Sunday, November 3, 2013

அரசியல் எரிதணலான அஷ்ரஃப் பிறந்த மண்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை மாநகர சபை விடயம் என்பது இன்று ஒரு மேஜர் விவகாரமாக மாறிவிட்டது. மேயர் சிராஸ் மீராசாகிபை பதவியிலிருநது இராஜினாமாச் செய்யுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்திருந்த தினத்திலிருந்து சேர் இந்த மாதம் 30 திகதி வரை கால அவகாசம் தாருங்கள் என சிராஸ்  அமைச்சரிடம் கேட்ட தினம் வரையான காலப் பகுதிக்குள் கல்முனையில் இடம்பெற்ற சமபவங்களானது தேசிய அரசியல் விவகாரம் போல் பேசவும் விமர்சிக்கவும்பட்டது.

கட்சியின் கட்டுக்கோப்பை மதித்து அவர் இராஜினாமாச் செய்வார் என்பது ஒரு பக்க நம்பிக்கையாகவும் இல்லை.. இல்லை.. அவர் ராஜினாமாச் செய்யமாட்டார் என்ற அதீத நம்பிக்கை இன்னொரு பக்கமுமாக காணப்பட்டது. இதற்கு மேலாக தனது பிரதேசத்தைச் சேர்ந்த மக்களிடம் அவதாவது, விசேடமாக சாய்ந்தமருது மக்களிடம் அபிப்பிராயம் கேட்டே இறுதி முடிவு என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு எதிர்வு கூறல்களுக்கு மத்தியில் கல்முனையில் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், கலந்துரையாடல்கள்  என எல்லாம் தாராளமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கல்முனை மாநகர சபைத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் கூட இல்லாத பரபரப்பை இந்த மேயர் விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

இறுதியாக கடந்த 30 ஆம் திகதி இரவு சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற சிராஸ் மீராசாகிபினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அந்தப் பிரதேச மக்களினது ஏகோபித்த முடிவின்படி சிராஸ் மீராசாகிப் பதவிலியிருந்து ராஜினாமாச் செய்வதில்லை என்ற முடிவு எட்டப்பட்டது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வழக்கமான டயலக்கிலேயே  அவர் தனது முடிவை அறிவித்தார். ஊரவர்கள் என்ன பதவியை இராஜினாமா செய்யுங்கள் என்றா சொல்லப் போகிறார்கள்? இதுவே 30 ஆம் திகதி வரை நடந்திருந்தது.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் நிசாம் காரியப்பர் முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக (மேயர் வேட்பாளராக) நியமிக்கப்பட்ட போதும் அன்றைய காலகட்டத்தில் புதிதாக முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்ட சிராஸ் அதிக வாக்குகளைப் பெற்று முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரும் முக்கிய பதவியை வகிப்பவாருமான நிசாம் காரியப்பரை பின்னுக்குத் தள்ளியதன் காணரமாக கல்முனைப் மாநகர சபையின் மேயர் யார் என்ற பிரச்சினை தோன்றியிருந்தது.

சிராஸ் மீராசாகிபுக்கு அதிக வாக்குகளை வழங்கிய சாய்ந்தமருது மக்கள் அவரையே மேயராக்க வேண்டுமென வீதிப் போராட்டங்களில் இறங்கி டயர் எரிப்பு வரை சென்று  தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனால் தடுமாறிப் போன முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, சிராஸ் மீராசாகிபை முதற் கட்ட மேயராகவும் நிசாம் காரியப்பரை பிரதி மேயராகவும் நியமிக்கத் தீர்மானித்து. அதன்படி சிராஸ் மேயர் பதவியை ஏற்றுக் கொண்டார். அதேவேளை, இரு வருடங்களின் பின்னர் அவர் பதவி விலகி நிசாம் காரியப்பர் மேயர் பதவி ஏற்க வேண்டுமென்ற தீர்மானமும் அப்போதே எடுக்கப்பட்டிருந்தது.

இந்த விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் கூட அரசியல் சாணக்கியத்துடன் நடந்து கொண்டிருந்தார். முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை வாக்கு வங்கியில் சரிவு ஏற்படாமல் நிலைமையை அன்று சமாளித்துக் கொண்டார்.

ஆனால், இன்று நிலைமை அனைத்தும் தலை கீழாக மாறியுள்ளது. இந்த மேயர் பிரச்சினை காரணமாக மர்ஹும் அமைச்சர் அஷ்ரஃப் பிறந்த கல்முனை மண் இன்று முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் சர்ச்சைக் களமாக மாறிப் போயுள்ளது.

தற்போதைய மேயர் சிராஸ் மீராசாகிபின் இந்த முடிவால் கட்சிக்குள் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. சாய்ந்தமருது மக்களின் தீர்மானம் என்பதற்கும் மேலாக இதன் பின்னணியில் ஆட்டுவித்தான் யாரொருவன் ஆடாதாரே கண்ணா என்ற விஷயங்களும் நிறையவே அரங்கேறியுள்ளன. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மிகப் பிரபலமிக்க இரு முஸ்லிம் அரசியல்வாதிகள் இதன் பின்னணியில் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கல்முனையில் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் வீழ்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்று ஓர் அரசியல்வாதியும் நிசாம் காரியப்பரின் அரசியலுக்கு அஸ்தமனத்தை ஏற்படுத்த வேண்டுமென இன்னொரு அரசியல்வாதியும் கட்டியிருந்த கங்கணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிராஸ் மீராசாகிப் ஒரு துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே இளம் கன்று பயமறியாது என்பது போல் அரசியலில் புதியவரான சிராஸும் இந்த விடயத்தில் பலிக்கடாகியுள்ளார் என்றும் கூறலாம்.

