Saturday, March 29, 2014

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக அமைந்து விடக் கூடாது



                                                    ஏ.எச்.சித்தீக் காரியப்பர்



சினிமாப் படமொன்றில் வரும்.. ஆனா வராது.. என்ற டயலொக் போன்று அண்மைக் காலமாகப் பேசப்பட்ட ஒரு விடயம் நடந்து முடிந்து விட்டது. கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர், முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் என்றெல்லாம் இதுவரை அழைக்கப்பட்டு வந்த சிராஸ் மீராசாகிப் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸில் சேர்ந்து  விட்டார். இது தொடர்பான வைபவம் கல்முனையில் கடந்த வாரம் பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் அதாவுல்லாஹ்வும் சிராஸ் மீராசாகிபும் ஆரத் தழுவிய கடந்த வாரக் காட்சியைப் பார்த்தபோது அண்மையில் அமைச்சர் ஹக்கீமுடனும் சிராஸ் மீராசாகிப் இவ்வாறே ஆரத் தழுவிக் கொண்டமையே  ஞாபகத்தில் வந்தது. ஏனெனில் அதுவும் அண்மையில் இடம்பெற்ற விடயம்தான்.

சிராஸ் மீராசாகிப் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீங்கியமை, பதவிகளை துறந்தமைக்கு அவர் தரப்பில்  பல காரணங்கள் கூறப்பட்டாலும் இரு காரணங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களால் தனக்கு வழங்கப்பட்ட ஆணைகள், அதிகாரங்களை முஸ்லிம காங்கிரஸ் பறித்து விட்டது. தன்னை இடைநடுவில் கைவிட்டு விட்டது. இதனால் இன்று அதாவுல்லாஹ் என்ற குதிரையில் ஏறி தான் சவாரி செய்வதாக சிராஸ் கூறியுள்ளார். அடுத்ததாக சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை ஒன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காகவும்தான் அதாவுல்லாஹ்வுடன் இணைந்தேன் என்பது சிராஸ் மீராசாகிபின் அடுத்த கருத்தாக இருந்தது.

இந்த இரு விடயங்களிலும் முதலாவது கருத்துத் தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. கட்சி ஒன்றினை விட்டுச் செல்லும் போது பொதுப்படையாக இப்படித்தான் எல்லோரும் கூறிக்கொள்வர். இது இலங்கை அரசியலின் கலாசரமாகிப்  போன விடயம்.

ஆனால்,சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையைப் பெற்றுக் கொடுப்பேன் என்பதுதான் இன்று பேசப்படும், பல்வேறு விமர்சனங்களுடன் நோக்கப்படும் ஒரு விடயமாக உள்ளது.. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அதாவுல்லாஹ் இது தொடர்பில் தான் ஓர் அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் பதிலளித்துள்ளார். சாய்ந்தமருது பிரதேச சபைக் கோரிக்கை, புதிதான ஒன்றல்ல. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு என்னை வந்து சந்தித்தவர்களிடம் அப்போது நான் மிகவும் தெளிவாகக் கூறிவிட்டேன் . அதாவது எந்தவொரு சமூகத்தினருக்கும் எந்தவொரு பிரதேசத்திற்கும் பாதிப்புகள் ஏற்படாதவாறு எவருக்கும் அநீதியிழைக்கப்படாதவாறு சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதையே இன்றும் சொல்கிறேன். அதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டேன். நம்பிக்கையுடன் பிரார்த்தியுங்கள். என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் அமைச்சர் அதாவுல்லாஹ்  உண்மை நிலைமையைத் தெளிவுபடுத்தியுள்ளார். குறித்த கூட்டத்தில் பங்கேற்ற சாய்ந்தமருது மக்களும் இதன் கருத்தினைப் புரிந்து கொண்டிருப்பர் என்று நம்பலாம். இன்று அதாவுல்லாஹ்வுடன் இணைந்ததால் நாளை பிரதேச சபை கிடைத்து விடும் என்று நம்பி விடமுடியாது. அத்துடன் அமைச்சரால் இதற்கான கால எல்லையும் குறிப்பிடப்டவில்லை என்பது இங்கு முக்கியமான விடயம். மேலும் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டுள்ளன. தன்னுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளமை சற்றுச் சிந்திக்க வைக்கிறது. நீண்ட காலமாகவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டும் அதன் முன்னெடுப்புகள் ஏதோ காரணங்களால் கிடப்பில் உள்ளன என்பதனையும் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறானதொரு தடங்கல் நிலைக்கான அக, புறக் காரணிகள் என்ன என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படாத ஒரு புதிராகவே உள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் சிராஸ் மீராசாகிப் அங்கத்துவம் பெற்றபோது இந்த விடயத்தை அமைச்சர் ஹக்கீமிடம் கூறி ஏதாவது செய்திருக்கலாம்தானே? அமைச்சர் ஹக்கீம் குறித்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சராக இல்லை. அதாவுல்லாஹ்வுக்கும் ஹக்கீமுக்கும் பிடிக்காது. ஆகவே இந்த விடயம் நடக்காது என்று கூட கூற முடியாது. ஏனெனில் இந்த அரசின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஹக்கீமும் ஒருவர். இந்த நிலையில் குறித்த விடயத்தை ஜனாதிபதி மட்டத்தில் ஹக்கீம் கொண்டு செல்லும் போது தடைகள் ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பிருக்காது என்றே கூறலாம்.

