணப்பட்டது. கூட்டமைப்பு இரண்டுபட முதன்மை வேட்பாளர் விவகாரம் காரணமாக அமைந்து, அவர்களது தற்போதைய கூட்டுப் பலம் இதன் மூலம் சிதைக்கப்பட்டு விடும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தங்களது இந்த ஆவல்மிக்க எதிர்பார்ப்பு விரைவாக இடம்பெற வேண்டுமென்றும் அவர்கள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி அதனைத் துருவப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக அவர்கள் இதனைக் கருதிச் செயற்பட்டிருந்தனர். இருப்பினும் இவ்வாறான துஷ்ட நோக்கங்கம் கொண்டவர்களின் எண்ணத்தில், எதிர்பார்ப்பில் மண் விழுந்தது போல் எல்லாம் நடந்து முடிந்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறும் ஐந்து கட்சிகளின் ஏகமனதான தீர்மானத்துடன் முன்னாள் மேல்நீதிமன்ற நீதியரசர் சீ. வீ விக்னேஸ்வரன் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் தெரிவானது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவிடமும் பாரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்தல், ஆட்சியமைக்கும் பட்சத்தில் அமைச்சர்களின் பெயர்களைச் சிபார்சு செய்தல் போன்றவற்றின் இறுதி முடிவெடுக்கும் அங்கீகாரம் மாவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டதனையடுத்து அவர் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருநதார், வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்தும் கூறியிருந்தார். இதற்கு மேலாக இன்னொரு வியடமும் விக்னேஸ்வரனால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அதாவது, பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத அதிகாரப் பகிர்வு உலகில் எங்கும் இல்லை என்பதே அவர் கூறிய விடயமாகும்.
எது எப்டியிருப்பினும் இவ்வாறான பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே அவர் செயற்பட வேண்டியுள்ளது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட முலாவது தேர்தல் முன்னர் இடம்பெற்றது. இப்போது வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட வடக்கின் முதலாவது தேர்தல் இடம்பெறப் போகிறது. மிகுந்த சவால்களுக்கு மத்தியிலேயே விக்னேஸ்வரன் இந்தத் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. அதே போன்று வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சிக்கு வருமானால் அதன் செயற்பாடுகள் கூட எரிதணலில் நடப்பதற்கு ஒப்பானதாகவே இருக்கப் போகிறன.
தற்போதைய கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் நிலைப்பாடு யாவரும் அறிந்தேதே. அந்த மகாண சபையின் ஆளுந்தரப்பினரே இன்று தங்களுக்கு அதிகாரங்கள் எதுவும் இல்லை. ஆளுனரே அனைத்தையும் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார், எதனையும் தங்களால் செய்ய முடியாத நிலையில் உள்ளோம் என்றெல்லாம் கூறிக் கொண்டு சபைக் கூட்டங்களையும் பகிஷ்கரித்து வருகிறார்கள். அரசாங்கக் கட்சியினரே ஆட்சி புரிந்தும் கிழக்கு மாகாணம் பெரும்பான்மை தமிழ் பேசும் மக்களைக் கொண்ட ஒரு பிரதேசம் என்பதற்காக இவ்வாறாறெல்லாம் மாற்றாந்தாய மனப்பான்மையுடன் மத்யி அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், வடக்கின் நிலை அதனை விடவும் வித்தியாசமானது, அதுவும் தமிழர் பிரதேசம் என்பதற்கு மேலாக, எதிரணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அது மத்திய அரசுக்கு ஒரு மாபெரிய தலையிடியாகி விடும். ஆகவே, இவ்வாறானதொரு நிலையில் வடக்கின் ஆட்சி அதிகார இயந்திரம் என்பது மாகாண சபையினால் எந்தளவுக்கு செயற்படுத்தப்படுமோ என்பது சந்தேகத்துக்குரியது. மத்திய அரசினால் நிச்சயமாக பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படலாம். சிங்கள ஆளுநரின் பிடி அங்கு கடுமையாக இறுக்கமடையும்.
