Sunday, March 2, 2014

முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறுவதா இல்லையா? விரைவில் முடிவை அறவிப்பேன்! அமைச்சர் ரிஷாத்தை சந்தித்து பேசியது உண்மையே!!

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிராஸ் மீராசாகிப் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வி-   பேட்டி கண்டவர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கல்முனை தரவைக்  கோவில் விவகாரம்  நான் மேயராக இருந்த காலத்திலும்  எனது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதனை நான் மிக இரகசியமாக வைத்திருந்தேன். இந்த விடயத்தை ஊதிப் பெருக்க வைப்பதால் இரு இன மக்களும் பாதிக்கப்படுவர். அது கல்முனை தொகுதியின் இன ஐக்கியத்துக்கு வேட்டு வைத்து விடலாம் என நான் உணர்ந்தேன். இதனடிப்படையில் இந்த விடயத்தை மிக நிதானமாகவே கையாள நான்  தீர்மானித்திருந்தேன். சம்பந்தப்பட்ட தரப்புகளை அழைத்து சுமூகமாகப் பேசித்த தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் துரமிர்ஷ்வசமாக பதவி விலகியதால் எதனையும் செய்ய முடியாதிருந்தது என கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிராஸ் மீராசாகிப் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டி வருமாறு 


கேள்வி: கல்முனை மாநகர சபை மேயர் பதவியிலிருந்து உங்களை இராஜினாமாச் செய்யுமாறும் அதற்குப் பதிலீடாக வேறு சில விடயங்களை உங்களுக்குத் தருவதாகவும் உங்கள் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் கூறியிருந்தார் என நீங்கள் முன்னர் தெரிவித்திருந்தீர்கள். அந்த வாக்குறுதிகள் தற்போது நிறைவேற்றப்பட்டு விட்டனவா? என்ன பொறுப்புகளை அவர் உங்களுக்குத் தந்துள்ளார்.

பதில்:  அமைச்சர் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி இதுவரை எதனையுமே எனக்குச் செய்யவில்லை. அது மட்டுமல்ல.. இதில் வெட்கக் கேடான விடயம் என்னவென்றால். நான் இன்றுவரை உத்தியோகப்பற்றற்ற பிரதி மேயராகவே உள்ளேன். எனது பெயர் பிரதி மேயர் பதவிக்கு இதுவரை பரிந்துரைக்கப்படவில்லை. கல்முனை ஆணையாளரே இதனை என்னிடம் தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் வெற்று வாக்குறுதிகளை வழங்கி என்னை ஏமாற்றியது மட்டும்தான் மிச்சம்.

கேள்வி:  அதற்காக அமைச்சர் ஹக்கீம் மீது மட்டும் நீங்கள் குற்றஞ் சுமத்த முடியாதே? இந்த விடயத்தில் கட்சியின் அழுத்தங்களும் அவருக்கு இருந்திருக்கலாமல்லவா?

பதில்:  ஆமாம், நான் கடுமையாக மக்களுக்காக உழைத்து வருவது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று  எனது கட்சிக்குள் உள்ள பலரும் கருதினர். நேரடியாகவும் ஒருவர் இந்த விடயத்தை என்னிடம் கூறினார். இதன் காரணமாகவே என்னை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து துரத்துவதற்குப் பலரும் எனக்கெதிராகச் சதி செய்தனர் தொடர்ந்தும் செய்து வருகினறனர். முக்கியமாக, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்குச் சதி செய்து வருகின்றனர்.  இந்த வகையில் மேயர் பதவியிலிருந்து நான் இராஜினாமாச் செய்ய வேண்டுமென அமைச்சர் ஹக்கீம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கலாம்.

கேள்வி:  மேயர் பதவியிலிருந்து உங்களை இராஜினாமாச் செய்யுமாறு கட்சித் தலைமை கோரியதானது முன்னர் செய்து  கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில்தான் என்று இன்னொரு வகையிலும் வாதிடலாம்தானே? 

பதில்:  இல்லை.. இல்லை.. நான் பதவி விலகுவதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்து எனது பதவிக் காலம் முடிவுற உள்ளமை தொடர்பில் அவருக்கு எடுத்துக் கூறி  நான் தொடர்ந்து பதவி வகிக்க முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் மக்களிடம் பிரபல்யம் அடையும் வகையில் நீங்கள் வேலை  செய்யுங்கள் பின்னர் மற்றவை குறித்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தார். அது எனக்கு நம்பிக்கை தருவதாகவே இருந்தது. ஆனால், அவர் என்னை குறித்த காலத்தில் பதவி விலகியே ஆக வேண்டுமென்று அன்றே கூறியிருந்தால் அதற்கேற்றபடி நான் செயற்பட்டிருப்பேன். நான் மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகளையும் துரிதப்படுத்தியிருப்பேன்.

