Sunday, December 22, 2013

அடுப்பை ஊதுவதனைக் கண்டு சமைப்பதாக நினைக்கக் கூடாது!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜப்பானின் இலங்கைக்கான விசேட  சமாதானத் தூதுவர் யசூசி அகாசி அண்மையில் வந்திருந்த போது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவற்றையும் அவர் சந்தித்தார். அதன்போது சம்பந்தப்பட்ட அரசியல் தரப்புகள் தங்களது நிலைப்பாடுகள், குறைபாடுகள் தொடர்பில் அகாஸியிடம் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

தாயிடம் ஒரு பொருளைக் கேட்டு அல்லது தனது விருப்பத்தைக் கூறி அந்தத் தாய் அதனைக் கொடுக்காமல் அல்லது விருப்பத்தை நிறைவேற்றாத நிலையில் தந்தை வீட்டுக்கு வந்ததும் தேம்பித்.. தேம்பி அழுது.. நாங்க கேட்டது ஒன்றையுமே அம்மா  செய்து தரவில்லை என பிள்ளைகள் அப்பாவிடம் முறையிடுவது போல பலரும் அகாஸிடம் முறையிட்டிருந்தனர்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவுப் ஹக்கீமை அகாஸி சந்தித்த போது இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தீவிரவாத அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் விஷமத்தனமான பிரசாரங்களைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கும் வகையில் தண்டனைச்  சட்டக் கோவையில் சட்டமூலங்கள் இணைக்கப்படவுள்ளதாகவும். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அவர் அமைச்சர் என்ற வகையில் அரசின் நிலைப்பாட்டுக்கு ஒத்தவராகச் சில விடயங்களையும் கூறியிருந்தார். முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தீவிரவாத அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ற விடயத்தை ஏற்றுக் கொண்டவராகவே அவர் புதிய சட்டமூலம் குறித்துக் கூறியிருந்தார்.

அமைச்சர் ஹக்கீமைப் பொறுத்த வரையில் இது புதிய விடயமல்ல.. இஸ்லாமிய சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென பொதுபல சேனா முன்னர் கூறியிருந்த போது கூடஅந்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பில் ஹக்கீமும் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். ஆகவே, அமைச்சர் ஹக்கீம் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது என்பது கொதி நீரில் குளிர் நீரை ஊற்றிச் சூட்டைக் குறைப்பது போன்றதே.

ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஒருபடி மேலே சென்று, தான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்பதற்கும் மேலாக இலங்கை முஸ்லிம் மக்கள் தொடர்பில் மனவேதனையுடன் சில கருத்துகளை பகிரங்கமாக வெளியிட்டிருந்தார். விசேடமாக, குடிபெயர்ந்த முஸ்லிம் மக்களைத் தன்னாலோ தனது அரசினாலோ மீள்குடியேற்றம் செய்ய முடியாத  தனத்தை விலாவாரியாக அகாஸிடம் பிரஸ்தாபித்திருந்தார்.

ஆனால், இதில் வெட்கமும் வேதனையுமான விடயமென்னவென்றால் இருவரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக, சக்திமிக்கவர்களாக இந்த அரசிலிருந்து கொண்டே  தங்களது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசிடமே தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாமல் சர்வதேச ராஜதந்திரியிடம் முறையிட்டதுதான்.

இவற்றின் மூலம் இரு விடயங்களில் நாம் தெளிவு கொள்ள முடிகிறது. அதாவது, எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அகாஸியைச் சந்தித்ததன் முக்கியத்துவம் இங்கு வெளிக்காட்டப்படுகிறது. ஆளும் தரப்பு முஸ்லிம் அமைச்சர்கள் சார்ந்த சமூகத்துக்கே இந்த நிலையென்றால் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த சமூகத்தின் நிலை எந்தளவு மோசமாகவிருக்கும் என்ற இரு விடயங்களையும் தெளிந்து கொள்ள முடிகிறது.

தான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது, யுத்த காலத்தில்  இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களை பராமரித்து அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்ததாகவும் ஆனால், அதற்கு முன்னரான காலத்தில் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முற்றுப் பெறாத ஒன்றாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.அத்துடன் வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுகின்ற போது அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகள் குறித்தும் அவர் அகாஸியிடம் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

அவர் இவ்வாறு கூறியதனைப் பார்க்கும்போது அந்த நாளைய படங்களில் ஒன்றான தங்கப் பதக்கம் படத்தில் சிவாஜி கணேசன் பாடியுள்ள பாடல்தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்தப் படத்தில் தனக்கு மகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த் தனக்கே துரோகம் செய்தபோது சிவாஜி கணேசன் மனம் வெந்த நிலையில் இப்படி ஒரு பாட்டைப் பாடுவார்.

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமிஎன்று பாடுவார்..

அப்போது குறுக்கிடும் சிவாஜியின் மருமகளாக நடிக்கும் பிரமீளா இப்படிக் கூறுவார். மாமாகாஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டாதுன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.  ஆனா தெய்வமே கலங்கி நின்னா? அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்..

