Saturday, March 8, 2014

வடக்குப் பார்த்த மச்சு வீட்டை விட.. தெற்குப் பார்த்த குச்சு வீடே நல்லது!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் அதேவேளை சிறிலங்காவில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மீது அரசின் தரப்பிலிருந்து எதிரான குரல்கள் எழுந்துள்ளன. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மீது ஜனாதிபதி நொந்து  கொண்டமை தொடர்பில் செய்திகள் வெளிவந்திருந்தன. அரசுடன் இருப்பதாயின் சரியாக இருந்து கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்ற தொனியில் ஹக்கீமைப் பார்த்து ஜனாதிபதி தெரிவித்தார் என செய்திகள் வெளிவந்திருந்தன.


இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன் வெளியே இருந்து அமைச்சர் ஹக்கீமும் சில விடயங்களை ஏற்றுக் கொள்ளும் தோரணையிலும் அதேவேளை, “இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா” என்ற சினிமா பாணி வசனத்திலும் அலட்டிக் கொள்ளாதபடி பொறுமையுடன்  சில விடயங்களைக் கூறியிருந்தார்.

குறித்த  அமைச்சரவைக் கூட்டத்தில்  பிரச்சினை ஒன்று தொடர்பில் ஜனாதிபதியுடன் விவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதன்போது  ஜனாதிபதி அவரது குரலை உயர்த்தி சத்தமாகப் பேசினார் என்றும் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

சில நேரங்களில் ஜனாதிபதி நிதானத்தை இழந்து பேசுவார். ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இவ்வாறான விடயங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கின்றன.எனறும் அவர் கூறியிருந்தார்.

அமைச்சரவையில் உண்மையாக என்ன நடந்தது என்பது ஒரு மூடுமந்திரமாகவே உள்ளது. பரவாயில்லை சித்தன் மனதைச் சிவனும் சிவனின் மனதைச் சித்தனும்தான் அறிவான் என்பதற்கு ஏற்ப இந்த விடயத்தை விடுவோம்.

எது எப்படியிருப்பினும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை ஒன்றினைக் கையளித்தமையே இந்த முரண்பாட்டுக்கு முத்தாய்ப்பு என்று  கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் தொடர்பில் நவநீதம் பிள்ளையிடம் அறிக்கை ஒன்றினைக் கொடுத்தமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இரகசிமயாகச் செயற்படவில்லை. திரிகரண சுக்தியுடன் வெளிப்படையாகவே அது அனைத்தினையும்  செய்திருந்தது. ஆனால்,  இந்த விவகாரத்தை ஊதிப் பெருப்பித்து நாட்டுக்கே இது அச்சுறுத்தல் என்று காட்டும் வகையில் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் ஹெல உறுமயவும் செயற்பட்டன. இதன் காரணமாக இந்த விடயம்  வேறு விதமாகத் திரும்பியது. முஸ்லிம் காங்கிரஸ் நவநீதம் பிள்ளையிடம் அறிக்கை கொடுத்தமை தொடர்பில் இன ரீதியானதும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தலானதும் என்றும் இந்த இரு கட்சிகளால் சித்திரிக்கப்பட்டு சிங்கள ஊடகங்கள் மூலம் பிரபல்யப்படுத்தப்பட்டிருந்தது.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு இஸ்லாமிய, அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்தால் அதன் விளைவுகளை முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் ஏற்க வேண்டுமென்ற அளவுக்குப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு பொய் மூட்டைகள் சந்தைப்படுத்தப்பட்டன.

இதனை விடக் கேவலமானது, இந்தச் சிங்கள் இனவாத அரசியல் கட்சிகளுக்கு ஒத்து ஊதுவது போல் சில முஸ்லிம் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் கருத்துத் தெரிவித்தமையாகும். இது பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள் தள்ளியிருந்தது.