சிராஸ் மீராசாகிப் தனது மேயர் பதவியை விட்டுக் கொடுக்கா விட்டாலும் சட்டப்படி அதனைப் பறிக்கும் அதிகாரமும் அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்கும் அருகதையும் கட்சியின் தலைமைக்கு உள்ள நிலையில் சிராஸினை கட்சியிலிருந்து நீக்கவும் கட்சி தலைமையால் முடியும் என்பதும் அனைவரும் அறிந்த நிலையில் சிராஸ் மீராசாகிப் இன்று எடுத்துள்ள இந்தத் துணிகரமான தீர்மானம், அவர் எதிகாலத்தில் தன்னை ஒரு சக்திமிக்க அரசியல்வாதியாக மாற்றிக் கொள்ளும் நோக்கத்திலும் அமைந்திருக்க முடியும்.

மாநகர சபைத் தேர்தலில் சுமார் 17,000 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அவர் தனக்குச் செய்யப்பட்ட அநீதியை மையமாக வைத்து மக்கள் அனுதாபத்துடன்  மேலும் பல ஆயிரம் வாக்குகளைப் பெற்று தேசிய அரசியலுக்குள் வந்து விடவும் முடியும். அவ்வாறு  இடம்பெறுமானால் நிச்சயமாக அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அல்லாமல் பிறிதொரு கட்சியின் ஊடாகவே அந்த இலக்கை அடைந்து கொள்ளக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.

இதன் மூலம் கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துமான வாக்கு வங்கி என்பது பாரிய சரிவினையே ஏற்படுத்தும். இவ்வாறனதொரு நிலை முஸ்லிம் காங்கிரஸுக்குத் தோல்வியையும்  காய் நகர்த்தியோருக்குப் பாரிய வெற்றியையுமே கொடுக்கும்.

இது இவ்வாறிருக்க, இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை முன்னெடுக்கக் கூடிய ஒவ்வொரு நகர்வும் மனித மூளையின் நரம்புகளின் செயற்பாடுகள் போன்றே அமைய வேண்டியுள்ளது. எங்காவது ஒரு தடை, கீறல் விழுந்து விட்டால் அனைத்தும் ஸ்தம்பித நிலைக்கு வந்து விடும். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் அரசியல் களமாக, கோட்டையாக கல்முனை திகழ்கிறது. அணைத்தாலும் ஆபத்து. அடித்தாலும் ஆபத்து. இதுதான் இன்றைய கல்முனயின் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நிலைமை. சில அரசியல்வாதிகளால் அங்கு பிரதேசவாதம் விதைக்கப்பட்டதன் அறுவடையே இதற்குப் பிரதான காணரம். இதன் காரணமாகவே கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை அங்கு நிலவுகிறது.

இந்த விடயத்தில் நின்று, நிதானித்து தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உள்ளது. இல்லயேல் புதையல் தோண்டப் போய் புதம் வெளிக்கிட்ட கதையாகி விடும்.

இதேவேளை, விடாப்பிடியாக தொடர்ந்தும் சிராஸ் மேயர் பதவியிலிருப்பாரானால் அவரும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுவார் என்பதும் நிச்சயமாக நடக்கக் கூடியதொன்றே.

கல்முனை மாநகர சபை நிர்வாகத்தை நடத்திச் செல்வதிலும் அவர் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த கல்முனை மாநகர சபை அங்கத்தவர்களாக  எந்தளவுக்கு இவருக்கு ஒத்துழைப்பினை வழங்குவார்கள் என்பதும் பாரிய பிரச்சினை, செயற்றிட்டங்களின் அங்கீகாரத்தைப் பெறுவதிலும் இவர் சிக்கலான நிலைமைக்குத் தள்ளப்படுவார்.

மேலும்இரண்டு வருடங்கள் மட்டுமே தான் மேயராகவிருப்பேன் என்பது தொடர்பில் எவ்வித ஒப்பந்தமும் செய்வில்லை என்றும் சிராஸ் தற்போது கூறியுள்ளார். ஆனால், கட்சியின் கட்டுக்கோப்பு, தலைமைத்துவத்தின் கீழ் கட்டுப்படுதல் என்ற விடயங்களை அவர் மறந்து விடக் கூடாது.

எது எப்படியிருப்பினும் சிராஸ் மீராசாகிப் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானிக்குமானால் அதனை நியாயப்படுத்துவது என்பதும் சற்றுக் கடினமான காரியமே. அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை என்றால் அது எங்கிருந்தோ எவர், எவர் மீதோ இருந்து அதனை ஆரம்பிக்க வேண்டும்.

ஆகவே, இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் மனம் திறந்து கலந்துரையாடி முடிவினை எட்டுவதே சிறந்தது.பிரதேச பள்ளிவாசல்கள், புத்தி ஜீவிகள் சிவில் அமைப்புகள் கூட இந்த விடயத்தில் தங்கள் பங்களிப்பினை வழங்கி சுமூகத் தீர்வுக்கு உதவ  முடியும்.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 03-11-2013

No comments:

Post a Comment