Sunday, January 26, 2014

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்! குரங்குக்கு தேங்காய் கொண்டாட்டம் !!

 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

மேல்மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாணத்தில் தனித்துக் களமிறங்குவது என்பது புதிய விடயமல்ல. பலமுறை களமிறங்கி தனது கட்சி உறுப்பினர்களை மேல்மாகாண சபைக்கு அனுப்பியுள்ளது. 

ஆனால,; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திடீரென மேல்மாகாண சபைத் தேர்தலில் குதித்துள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரை அந்தக் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என மாற்றிய பின்னர் அனைத்து இன மக்களையும் உள்ளீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. இந்த அடிப்படையிலும் தங்களுக்குள்ள செல்வாக்கைக் காண்பிக்கவுமே இந்தக் கட்சி மேல்மாகாணத்தில் தனித்துப் போட்டியிடுவதாக நம்பலாம்.

தென்மாகாண சபைத் தேர்தலை விட மேல்மாகாண சபைத் தேர்தலானது இம்முறை பல்முனைப் போட்டியாகவே அமைந்துள்ளது. எந்தக் கட்சி பெற்றி பெற வேண்டுமென்றாலும் அது போராடிப் பெற்ற வெற்றியாக அல்லது சிறுபான்மைக் கட்சிகளை விசேடமாக, முஸ்லிம் கட்சிகளை வைத்து ஒரு காய் நகர்த்தல் மூலம் ஒரு பிரதான கட்சி பெற்ற வெற்றியாகவும் கருதலாம். இதற்கான துரும்பாக சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளைப் பயன்படுத்துவதுடன் அவர்களைப் பயன்படுத்தும் பிரதான கட்சிகளும் தங்கள் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களை அதிகளவில் நிறுத்தினால் வாக்குகள் நிச்சயமாகச் சிதைவடையும் அதே நேரத்தில் பிரதான கட்சி ஒன்றின் வெற்றியும் இலகுவாகி விடலாம் என்பது கூட்டப்பட்ட கணக்கின் கழித்துப் பார்த்த மீதியாக வரும்.

இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால். சிங்கள மக்களின் வாக்குகளாலேயே இலகுவான வெற்றியையும் அடைந்து கொள்ளும் தந்திரங்களை பிரதான அரசியல் கட்சிகள் கொண்டிருக்கலாம். இதற்கான அரசியல் துரும்புகளாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பயன்படுத்தப்படுகிறதோ என்ற கேள்வியிலும் நியாயம் உள்ளது.

நடந்து முடிந்த வடமேல் மாகாண மற்றும் மத்திய சபைத் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டதுடன் அதிகளவு முஸ்லிமகளை பிரதான கட்சிகளும் களமிறக்கியதால் இன்று அந்த மாகாணங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் கைசேதப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர். தாங்கள் விட்ட பிழைகளை முஸ்லிம் அரசியல்வாதிகளும் இப்போது சிந்திக்கின்றனர்.

ஒரு சினிமா படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் சிறைக் கூண்டிலிருந்து கொண்டு தனது நண்பரகளிடம் ஜாமீன் கொண்டு வந்தீர்களா எனக் கேட்க. அவர்களோ பல மீன்களின் பெயரைக் கூறிவிட்டு  எல்லா மீன்களும் சந்தையில் உள்ளன. ஜாமீன் மட்டும் சந்தையில் இல்லையே என கூற, இதனால் ஆத்திரமடைந்த வடிவேல் நண்பர்களின் தலையை இழுத்து அடிப்பதாக நினைத்து தனது தலையையே சிறைக் கம்பிகளில் அடித்து விட்டு இரத்தம் கசிந்தோட... இரத்தமா என்று கேட்பது போன்றே இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலை. தாங்கள் கூட்டுச் சேர்ந்துள்ளவர்களின் நிலைமகளை அறியாது அவர்களில் நம்பிக்கை வைத்து கடைசியில் எல்லாம் பிழையாகும் போது தங்களையும் தங்கள் சமூகத்தையும் தாங்களே அடித்துக் கொண்ட வேதனையில் அழுவார்கள்.