பள்ளிவாசல்கள் உடைக்கப்படவில்லை என்றும் இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் பாதுகாப்புடனே வாழ்கிறார்கள் என்றும்  அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் மனச்சாட்சியற்ற, முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் ”கோள்” சொல்லி வால் பிடித்தமையால்தான் இன்று முஸ்லிம் காங்கிரஸ் மீது அரசுக்கு இந்தளவுக்கு ஆத்திரமேற்பட்டுள்ளது என்றே கூறலாம்.

ஆகவே, முஸ்லிம்களின் முதலாவது துரோகிகள் சிங்களவர்கள் அல்லர் என்றே கூறவேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் கையளித்த அறிக்கையானது, அரசாங்கத்திற்கு விரோதமானதல்ல. அது இந்த நாட்டில் இயங்கி வரும் சிங்கள கடும்போக்கான அமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காட்டவில்லை என்பதனை சுட்டிக்காட்டும் நோக்கிலானதொரு அறிக்கையே ஆகும். இதனை நன்கு தெரிந்து கொண்ட நிலையிலேயே இவர்கள்  அனைவரும் வீடு பற்றி எரியும் போது பிடுங்குவதெல்லாம் இலாபம் என்ற நிலையில் செயற்பட்டு இன்று முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து நடுத்தெருவில் நிறுத்தியுள்ளனர். இஸ்லாமிய மத அடிப்படையில் பார்க்கும் போது கூட இவர்கள் செய்பவை செய்து கொண்டிருப்பவை எவ்வளவு பாவமான காரியங்கள் என்பதனை புரிந்து கொள்ளாமலா உள்ளனர்?

முஸ்லிம் காங்கிரஸினால் கையளிக்கப்பட்ட அறிக்கயைானது அரசுக்கு விரோதமான ஒன்றல்ல என்பதனை அமைச்சர்  ராஜித சேனாரத்ன கூட வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் சார்பில் அவர்களுக்குகாகக் குரல் கொடுத்து தட்டிக் கேட்கும் அனைத்து உரிமைகளையும் தகுதிகளையும் கொண்ட ஓர் அங்கீகாரம் பெற்ற கட்சியே முஸ்லிம் காங்கிரஸ் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் மாத்திரம் கையளிக்கவில்லை. அவர் மிகவும் துஷ்டத்தனமாக அந்த அறிக்கையை குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கும்  வழங்கியுள்ளார். இது மிகவும் பாரதூரமான செயல். குவைத் மற்றும் சவூதி ஆகிய நாடுகளுக்கு ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இம்முறை வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது. ஹக்கீமின் அறிக்கையால் குறித்த நாடுகள் இலங்கைக்கு எதிராகச் செயற்படலாம் என்று பிறிதொரு கட்சியின் முஸ்லிம் முக்கியஸ்தர் கூறுமளவுக்கு போயிருக்கிறது இந்த விடயம். குவைத் மற்றும் சவூதி அரேபியா நாடுகளிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கைகளைக் கையளித்தது என்பது முழுப் புசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கு ஒரு செயலாகும்.

இது ஒரு புறமிருக்க, முஸ்லிம்களுக்கு எதிராக இந்த நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அநியாயங்கள் அட்டூழியங்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டு வந்து கூட ஒன்றுமே நடக்காத நிலைமையே காணப்படுகிறது. இதன் காரணமாகவே இன்று முஸ்லிம்கள் மீதான விரும்பத் தகாத சம்பவங்கள் தொடர்ந்தும்  காட்டாறாகப் போயுள்ளன.

அந்த வகையில் முஸ்லிம்களின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது முஸ்லிம்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் உள்ளது. ஆகவே, அந்த அடிப்படையில் அந்தக் கட்சி சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இதில் என்ன தப்பு? பொறுப்புமிக்கதொரு கட்சி தனது இனத்துக்காகச் செயற்படுவதில் எவ்வாறு அநீதி காண முடியும்? அநியாயம் என்று கூற முடியும்? நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகம் என்று  எவ்வாறு சொல்ல முடியும்?

