ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கொழும்பில் கடந்த வாரம்
இடம்பெற்ற வீரகேசரி வாரவெளியீட்டின் ஆசிரியர் ஆர். பிரபாகனின் தரிசனம் என்ற நூலின்
வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட உரைகள் இன்று சகல தரப்பினரினதும் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஒரு புத்தக வெளியீடுதானே என்று வழமையான நினைப்புடன் அங்கு சென்றவர்களில்
பெரும்பாலானோர் ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் உணர்ச்சி வசப்பட்டவர்களாகக்
காணப்பட்டுள்ளனர். அங்கு இருவரால் ஆற்றப்பட்ட தங்களது இனம், சமூகம், தற்கால அரசியல் நிலைமைகள் சார்ந்த உரைகள் இன்று
பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
ஒரு புத்தக வெளியீட்டு
விழாவில் இந்த நாட்டின் இருபெரும் சிறுபான்மை அரசியல் சக்திகள் தெரிவித்த
கருத்துகள் இன்று எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. இந்த இரு அரசியல் சக்திகளும்
இணையும் போது தமிழ் பேசும் சமூகத்தில் ஏற்படக் கூடிய ஐக்கியம், அதன் தேவைப்பாடு,
முக்கியத்துவம் குறித்தும் மனம் விட்டுப் பேசக் கூடியதான ஒரு வாய்ப்பை அந்த நூல்
வெளியீட்டு வைபவம் ஏற்படுத்தியது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகவுள்ளது.
முன்னாள் நீதியரசரும்
வடமாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன், நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ்
தலைவருமான ரவுப் ஹக்கீம் ஆகியோர் அங்கு ஆற்றிய உரைகள் தொடர்பில் தமிழ் பேசும் சமூகங்களுக்கு
மத்தியில் ஒரு நம்பிக்கை தோன்றியுள்ள அதேவேளை, தென்னிலங்கை சிங்கள சக்திகளிடம்
சினத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
அங்கு உரையாற்றிய
அமைச்சர் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் காலம் கனிந்து வருகிறது
எனத் தெரிவித்திருந்தார். இந்த வார்த்தைகள் நிச்சயமாக அவரது உதடுகளின் வெறும்
உச்சரிப்பும் அல்ல.. வெற்று மேடைப் பேச்சும் அல்ல.. மாறாக, மனதின் அடி ஆழத்திலிருந்து
வெளிவந்த யதார்த்தமான ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே அவை அமைந்துள்ளன. ஜனநாயக ரீதியிலான
போராட்டங்களின் மூலம் சகல இனங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சமத்துவமானதும்
சாத்தியமானதுமான தீர்வுகளை நோக்கி எம்மைப் புடம் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஓர்
எதிர்வு கூறலை அவர் அங்கு தெரிவித்திருந்தார். வஞ்சித்து ஏமாற்றப்பட்ட ஒரு
மனிதனின் மனதிலிருந்தே இவ்வாறான வார்த்தைகளே ஏக்கத்துடன் வெளிவரும். இதுவே ஒரு
பட்டறிவுமாகும்.
சரியான விடயத்தை சரியான
நேரத்திலேயே செய்ய வேண்டும். பிழையான நேரத்தில் செய்யும் சரியான விடயமும்
பிழையாகிப் போய் விடும் என்ற மர்ஹும் அஷ்ர.ஃபின் கூற்றினை அமைச்சர் ஹக்கீம் இங்கு
நினைவுபடுத்திய போதே அதன் இன்றைய உண்மை அர்த்தமும் புலப்பட்டுள்ளது.
ஹக்கீமின் உரைக்குப்
பதிலளித்திருந்த வடமாகாண முதல்வரும் முன்னாள் நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன், எமது இரு கட்சிகளும் சேரப் போகும் காலம் வெகுதூரத்தில்
இல்லை. விரைவில் அந்த நிலைமை ஏற்படும் சாத்தியம் தென்படுகிறது எனத்
தெரிவித்திருந்தார். தமிழ் பேசும் இரு சமூங்களின் எதிர்கால ஐக்கியம் தொடர்பில்
நம்பிக்கை ஊட்டும் பதிலாகவே இது அமைந்திருந்தது. இதுதான் அந்த நூல் வெளியீட்டு
விழா பெற்றுக் கொடுத்துள்ள அரசியல் ரீதியிலான வெற்றி.
இவர்கள் இருவரும்
தெரிவித்த கருத்துக்கள் இன்று தென்னிலங்கை இனவாத சிங்கள சக்திகள் மத்தியில் பலத்த
ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனாலும், குப்புற வீழ்ந்தாலும் மீசையில் மண்படாத நிலையில்,
முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து பிரிந்து சென்றாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படப்
போவதில்லை. அதே போன்று அந்தக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தாலும் எந்தச் சேதாரமும் எமக்கு இல்லை என்றும் அந்தச்
சிங்கள சக்திகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
இனி விடயத்துக்கு வருவோம்.
”பட்டால்தானே தெரிகின்றது பாசம் என்பது என்னவென்று.. சுட்டால்தானே
தெரிகின்றது.. தொட்டால் சுடுவது நெருப்பென்று” என்பது பழைய
சினிமா பாடல் ஒன்றின் சில வரிகள். இங்கே சுட்டால்தானே தெரிகிறது தொட்டால் சுடுவது
நெருப்பென்ற வரிகள் அண்மைய இலங்கையின் அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு
மிகப் பொருத்தமானவையாகவே உள்ளன.
