Sunday, April 27, 2014

வடக்கில் புலி வேட்டை! தெற்கில் தேரர் வேட்டை!!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஒரே காலப் பகுதியில் இரு விடயங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. வடக்கில் புலி வேட்டை, தெற்கில் தேரர் வேட்டை,  அங்கு புலிகள் மீண்டும் உயிர் பெறுவதாக அரசு கூறிக் கொண்டு சட்ட ரீதியாக தனது தேடுதல்களையும் கைதுகளையும் துரிதப்படுத்திக் கொணடிருக்கும் அதேவேளை, தெற்கில் முஸ்லிம் மக்களில் அடிப்படைவாதிகள் தோற்றம் பெற்றுள்ளதாகவும் சிலர் தேரர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாகச் செயற்படுவதாகவும் கூறிக் கொண்டு பொதுபல சேனா உட்படலான சில அமைப்புகள் சட்டத்துக்கு முரணான வகையில் அமைச்சு ஒன்றுக்குள் அத்து மீறி நுழைந்து தேடுதல் நடத்தும் அளவுக்கு விடயங்கள் இடம்பெறுகின்றன. நாடு ஒன்று.  ஆனால்,  நடவடிக்கைகள் இரண்டான ஒரு கடை கெட்ட நிலைமைக்கு இன்று அனைத்தும் சென்றுள்ளன.
 
ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வுகள் ஆரம்பமாகி முடிந்த நிலையிலும் வடக்கில் புலிகளைத் தேடும் வேட்டையை அரசாங்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புலிகள் மீள உயிர்பெறும் நிலைமை உருவாவது தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தேடுதலும் கைதுகளும் இடம்பெறுவதாக அரசு தரப்பு நியாயம் கூறியுள்ளது.

இருப்பினும் இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் விசாரணைக்காகத்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அண்மைய காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள்  காணாமல் ஆக்கப்படவும் இல்லை. கைது செய்யப்பட்ட எவரையும் தாம் கைது செய்யவில்லை என்று கூறி அரச தரப்பு கைவிரிக்கவும் இல்லை. எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் அவர்கள் விபரம், விசாரணையின் பின்னர் விடுதலையானோர் போன்ற விபரங்கள் அனைத்தினையும் பொலிஸார் வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றனர். இந்த விடயத்தில் அனைத்தும் ஒளிவு, மறைவின்றி வெளிச்சத்தில் இடம்பெறுவது நிம்மதியைத் தருகிறது.

இது இவ்வாறிருக்க, வடக்கில் குற்றச் செயல்களும் இடம்பெறாமலில்லை, யாழ். பொலிஸாரின் வாராந்த ஊடகவியலாளர் மகாநாட்டின் போது ஒரு மாதத்தில் வடக்கில் இடம்பெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பான பட்டியலே அங்கு  வாசிக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் பல நூறு குற்றச் செயல்கள் அங்கு இடம்பெறுவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குற்றச் செயல்கள் எங்கும் நடந்தாலும் எந்தச் சமூகத்தில் நடந்தாலும் சரி அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டத்தைப் பாதுகாக்கும் தரப்பினர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம்.

ஆனால், அவ்வாறான  சூழ்நிலைகளின், அதாவது குற்றச் செயல் அல்லது செயல்களுடன் தொடர்புபட்ட ஒருவரையோ பலரையோ வடமாகாணத்தில் பொலிஸாரோ இராணுவத்தினரோ கைது செய்யும் போது இன்னொரு தரப்பார் இதனையே சந்தர்ப்பமாகப்படுத்தி தவறான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதாவது, கைது செய்யப்பட்ட நபர் அல்லது நபர்களைப் புலிகளாகப் பிரசாரப்படுத்த முயல்வது மிகப் பிழையானதாகும். இது சர்வதேச ரீதியான பிரசாரத்துக்கான ஓர் உத்தியாகச் சிலாரால் கையாளப்பட்டாலும் எதிர்காலத்தில் வேறு விளைவுகளை  இது ஏற்படுத்தும்.

இனி தெற்கின் நிலைவரத்துக்கு வருவோம், பொதுபல  சேனா உட்படலான சிங்கள பேரினவாத அமைப்புகளின் கடந்த கால நடவடிக்கைகளை விட அண்மைக்கால நடவடிக்கைகள் மிக..மிக முன்னேற்றமடைந்துள்ளன.