அரசாங்கத்தின் ஒரு சிரேஷ்ட, சக்திமிக்க அமைச்சருக்கே இந்தக் கதியென்னறால்... மற்றவர்கள் நிலை என்ன என்பதும் இங்கு கேள்விதான்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாறூக் அண்மையில் தேசிய வானொலியில் ஒலிபரப்பான ஏழாவது நாள் என்ற நிகழச்;சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போது, முஸ்லிம்களின் குடியேற்றம் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தபோது அவரது அமைச்சு பதவி துரதிர்ஷ்ட வசமாக மாற்றப்பட்டதாகவும் அதன் பின்னர் மீள்குடியேற்றத்துக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளமையானது பல உண்மைகளையும் சூசகமாக வெளிப்படுத்துகிறது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுகின்ற போது அதற்கு எதிராக சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன என்று அமைச்சர் ரிஷாத் அகாஸிடம் கூறியதிலிருந்து அந்தச் சூழ்ச்சிகளின் பின்புலம் யார் என்பதனை ஹுனைஸ் பாறூக் சொல்லாமலே சொல்லி உள்ளார்.

வடமாகாணத்தைப் பொறுத்த வரை அரசாங்கம், ஆளுநர், இராணுவம் இந்த மூன்று சக்திகளையும் விட வேறு எந்த சக்திகளும் தலையெடுக்க முடியாத நிலையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பது யார் என்பதுதான் கேள்வி. அரசாங்கம் நினைத்தால் குடிபெயர்ந்த அனைத்து முஸ்லிம்களையும் ஓரிரவில் குடியேற்ற முடியும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.

இது இவ்வாறிருக்க, வடமாகாணத்தில் முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் தடைகளை ஏற்படுத்துவதாகவும்  இந்த விடயமும் மீள்குடியேற்றம் தடைப்படுவதற்கு ஒரு காரணம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்து வருகிறது.

இந்த விடயம் நாடாளுமன்றம் வரை சென்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடுகையில், முஸ்லிம்களின் வடபுல மீள்குடியேற்றம் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளுடன் பேசித் தீர்வு காண தமது கட்சி தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

மாவை சேனாதிராஜாவின் இந்தக் கூற்றுத் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமான வை.எல்.எஸ் ஹமீத் தேசிய வானொலியின் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.. மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்ததன் காரணமாக தாங்களும் முஸ்லிம் காங்கிரஸ{ம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வடபுல முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் பேசுவதென தீர்மானித்தோம். இதற்காக வரையப்பட்ட கடிதத்தில் நாம் கையெழுத்திட்ட நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கையொப்பமிடவில்லைஎன்று கூறியிருந்தார்.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதனை முஸ்லிம் காங்கிரஸ{ம் விரும்பவில்லையா என்ற ஒரு சந்தேகமும் இங்கு எழுப்பப்படுகிறது. இந்த விடயத்தையும் அகாஸிடம் கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே சிற்சில கருத்து முரண்பாடுகள், கசப்புகள் இல்லாமல் இல்லை. இந்த விடயங்கள் இரு இன மக்களுக்கிடையிலும் சில சந்தேகங்களையும் வெறுப்புணர்வுகளையும் தோற்றுவித்துள்ளன என்பதனையும் மறைக்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட அரசியல் தரப்புகள் பரஸ்பரம், ஒரு சுமூகமான சூழ்நிலையில கலந்து பேசி இரு இனங்களுக்குமிடையே அவர்கள் மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே சிறந்தது. எங்களது பல்லைக் குத்தி மற்றவர்களிடம் மோர்ந்து பார்க்க வைப்பது அழகல்ல.. இநதப் பிரச்சினை தமிழைப் பேசும் இரு இனங்களுக்கிடையிலான பிரச்சினையே தவிர தேசியப் பிரச்சினயைல்ல.

ஆனால், முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வேறு சக்திகளின் சூழ்ச்சியே உள்ளதென்றால். முஸ்லிம் தரப்பு அரசியல்வாதிகள் அதனை அரசுடனேயே பேசித் தீர்க்க வேண்டும். வடபுல முஸ்லிம்களின் குடியேற்றத்துக்கு இராணுவத்தினரும் தடை என்ற கருத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னர் தெரிவித்திருந்தனையும் இங்கு ஞாகப்படுத்த வேண்டும்.

இறுதியாக, எங்கள் பிரச்சினைகளை எங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும.; சர்வதேசத்திடம் எதனையும் கூறி ஒன்றையும் சாதிக்க முடியாது என அரசு அடிக்கடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புத்திமதி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சரான ரிஷாத் இந்த விடயத்தை அகாஸியிடம் கூறியதானது அவரது துணிச்சலுக்குச் சான்றாகிறது.

இறுதியாக, இன்றைய அரசிலுள்ள அமைச்சர்களும் எம்பிக்களும், தாங்கள் ஆளந்தரப்பினர்.எதனையும் தாம் சார்ந்த மக்களுக்காகச் செய்து கொள்ள முடியும. சமூகத்தைப் பாதுகாக்கலாம் என நினைத்தால் அந்த நினைப்பு தவறானது என்பதனை அண்மைக் காலச் சம்பவங்கள் நிரூபிக்கின்றன என்ற உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பை ஊதுவதனைக் கண்டு அவன் சமைப்பதாக எவரும் நினைக்கக் கூடாது. அவ்வாறு நிiனைத்தால் தாங்கள் மட்டுமல்ல.. தாம் சார்ந்த சமூகமும் சிலவேளைகளில் பட்டினியால் வாட வேண்டி வரலாம்.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 22-12-2013

No comments:

Post a Comment