ஏ. எச். சித்தீக் காரியப்பர்
மேல், தென்
மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி
முடிவுற்ற நிலையில் அடுத்த மாதம் 29 ஆம் திகதி தேர்தல் இடம்பெறுமென அறிவிப்பும் செய்யப்பட்டு
விட்டது. இது தேர்தல்கள் காலம்தான். இந்தக் காலத்தில் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்
தேர்தல் ஜனாதிபதி தேர்தல் என்றெல்லாம் அடுத்த வருடம் வரை நீடித்துச் செல்லும்
என்று கூறலாம்.
ஏதிர்வரக் கூடிய
நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத் தேர்தல் களம் தொடர்பில் சில அரசியல்
கட்சிகள் இப்போதே சிந்திக்கத் தொடங்கி விட்டன. விசேடமாக, ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயம் தொடர்பில் சூடு கண்ட பூனையாக உள்ளது. இந்த
விடயத்தில் அவர்கள் நின்று,
நிதானித்தே
வியூகம் அமைக்க வேண்டிய நிலைமை. இதன் காரணமாகவே இப்போதே மட்டக்களப்பு மாவட்டத்தில்
அந்தக் கட்சியை கட்டியெழுப்பும் பணிகளை விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள்
வெளிவந்துள்ளன.
அம்பாறை மாவட்டத்திலும்
முஸ்லிம் காங்கிரஸ் ஓரளவு சரிவைச் சந்தித்துள்ள நிலையில் மட்டக்களப்பு
மாவட்டத்தில் மிக மோசமான நிலையை நோக்கிச் செல்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்
என்பதனை விட வேட்பாளரின் தனிப்பட்ட
செல்வாக்கு காரணமாக மட்டுமே எவரேனும் ஒருவர் அந்த மாவட்டத்தில் தப்பித் தவறி
வெற்றியடையலாம் என்ற நிலையே உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ்
அரசியல் ரீதியாக அந்த மாவட்டத்தில் பல
எதிர்பாராத சம்பவங்களை எதிர்நோக்கியிருந்தது. முஸ்லிம் காங்கிரஸை எந்த
அடிப்படையில் நம்பி முஸ்லிம்கள் வாக்களித்தனரோ அதற்கு மாற்றமான நிலைப்பாடுகள்
திடீரென அங்கு எழுந்தமையால் தோன்றிய பிரச்சினைகள் இரகசியமானவை அல்ல.
விசேடமாக, மட்டக்களப்பு
மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான பஷீர் ஷேகு தாவூத்
அமைச்சராகப் பதவியேற்ற பின் எழுந்த நிலைமைகளையும் இதற்கு பிரதான காரணமாகக்
கொள்ளலாம். இந்த விடயத்தில் அமைச்சர் பஷீர் ஷேகு தாவூத் அமைதியாகவும்
அவையடக்கத்துடனும் இருந்தாலும் அவரது கட்சித் தலைமை பகிரங்க மேடைகளிலேயே அவரைக்
கடுமையாகச் சாடியது. அவர் அரசாங்கத்தின் ஒரு கொந்தராத்துக்காரர் என்றும் கட்சித்
தலைமை கூற தவறவில்லை. ஆகவே,
இந்தப் பிரச்சினை
இப்போது தணிந்திருந்தாலும் அது நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது.
இதன் பிரபலிப்பை
எதிர்வரும் பொதுத்தேர்தலில நாம்; கண்டு கொள்ள முடியும். அதற்கான வியூகங்கள் தற்போதே
மட்டக்களப்பு மாவட்டத்தில் வகுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பஷீர் ஷேகு தாவூதை
பொறுத்த வரையில் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றாலும் வென்றாலும் அவருக்குப்
பின்னாலும் ஒரு கூட்டம் உள்ளது என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன்
அவர் அரசுக்கு நெருக்கமானவர். அரசும் அவருக்கு நெருக்கமானது. முஸ்லிம் காங்கிரஸுக்கு இது ஒரு
சிக்கலான நிலைமைதான்.
