ஏ.எச்.
சித்தீக் காரியப்பர்
கிழக்கு மாகாண
சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான
வரவு – செலவுத் திட்டம்
நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சில பிரச்சினைகள்
எழலாம் என்ற ஐயத்தின் மத்தியில் அவ்வாறானதொரு நிலை ஏற்படலாமலேயே வரவு – செலவுத் திட்டம் நிறைவேறியது. இவ்வாறானதொரு ஐயத்தை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே ஏற்படுத்தியிருந்தது.
கிழக்கு மகாண
சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவரான ஜெமீல் சில விடயங்களைக் கூறி அவற்றினை
நிறைவேற்றினால் மட்டுமே தாம் வரவு – செலவுத் திடத்துக்கு ஆதரவளிப்போம் என முன்னர் கூறியிருந்தார். இந்த விடயமே அவ்வாறானதொரு
ஐயத்தை தோற்றுவித்திருந்தது. ஆனால், இறுதியில் மின்னாமல் முழங்காமல் தங்களது ஆதரவையும் வழங்கி வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முஸ்லிம்
காங்கிரஸ் முட்டுக்கொடுத்து விட்டது.
கிழக்கு
மாகாணத்தில் நிலவும் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை, பொத்துவில் பிரதேச முஸ்லிம் பாடசாலைகளில்
காணப்படும் ஆளணி மற்றும் பௌதீகப் வள பற்றாக்குறை தொடர்பில் கவனம் செலுத்தி அவை
தீர்க்கப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் கேட்டிருந்தது. இவற்றுக்கான தீர்வு
கிட்டும் முன்பே வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்து அதனை வெற்றி பெறச் செய்திருந்தது.
இந்த விடயம்
தொடர்பில் கிழக்கு மகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரான ஜெமீல் கருத்து
வெளியிடுகையில், எமது கோரிக்கைகளை
சம்பந்தப்பட்ட தரப்பு ஏற்றுக் கொண்டது. அவற்றினை நிறைவேற்றித் தருவார்கள் என
நம்புகிறோம். இதனடிப்படையிலான பரஸ்பர
புரிந்துணர்வுடன் நாம் வாக்களிப்பில் ஆதரவளித்தோம் என்று கூறியிருந்தார்.
அந்தளவுக்கு அவர்களால் நிபந்தனைகளை விதிக்க முடியாத பலவீன நிலைமை தோன்றி இன்று
பரஸ்பரம் என்றளவுக்கு கீழிறங்கி வந்துள்ளது.
கிழக்கு மாகாண
சபையில் ஆளுந்தரப்புடன் இணைந்தபோது அரசுடன் சில விடயங்கள் தொடர்பில் சில
கோரிக்கைகளை முன்வைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதனையோ எதனையோ அரசு நிறைவேற்றாத நிலையில்
கிழக்கு மாகாண சபையில் அரசுக்குச் சார்பாகச் செயற்பட்டுள்ளது என்பதனையும் இங்கு
கூற வேண்டும்.
மக்களைச்
சமாதானப்படுத்துவதற்காகவே பேச்சளவிலான நிபந்தனைகள், ஒப்பந்தங்கள், பரஸ்பர புரிந்துண்ரவுகளே தவிர அவற்றினை
அரசாங்கமோ தாமோ நிறைவேற்ற வேண்டிய எந்தத் தேவையும் இல்லை என்ற நிலையில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுகிறதோ தெரியாது.
ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களில் பெரும்பாலனோரே எந்த
விடயத்தையும் சில காலத்தின் பின்னர் மறந்து போய் விடக் கூடிய ஞாபக மறதிக்காரர்கள்
என்பதனை முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் என்பது அஷ்ரஃபின் கட்சி,
முஸ்லிம் காங்கிரஸ்
சின்னம் என்பது மரம்... அதனுடன் ஒரு இஸ்லாமிய பாடல்... என்ற இந்த மூன்று
மந்திரங்களாலும் முஸ்லிம்களை வளைத்துப்
போடலாம் என்ற எண்ணத்திலேயே இவையெல்லாம் நடக்கின்றன. அதனைத்தான் மக்களும்
நம்புகின்றனர். ஆனால் உள்ளே 13 ஆம்
புலிகேசரிகள் நிறையவே உள்ளனர் என்பதனை மக்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் இறுதியாக அரசுடன் இணைந்தபோது பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அவை பின்னர் ஒப்பந்தங்களாகி, நிபந்தனைகளாகி
இப்போது பரஸ்பரம் என்ற அளவுக்கு நிலைமை கீழே இறங்கி விட்டது. கழுதை தேய்ந்து
கட்டெறும்பான கதை போல் போய்விட்டது.
முஸ்லிம்
காங்கிரஸின் இந்தச் செல்வாக்குச் சரிவுக்கு அரசாங்கம்தான் முழுப் பொறுப்பு என்று
ஒரேயடியாகக் கூறமுடியாது. அரசாங்கத்தில் இன்று செல்லாக் காசாக முஸ்லிம் காங்கிரஸ்
போயுள்ளமைக்கு அந்தக் கட்சியின் செயற்பாடுகளே முக்கிய காரணம் என்பதனை மறுக்க
முடியாது.
