ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியலிலும் சின்ன வீடு, பெரிய வீடு என்றதொரு பிரச்சினை எழுவது இன்று சர்வ சாதாரணமான விடயமாகி விட்டது. அதாவது கட்சியை விட்டு மாறுவதும் மீண்டும் அதில் சேருவதும் இலங்கை அரசியலில் அண்மைக்கால பாரம்பரியமாக போய்விட்டது.
கட்சிமாறிச் சென்ற சிலர் மீண்டும் தங்களது முன்னைய கட்சிகே வரும்போது தான் தனது தாய்க்கட்சிக்கே மீண்டும் வந்து விட்டேன் என்று சிலர் தங்களது போக்கை கௌரவமாக வர்ணித்துக் கொள்கின்றனர். தான் சார்ந்த கட்சியைப் பலவீனப்படுத்தும் பொருட்டு இன்னொரு கட்சிக்கு மாறி விட்டு அந்தக் கட்சியினால் தான் பலவீனப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படும்போது மீண்டும் தனது பழைய கட்சிக்கு தாவுவதற்காகக் கட்சியைப் பலப்படுத்தவே தாங்கள் மீண்டும் இணைந்து கொள்வதாக இன்னொரு சாரார் அறிக்கை விடுவர்.”போனால் போகட்டும் போடா” என்ற ஒரு பழைய சினிமாப் பாடலில் இப்படி ஓர் அடி வருகிறது. ”வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும்; அதில் மரணம் என்பது செலவாகும் போனால் போகட்டும் போடா” என்பதே அந்த வரிகள். இதனை இவ்வாறான அரசியல்வாதிகள் கீழ்வருமாறு திருத்திப் பாடினால் பொருத்தமாக இருக்குமோ தெரியாது.
”அரசியல் என்பது வியாபாரம், அதில் தேர்தல் என்பது வரவாகும், பிரிதல் என்பது பிழைப்பாகும் போனால் போகட்டும் போடா.. போனால் போகட்டும் போடா.. என்று பாடலாம் போல்... கண்ணதாசன் உயிருடன் இருந்திருந்தால் தனது பாடலை மாற்றி எழுதியமைக்காக வழக்குப் போடுவார் என்று இவ்வாறான அரசியல்வாதிகள் யோசிக்கவும் தேவையில்லை. ஏனெனில் அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பது அவருக்குத் தெரியும். பிழைத்துப் போகட்டும் என விட்டு விடுவார்.
இவ்வாறான விடயங்கள் இன்று அரசியல் கட்சிக்குள் தாராளமாகவே இடம்பெறுகின்றன. விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருக்கும் சில அரசியல்வாதிகளுக்கு இந்த விடயம் அத்துப்படியாகப் போய்விட்டது. மர்ஹும் அமைச்சர் அஷ்ரஃப் காலத்திலிருந்து இன்றைய தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் காலம் வரை இது தொடர்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் அந்தக் கட்சியைக் கைவிட்டு விட்டுச் செல்வதும் அங்கு அவர்களது நிலைமை புஜ்யயமானவுடன் மீண்டும் சேர்வதும் சகஜமாகிப் போன விடயம். இனிவரும் காலம் தேர்தல் தேர்தல் ஜுரம் என்பதனால் இவ்வாறான சுழியோடல்கள் படு ஜாஸ்திதான்.
இன்னும் ஒரு வருடத்துக்குள் எப்படியும் பொதுத்தேரத்ல் நடைபெறமென்பதனைப் புரிந்து கொண்ட பலரும் இப்போது முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முண்டியடிப்புடன் உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக நின்றால்தான் எம்.பியாக முடியும் என்ற களப்பரீட்சை எப்போதே வெற்றியடைந்த நிலையில் அதனையே இலக்காகக் கொண்டு பலரும் இன்று அந்தக் கட்சியில் இணையத் தொடங்கியுள்ளனர்.
