Sunday, January 12, 2014

தொடரும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள்....அரசியல்வாதிகளின் நடனமும்... அதிகார தரப்பினிரின் தாளமும்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் நின்றபாடில்லை. அது தொடர்கிறது. முன்னர் இடையிடையே இடம்பெற்ற இந்தத் தாக்குதல்கள் அப்போது பிரபல்யம் பெற்று பெரிதாகப் பேசப்பட்ட நிலையில் தற்போது பரவலாக, தொடராக இடம்பெற்றாலும் அது தொடர்பான கவனம் பெரிதாக இல்லை. சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மட்டுமே அதன் பரபரப்பு. பின்னர் எல்லாம் மறந்து விடும் நிலை. இதான் இன்றைய நிலைப்பாடு.

அண்மையில் தெஹிவளை, களுபோவில பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களை உடனடியாக மூடும்படி பொலிஸார் பணித்திருந்தார்கள் என கூறப்பட்டது. பின்னர் அங்கு ஒரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு அமைச்சர் ரிஷாத் சென்றிருந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பில் முறையிட்டிருந்தார். நாங்கள் பார்க்கிறோம். பள்ளிவாசலை மூடச் சொல்லும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என்ற பதிலே சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து கிடைத்திருந்தது. அத்துடன் கடமை முடிந்து விட்டது. எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் மௌனித்துப் போனார்கள்.
அச்சுறுத்தலுக்கு உள்ளான அதே பள்ளிவாசல்களை மூட வேண்டுமென இப்போது அந்தப் பிரதேச கிராம சேவகரும் மற்றும் சிலரும் கேட்டுள்ளனர்கள் என பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதான் இப்போதைய நிலைமை. இந்த விஷயத்தில்  முஸ்லிம் அரசியல்வாதிகளினது நடனத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தாளத்தினையும் நன்கறிந்து கொண்ட பௌத்த இனவாதிகள் தற்போது தங்களுக்கு  தேவையான வகையில் நடந்து கொண்டு சுதந்திரமாகவே பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

அண்மையில் கண்டி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயம். அவர்கள் ஒரு குழுவாக வான் ஒன்றில் வந்து குறித்த பள்ளிவாசலின் உள்நுழையும் கதவை உடைத்து உட்பிரவேசித்து ஆற, அமர தாக்குதல் நடத்திச் சென்றிருந்தனர். அன்றைய தினம் அவர்களைப் பிடிப்பதற்கும் ஆட்களில்லை. தடுப்பதற்கும் எவருமில்லை. அதன் பின்னர் கோழி திருடிய கள்வர்கள் கூட உலாவுவது போன்று சிலர் தாக்குதல் நடத்தியோரைத் தேடியுள்ளனர்.

இவ்வாறு எத்தனையோ சம்பவஙகள் தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு மேலாக பள்ளிவாசல்களில் வைக்கப்படும் உண்டியல் திருடப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. ஆனால், இதன் கதை வேறு. சிங்களவர்கள் மீதோ பிற இனத்தவர்கள் மீதோ இதற்கான அநியாயப் பழியைப் போட முடியாது. இவற்றில் ஈடுபடுவோர் உள்ளுர் திருட்டுக் கும்பல்களே.

பள்ளிவாசல்கள் தாக்குதல் தொடர்பில் எத்தனையோ சம்பவங்கள் தொடரச்சியாக நடந்து கொண்டிருந்தாலும் முஸ்லிம் அமைச்சர்கள் எம்பிக்கள் ஒரு வரம்புக்கு மேல் அவர்களால் செயற்பட முடியாத நிலை. அப்படி அவர்கள் செயற்பட முயற்சித்தால் அவர்கள் வகிக்கும் பதவி என்பது ஒரு பேயாக அவர்கள் முன் வந்து அச்சப்படுத்துகிறது. இதனால அவ்வாறானவர்கள் ஓடி, ஒதுங்கி ஆடிப்போய் விடுகிறார்கள். இப்போது தேர்தல்கள் காலம் என்பதால். இரு தோணியில் கால் வைத்த நிலையிலேயே பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளனர். இதற்கு மேலாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் பள்ளிவாசல்களே தாக்கப்படவில்லை என என்று வாய் கூசாது நிறையவே பொய் சொல்கின்றனர். தாங்கள்தான் சரியான அரசியல்வாதிகள் என்பதற்குச் சான்றுப்பத்திரமே வழங்குகின்றனர்.

