Sunday, February 23, 2014

அரசியல் அறுவைச் சிகிச்சைக்குள் அகப்பட்டுள்ள கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை!

 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாது, இல்லாத பிரச்சினைகளை எல்லாம் இழுத்துப் போட்டு தானும் குழம்பி மக்களையும் குழப்பும் சாதனைமிக்க அரசியல் களமாக இன்று கல்முனை மாறிவிட்டது. அனைத்தும் அரசியல் மயம். தான் செய்தால் சாதனை. மற்றவர் செய்தால் அது தனக்குச் வேதனை. என்ற நிலைவரமே கல்முனையில் காணப்படுகிறது. இளம் அரசியல் தலைமுறைகளால் அந்தத் தொகுதி பந்தாடப்படுகிறது.

அங்கொரு புதிய பிரச்சினை இன்று பூதாகரம் பெற்றுள்ளது. அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இப்போது சில அரசியல்வாதிகளின் அறுவைச் சிகிச்சைக் கூடமாக மாறிவிட்டது. மனிதாபிமானம், பொதுச்சேவை, தன்னார்வத் தொண்டு என்ற பண்புகளைக் கொண்ட வைத்தியசாலைகளிலும் இன்று அரசியல் நன்றாகவே புகுந்து விளையாடுகிறது. ஆனால் வேதனையானது.


நல்லவேளை, அந்த வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் டாக்டர்களாக மட்டும் இருக்கிறார்கள். அவர்களில் எவரேனும் அரசியல் கலப்புடன் இருந்தால் ஆட்களையே அறுக்கும் அரசியல் சிகிச்சையையும் செய்து விடும் நிலை ஏற்படலாம். அந்தளவுக்கு இன்று அஷ்ரஃப் வைத்தியசாலையின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் கலந்து தாராளமாக்கப்பட்டுள்ளது.

ஒரு நோயாளியைப் பரிசோதிப்பதற்கு முன்னர் டாக்டர்களோ அல்லது முன்பாக இருப்பவர்களோ சில கேள்விகளைக் கேட்பார்கள், அதாவது உங்கள், பெயர் வயது என்றெல்லாம் கேட்பார்கள். ஆனால், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்குச் சிகிக்சைக்காகச்  செல்வோரிடம் மேலதிகமாக சில கேள்விகளையும் கேட்க வேண்டுமென்று அங்கு கடமை புரியும் டாக்டர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்களோ தெரியாது. அப்படி என்ன கேள்விகள்... உங்கள் பெயர்?.. வயது?..  உங்கள் கட்சி..? நீங்கள் யாரின் ஆள்..? என்ற கேள்விகளையும் கேட்டே அதற்குத் தகுந்தவாறு மருந்து கொடுக்க வேண்டுமென்று அங்குள்ள அரசியல்வாதிகளால் வைத்தியசாலை டாக்டர்களுக்கு  சுற்று நிரூபம் அனுப்பப்பட்டு  அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்களோ தெரியாது. பாவம் பயமாக இருக்கிறது.. அங்கு செல்லும் நோயாளர்களை நினைக்கும் போதுதான்.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் கலந்தாலோசித்து உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் தலைமையிலான குழுவொன்று  சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப்  பேசியிருந்தது.

முன்னாள் அமைச்சர் மன்சூர் தலைமையில் சென்ற அபிவிருத்திக் குழுவினர் இந்த வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் ஆளணி வசதிகள் தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கூறியதனையடுத்து அபிவிருத்தி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் அதற்கான உதவிகளைத் தருவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்ததாக அபிவிருத்திக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இச்சந்திப்பின் போது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நசீர், டாக்டர் வை.எல் யூசுப் உட்பட. உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். 

இதேவேளை, இந்த வைத்தியசாலையின் வெள்ளிவிழா வைபவத்திலும் பிரதம விருந்தினராக வருகை தரவும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன விருப்பம் கொண்டிருந்தார். ஆனால், திடீரென இவை அனைத்தும் உடன் நிறுத்தப்பட்டன.  இவ்வாறானதொரு தடையின் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியே புரையோடிப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த வைத்தியசாலைக்கு உதவிகள் வழங்கப்படவிருந்த நிலையில் அது தடுக்கப்பட்டமை, மற்றும் வெள்ளிவிழா வைபவம் வெற்று விழாவாக்கப்பட்ட சம்பவம் ஆகியவற்றின் பின்னணில் அரசியல் நின்று நியாயமாகவே விளையாடியதன் காரணமாக இன்று அந்த வைத்தியசாலை ஒன்றுமே இல்லை என்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் தங்களுடன் கலந்துரையாடாமை, தங்களை மதிக்காமை, முன்னாள் அமைச்சர் மன்சூரை தலைமைத்துவப்படுத்திச் சென்று சுகாதார அமைச்சரைச் சந்திந்தமை போன்ற காரணங்களை முன்வைத்தே சிலரால் இன்று இந்தத் தடைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவுதல் மற்றும் வெள்ளிவிழா நிகழ்வுகளில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வது போன்றவை தொடர்பில் கொழும்பிலிருந்து சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், கல்முனை தொகுதியின் தற்போதைய அரசியல்வாதிகள் சிலருடன் சம்பிரதாய           பூர்வமாக கலந்துரையாடியபோது, அதற்கு வழங்கப்பட்ட பதில் இதுதான் ” அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு இது தொடர்பில் எம்முடன் எதனையும் கலந்துரையாடவில்லை. 

