Monday, April 7, 2014

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் தேர்தல் வெற்றிகள்... வடக்கு, கிழக்கில் போன்று மேற்கிலும் சாயம் வெளுக்குமா?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மேல்மாகாணத்தில் போட்டியிட்ட இரு முஸ்லிம் கட்சிகளும் தாங்கள் தோல்வியடையவில்லை என்று அவர்களே சொல்லக் கூடியபடி வெற்றி பெற்றுள்ளன. அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைக் கைப்பற்றி அதிர்ச்சி வெற்றியைப் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் இதற்கு முன்னரும் பல தடவைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு ஓரளவு ஆசனங்களை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் வடக்கு கிழக்குக்கு வெளியே இடம்பெறும் இவ்வாறான தேர்தல்களில் ஆசன அதிகரிப்பில் தொடர்ந்தும் தொய்வு நிலையே காணப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தல்களின்போது அந்தக் கட்சி இரண்டு ஆசனங்களை எதிர்பார்க்கவில்லை. அதனை விட அதிகமாகவே அந்தக் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.


மேல்மாகாணத்தில் பெரும்பாலான சிறுபான்மையின மக்கள் அரசின்மீது அதிருப்தி கொண்டவர்களாகவும் காணப்பட்ட நிலையில் அதனை அவர்கள் தங்களது வாக்குகள் மூலம் அரசுக்கு உணர்த்தியுள்ளனர். அதற்காக அரசின் மீது அதிருப்தி கொண்டுள்ள அந்த மக்கள் (விசேடமாக கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் ) முஸ்லிம் காங்கிரஸையும் ஆதரிக்கவில்லை என்ற விடயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். சிலவேளையில் கிராமப் புறத்தில் சொல்லுவார்கள் இரண்டும்  ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான என்று.. அது போன்று கொழும்பு முஸ்லிம் அதிருப்தி வாக்காளர்கள் இதனையும் நினைத்துக் கொண்டார்களோ தெரியாது.

ஆனாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கான வாக்களிப்பு வீதம் 2009 ஐ விடவும் இம்முறை அதிகரித்தே காணப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் 12,396 வாக்குகளையும் கமபஹா மாவட்டத்தில் 8014 வாக்குகளையும் கொழும்பு மாவட்டத்தில் 18,978 வாக்குகளுமாக மொத்தம் 39,388 வாக்குகளுடன் மேல்மாகாண சபையில் இரண்டு ஆசனங்களை அது பெற்றிருந்தது.

ஆனால், நடந்த முடிந்த 2014 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 20,163 கம்பஹாவில் 17, 296, களுத்துறையில் 12056 வாக்குகளுமாக  54,755 ஐ பெற்றிருந்தும் மீண்டும் இரு ஆசனங்களையே பெற முடிந்துள்ளது. இதுதான் இப்போது நமது நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் முறையின் மாயமந்திரம். 2009 இல் பெற்றதனை விட 15,367 வாக்குகளை அதிகம் பெற்றும் இரண்டு ஆசனங்களுக்கு மேல் பெறமுடியாத நிலைமை. இப்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையில்  உள்ள மாவட்ட மட்ட மெஜிக் இதுதான். இவ்வாறனதொரு நிலைமை காணரமாகவே மேல்மாகாணத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் இம்முறை குறையவும் காரணமாகியது. இந்த விடயத்தில் தமிழ் பேசும் மக்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டியுள்ளது.  அத்துடன் சந்தையில்.. ஆற்று மீன் கிலோ ஐம்பது ரூபா லாபாய்.. லாபாய்என்பது போல் சிறுபான்மை அரசியல் கட்சிகளும் சுயேட்சைகளும் அதிகளவில்  களத்தில் இறங்குவதாலும் இந்த ஆபத்தை விலை கொடுத்தே நாம் வாங்க வேண்டும்

முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை அது அரசுடன் ஆட்சி நடத்தும் ஒரு கட்சியாக இருப்பது, மற்றும் கடந்த காலத்தில் இந்தக் கட்சிக்கு வாக்குப் போட்டு கையைச்  சுட்டுக் கொண்டமை போன்ற காரணங்களாலும் இந்தக் கட்சியின் செல்வாக்கு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே பெரிதாக இல்லாமல்  போயுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி வெற்றால் அரசுடன் சேர்ந்து விடுவார்களோ என்ற நியாயமான நம்பிக்கையும் பெரும்பாலான முஸ்லிம் மக்களிடத்தில் காணப்பட்டமையும் வாக்கு வீதம் பெரிதாக அதிகரிக்காமைக்கு காணரமாகும்.

மேலும் காங்கிரஸின் மேல்மாகாண பிரசாரங்கள் என்பது பள்ளிவாசல்கள் பற்றியதாகவோ, முஸ்லிம்கள் நிலைமைகள் தொடர்பிலோ அமைந்திருக்கவில்லை. நா அடக்கத்தை அந்தக் கட்சி பேணியிருந்தது. மக்களை உணர்சிப்படுத்தும் வசனங்களை அவர்கள்  பேசவில்லை. இதற்குக்  காரணம் மேல் மாகாணத்தில் அவர்களால் இவ்வாறெல்லாம் பேச முடியாத நிலைமை.