இதேவேளை, கடந்த மேல்மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களும் கணிசமான ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தனர். ஆனால், அதே ஆதரவுத் தளம் இம்முறை மேல் மாகாண சபைத் தேர்தலிலும் ஆளுந்தரப்புக்கு இருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது. ஏனினெனில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கும் பல கசப்பான சம்பவங்களால் மேல்மாகாண விசேடமாக, கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் அதிருப்தியும் வெறுப்பும் கொண்டவர்களாகவே உள்ளனர். பல விரும்பத்தகாத சம்பவங்களால் முஸ்லிம்கள் நோகடிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அரசாங்கம் கூட நன்கறிந்துள்ள நிலையில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியின் சரிவினையும் அது அறிந்து கொள்ளாதிருக்க நியாமில்லை. இதேவேளை, மேல்மாகாணத்தில் விசேடமாக, கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் கணிசமான முஸ்லிம் வாக்கு வங்கியைக் கொண்டதொரு கட்சியாகவே உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் முஸ்லிம் கட்சிகள் இரண்டையும் வளைந்து  தனித்துப் போட்டியிட வைப்பதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தி தங்களது கட்சியின் தளம்பல் நிலையைச் சமப்படுத்தவதற்குமாகவே இந்த இரு கட்சிகளையும் அரசு தனியாக களமிறக்கும் வியூகத்தை வகுத்திருக்கலாம் என்று சிந்திக்கும் ஒருவனை முட்டாள் என்று கூற முடியாது. அப்படி சிந்திக்கும் ஒருவனை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வக்காளத்து வாங்கும் ஒருவன் என்று யாராவது கூறினால் அது அவரின் வங்குரோத்து அரசியல் தனத்தையே காட்டி நிற்கும். மேலும் அரசு சார்பான இந்த இரு கட்சிகளும் மேல்மாகாண சபைத் தேர்தலில் எவ்வாறான பிரசாரங்களை முன்னெடுக்கப் போகினறன என்பதும் ஒரு கேள்வியாகவே எழுந்துள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது பள்ளிவாசல் தாக்குதல்களைப் பிரதான பாடு பொருளாக்கி பிரசாரங்களை மேற்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ், இந்தத் தாக்குதல் தொடர்பில் அரசையும் அரச தலைமையையும் அன்று விமர்சிக்கத் தவறவில்லை. இவ்வாறானதொரு பிரசாரத்தையே பல்லினத்தவர்களும் வாழும் மேல்மாகாணத்தில் மேற்கொளள் முடியுமா? அவ்வாறு இல்லையெனில் எவ்வாறான பிரசாரங்கள் ஊடாக முஸ்லிம்களின் வாக்குகளை இவர்கள் பெற முடியும்.

அதேபோன்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ன் பிரசாரம் தொடர்பான வியூகங்கள் எவ்வாறு அமையப் போகிறது என்பதும் அனைத்தையும் விட பலத்த கேள்வியாகவே உள்ளது. அவர்களும் எதனைக் கூறி எந்தக் குறை குற்றங்களை மக்கள் மத்தியில் முன்வைத்து தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருவர் என்பதனையும் பொறுத்திருந்தே பார்க்க முடியும்.

இறுதியாக இந்த இரு கட்சிகளும் ஒரு சில ஆசனங்களை மேல்மாகாணத்தில் பெற்றால் அவர்கள் தனித்த இயங்குவார்களா, அரசுடன் சேர்ந்து இயங்குவார்களா என்பதும் இதுவரை முடிச்சுப் போட்ட மர்மமாகவே உள்ளது.

எது எப்படியிருப்பினும் சிறுபான்மை முஸ்லிம் கட்சிகள் தேர்தல் களத்தில் அதிகளவில் இறங்குவதானது கடுயைமான போட்டி நிலைமைகளின் போது பிரதான கட்சிகளுக்கு கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம் போல் அவர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 26-01-2014

No comments:

Post a Comment