மனித உரிமைகள் ஆணையாளர்
நாயகத்திடம் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பிலும் அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்
குறித்தும் ஓர் அறிக்கை சமரப்பித்தமைக்காக இன்று அந்தக் கட்சியின் தலைமையும்
கட்சியும் தென்னிலங்கை சிங்கள அரசியல் களத்தில் மிக மோசமாக விமர்சிக்கப்படும் ஒரு
நிலை உருவாகியுள்ளது. அதனை ஓரங்கட்டும் சதிகளும் திரைமறைவில் இடம்பெற்று
வருகின்றன.
அந்தக் கட்சியை அரசாங்கத்திலிருந்து
வெளியேற்ற வேண்டுமென்ற விடயத்தில் கோழி திருடிய கள்வர்களும் கூட உலாவிக் கொணஎருக்கின்றனர்.
இந்த விடயத்தில் சில முஸ்லிம் அரசியல் சக்திகளும் இணைந்து செயற்படுவது வேதனையானது.
அமைச்சர் ஹக்கீமோ அல்லது அந்தக் கட்சியோ இந்த விடயத்தில் தங்களது சுய நலத்தைக்
கருத்தில் கொண்டு செயற்படவில்லை. அவர்கள் சார்ந்த இனத்துக்காக இவ்வாறு
செய்தமையால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை சில முஸ்லிம் அரசியல் சக்திகள்
நன்கு உணர்ந்து கொண்டிருந்தும் கூட ஹக்கீம் என்ற தனி மனிதர், முஸ்லிம் காங்கிரஸ்
என்ற கட்சி ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு செயற்படுவது மிக வேதனையானது.
விருப்பு, வெறுப்புக்கு அப்பால் பாராட்டப்பட வேண்டியதே இந்த விடயம். தனது சமூகம்
சார்ந்த விடயமாக இதனை இவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஜீரணிக்க முடியாத ஒன்றே.
இந்த விடயத்தில்
கட்சிக்கு வெளியே உள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமே சிங்கள சக்திகளுடன்
இணைந்து இவ்வாறெல்லாம் செயற்படுகிறார்கள் என்று மட்டும் நினைத்தும் இருந்து
விடமுடியாது. கட்சிக்கு உள்ளேயும் காட்டிக் கொடுக்கும் ஒரு கூட்டம் உள்ளது. இதனை அமைச்சர்
ஹக்கீம் நன்றாக அறிந்துள்ளார்.
கடந்த காலத்தில் இந்தக்
கட்சியும் கட்சியின் தலைமையும் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கான நதி மூலமாக
செயற்பட்டவர்கள் கட்சியின் உள்ளிருந்த சிலர் என்ற விடயத்தையும் மறந்து விட
முடியாது. கட்சியின் இன்றைய பலவீனத்துக்கு அவ்வாறானவர்களே காரணமாக இருந்தனர்.
இப்படிப்பட்ட ஒரு சிலரே இன்றைய நிலைக்கும் காரணவாதிகளாகவும் இருக்கலாம்.
ஜெனீவா மனித உரிமைகள்
பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணைகளுக்கு எதிராக அண்மையில்
கல்முனையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியிலும் முஸ்லிம் காங்கிரஸின் சில
முக்கியஸ்தர்களே செயற்பட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த விடயத்தை கட்சியின்
தலைமையும் நன்றியும்.
கடந்த காலங்களில் தனக்கு
எதிராக கட்சிக்குள் மேற்கொள்ளப்பட்ட துரோகத் தனங்களை தன்னிடம் கூறி அவற்றிலிருந்து
தன்னைப் பாதுகாக்கும் நிலைமையை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிலர் ஏற்படுத்தயிருந்தனர்.
அவர்கள் தனக்கு மிகவும் விசுவாசமானவர்கள். கட்சி பற்றுள்ளவர்கள் என்றெல்லாம்
அமைச்சர் ஹக்கீமினால் பகிரங்க மேடையில் போற்றி புகழப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கல்முனையில் இடம்பெற்ற குறித்த
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தனது கட்சியைச் சேர்ந்தவர்களும் தொடர்புடைய விடயத்தை
முன்னராக அறிந்திராமல் போனமை துரதிர்ஷ்டமானது.
அற்ப சொற்ப ஆசைகளுக்காக,
சலுகைகளுக்காக இன்று கட்சியையும் தலைமைத்துவத்தையும் காட்டிப் கொடுப்பதற்காகச் சிலர் மறைமுகமாகச் செயற்படுவதானது வெண்கலப் பூட்டை
உடைத்து விளக்குமாற்றினை திருடிய கதையாகத்தான் அமையும்.
இறுதியாக, இன்று ஜெனீவா
மனித உரிமைகள் பேரவையால் தமிழ் சமூகத்துக்கு நல்லன ஏதும் ஏற்படலாமென எதிர்வு கூறப்பட்டுக்
கொண்டிருக்கும் நிலைமையில் அதே ஜெனீவா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு இந்நாட்டு
முஸ்லிம்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றினைக் கையளித்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளால்
இந்த நாட்டின் இரு பெரும் சிறுபான்மை இன அரசியல்
தமிழ் பேசும் சக்திகள் ஒனறிணையக் கூடிய காலமும் கனிந்து வருகிறது. இது ஓர்
ஆரோக்கியமான விடயம். எனவே இந்த விடயத்தில் எவரும் பானையை உடைத்து திரண்டு வரும்
எண்ணெய்யை வீணாக்காமல் செயற்படுவதே அவசியம்.
தொடங்கிய இடத்தை
தெரிந்துகொள்.. அப்போதுதான் முடிக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம். என்ற
தத்துவத்தை எவரும் மறந்து விடக் கூடாது.
வீரகேசரி வாரவெளியீடு
23-03-2014

No comments:
Post a Comment