கேள்வி:  உங்கள் பதவி இராஜினாமா தொடர்பில் தலைவர் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் எவ்வாறு சான்றுகளுடன் வாதாடுவீர்கள்?

பதில்: ஏன் வாதாட முடியாது? இறக்காமம் பிரதேச சபைத் தலைவரும் அந்தப்      பதவிக்கு சுழற்சி முறையிலேயே நியமிக்கப்பட்டவர்தான் ஆனால், அவர் இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றவுடன் பதவியை இராஜினாமாச் செய்யவில்லை. அதன் பின் எட்டு மாதங்கள் கழிந்துதான் இராஜினாமா செய்தார். ஆனால் எனக்கு அவ்வாறானதொரு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையே? குறித்த கால முடிவுடன் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டவன் நான். இதிலிருந்து எனது நிலைமையப் புரிந்து கொள்ள முடியுமல்லவா?

கேள்வி:  உங்கள் கூற்றுப்படி பார்த்தால் உங்கள் கட்சியான முஸ்லிம் காங்கிரஸுக்குள் உங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது என்றுதான் அர்த்தம்.  இன்னும் அவர்கள் உங்கள் மீது பிரச்சினைகளை ஏற்படுத்தும் வரை பார்த்துக் கொண்டிராமல் கட்சியை விட்டு விலகலாம்தானே?

பதில்: விரைவில்.. அதுவும் மிக விரைவில் எனது அறிவிப்பு வெளியாகும் பொறுத்திருங்கள்.

கேள்வி:   நீங்கள் இரு வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் றிஸாத் பதியுதீனை இளம் அரசியல்வாதி ஒருவரின்  வீட்டில் சந்தித்துப் பல விடயங்கள் தொடர்பில் பேசினீர்கள்தானே

பதில்:  (நீண்ட மௌனத்தின் பின்னர்) ஆமாம் சந்தித்துப் பேசினேன். பல விடயங்களையும் பேசினேன்தான்.

கேள்வி:  அமைச்சர் அதாவுல்லாஹ்வும் உங்களை அவரது கட்சிக்குள் உள்வாங்க விருப்பம் கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறதே?

பதில்: கேள்விப்பட்டேன்.

கேள்வி: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளீர்கள்தானே?

பதில்:  நிச்சயமாகப்  போட்டியிடுவேன். வெற்றியும் பெறுவேன். அனைத்தையும் விரைவில் அறிவிப்பேன்.

கேள்வி:  நீங்கள் ஒரு பிரதேசவாதம் கொண்டவர் என விமர்சிக்கப்படுகிறீர்களே?

பதில்: அதிக வாக்குகளைப் பெற்ற எனக்கு எனது ஊரான சாய்ந்தமருது மக்கள் போராட்டம் நடத்தியே மேயர் பதவியைப் பெற்றுத் தந்தனர். இதனைப் பிரதேசவாதமாகப் பார்ப்பதா? 

கேள்வி: கல்முனை தரவைக் கோவில் வீதி விவகாரம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு எவ்வாறானது?

பதில்: இந்த விடயம் நான் இருக்கும் போதும் எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதனை நான் மிக இரகசியமாக வைத்திருந்தேன். இந்த விடயத்தை ஊதிப் பெருக்க வைப்பதால் இரு இன மக்களும் பாதிக்கப்படுவர். அது கல்முனை தொகுதியின் இன ஐக்கியத்துக்கு வேட்டு வைத்து விடலாம் என நான் உணர்ந்தேன். இதனடிப்படையில் இந்த விடயத்தை மிக நிதானமாகவே கையாள நான்  தீர்மானித்திருந்தேன். சம்பந்தப்பட்ட தரப்புகளை அழைத்து சுமூகமாகப் பேசித்த தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். இந்த விடயத்தில் எந்தப் தரப்பும் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன். ஆனால், நான் துரதிர்ஷ்டவசமாக பதவியை இராஜினாமாச் செய்யும் நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக என்னால் எதனையும் செய்ய முடியாது போய்விட்டது. நான் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையை மிகச் சுமூகமாகவே தீர்த்திருப்பேன். ஆனால் இன்று இந்த விடயம் அவசரப்பட்டு முன்னெடுக்கப்பட்டதால் பிழையாகிப் போய்விட்டது. இனரீதியான பிரச்சினையாக மாறியுள்ளது.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 02-03-2014

No comments:

Post a Comment