Friday, November 22, 2013

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா... கர்ணா என்னை மன்னித்து அருள்வாயடா தம்பி..


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை மாநகர சபை பிரச்சினைக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு கிடைத்து விட்டது. முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப் தான் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதபடி காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொள்ள.. நிஸாம் காரியப்பரை மேயராக்கிப் அழகு பார்க்கும் முயற்சியில் அமைச்சர் ஹக்கீமும் வெற்றி பெற்றுக் கொண்டார். 

ஆனால், இனித்தான் அடுத்த கட்டம் ஆரம்பமாகப் போகிறது.. சிராஸ் மீராசாகிப் பதவி விலக வேண்டுமென்ற விடயத்தில் பலவேறு தரப்புகளிலும் பெரும்பாலும் ஒற்றுமைத் தன்மையே காணப்பட்டது. கட்சித் தலைமைக்கும் அளித்த வாக்குறுதிக்கும் கட்டுப்பட்டவராக அவர் நடந்து கொள்ள வேண்டுமென்ற விடயத்தில் பலரும் இறை வசனங்களையும் ஹதீஸ்களையும் வைத்து இந்த விடயத்தை நியாயப்படுத்தியிருந்தனர்.


முஸ்லிம் காங்கிரஸ{க்குள் நடக்கும் எத்தனையோ சமாச்சாரங்களுக்கு இறை வசனங்களையும் ஹதீஸ்களையும் துணைக்கு அழைக்காத நிலையில் இந்த விடயத்தில் மட்டும் பக்தி மேலோங்கிக் காணப்பட்டது. இருந்து பார்ப்போம் எதிர்கால விடயங்களும் இப்படியே நடக்குமா என.

நிஸாம் காரியப்பர் இப்போது கல்முனை மேயராகவிட்டார். ஆனால்இ இனித்தான் தனது காரியங்களில் அவர் அப்பராகவும் சுப்பராகவும் நடக்க வேண்டியுள்ளது. அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

இழுபறிக்கு மத்தியில் இந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டதொன்று என்ற விடயத்துக்கும் மேலாக அவர் தொடர்பில் எழுந்திருந்த விமர்சனங்கள் குறித்தும் கவனஞ் செலுத்திச் செயற்பட வேண்டிய கட்டாய நிலையை அவர் எதிர்நோக்கியுள்ளார். அத்துடன் முன்னாள் மேயரின் ஆதரவாளர்கள் பழி சொல்லும் வகையிலும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது. இதனை விட முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமும் இவரது ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

முன்னாள் மேயரின் இறுதிக் கட்டச் செயற்பாடுகளை ஒவ்வொன்றாக கவனித்து வந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமையானது நிஸாம் காரியப்பரை ஆரம்பம் முதல் முடிவு வரை அவதானிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் கூறலாம்.

சிராஸ் மீராசாகிபிடமிருந்து இராஜினாமாக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட தினத்தில் அமைச்சர் ஹக்கீம் நடத்திய  ஊடகவியலாளர்  மகாநாட்டில் பின்வருமாறு  தெரிவித்திருந்தார்.  கல்முனையின்  புதிய  மேயராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்படுகிறார். அவர்  பிரதேச  வேறுபாடுகளுக்கு  அப்பால்  நின்று  செயற்பட  வேணடும். மக்களுக்குச்  சேவை  செய்ய  வேண்டுமென்ற தோரணையில்  கருத்துகளை வெளியிட்டிருந்தார். பொதுவாக  இப்படித்தான்  எல்லோரும் சொல்வது என்பது போன்று  இதனைக்  கருத்தில் கொள்ள  முடியாது. அமைச்சர் ஹக்கீம் ஏதோ ஒன்றைக் கூறினால் அதற்கான  காரணங்கள் ஆயிரம் இருக்கும். காரணம் இல்லாமல் அவர் எதனையும் சொல்லியிருக்கமாட்டார்.

குறித்த ஊடகவியலாளர் மகாநாட்டில் நிஸாம் காரியப்பர் தொடர்பில் இன்னும் இரண்டு அறிமுகக் குறிப்புகளையும் ஹக்கீம் கூறியிருந்தார். நிஸாம் காரியப்பர்  முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர். எமது கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் என்று கூறியிருந்தார். அப்படிப்பட்ட ஒருவரைக்  கடந்த காலங்களில் தேசியப் பட்டியல் ஊடாகவேனும் நாடாளுமன்றத்துக்கு ஏன் அனுப்பி வைக்கவில்லை? சுழற்சி முறையிலேனும் அவருக்கு எம்.பி பதவி கொடுத்திருக்கலாம்.  அதற்கான சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் நிறையவே காணப்பட்டன. அல்லது ஏன் உயர் அரச பதவியை (நிறுவனத் தலைவர், பணிப்பாளர்) யேனும் அவருக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை? 

இன்று அமைச்சர் றிசாத் பதியுதீனின் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் முக்கிய அரச பதவிகளை வகித்து வருகின்றனர். அது போன்று ஏன் நிஸாம் காரியப்பருக்கும் செய்யவில்லை. அல்லது அவரின் அரசியல் பயணத்தை உள்ளுர் அரசியலுக்கு மட்டுப்படுத்தி வைக்கவே கட்சியின் தலைமை விரும்புகிறதா? என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

சில வேளைகளில் சிராஸ் மிராசாகிபை தட்டிக் கேட்பது போல் பகிரங்கமாகக் கேட்டு விட்டு பின்னர் இரகசியமாகத் தட்டிக் கொடுக்கும் முயற்சிகள் உள்ளே நடக்கினடறவோ தெரியவில்லை. அடுத்த பொதுத் தேர்தல் பணிகளுக்கு ஆயத்தம் செய்வதற்காகத்தான்  சிராஸ் மீராசாகிபை இந்த மேயர் பதிவியிலிருந்து விடுவிக்கும் நாடகமோ தெரியவில்லை.