நாங்கள்தானே இந்தப் பிரதேசத்தின் தற்போதைய அரசியல்வாதிகள். மன்சூர் இப்போது அமைச்சருமில்லை. எம்.பியும் இல்லை. எனவே, எங்களது அழைப்பின்றி எவ்வாறு உங்களது அமைச்சர் கல்முனை வர முடியும்? எம்மால் இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இங்கு வந்து பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று உங்கள் அமைச்சரிடம் சொல்லுங்கள் ” என்று அவர்களால் பதில் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே அமைச்சர் மைத்திரிபாலவின் கல்முனை விஜயம் இரத்துச் செய்யப்பட்டது. இதான் நடந்த கதை.

யார் குற்றியானாலும் அரிசியானால் சரி என்பதற்குப் பதிலாக.. யார் குற்றினாலும் அரசியலாகி விடுமோ என்ற நிலைமையே கல்முனையில் தற்போது தோன்றியுள்ளது.  இதனால் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இன்று இழந்தவை.

1. 60 பேருக்கான நியமனம்.
2. 45 பேருக்கான நிரந்தர நியமனம்.
3. பல பில்லியன்கள் பெறுமதியான நவீன மருத்துவ சாதனங்கள், கருவிகள்.

அற்பசொற்ப அரசியல் என்பது இன்று ஓர் ஆஸ்பத்திரியின் செயற்பாட்டுக்கே ஆப்பு வைக்கும் அரசியல் களத்தை உருவாக்கியுள்ளமை கல்முனையைத் தவிர வேறெங்கும் நடந்திருக்காது என்றே கூறலாம்.

அம்பாறையில் இடம்பெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் போது அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட சுமார் இரண்டு பில்லியன் ரூபா நிதி கூட அந்த வைத்தியசாலையைச் சென்றடையாமல் தடுக்கப்பட்டு மீண்டும் மத்திய அரசுக்குத் திருப்பியனுப்பி வைத்த வரலாற்றுச் சாதனை கொண்ட அரசியல் நயவஞ்சகர்களையும் இன்று கல்முனைத் தொகுதியில் காண முடிகிறது.

இவ்வாறான அரசியல்வாதிகள் நோயுற்றால் இந்த வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெறத் தேவையில்லை. மாறாக, அவர்கள் கொழும்பில் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அங்குள்ள மக்களில் பெருமபாலானோர் அப்படியல்லர். அவர்கள் அங்குதான் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. கடுமையாகப் பாதிக்கப்படும் நோயாளி ஒருவரை இன்று அம்பாறைக்கோ கல்முனைக்கோ அனுப்ப வேண்டியுள்ளது. அல்லது அந்த நோயாளி இறக்க வேண்டியுளள்ளது.  இதுதான் மனிதாபிமானமா? மனித உயிருடனும் விளையாடும் அரசியல்வாதிகள்தான் இவர்கள்.

1970 க்குப் பின்னரான கல்முனைத் தொகுதி அரசியல் வரலாற்றில் மர்ஹும்களான முன்னாள் எம்.பி எம்.சீ. அஹமட், அமைச்சர் எம்.எச.எம்.அஷ்ரஃப், தற்போதுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் போன்ற சிறந்த அரசியல்வாதிகளைக் கண்ட கல்முனை மண்ணின் இன்றைய கேவல நிலை இதுதான்.

இன்று இந்த வைத்தியசாலையின் முன்னேற்றச் செயற்பாடுகளில் அதன் அபிவிருத்திக் குழுவே தலையிட வேண்டியுள்ளது. பிற நாடுகளின் உதவிகளுடனும்  சர்வதேச உள்ளுர் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனேயே இந்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது ஒரு வேதனையான விடயமாகும்.

ஆனால், ஒன்று இவ்வாறான அரசியல்வாதிகள் அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும் அடியில் இறங்கியே  தியாகம் செய்ய வேண்டுமென்பதனை மட்டும் கவனத்தில் கொள்ளட்டும். “கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்”

No comments:

Post a Comment