கட்சிக்குள்
இன்று பிளவுகள் அதிகரித்து விட்டன. வெளியில் சொல்ல முடியாது உள்ளே குமுறும்
எரிமலைகளாகப் பலர் உள்ளனர். சுயநலங்களை கைவிடாமையால் இன்று பொதுநலமே
பாதிக்கப்படும் நிலை அந்தக் கட்சிக்குள் தோற்றம் பெற்றுள்ளது. கட்சிக்காக
உழைப்பவர்களை விட தங்களைக் காட்சிப்படுத்த விரும்பும் முக்கியஸ்தர்கள் உள்ளே
நுழைந்து மலிந்து விட்டனர். தனிப்பட் நபர்களின் துதிகள் அதிகரித்து விட்டன.
இவ்வாறான
நிலைமைகள் காரணமாக அரசுக்குள் இந்தக் கட்சியின் செல்வாக்கானது அடுப்படி வரையான
வரையறைக்கு உட்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸாரால் ஒருபோதும் ஐக்கியப்பட முடியாது
என்பதனை நன்கறிந்துள்ள அரசு இன்று அவர்களைக் கணக்கெடுத்தாத நிலையை
கைக்கொண்டுள்ளது.
பிரபல
எழுத்தாளரான வ.ஐ.ச ஜெயபாலன் கைது செய்யப்பட்ட போது, இந்தக் கட்சியின் தலைவரான நீதியமைச்சர் ரவுப்
ஹக்கீம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தார். அதாவது, ஜெயபாலனை விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தார்.
ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை.
சிலவேளை ஹக்கீம் இவ்வாறானதொரு வேண்டுகோளை விடுக்காதிருந்தால் ஜெயபாலன் விரைவாக
விடுதலை செய்யப்பட்டிருக்கலாமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
இப்படி பல
விடயங்களைக் கொள்ள முடியும். அரசாங்கத்துடன் இருக்கிறோம். அமைச்சர்களாக
இருக்கிறோம் என்ற பெருமையை தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஒன்றுமே செய்ய
முடியாத நிலை. இதனை அவர்களும் நன்கு புரிந்துள்ளனர். ஆனால், அவர்களால் மெல்லவோ துப்பவோ முடியாத நிலை.
இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்தாலும் ஆபத்தாகிவிடும் அபாயம்.
முஸ்லிம்
காங்கிரஸினைப் பொறுத்த வரையில் அவர்கள் இப்போது பிரார்த்திப்பது ஒரேயொரு
விடயத்துக்காகவே. தங்களை அரசாங்கம் வெளியே
போட்டு விடக் கூடாது என்பதே அவர்களின் ஏக பிரார்த்தனை.
தங்களது
கட்சியில் எட்டு எம்பிக்கள் பத்து எம்பிக்கள் உள்ளனர் என மார்தட்டிக் கொள்வதில்
இப்போது அர்த்தமில்லை. இவர்கள் அரசிலிருந்து விலகினால் அரசு வீழ்ந்து விடப்போவதும்
இல்லை. 40 பேருடன்
நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ஜே.வி.பியில் இன்று நால்வர் கூட இல்லாத நிலை.
அதற்கான காரணம் அவர்களது ஐக்கியத்தை அவர்களே சிதைத்துக் கொண்டமையாகும்.
இவ்வாறானதொரு
நிலைமையே இன்று முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும் உருவாகியுள்ளது.
ஆட்களின் எண்ணிக்கையை விட ஐக்கியமே மிகப்பலமானது என்பதனை வரலாறு கூறும். இன்று
கல்முனை மாநகர சபையின் நிலையை எடுத்து நோக்கினால் முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினர்கள் அதிகம். ஆனால், அவர்கள் இரு
பிரிவுகளாக நிஸாம் காரியப்பர் அணி, சிராஸ்
மீராசாகிப் அணி என பிரிந்து செயற்படுவதால் அங்கு பலவீனம் ஏற்பட்டுள்ளது. இந்தப்
பிரிவினையே நீண்ட காத்திருப்பின் பின்னர் எதிரியின் தூண்டிலில் மாட்டிய மீன்
போன்றாகி விடுகறது.
எனவே, முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமானது இவற்றினைப்
புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து கட்சிக்குள்
ஐக்கியத்தை வளர்க்க தேவையானவற்றைச் செய்ய
வேண்டும். அதன் மூலம் மட்டுமே பரஸ்பர புரிந்துணர்வு என்ற மீசையில் மண்
ஒட்டாத கதையிலிருந்து விடுபட்டு உயர்ந்த நிலைக்குச் சென்று கடசியினதும்
முஸ்லிம்களினிதும் கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதுடன் கோரிக்கைகளை வெற்றி கொள்ள
முடியும். எங்களது ஐக்கியத்தை வைத்தே நாம் எதனையும் சாதிக்கக் கூடியவர்களாக மாற
முடியும்.
இதனை விடுத்து
உழுகின்ற நேரத்தில் ஊருக்குப் போயிட்டு அறுக்கிற நேரத்தில் அரிவாளுடன் வந்த
கதையால் எதுவும் நடக்கப் போவதில்லை.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 15-12-2013

No comments:
Post a Comment