Sunday, January 5, 2014

கரும்பைக் கடித்துப் பார்க்காமல் அது கசக்கும் என்று கூறுவதா?

ஏ.எச். சித்தீக் காரியப்பர்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வியாழன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதன்போது வடக்கில் மாகாண சபை ஆட்சி நிறுவப்பட்ட பின்னரான காலப் பகுதியில் நிர்வாக ரீதியாக எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில்  முதலமைச்சர் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியுள்ளார். எவ்வாறான பிரச்சினைகளை  சந்திக்கும் நிலைமையை தாம் எதிர்கொண்டுள்ளோம் என்பதனை நேரடியாகக் கூறியிருக்காவிடினும் அதனை ஜனாதிபதி உணர்ந்து கொண்டவராகவே இருப்பார்.

இந்தச் சந்திப்பைப் பொறுத்த வரையில் புதுவருட வாழ்த்துத் தெரிவிக்கும் சந்திப்பாக இருந்தாலும் ஜனாதிபதி இங்கு ஒரு குறைகேள் (ஒம்புஸ்டன்) அதிகாரி போன்றே செயற்பட்டிருக்கக் கூடும். ஏனெனில் வடமாகாண சபை நிர்வாக ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளே ஜனாதிபதியிடம் கூறப்பட்டுள்ளது.


வடமாகாண சபை அமைக்கப்பட்ட காலத்தின் பின்னர் அந்த மாகாண சபையானது நிர்வாக ரீதியாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட வண்ணமே உள்ளது. இதன் காரணமாக அந்தச் சபையின் ஊடான சேவைகளை மக்களையும் சென்றடைய முடியாதுள்ளது.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பெரிதாகக் குறை கூறப்படுபவர் அந்த மாகாணத்துக்கான ஆளுநரே. அவர் வடமாகாண சபை இயக்கத்துக்குத் தடையாக இருந்து கொண்டு அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார் என்பதே பொதுவான குற்றச்சாட்டாகவுள்ளது. இதற்கு அடுத்ததாக வடபுலத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் மற்றும் சில அரசியல் கட்சிகள் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறது. ஆக மொத்தத்தில் மும்முனையிலிருந்து எறியப்படும் அம்புகளுக்கு மத்தியிலேயே வடமாகாண சபை செத்துப் பிழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுவான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.

ஆனால், இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்பதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயவிமர்சனத்துடன் நோக்க வேண்டும் ஆளுநர், வடமாகாண சபை என்ற இந்த இரண்டு விடயங்களின் அதிகாரங்களை நோக்க வேண்டும். சட்டரீதியாக இவை இரண்டுக்கும் உள்ள அதிகாரங்கள் தொடர்பில் அறிந்து கொண்ட பின்பே இவை தொடர்பான விமர்சனங்களை முன்வைக்க முடியும். ஆளுநர் தனக்குரிய சட்டரீதியான அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது அதில் தவறு காண முடியாது. அதே போன்று முதலைமைச்சரும் தனக்குரிய சட்ட ரீதியான அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது அதனைத் தடுக்கவும் கூடாது. ஆனால,; இந்த இரு தரப்பும் தங்களுக்குச் சட்ட ரீதியாக வழங்கப்படாத அதிகாரங்களை சவால் விடும் வகையில் பரிசோதனை முயற்சியாக பயன்படுத்த் முனையும் போதே இவ்வாறான பிரச்சினைகளும் முரண்பாடுகளும் ஏற்படுகின்றன.

ஆனால், அதிகாரம், சட்டம் என்ற இந்த இரு விடயங்களுக்கும் அப்பால் பல விடயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். அதன்போது சட்டமும் அதிகாரமும் இரண்டாவது பிரஜைகளாகத்தான் காணப்படும். இதற்கு விட்டுக் கொடுப்பு, பரஸ்பர புரிந்துணர்வே முக்கியம். இவை இரண்டின் மூலம் எதனையும் சாதித்துக் கொள்ள முடியும். ஆனால,; வடமாகாணத்தில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதென்பது சற்றுக் கடினமான காரியமே. பல விடயங்கள் அங்கு முதற்கோணல் முற்றும் கோணலாகி விட்டன.  விட்டுக் கொடுப்பு, பரஸ்பர புரிந்துணர்வு அங்கு ஏற்படாத வரை எந்தப் பிரச்சினைக்குமே தீர்வு எட்டமுடியாத நிலை அங்கு காணப்படுகிறது.

நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இறங்கிப் போவதா? அல்லது நாங்கள் சிங்கள ஆளுநரிடம் கையேந்துவதா என்று இரு தரப்பும் வரட்டுக் கௌரவத்துடன் இருப்பார்களாயின் பாதிக்கப்படப் போவது வடபுல மக்களே. இந்த விடயத்தை இரு தரப்பும் புரிந்து கொள்வது அவசியம்.

கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் வடமாகாண சபைத் தேர்தலின் போது மக்களுக்கு வாக்குறுதிகளை எவ்வித குறைபாடுகளுமின்றி வாரி வழங்கியிருந்தது. எங்களுக்கு பெரும்பான்மையைத் தாருங்கள்.. சிங்கள ஆளுநரை அகற்றுவோம்,.. ஆமிக்காரனை அங்கிருந்து விரட்டுவோம் என்ற பாணியில் எல்லாம்; கூறியிருந்தார்கள். மக்களும் அவர்கள் கூறியதனை அப்படியே ஏற்றுக் கொண்டு நான்கில் மூன்று என்ற பெரும்பான்மையுடன் ஆட்சியதிகாரத்தில் அமர்த்தி விட்டனர். ஆனால், எவ்வளவு பெரும்பான்மை இருந்தும் இன்று ஒன்றும் செய்ய முடியாத நிலை.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, இறைமை என்கின்ற விடயத்தில் அந்நாட்டுப் படைகள் எங்கும் இருக்கலாம் என்ற விடயத்தையும் ஆளுநர் எந்த இனத்தைச் சேர்ந்தவராகவும் எந்த அந்தஸ்தைக் கொண்டவராக இருந்தாலும் அவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் அரச அதிகாரியாகவே இருப்பார். அவர் சட்டப்படியும் அரசுக்கு விசுவாசமுமாகவே செயற்படுவார் என்ற இந்த இரு சின்ன விடயங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொண்ட நிலையிலும் இவைகளுக்கு மாற்றமான கருத்தினைத் தேர்தல் பிரசாரங்களில் வெளியிட அதனை அப்படியே நம்பிக் கொண்ட வடபுல சனங்கள் இன்று அந்தரித்துப் போயுள்ளனர். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. கூட்மைப்பினர் செய்த இவ்வாறான பிராசாரங்களே தற்போதைய ஆளுனரும் இராணுவத்தினரும் வடபுலத்தில் தொடர்ந்திருக்க காரணமாகியும் இருக்கலாம்.

வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து குறைந்த காலமே சென்றுள்ளது. இருக்க வேண்டிய காலம் நிறையவே உள்ளது.  ஆனால், இவ்வாறான முரண்பாடுகளுடன் பயனிக்கும் போது எதிர்காலத்திலும் ஒன்றுமே நடக்காத நிலையே தொடரும். விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக மக்களுக்கே பாரிய இழப்பை ஏற்படுத்தும்.

வடமாகாண ஆளுநரைப் பொறுத்த வரையில், வடமாகாண சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை எவ்வித மறுப்புமின்றி அங்கீகரித்துள்ளார். முதலமைச்சரைச் சந்தித்துப் பேசி பல விடயங்களுக்கு முடிவு காண அவர் விருப்பம் கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் முதலமைச்சருக்கு அழைப்பினையும் அனுப்பியிருந்தார். இதுவரை அதற்குப் பதிலளிக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.  வெண்ணெய் திரண்டும் வரும்போது தாழியை உடைக்கக் கூடாது. ஒருவர் இறங்கி வரும் நிலையில் நாம் அவரை ஏறப் பார்ப்பதும் சரியல்ல..

வடமாகாண ஆளுநரைச் சந்தித்துப் பேசி பரஸ்பர புரிந்துணர்வுடன் முடிந்தவற்றைச் செய்து கொள்வதே இன்றுள்ள ஒரே வழி. அதுவே நல்லது. இவ்வாறான சந்திப்பின் பின்னரும் அவர் வடமாகாண சபைக்குரிய அதிகாரங்களில் தலையிட்டு, தடைகளை ஏற்படுத்துகிறார் என்றால் அதனை வெளிப்படுத்தி நியாயம் கேட்பதில் தவறில்லை.

கரும்பைக் கடித்துப் பார்க்காமல் அது கசக்கும் என்று கூறுவதிலோ.. பாவற்காயைக் கடித்துப் பார்க்காமல் அது சரியாக இனிக்கும். எனக்கு இனிப்புப் பிடிக்காது என்று கூறுவதிலோ அர்த்தமில்லை.

வடமாகாண மக்களுக்கு உள்ள ஒரேயொரு தீர்வு  இந்த மாகாண சபை மட்டுமே. இதனை விட இனி எதனையும் ஆட்சியாளர்கள் வழங்கப் போவதில்லை. இதன் மூலமே மக்கள் மேம்பாட்டையும் வடபுல அபிவிருத்தியையும் கண்டு கொள்ள வேண்டிய நிலை. இந்த விடயத்துக்கு அப்பால் ஒன்றுமே நடக்கமாட்டாது. ராக் கோழி கூவி  பொழுது விடியப் போவதும் இல்லை. எனவே இந்த விடயத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொண்டு செயற்படுவதே சிறந்தது.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 05-01-2014

No comments:

Post a Comment