ஏனெனில் மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாகிப் விலகியவுடன் இவ்வாறு தெரிவித்திருந்தார். அதாவது நான் மேயர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டேன். என்னைத் தேசிய அரசியலில் ஈடுபடுத்தி எதிர்காலத் தேர்தல்களில் வேட்பாளராக நிறுத்தவும் கட்சித் தலைமை விருப்பம் கொண்டுள்ளது என்று சிராஸ் கூறியதாக ஊடகங்களில் அறியக் கிடைத்தது. ஆகவே, இந்த விடயங்களில் என்ன ஜில்மால் உள்ளதோ தெரியாது.

நிசாம் காரியப்பர் ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி, மூன்று மொழிகளின் புலமைமிக்கவர், விவாதத் திறமைமிக்கவர். உயர்மட்டங்களுடன்  நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவர். ஆனால், அவரிடம் அரசியல் அனுபவம்  இன்மை  மட்டுமே ஒரே ஒரு குறை. இப்படிப்பட்டவரை தேசிய அரசியலில் ஈடுபடுத்துவதில் சிலவேளைகளில் சிக்கல்கள் விரும்பத்தகாத நிலைமைகள் ஏற்படுமோ என அச்சமோ தெரியாது.  ஏனெனில் சீடர்கள்  தங்களை மிஞ்சுவதனை குருக்கள் ஒருபோது விரும்புவதில்லை என்பது ஒரு பொது விடயம். அத்துடன் நிஸாம் காரியப்பர் அஷ்ரஃ.ப் காலத்திலிருந்தே கட்சியின் தொண்டனாக இருந்து இன்று வரை உள்வீட்டுச்  சதிகளில் ஈடுபடாது நிலைத்து நிற்பவர். அஷ்ரஃபின் இருவழி உறவுக்காரர். 

இப்படிப்பட்டவர்களைத் தேசிய அரசியலில் பிரவேசிகச் செய்யும் போது சில வேளைகளில் போட்ட முதலுக்கும் நஷ்ட வரலாம் என்றும் யோசிக்கப்படலாம். அதேவேளை, முன்னரும் நிஸாம் காரியப்பர் தேர்தல் ஒன்றில் பங்கேற்றவர் என்ற விடயத்தையும் மறுப்பதற்கு இல்லை.
கிழக்கிலிருந்தே முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உருவாக வேண்டுமென்ற மன ஆதங்கம் இன்னும் பாலானவர்களிடம் காணப்படும் நிலையில் நிஸாம் காரியப்பர் அந்த நிலையை அடையலாம் என்ற ஒரு மனப்பயமும் இருக்கலாம்.

மேலும், ஒரு கட்சியின் தலைமைத்துவம் அதே கட்சியின் சிரேஷ்ட மற்றும் திறமை மிக்கவர்களைத் தேசிய அரசியலில் ஈடுபடுத்தி அவர்கள் தங்களது திறமைஇ சாணக்கியத்தால் கட்சியின் தலைமைக்கே சவால் விடும் வகையில் வளர்ச்சியடைவதனை நிச்சயமாக எந்தக் கட்சித் தலைமையும் விரும்புவதில்லை. இது இலங்கை அரசியலில் ஒன்றித்துப் போன விடயம். இதற்கு உதாரணமாக இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியைக் கொள்ளலாம். சஜித் பிரேமதாசவோ கரு ஜயசூரியவோ அந்தக் கட்சியில் முக்கியத்துவப்படுத்தப்பட்டால் சில நேரம் தனது தலைமைக்கு ஆப்புத்தான் என  ரணில் நினைப்பதாகக் கூறப்படுவதனை இதற்கு ஓர் உதாரணமாகக் கொள்ள முடியும்.

இதேவேளை, நிஸாம் காரியப்பருக்கு இன்று கிடைத்துள்ள பதவி என்பது பஞ்சு மெத்தையல்ல.. பஞ்சும் வலிக்கிற பாதம் நடப்பதற்காக அவர் பூவினால் பாலம் கட்ட முயற்சித்தால் அது அவருக்குக் கைச் சேதத்தையே ஏற்படுத்தும்.

நிஸாம் காரியப்பர் தொடர்பில் பல கருத்துகள் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.  சாதாரண மக்களுடன் பழகக் கூடிய ஒருவரல்ல அவர் என்பது பிரதான குற்றச் சாட்டாகும். அவர் ஒரு மேட்டுக் குடித்தனக் கொள்கையைக் கொண்டவர். ஒரு கலந்தர் காக்காவோ அல்லது ஒரு கந்தசாமி அண்ணையோ அவரை நெருங்க முடியாது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதறகு மேலாக அவர் கல்முனையில் இருந்து வேலை செய்வாரா அல்லது கல்முனை மேயரின் அலுவலகத்துக்காக கொழும்புக்குச் செல்ல வேண்டுமோ என்றெல்லாம் இன்று யோசிக்கப்படுகிறது.

ஆகவே பல்வேறு விமர்சனங்கள்இ கருத்தாடலுக்கு மத்தயில் பணி செய்து மக்களை வெல்ல வேண்டியது அவரது பொறுப்பு. அதற்காக அவர் அவரையே ஒரு சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கிக் கொண்டே  பணியில் இறங்க வேண்டும். அவரது மேயர் பதவிக் கால எல்லை என்பது கல் தரையில் கை போட்டு நீந்துவதற்கு ஒப்பானது. ஆகவே அவர் இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியவராக உள்ளார். 

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 17-11-2013

No comments:

Post a Comment