ஏ.எச். சித்தீக் காரியப்பர்
கல்முனை மாநகர சபை
விவகாரம் சற்றுக் காலம் ஓய்வெடுத்திருந்த நிலையில் மீண்டும் விழித்துக்
கொண்டுள்ளது. மேயர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் எல்லாம் சரி. எனது பணியும் சரி
என்று அமைச்சர் ஹக்கீம் விட்ட நிம்மதிப் பெருமூச்சு அடங்குவதற்கு முன்னராக, அவர் நாட்டுக்கு வெளியே உள்ள நிலையில் வரவு – செலவுத் திட்டம் என்ற ஒன்றினால் அங்கும் மீண்டும் சர்ச்சைகள் ஆரம்பித்து
விட்டன. ஹக்கீம் நாட்டில் இல்லாத போதுதான் அதிக விஷயங்கள் நடக்கின்றன என்பதற்கும்
இதுவும் இன்னொரு சான்று.
கடந்த திங்கட்கிழமை
கல்முனை மாநாகர சபையின் வரவு – செலவுத் திட்டம்
சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், குறித்த வரவு – செலவுத் திட்டம்
தோற்கடிக்கப்படும் என்ற ஓர் அச்ச நிலையே. என்றாலும் மேயர் நிஸாம் காரியப்பர்
சட்டத்தைக் காட்டி நிலைமையச் சமாளித்து தப்பித்துக் கொண்ட நிலையில் பிறிதொரு
தினத்துக்கு அதனை ஒத்திவைத்து விட்டார். இருப்பினும் அன்று அங்கு நிலைமை மோசமாகவே
காணப்பட்டுள்ளது. முன்னாள் மேயரும் அவருக்கு ஆதரவானவர்களும் விட்டபாடில்லை. வரவு – செலவுத் திட்ட அறிக்கையின் பிரதிகளைக் கிழத்தெறித்து பேராட்டம் நடத்தும்
அளவுக்கு நிலைமை அங்கு கீழாகப் போயிருந்தது. பொலிஸார் அழைக்கப்பட்டே நிலைமை
கட்டுக்குள் வந்தது.
இவ்வாறானதொரு நிலையை
ஏற்படுத்தியவர்கள் இன்றைய மேயரின் ஆட்களே என்று ஒரு சாரார் கூற கூற..
இல்லை..இல்லை.. முன்னாள் மேயரின் ஆட்களே என்று மறுசாரார் மறுதலிக்கின்றனர்.
ஆனால், அன்றைய தினம் வரவு – செலவுத் திட்டம்
சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அது மேயர் நிஸாம் காரியப்பரினதும் அமைச்சர்
ஹக்கீமினதும் முகங்களில் கரியைப் புசியிருக்கும். அந்த பட்ஜட் தோற்கடிக்கப்படும்
சாத்தியமே அன்று அங்கு காணப்பட்டதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் மேயர்
சிராஸ் மீராசாகிப் உட்படலான ஐந்து முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஏனைய
கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுமாகப் பத்துப் பேர் பட்ஜட்டுக்கு எதிராக
வாக்களிக்கத் தயாராகவிருந்தனர் எனக் கூறப்ப்டுகிறது. இதன் மூலம் நிச்சயம் அது
தோற்கடிக்கப்பட்டிருக்கும். இது ஒரு சங்கடமான நிலையை ஆதரவுக்குழு மத்தியில்
தோற்றுவித்திருந்தது.
சட்டத்தரணியான நிஸாம்
காரியப்பர் கூட இந்த நிலைமையை அறியாமலிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அவர் இந்த
விடயத்துக்கு அப்பால் சென்று உள்ளுராட்சி சட்ட விதிகளைத் தேடிப்பிடித்து, அதன் சட்டமொன்றுக்கும் அன்றைய பட்ஜட்டுக்கும் உள்ள ஒரு முரண்பாட்டை கண்டு
பிடித்து அதனையே ஒரு கருவியாகப் பயன்படுத்தி அன்றைய தின பட்ஜட்டை ஒத்திவைத்து
விடார்.
“மாநகர சபை சட்டத்தின் 212 ஆம் பிரிவின் பிரகாரம் குறித்த வரவு செலவுத்
திட்டத்தின் நகல் முன்மொழிவுகள் அடங்கிய பிரதி மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஏழு
நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது இம்மாதம் 21 ஆம் திகதியே உறுப்பினர்களுக்கு கிடைத்ததாக இன்று எனது
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்தே அதனை இன்று சமர்ப்பிக்காமல் டிசம்பர்
31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதென தீர்மானித்து மாநகர ஆணையாளருக்கு அறிவித்தேன்
என்பதே நிஸாம் காரியப்பரின் சட்டப்பக்க வாதம்.
