ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
முஸ்லிம் அரசியல்வாதிகளின் பலம், பலவீனங்கள் தொடர்பில் இப்போது பேசப்படுகிறது. அவர்கள் எந்த விடயத்தில் பலமாக உள்ளார்கள், எவ்வாறான விடயங்களில் பலவீனர்கள் என்று இப்போது நாடி பிடிக்கப்பட்டு பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இவர்களின் பலம் எங்கு உள்ளது என்பதனை நன்கு அறிந்து வைத்து அதற்கேற்ப அவர்களுக்குத் தீனி வழங்கிக் கொண்டிருக்கிறது.
பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது பலத்தை அவர்கள் தங்களது பதவிகளைப் பற்றிப் பிடிப்பதில் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். மற்றையவற்றில் அவர்கள் பலவீனர்களாகவே காணப்படுகின்றனர்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளருமான எம்.எஸ். சுபைர்அண்மையில் சில கருத்துகளை நறுக்கென தெரிவித்துள்ளார். முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இன்று தங்களது சமூகத்தின் கோவணத்தையும் தலைப்பாகையையும் மற்றவர்கள் உருவிக் கொள்ள வழி விட்டவர்களுக்கும் மிகப் பொருத்தமானவை.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளின் கையாலாகத்தனத்தையே சுபைர் குறிப்பிட்டாலும் அதனை நாடு தழுவிய ரீதியில் விசேடமாக, வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் பொருத்தமாகக் கொள்ளலாம்.
மட்டக்களப்பிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் பலவீனமானவர்களாக உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் தான் உட்பட முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசாங்கத்திலேயே இருக்கின்றோம். ஆனால், பலவீனமானவர்களாகவே இருக்கிறோம் என அவர் தான் சார்ந்த கட்சிளையும் சேர்த்தே கூறியுள்ளார்.உண்மையைக் கூறிய அவரின் துணிச்சல் பாராட்டுக்குரியதுதான்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் உறவைப் பலப்படுத்தி அதனூடாக வீணான சந்தேகங்களை களைந்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் மேற்கொள்ளவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகு தாவுத், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பலவீனம் என்பது இப்போது மட்டுமல்ல.. எப்போதும்தான் என தெரிவித்துள்ளார். ஆனால், இவ்வாறு அவர் தெரிவித்திருப்பது வெட்கம் கெட்ட பேச்சாகும். தன்னையும் உள்ளடக்கியே அவர் இவ்வாறு கூறுவதனால் அவரது நிலையும் அப்படிதான் என்பதனை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார். ஆனால், இப்படிக் கூறிக் கொண்டும் மஹிந்தையரின் அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் அவர் உள்ளார்.
இது இவ்வாறிருக்க, ” என்னைப் பொறுத்த வரையில் இந்த அரசாங்கம் எனக்கு தந்துள்ள பேரம் பேசும் பலம் மிகப் பெரியது. இந்தப் பலத்தினை தமிழ் மக்களுக்கு எதிராக பாவிக்க மாட்ட்டேன்“ என்பதும் அமைச்சர் பஷீரின் கூற்று.
” இந்த அரசு தனக்குத் தந்துள்ள” என்ற ஒருமைப்பட்ட தன்னிலை வார்த்தையின் மூலம் அவர் குறிப்பிடுவதன் ஊடாக அரசாங்கத்துக்கும் அமைச்சர் பஷீருக்குமிடையிலுள்ள நெருக்கம் மிக நெருக்கமானது என்ற விடயத்தை விட்டு… விட்டு அடுத்த கட்டத்துக்குச செல்வதே நல்லது.
தனக்கு அரசு தந்துள்ள மிகப் பெரிய பலத்தைத் தமிழருக்கு எதிராகப் பாவிக்க மாட்டேன் எனக் கூறுவதற்காக அவரைப் பாராட்டும் அதேவேளை, அந்தப் பேரம் பேசும் பலத்தை, சக்தியை ஏன் தனது சமூகத்துக்காகப் பயன்படுத்தாமல்அவர் உள்ளார் என்ற கேள்வியையும் கேட்கத்தோன்றுகிறது. தனக்கு இருப்பதாகக் கூறிக் கொள்ளும் பலத்தை ஏன் பாராளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில் காட்டவில்லை, பேரம் பேசும் சக்தி இருந்திருந்தால் இவ்வாறு சோரம் போயிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காதே. சிலவேளை, அரசாங்கம் இந்த அமைச்சுப் பொறுப்பைக் கொடுத்து விட்டு முஸ்லிம்கள் தொடர்பில் வாய் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையைஇவ்வாறானவர்களுக்கு விதிக்கிறதோ தெரியவில்லை. நிறையவிடயங்கள்அப்படித்தான்நடக்கின்றன.
எது எப்படியிருப்பினும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஐக்கியமின்மையே இன்று முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பலவீனத்துக்கும் காரணமாகியுள்ளன. இந்தப் பலவீனத்தை அரசாங்கமும் தென்னிலங்கை சிங்கள பேரினவாத சக்திகளும் நன்கு அறிந்து கொண்டே இன்று தங்களுக்கு ஏற்ப காய் நகர்த்தலைச் செய்து கொண்டு வருகின்றன.
பொதுபல சேனா விடயத்தில் ஏதோ ஐக்கியப்பட்டு விட்டோம் என்பது போன்ற மாயைக் கிளப்பியிருந்த பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இன்றைய முரண்பாட்டுப் போக்கு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதனை யாரும் அறியாமல் இல்லை.