எது எப்படியிருப்பினும் அங்கு தமிழர் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டே ஆக வேண்டும். அதன் மூலம் சர்வதேசத்துக்குப் பல செய்திகளைக் கூறக் கூடியதாக இருக்கும். தமிழரின் ஒற்றுமை, பலம் இவை இன்னும் சிதைக்கப்படவில்லை என்பதனை தென்னிலங்கையின் சிங்கள பேரினவாத சிந்தனை கொண்ட சக்திகளுக்கும் மற்றும் சர்வதேசத்துக்கும் எடுத்துச் சொல்ல இது ஒரு சந்தர்ப்பமாகவே இது அமைகிறது. அது மட்டுமின்றி, கூட்டமைப்பு தலைமையிலான வட பகுதி ஆட்சி அதிகாரத்தில் மத்திய அரசின் தலையீடுகள், தடைகள் ஏற்படும்போது அவற்றை யதார்த்தத்துடன் கண்டறிந்து கொள்வதற்கு சர்வதேச சமூகத்துக்கு ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்து விடும். ஆகவே, தமிழ் மக்கள் இந்த விடயத்தில் ஐக்கியமாகச் செயற்பட வேண்டும்.
இதேவேளை, ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சரான பாட்டாலி சம்பிக்க ரணவக்க சில கண்டு பிடிப்புகளைச் செய்துள்ளார். இந்தியாவும் சர்வதேசமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாட்டை பிரிப்பதற்கான சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளன. அதன் ஒரு கட்டமாகவே அன்ரன் பாலசிங்கம் போன்ற ஒருவரை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துள்ளனர். முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பிரிவினைகளுக்கு துணை போகக் கூடியவர். சர்வதேசத்துடன் இணைத்து சூழ்ச்சிகளை முன்னெடுக்கக் கூடியவர் என்று அவர் கூறியுள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் என்ன வேறொருவரை தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பு தனது முதன்மை வேட்பாளராக நிறுத்தியிருந்தாலும் இதே கருத்தினையே அவர் கூறியிருப்பார். எனவே, இது தொடர்பில் எவரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
வட மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதில் பௌத்த மக்கள் கவனமாக இருக்கின்றனர். ஏனெனில், இலங்கைக்கு எதிரான சக்திகள் எல்லாமும் ஒன்றாக சேர்ந்திருக்கின்றன. அவர்களின் ஒட்டுமொத்த உருவமே முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். அவர் வடக்கின் முதலமைச்சரானால் நாட்டை பிரிக்காமல் விடமாட்டார். அதற்கு முன்னர் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் பறிக்க வேண்டும் என்றும் சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.
இந்தக் கூற்றுக்கள் மூலம் இனவாத்தத்தை தூண்டவே அவர் முயற்சிக்கிறார். அத்துடன் இன்னொரு இனக் கலவரத்துக்கும் அவர் தூபமிடுகிறார். ஆனால் இவ்வாறானவர்கள் நாட்டில் இனவாதத்தையும் கலவரத்தையும் தூண்டும் வகையில் கருத்துத் தெரிவிப்பது தொடர்பில் அரசும் சட்டத்தை அமுல்படுத்துவோரும் அமைதியாக இருப்பது ஏன் என்பதும் ஒரு கேள்விதான். இவ்வாறானவர்களை இரவிலோ அல்லது விடியற் காலையிலோ தட்டி எழுப்பிச் சென்று விசாரணைக்கு உட்படுத்தப்படாமையின் காரணம் ஏனோ தெரியவும் இல்லை.
இவ்வாறான இனவாத தீ நாக்குகளின் சுட்டெரிப்புக்கு மத்தியிலேயே வட மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடப் போகிறது. அதாவது அரசியல் ரீதியாக தெற்கிலிருந்து அணுகுண்டுகளைத் தாங்கிக் கொண்டே வடக்குத் தேர்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.இதனை விட, தமிழ் இனத்துரோகிகளின் ஊள்ளுர் துரோகத்தனத்திலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டே இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட வேண்டியுள்ளது.
இந்த வேளையில், இரண்டு பக்கங்களிலிருந்தும் எறியப்படும் அம்புகளை வாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டும் செயற்படுவது கஷ்டமாகும். எனவே, இந்த விடயத்தில் தமிழ் மக்கள் பக்கபலமாக நின்று செயற்படுவது அவசியம். இதன் மூலமே தமிழ் மக்கள் தங்களது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 21-07-2013
No comments:
Post a Comment