ஆனால், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கான அழைப்புக் கடிதத்தில் 17-12-2013 என
திகதியிடப்பட்டு கல்முனை மாநகர சபை ஆணையாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 17 ஆம்
திகதியிடப்பட்ட இந்தக் கடிதம் சரியாக ஏழு நாட்களையே கொண்டுள்ளது. ஆனால், உறுப்பினர்களுக்கு 21 ஆம் அது திகதியே கிடைத்ததாக நிஸாம் காரியப்பர்
தெரிவித்துள்ளார். அப்படி அவர் கூறுவதனை ஏற்றுக் கொண்டால் எங்கோ தவறு
நிகழ்ந்துள்ளது என்பதனையும் அவர் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
அது மட்டுமின்றி, உள்ளுராட்சி மன்றச் சட்டத்தின் பிரிவின் ஒரு ஷரத்தை தனக்குச் சாதகமாகப்
பயன்படுத்தியுள்ள நிஸாம் காரியப்பர், மாநகர சபை
உறுப்பினர்களுக்கான கடிதங்களை அனுப்பும் முன்னரே அந்தச் சட்டத்தைப் படித்து
அதற்கேற்ப குறித்த அழைப்புக் கடிதத்தை சரியான நேரத்தில் அனுப்புவதற்கான
ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஏன் தவறினார் என ஒரு கேள்வி எழுப்பப்படின் அது
நியாயமானதாகவே இருக்கும். அது தனது வேலையல்ல. ஆணையாளரின் வேலையென அவர்
பதிலளிக்கவும் முடியாது. ஏனெனில் குறித்த அழைப்புக் கடிதத்தில் கௌரவ முதல்வரின்
கட்டளைக்கிணங்கவே அனுப்பி வைக்கப்படுவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிராஸ் மீராசாகிப் கல்முனையின் பிரதி மேயரல்ல.. அது சட்டப்படி இன்னும்
அறிவிக்கப்படவில்லை என கல்முனை மாநகர ஆணையாளரான ஜே. லியாகத் அலி கடந்த 23 ஆம்
திகதி ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
சிராஸ் மீராசாஹிப்
பிரதி மேயர் அல்ல. தற்போது அவர் சாதாரண மாநகர சபை உறுப்பினரே ஆவார். அத்துடன்
சிராஸ் மீராசாஹிபின் பெயர் கல்முனை பிரதி மேயராக இன்றுவரை (23) வரையிலும்
தேர்தல்கள் ஆணையாளரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில்
சாதாரண உறுப்பினரான சிராஸ் மீராசாகிபுக்கு கல்முனை மாநகர சபையில் எப்படி அலுவலகம்
வழங்க முடியும் என கல்முனை மாநகர ஆணையாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், அதே ஆணையாளரால் 17- 12- 2013 இல்
சிராஸ் மீராசாகிபுக்கு திகதியிடப்பட்ட கடிதத்தில் இவ்வாறு முகவரியிட்டுள்ளார்.
கௌரவ எம்.சிராஸ் மீராசாகிப், கௌரவ கல்முனை மாநகர
சபை பிரதி மேயர், சாய்ந்தமருது என்று
முகவரியிடப்பட்டுள்ளது.
சிராஸ்
மீராசாகிப் பிரதி மேயர் இல்லாவிடின் ஏன்
இவ்வாறு உத்தியோகபூர்வ கடிதம்
ஒன்றில் அவரை பிரதி மேயராகக் குறிப்பிட வேண்டும்? ஆகவே, இங்கும் தவறுகள் தப்புகள் தாராளமாக
இடம்பெற்றுள்ளன. 17 ஆம் திகதி பிரதி மேயராக இருந்த சிராஸ் மீரசாகிப் 23 ஆம் திகதி
அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? இது அரசியல்
வேடிக்கையா அல்லது அரச அதிகாரியின் கேளிக்கையா? ஒன்றுமே
புரியல்ல உலகத்திலே.. என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது....
இது இவ்வாறிருக்க, முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்குமாகவே அங்கு சென்றிருந்தார் என அவர்
மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. தனக்கு ஆதரவான ஒன்பது உறுப்பினர்களுடனேயே
இவற்றையெல்லாம் அவர் செய்தார், செய்ய முயற்சித்தார்
என்று கூறப்படுகிறது. இது உண்மையாகவிருந்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த
விடயம் தொடர்பில் தனது பக்க நியாயத்தை சிராஸ் வெளிப்படுத்தி உண்மை நிலைமையினை
விளக்கியிருக்க வேண்டும்.