இதேவேளை, கண்டி மாவட்டம் அம்பந்தென்ன பகுதியில் உள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பில்  சுமார் 20 பேர் மக்களால் அடையாளம் காட்டப்பட்டிருந்த போதிலும் மூவர் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும் அவர்களும் பொலிஸார் எதிர்ப்பின்மை காரணமாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பள்ளிவாசலின் அருகிலிருந்து சிலர் மீது கற்கள் வீசப்பட்டதாகவும் அதற்குப் பதிலடியாகவே பள்ளிவாசல் மீது அவர்கள் கற்களை வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்ததாகவும் இது ஒரு புதுக்கதை, இதனைப் பொலிஸாரே சோடித்துள்ளனர் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். எனவே பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலுக்கான காரணங்கள் மற்றும் சந்தர்ப்பங்களும் இப்போது முன்னரே தயாராக்கப்படுகிறது போலும் தெரிகிறது.

இதேவேளை, இந்தப் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து அஸாத் சாலி தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பெரும்பான்மையான சிங்கள மக்களை அண்மித்தாகக் கொண்ட முஸ்லிம் பிரதேசங்களில் அல்லது சிங்களவர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் முஸ்லிம்கள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது என்பது ஒரு சமயோசித செயல் அல்ல.. சில வேளைகளில் இந்த ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் அங்கு வாழும் முஸ்லிம்களின் நிலைமைகளைச் சிக்கலாக்கவும் கூடும். ஆகவே இந்த விடயத்தில் கவனமாகவும் செயற்படவும் வேண்டியுள்ளது.

எதிர்க்கட்சி தரப்பு அரசியல்வாதிகள் இவ்வாறு நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் கண்டன ஊர்வலங்களால் அரசோ சம்பந்தப்பட்ட தரப்போ திருந்தி விடும். பயந்து போய் விடும் என்றெல்லாம் இன்று நினைப்பதும் தவறானதாகும். கொழும்பில் எத்தனையோ எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஆனால் அவற்றால் ஒன்றுமே நடந்ததாக இல்லை.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அரச தரப்பைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளே சரியான தீர்மானங்களை முன்னெடுத்துச் செயற்பட வேண்டும். இதற்கு அவர்களிடம் முழுமையான ஒற்றுமை தேவை. ஆனால் அந்த ஒற்றுமை என்பது முஸ்லிம் தரப்பிடம் கடையில் இந்தப் பொருள் என்ன விலை என்று கேட்கும் நிலைமையில் காணப்டுகிறது. இதற்கு மேலாக இன்று அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் தரப்புகள், தங்களது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் எழும்பும்போது தங்களது பதவிசார்ந்து யோசிப்பதே பிரதான பலவீனமாக உள்ளது. இதுவே இன்று இந்தச் சமுகத்துக்கு ஏற்பட்டுள்ள சாபக் கேடாகி விட்டது. இவர்களிடையே தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விடும் போக்காளர்களும் நிறையவே உள்ளனர்.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம் இனத்துவ அடையாளங்கள் மீதும் குறிவைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வாறான நடவடிக்கைகள் நிச்சயமாக அந்தச் சமுகத்தை இருப்பைக் கேள்விக்குறியாக்கி விடும் அபாயம் தோன்றியுள்ளது. இந்த விடயத்தில் அரசு சார்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் மௌனம் சாதிப்பார்களாயின் பாரிய விளைவுகளை அந்தச் சமுகம் எதிர்நோக்க வேண்டி வரும். எனவே, இந்த விடயத்துக்காக மட்டுமேயாவது அவர்கள் ஐக்கியப்பட்டுச் செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 12-01-2014

No comments:

Post a Comment