இதற்கு ஓர் உதாரணமாக, அண்மையில் நிமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தைக் கொள்ளலாம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இந்தத் தெரிவுக் குழுவில் உள்வாங்காமை தொடர்பில் ஏனைய எந்த முஸ்லிம் கட்சியின் தலைமையும் வாய் திறந்து தங்களது கருத்துகளை தெரிவிக்கவும் இல்லை. எதிர்ப்புகளை வெளியிடவும் இல்லை. இதன் மூலம் அவர்களது ஒற்றுமை, சமூக நலன் தொடர்பில் அல்ல என்பதனையும் புரிந்து கொள்ள முடியும்.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் இன்று அதன் செல்வாக்கு என்பது அரசினால் வழங்கப்பட்ட பதவிப் பெயரில் மட்டுமே உள்ளதே தவிர வேறெதிலும் இல்லை. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக மோசமான பின்னடைவையும் அவமானங்களையும் சந்தித்துக் கொண்டே சரணம் சாமி போடும் நிலையில் அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரெயொரு கட்சி என்ற பதிவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று செய்துள்ளது. எங்களை அடித்து விரட்டினாலும் குரைத்து விட்டு பின்னால் உங்களை நோக்கியே வாலாட்டி வருவோம் என்ற நிலையில் அந்தக் கட்சியின் பரிதாப நிலை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய நிலைமையுடன் ஏனைய இரு முஸ்லிம் அரசியல் கட்சிகளான தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிலைமையை ஒப்பிடும் போது அவர்களது பலவீனம் என்பது பெரிதாக கூறுமளவுக்கு இல்லை என்றே கூறலாம். அரசாங்கத்தில் அவர்கள் பலசாலிகளாகவே உள்ளனர்.
இன்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட அக்கரைபற்று பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை நோக்கும்போது அங்கு மத்திய அரசின் உதவியுடன் அமைச்சர் அதாவுல்லாஹ்வினால் நிறையவே திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுவருகின்றன.
அதே போன்று அமைச்சர் றிஷாத் பதியுதீனை எடுத்துக் கொண்டால் அவரும் வன்னியில் அரசின் உதவியுடன் நிறையவே பணிகளை முன்னெடுத்து வருகிறார். உதாரணத்துக்கு தமிழர் பிரதேசங்களில் அரசினதும் இராணுவத்தினரினதும் உதவியுடன் முஸ்லிம்களை குடியேற்றுகிறார் என்ற குற்றச்சாட்டு தமிழர் தரப்பில் முன்வைக்கப்படும் அளவுக்கு அவர் பணி தொடர்கிறது.
அண்மையில் வன்னியில் அமைச்சர்றிஷாத்பதியுதீனால்சமுர்த்திஅதிகாரிகள்நியமனம்வழங்கப்பட்டபோது, எங்களது கட்சிகாரர்களுக்கு வழங்கப்படவில்லையே என்று ஸ்ரீமுஸ்லிம் காங்கிரஸ் அழுது வடியும் நிலையும் காணப்பட்டது.
எனவே, இந்த விடயத்தில் அதாவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள பலவீனமானது, எங்கு உள்ளது என்பதே இன்றைய கேள்வியாகும்.
1. அமைச்சர் அதாவுல்லாஹ் (தேசிய காங்கிரஸ்) மத்திய அரசின் அமைச்சராக உள்ளார்.
(ஏ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை
(பி) மாகாண சபை அமைச்சர்கள்எண்ணிக்கை -01
2. அமைச்சர் றிஷாத் பதியுதீன் (அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்) மத்திய அரசின் அமைச்சர்,
(ஏ) நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை - 01 (அமைச்சர் நீங்கலாக)
3. அமைச்சர் ஹக்கீம் மத்திய அரசில் அமைச்சர் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
(ஏ) பஷீர் சேகு தாவுத் மத்திய அரசில் அமைச்சர்
(பி) நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை- 06 (அமைச்சர்கள் நீங்கலாக)
(சீ) மாகாண சபை அமைச்சர்கள் எண்ணிக்கை - 02
மேலுள்ள பட்டியலினைப் பார்க்கும் எந்தத் தரப்பினர் பலமுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களே தீர்மானிக்க வேண்டும். அது மட்டுமல்ல.. எந்தக் கட்சியின் தலைவர் பலமுள்ளவராக இருக்க வேண்டுமென்பதனையும் முஸ்லிம் மக்களே தீர்மானிக்க வேண்டும்.இந்தவிடயத்தைச்சொல்வதுகொஞ்சம்வெட்கம்தான்.ஆனால்,சொல்லாமல்விடுவதுபெரும்துக்கமாகப்போய்விடும்
தனத கட்சிக்காரர்களுக்கு சமுர்த்தி நியமனம் வழங்குமாறு அமைச்சர் றிஷாதினை கெஞ்ச வேண்டிய நிலையே இன்று முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது என்றால் எங்கு பலவீனம் உள்ளது என்பதனை அறிந்து கொள்வது பெரிய காரியமல்ல..
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரீஸ் இன்று தன்னந்தனியாக நின்று கல்முனையை ஒளிரவைக்கும் திட்டமொன்றை அவரது நிதி ஒதுக்கீட்ட்டில் முன்னெடுத்துவருகிறார். ஆனால், அந்தத் திட்டங்களின் திறப்பு விழாவுக்கு மட்டும் அமைச்சர் ஹக்கீம் தவறாமல் சென்று விடுவார்.
கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் நோன்பு காலம் என்பதற்காக கல்முனை பிரதேசத்தில் வீதி விளக்குப் பொருத்தும் பணியைக் களத்தில் நின்று கவனித்து வருகிறார்.இதுதான்முஸ்லிம்காங்கிரஸின்நிலைமை.
முஸ்லிம்களின் குரல் எனக் கூறப்படும் முஸ்லிம் காங்கிரஸின் நிலை இன்று இந்த அளவுக்கு அதாவது கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாற்றமடையக் காரணம் யார்?
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 14-07-2013

No comments:
Post a Comment