இதேவேளை, கிழக்கு மாகாண
சபையின் தற்போதைய உறுப்பினரும் மத்திய அரசின் முன்னாள் அமைச்சருமான அமீர் அலியை
கட்சிக்குள் மீண்டும் உங்வாங்குவதன் மூலம் மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ்
இழந்த செல்வாக்கை ஓரளவு நிமிர்த்தி வெற்றியையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது
முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இன்னொரு தரப்பாரின் வாதமாக உள்ளது. கடந்த முறை
நாடாளுமன்றத் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் (அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக)
போட்டியிட்டு தோல்வி கண்டதனையே காரணமாக வைத்து இந்தக் காரியத்தைச்
சாதிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
கிழக்கு மாகாண சபைத்
தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் யாரை முதலமைச்சராக நியமிப்பது என்ற இழுபறி
நிலையின் போது அரச தரப்பு அமீர் அலியை நியமிப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானித்திருந்த
போது அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்த எதிர்ப்பைத்
தெரிவித்திருந்தது. இதனையடுத்தே அந்த இடத்துக்கு நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டார்
என்பதே அரசியல் உண்மை. ஆனால், இன்று கதை மாறி
அமீர் அலியையும் கட்சிக்குள் உள்வாங்கி
செல்வாக்கை உயர்த்த வேண்டிய நிலைமை முஸ்லிம் காங்கிரஸ{க்கு
ஏற்பட்டுள்ளது. அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக மட்டுமே தனது வெற்றி என்ற
நிலைமையே அமீர் அலிக்கும் உள்ளது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்று சொல்வது இந்த
அரசியல் வியூகத்துக்கும் பொருத்தமாகத்தான் உள்ளது.
இதேவேளை, மேல் மாகாண
சபையில் கொழும்பு மாவட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்தக் கட்சி சார்பில் களமிறங்குவோரை கட்சி
முக்கியஸ்தர்கள் சந்தித்திருந்தனர். இந்த நிகழ்வில் றிஷாத் பதியுதீன் உட்பட
கட்சியின் முக்கியஸ்தர்கள் பலந்து கொண்டனர். ஆனால், அதே கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான
அமீர் அலி இதில் பங்கேற்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான காரணங்கள் வேறாக
இருந்தாலும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது
முட்டாள்தனம் என அனைத்து விடயங்களுக்கும் சொல்லி விடவும் முடியாத நிலை. மொட்டைத்
தலைக்கும் முழங்காலுக்கும் அரசியல் அடிப்படையில் முடிச்சுப் போட்டும் பார்க்கலாம்.
இது ஒருபுறமிருக்க, அம்பாறை
மாவட்டத்தில் விசேடமாக, கல்முனைத்
தொகுதியின் பொதுத்தேர்தல் வியூகத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் வித்தியாசமாகவே கையாள
உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ஹாரீஸை இரண்டாம்
நிலையாக வைத்து விட்டு பிரதான வேட்பாளராக ஒரு முஸ்லிம் பெண்ணை கல்முனைத்
தொகுதியில் நிறுத்தவுள்ளதாகவும் தெரிய வருகிறது. இதன் வெள்ளோட்டம் இப்போதே
ஆரம்பித்து விட்டது. குறித்த பெண் தற்போது மக்கள் முன் தோன்றி வருகிறார்.
இதேவேளை, முன்னாள் மேயர்
சிராஸ் மீராசாஹிபை நாடாளுமன்றத் தேர்தல் முஸ்லிம் காங்கிரஸ் உள்வாங்காவிட்டால்
அவர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கப்
போவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அவர் கல்முனையில் தேசிய காங்கிரஸ் ஊடாக
நிறுத்தப்படுவாரானால் தேர்தலில் வெற்றியடைந்தாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி பிரதேச ரீதியாக வாக்குகள் பிரிந்து முஸ்லிம்
காங்கிரஸின் ஆசன எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு நடந்தால் அது தேசிய காங்கிரஸின் அரசியல் காய் நகர்த்தலுக்குக் கிடைத்த
வெற்றியாகவே அமையும். என்னதான் நடக்கப் பொகிறது என்பதனைப் பொறுத்திருந்து
பார்ப்போம்.
ஏனவே, முஸ்லிம்
காங்கிரஸைப் பொறுத்த வரையில் அடுத்த பொதுத்தேர்தல் ஆப்பிழுத்த குரங்கின் கதையாகவே
அமையலாம்.
நன்றி வீரகேசரி
வாரவெளியீடு 09-02-2014

No comments:
Post a Comment