அல்லது இந்த விடயம் தொடர்பில் சிராஸ் மீராசாகிப் அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவித்தாரா இல்லையா? அவ்வாறு தெரிவித்தும் அமைச்சர் ஹக்கீம் அதனைச் செய்ய மறுத்தாரா என்ற சந்தேகங்களையும் சிராஸ் மீராசாகிப் தீர்த்து வைப்பது நல்லதே.

இவைகளுக்கும் மேலாக, சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை ஒன்று தேவை. அதனை அதாவுல்லாஹ்வினால் மட்டுமே பெற்றுத் தர முடியும் என்று நம்பிக்கை சிராஸ் மீராசாகிபிடம் இருந்திருந்தால் முஸ்லிம் காங்கிரஸில் சேராமல் முன்னரே அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸில் சேர்ந்திருக்கலாம் அல்லவா? அவ்வாறு சேர்ந்திருந்தால் இன்று அவரின் இலட்சியம் நிறைவேறி சாய்ந்தமருதுக்கு எப்போதோ பிரதேச சபை கிடைத்திருக்கவும் கூடும்.


 இதேவேளை, இன்று சாய்ந்தமருது மக்களின் அரசியல் மற்றும் வாக்குப் பலமும் பல கோணத்தில் பிரிந்து போயுள்ளதாகவே கருத முடிகிறது. தங்கள் ஊரான சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கிடைத்து விடும் என்பதற்காக சிராஸுடன் பல நூறு அல்லது சில ஆயிரம் மக்கள் சென்றிருக்கலாம். இவ்வாறானதொரு நிலையில் அந்த ஊர் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். இந்த விடயத்தில் சிராஸ் மீராசாகிப் தனது அரசியல் பலத்தை முழுமையாகப் பிரயோகிக்க வேண்டியுள்ளது.

கல்முனை மாநகர சபை மேயராக இருந்த காலத்தில் அவர் மக்களுக்கு அதிகளவில் சேவை செய்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தையும் நோக்கி அவர் பின்னால் மக்கள் நிற்கலாம். எனவே, இது தொடர்பில்  அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சாய்ந்தமருதவைப் பொறுத்தவரையில் அது முஸ்லிம் காங்கிரஸின் பிரதான கோட்டைகளில் ஒன்று. இன்று இந்தக் கோட்டையில் உள்ள மக்களின் வாக்குகள் கணிசமாகப் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தேர்தல் வரும்போது சுமார் 19,000 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட சாய்ந்தமருதுவின் வாக்குகள் பிரிவதால் ஏற்படும் அபாயத்தையும் மறு கணம் சிந்திக்க வேண்டும்.

கல்முனை தேர்தல் தொகுதியில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரைத் தீர்மானிக்கும் சக்தியாக சாய்ந்தமருது திகழ்கிறது. இவ்வாறான நிலையில் அடி சறுக்கினால் தலைக்குச் சேதம் என்ற நிலைமை சாய்ந்தமருது மக்களின் வாக்குப் பலம் சிதவடையும் போது உருவாகலாம். அதுமட்டுமின்றி கல்முனைத் தொகுதிக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறையலாம் அல்லது இல்லாமலே போய்விடும் வாய்ப்பும் ஏற்படலாம் என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் அமைச்சர் அதாவுல்லாஹ்வை விட சிராஸ் மீராசாகிபின் பாத்திரமே பிரதானமானது.  அவரது இன்றைய இந்த நகர்வானது வெறும் அரசியலாக இருக்கக் கூடாது நம்பி வந்தவர்கள் நட்டாற்றில் விட்ட கதையாகி விடக் கூடாது.

பல மக்கள் வெள்ளி முலாம் பூசப்பட்ட உதவியை தவற விட்டுவிடுகிறார்கள். ஏனென்றால்... அவர்கள் தங்க முலாம் பூசப்பட்ட உதவியை எதிர்பார்த்து இருப்பதால்தான்என்பது மோரி செட்டர் அன்று கூறிய வார்த்தைகள். அவரது இந்த வார்த்தைகள் இன்று சாய்ந்தமருது மக்களுக்கு பொருந்தி விடக் கூடாது என்ற விடயத்தில் சிராஸ் மீராசாகிப் கவனமாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி  முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகவும் இந்த விடயம் மாறிவிடக் கூடாது.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 30-03-2014

No comments:

Post a Comment