தான் எந்தவொரு பதவியையும் எதிர்பார்த்து மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கட்சியையும் தலைமைத்துவத்தையும் பலப்படுத்த வேண்டும் என்ற சமூகப்பற்றுடனேயே தாய்க் கட்சியில் மீண்டும் இணைந்துள்ளேன். என்று கூறி மீண்டும் சேர்ந்து கொள்ளும் ஒரு கூட்டம்.
தனது தாய்க் கட்சியான முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராகவோ தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராகவோ எதனையும் செய்யவில்லை. கட்சியை பலவீனப்படுத்தவும் இல்லை. கட்சிக்கு எதிராக ஒரு கல்லைக் கூட அசைக்கவும் இல்லை என்று கூறிக் கொண்டு இணையும் இன்னொரு கூட்டம். இவையெல்லாம் நரம்பில்லாத நாக்கினால் வரம்பில்லாமல் பேசி தங்களை உள்நுழைத்துக் கொள்வதற்கான தந்திரங்களே.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி அற்ப, சொற்ப ஆசைக்காக எவ்வாறெல்லாமோ நடந்து கொண்ட பின்னர் இன்று சீச்சீ.... சீச்சீ அந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக் கதையாக (நரித் தந்திரம்) உள்ளே நுழைவோர் தொடர்பில் கட்சியின் தலைமையும் மக்களும் நன்கறிவர். பிறிதொரு கட்சியிலிருந்த போது முஸ்லிம் காங்கிரஸ் மீது ஒரு கல்லையும் வீசவில்லை என்று கூறியவர்கள் அந்தக் கட்சியின்மீது மலையையே உருட்டி விட்ட சம்பவங்கள் எளிதில் மறக்கக் கூடியன அல்ல.
வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்காக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதாகக் கூறியவர்களின் சாயம் இன்று வெளுத்துப் போயுள்ளது.
இதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பலப்படுத்த வேண்டிய தேவை இன்றைய காலத்தின் கட்டாயமே. பிரிந்தவர்கள் அனைவரையும் இணைப்பதும் இணைவதும் அவசியமானதொரு விடயமே. இன்று கட்சி பலவீனமடைந்து காணப்படுவதற்கு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், கட்சியிலிருந்து விலகிச் செல்லல், ஐக்கியம் இன்மை, பதவி ஆசை போன்றனவும் முக்கியமானவை. இந்தப் பலவீனங்கள் இன்று தேசிய அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓரம் கட்டப்பட்டு வருவதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளன.
எனவே, இன்றைய நிலையில் இவை அனைத்தையும் களைந்து கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் அனைவரும் செயற்படுவது அவசியமாகிறது. அதனையே கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் கூட விரும்புவார் என எதிர்பார்க்கலாம். அவரின் இந்த எதிர்பார்ப்பு சரியாக நிறைவேற்றப்பட்டால் அது அவருக்கு அதிக துணிச்சலைக் கொடுக்கும் ஓர் அரசியல் சக்தியாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அரச மட்டத்திலும் சிங்கள அரசியலிலும் ஒரு பேசு பொருளாகவும் ஏசு பொருளாகவும் போயுள்ளது. இந்த நிலைமையானது தொடர்ந்தால் முஸ்லிம் சமூகத்தையே பலவீனப்படுத்தி விடும் என்பது நிச்சயம்.
எனவே, கட்சியில் புதிதாக இணைவோரோ அல்லது மீண்டும் இணைவோரோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையையும் பலப்படுத்தும் நல்ல நோக்கத்துடன் இணைந்து கொள்வதே சிறந்தது. அதனை விடுத்து தங்களது எதிர்கால அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் வியுகத்துடன் இணைந்து செயற்பட எவரேனும் முயற்சிப்பார்களாயின் அது ஒரு துரோகத்தனமான செயலாகவே அமையும். காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்.. காற்றைப் போலப் பறக்கவும் வேண்டுமென்ற நிலையை எவரும் உருவாக்க கூடாது.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 16-03-2014

No comments:
Post a Comment