சிராஸ் மீராசாகிப்
பிரதேசவாதம் மூலம் சில விடயங்களைக் கையாள முயற்சித்ததாகவும்
குற்றஞ்சாட்டப்படுகிறது. இது ஒரு சிறந்த செயற்பாடல்ல.. இது பாரிய விளைவுகளை மக்கள்
மத்தியில் ஏற்படுத்தும். நாட்டில் சிங்களவர்கள் இனவாதம்... நகர சபைகளில் நம்மவர்
பிரதேசவாதமா...? கூடவே கூடாது.
சிராஸ் மீராசாகிப்
இவ்வாறெல்லாம் நடந்து கொள்வாரெனில் அதற்கும் ஏதோ காரணம் இருந்தேயாக வேண்டும்.
அப்படி ஏதும் இருந்திருப்பின் தனக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் கட்சியின்
உயர்பீடத்துடன் கலந்துரையாடி சுமூகமான நிலைமையை அவர் தோற்றுவித்திருக்க முடியும்.
கல்முனை மாநகர
சபையில் தனக்கு அலுவலகமும் வசதிகளும் வழங்கப்படவில்லை என சிராஸ் மீராசாகிப் கருதுவாரானால் அதனை உரிய
தரப்பிடமும் கட்சியின் உயர்மட்டத்துடன் பேசி தீர்த்துக் கொண்டிருக்கலாம்.
நாற்காலிக்குச் சண்டை போடும் நாடு எங்கள் நாடுதான்.. ஆனால், அது நகரசபை வரை வந்து விட்டதுதான் வேடிக்கை. இருப்பினும் நிஸாம்
காரியப்பர் பிரதி மேயராகவிருந்த போது இவ்வாறான பிரச்சினைகளை அவர்
எதிர்நோக்கியிருக்கவில்லை. குளிரூட்டி வசதி, கணினி, இணைய வசதிகள் எல்லாம் வழங்கப்பட்ட நிலையிலேயே பிரதி மேயரின் அறை
காணப்பட்டது.
சிராஸ் மீராசாகிப்
பிரதி மேயராக அறிவிக்கப்படாத நிலையில் இந்த வசதிகளைக் கொடுக்க முடியாது என்பதற்காக
தற்போதைய பிரதி மேயரைச் சந்திக்க வருவோர் பாயில் அமர வேண்டிய நிலையை ஏற்படுத்தும்
தேவை எவருக்கும் இருக்கக் கூடாது.
சட்டம் ஏமாந்து
போனாலும் போகும்.. தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும் என்பதனை மறந்து விடக் கூடாது.
சபை மண்டபத்திற்கு
வருகை தந்த முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட சில மாநகர சபை
உறுப்பினர்கள் சபா மண்டபத்திற்கு முன்னால் நின்று கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டதாகவும் இதன்போது சிராஸ் மீராசாகிபினால் மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட
அறிக்கைகள் கிழித்து வீசப்பட்டது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
எது எப்படி
இருந்தாலும், இன்று கல்முனை மாநகர சபையில் ஒரு பனிப்போர்
இடம்பெறுவதாகவே உணர முடிகிறது. இதனால் பாதிக்கப்படப் போவோர் அடிபடும்
அரசியல்வாதிகளல்லர். அந்தப் பிரதேச மக்களே. இதனை இரு தரப்பாரும் புரிந்து கொள்வது
அவசியம். இரு சாராருக்கும் வாக்களித்த மக்களே இன்று இந்த விடயங்கள் தொடர்பில்
கவலையடைந்துள்ளனர்.
கல்முனை நகர சபையில்
தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளை மையம் கொண்டுள்ள சூறாவளிக்கும் ஒப்பிடலாம்.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரவு – செலவுத் திட்டம்
முன்வைக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் இந்த மையம் கொண்டுள்ள சூறாவளியானது
நிஸாம் காரியப்பரையா அல்லது சிராஸ் மீரசாகிபையா கடந்தும் செல்லும் என்பதே இன்றைய
எதிர்பார்ப்பு. அந்தச் சூறாவளி யாரையும் பாதிக்காத வண்ணம் கலைந்து செல்வதே
ஆரோக்கியமானது.
மேலும், கல்முனை மாநகர சபையில் இன்று நடப்பவை அனைத்தும் அவசர அவசரமாக எடுக்கப்பட்ட
முடிவுகளாலும் தீர்மானங்களாலும்
உருவானவைகளே என்பதனைப் புரிந்து கொள்வது அவசியம். “அவசரமாக கல்யாணம்
செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து
கொண்டுதான் அழ வேண்டும்“ என்ற தத்துவத்தை இரு
தரப்பாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நன்றி வீரகேசரி
வாரவெளியீடு 29-12-2013


No comments:
Post a Comment