இதேவேளை,மேல்மாணத்தில் இந்தக் கட்சியினால் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்களில்
சிலர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். விமர்சிக்கப்பட்டவர்கள். அவ்வாறானவர்களை தேர்தலில் நிறுத்தியதன் மூலம் வாக்கு வங்கியினை மேலும் அதிகரிக்க முடியாத நிலைமையும் இந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களத்தில் இறங்கியமையும் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஓரளவு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம். இந்த இரு கட்சிகளும் மேல்மாகாண சபைத் தேர்தலில் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு ஒரு கட்சியை தேர்தல்  களத்தில் இறக்கியிருந்தால் ஆக்க கூடியது  நான்கு ஆசனங்களையேனும் பெற்றிருக்கலாம்.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பொறுத்தவரை அந்தக் கட்சி மேல்மாகாணத்தில் முதல் தடவையாகவே நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைக் கைப்பறியது. இந்த வெற்றி அந்தக் கட்சிக்கு ஒரு சாதனையாகவே உள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரை அகில இலங்கை மக்கள் கட்சி என மாற்றி அனைத்து இன மக்களையும் வேடபாளர்களாக நிறுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் கொழும்பு மாவட்டத்தில் கிடைத்த வாக்குகளைக்  கொண்டே  ஓர் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கட்சியின் வேட்புமனு களுத்துறை மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டமை, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடாமை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மட்டுமே அந்தக் கட்சி போட்டியிட்டு ஓர் ஆசனத்தை தம்வசமாக்கியது. சிலவேளைகளில் களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் அந்தக் கட்சி போட்டியிட்டிருருந்தால் மேலுமொரு ஆசனம் கிடைத்திருக்கலாம். அதேவேளை அது முஸ்லிம் காங்கிரஸுக்கு அது பாதிப்பாகவும் அமைந்திருக்கலாம்.

இருப்பினும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து மேல்மாகாண சபைக்கு ஒரு  வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அந்தக் கட்சி தன்னை தேசிய அரசியலில் இணைத்துக் கொண்டு விட்டது. அதேவேளை ஒரு விடயத்தை மறந்து விடவும் கூடாது

அதாவது ஒரு கதை இருக்கிறது.  புதிதாக மருத்துவராக நியமனம் செய்யப்பட்ட  ஒரு டாக்டர் நோயாளி ஒருவரைச் சத்திர சிகிச்சை செய்ய ஆயத்தமான போனது, அந்த நோயாளி அச்சத்துடன் காணப்பட்டுள்ளார். அந்தப் புதிய டாக்டர் குறித்த நோயாளிளைப் பார்த்து ஏன் சோர்வடைந்து  காணப்படுகிறீர்கள் எனக்  கேட்ட போது.. இல்லை டாக்டர்  நான் இன்றுதான் முதன்  முதலாக  சத்திர சிகிச்சை ஒன்றுக்கு முகங்கொடுக்கிறேன் என்றாராம். அப்போது டாக்டர் நோயாளியைப் பார்த்து பயப்பட வேண்டாம் .... எனக்கும் இதுதான் முதலாவது சத்திர சிகிச்சை என்றாராம்.  டாக்டரின் பதிலைக் கேட்ட நோயாளி  சத்திர சிகிச்சை க்கு  உள்ளாவதற்கு முன்னரே இறந்து  போனார் என ஒரு கதை உள்ளது. இங்கு நான் நோயாளியாக குறிப்பிடுவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஆதரவளித்த மக்களே.

அகில இலங்கை மகக்ள் காங்கிரஸ் கொழும்பு மாவட்டத்துக்குப் புதிய கட்சி அதேபோன்று  அந்தக் கட்சிக்கு இந்த மாவட்டத்தில் புதிதாகவே மக்களும் வாக்களித்துளள்னர். எனவே அவர்களும் புதிதானவர்கள்.

அந்த மக்கள் கொழும்பு மாவட்டத்தில் வாழ்கிறார்கள். இவ்வாறானதொரு நிலையில் அவர்களை  சங்கடப்படுத்தும் வகையில் கட்சி அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை தவிர்த்துக் கொள்ளல் அவசியம். கட்சியினால் அந்த மகக்ளுக்கு சங்கடங்கள் ஏற்படக் கூடாது.

இதேவேளை, இந்த இரு கட்சிகளும் மேல்மாகாண சபையில் ஆளுந்தரப்பின் பிரேரணைகள் தொடர்பில்  மேற்கொள்ளும்  முடிவுகளைக் கொண்டே அவற்றின் சாயம்  மேற்கிலும் வெளுக்குமா என்பதனைப் புரிந்து கொளள் முடியும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 06-04-2014

No comments:

Post a Comment