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்றால். அரசு கொடுக்கும் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமே தவிர தமது சமூகம் சார்ந்த எந்த நல்ல விடயத்துக்காகவும் குரல் கொடுக்கக் கூடாது என இந்த அரசாங்கம் எதிர்பார்க்கிறதா?  இது நல்ல கதைதான்.. சிறுபான்மைக் கட்சி ஒன்று அரசுடன் சேர்ந்தாலும் அல்லது அரசுதான அவர்களைச் சேர்த்துக் கொண்டாலும் மொத்த லாபமும் அரசுக்குத்தான் வேண்டுமென்பது எந்த வகையில் நியாயமானது. “எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்?, உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன எங்களுக்குத் தருவாய்?” என்பது போன்றல்லவா இந்தக் கதை உள்ளது.

இந்த நாட்டில் வாழக்கூடிய சிறுபான்மை  மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசினாலேயே தீர்வு வழங்க முடியாது விட்டால் அவர்கள் இது தொடர்பில் பிறரிடம் கூறுவது கூட தேசத் துரோகமா?

அவ்வாறாயின் இன்றைய அரசில் ஒட்டியிருக்கக் கூடிய சில சிங்கள உதிரிக்  கட்சிகள் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றன. தனது சிங்கள இனத்துக்காகக் குரல் கொடுக்கின்றன. இவைகள்   எந்த வகையில் நாட்டுக்கும் அரசுக்குமான விசுவாசமான புனித பணிகளாகும்? ஆனால், ஒரு சிறுபான்மை இனக் கட்சி மட்டும் தனது இனத்துக்காக எதனையோ சிறிதாகச்  செய்ய முயற்சித்தால் மட்டும் அது ராஜ துரோகமாகிறது.

சிறுபான்மை இனக் கட்சிகளை தங்களுடன் இணைத்துக் கொண்டால்  அவர்கள் சார்ந்த சமூகத்தை எப்படியும் எவ்வாறும் நடத்தலாம் அவர்கள் தொடர்பில் கேள்வி கேட்கக் கூடாது என்று நினைப்பது எந்த வகையில் ஒரு ஜனநாயக நாட்டுக்கு பொருத்தமான பண்பாக அமையும்? உங்கள் சட்டியில் என்ன கருகுதென பார்க்காமல் அடுத்தவன் சட்டியில் என்ன அவியுதென பார்ப்பது போன்ற கதைதான் இது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இந்த விடயங்களை ஒரு படிப்பினையாக அமையட்டும். தாங்கள் அரசுடன் இணைந்திருந்தாலும் தங்களால் எதுவுமே செய்ய முடியாது. செய்யக் கூடாது  என்பதனை இன்று  இந்த அரசு முஸ்லிம் காங்கிரஸுக்கு உணர்த்தியுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சியில் அமர்ந்தாலும் ஆளுந்தரப்பில் இருந்தாலும் ஒன்றுதான் என்பது இப்போது உணரப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸே இனி முடிவை எடுக்க வேண்டும்.

மேலும், முஸ்லிம் மக்களுக்கும் இன்று  ஓர்  உண்மை புரிந்துள்ளது. தங்களது கட்சி அரசுடன் இணைந்திருந்தாலும் அதனால் எதனையும் செய்ய முடியாத நிலை என்பதனையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆகவே, இவ்வாறானதொரு நிலையில் இன்னும் அரசுடன் ஒட்டியிருப்பதானது தனிப்பட்ட நலன்களுக்கு மட்டுமே என்று மக்கள் தீர்மானித்தால் அந்தத் தீர்மானத்தின் மீது முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ் சொல்லவும் முடியாது. “வடக்குப் பார்த்த மச்சு வீட்டை விட தெற்குப் பார்த்த குச்சு வீடே நல்லது” என்ற பழமொழியிலுள்ள ஆழ்ந்த அர்த்தத்தை முஸ்லிம் காங்கிரஸ் புரிந்து கொள்ளும் என நம்பலாம்.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 09-03-2014

No comments:

Post a Comment