இப்போது அவர்கள் ஒரு சம்பவம் நடைபெறும் அல்லது நடைபெறவுள்ள இடத்துக்கே சென்று நிலைமைகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளனர்.  பத்திரிகையாளர் மாநாட்டைக் குழப்பிய சம்பவத்துடன் ஆரம்பித்த அவர்களது செயற்பாடுகள் இன்று இலங்கை அரசாங்கத்தின் அமைச்சு ஒன்றுக்குள் நுழைந்து தேடுதல் நடத்தும் அளவுக்கு விரிவடைந்துள்ளமையானது நாளை முஸ்லிம்களுக்கு என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வை இன்றே தோற்றுவிக்கும நிலைமகளை உருவாக்கியுள்ளது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அமைச்சு   அலுவலகத்திற்குள் கடந்த புதன்கிழமை அத்துமீறி நுழைந்த பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த தேரர்கள் சிலர்,  மஹியங்கனை வட்டரக்க விஜித்த தேரர் அங்கு இருப்பதாகவும் அவரை அழைத்துச் செல்லவே தாங்கள் வந்ததாகவும் கூறி சோதனைகளை நடத்தியுள்ளனர். சுமார்  மூன்று மணித்தியாலங்கள் அறை அறையாகச் சோதனை செய்துள்ளதுடன்  இடையுறுகளையும் ஏற்படுத்திச் சென்றுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பொதுபல சேனாவினர் தர்ம யுத்தம் என்று பெயரிட்டுள்ளதுடன் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி, மூன்று மணித்தியாலங்கள் ஒவ்வொரு அறையாக  தேடுதல் நடத்தியும் அதில் திருப்தியடையாத ஒரு பெளத்த தேரரால் அங்கு வெளியிடப்பட்டிருந்த கருத்து ஆச்சரியத்தை அளித்தது.

மஹியங்கனையிலிருந்து வந்த  வட்டரக்க விஜித்த தேரர்,  அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அமைச்சுக்கு வந்துள்ளார். அவர் இங்குதான் மறைந்துள்ளார். ஆனால், எங்களுக்கு அமைச்சரின் அலுவலகத்திலுள்ள ஓர் அறையை மட்டும் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. அத்துடன்  அமைச்சின் சீ.சீ. ரீ கமராவை கண்காணிப்பதற்கும் எங்களுக்கு அனுமதி தரவில்லை என்று தனது மன ஆதங்கத்தை அவர் வெளியிட்டிருந்தார். இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு எங்கு போயுள்ளது, அவை யார், யார் கைகளில் உள்ளன என்பதற்கு அந்த தேரரின் மன ஆதங்கமே ஒரு சான்றாகிறது,

அமைச்சர் அஷ்ரஃப் காலம் முதல் முஸ்லிம்களோடு  வட்டரக்க விஜித்த தேரர்  இருந்து கொண்டு பௌத்த மதத்துக்கு  இழுக்கு ஏற்படுத்தி  வருகின்றார். தற்போது அவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனோடு சேர்ந்து கொண்டு முஹம்மத் வட்டரக்க தேராகஇருக்கின்றார். இவரை இன்று கண்டுபிடித்து அவரது மஞ்சள் சீலையைக் கழற்ற வேண்டும் அல்லது அவரை ஒரு நல்ல பௌத்த தேரராக நாங்கள் மாற்ற  வேண்டும்.  என்பதற்காகவே அவரைப் பிடித்துக் கொண்டு போக இங்கு வந்தோம். இந்தத் தேரர் சில முஸ்லிம்களின் பணத்திற்காக பௌத்தர்களை காட்டிக் கொடுக்கின்றார்' எனவும் அந்த சுமனதம்ம தேரர் தெரிவித்தார்.

இதன் மூலம் ஒரு இனத்தவர் இன்னொரு இனத்தின் மீது அன்பு, ஆதரவு காட்டக் கூடாது நியாயத்தின்பால் நடந்து கொள்ளக் கூடாது  என்ற விடயங்களை அந்த தேரர் வெளிப்படுத்தியுள்ளார். ஒருவரின் தனி மனித சுதந்திரம், அவரது ஜனநாயக உரிமைகள் எந்தளவுக்கு ஒரு குழுவினால் நசுக்கப்பட்டு, கூண்டில் அடைக்கப்படுகிறது என்பதற்கு வேறு சான்றுக்ள தேவையில்லை.

ஓர் அரசாங்க அமைச்சுக்குள்ளேயே நுழைந்து இவ்வாறு நடந்து கொண்டமையானது எதிர்காலத்தில் அவர்கள்  பிற இனத்தவர்களின் தனியார் வீடுகள், நிறுவனங்கள்  போன்றனவற்றுக்குள் உள்ளும் நுழைந்து தேடுதல் நடத்தவும் பிடித்துக் கொண்டு செல்லவும் கூடிய துணிச்சலைக் கொடுத்துள்ளது.

ஆனால், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வது பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டுக்கு சிறந்த விடயமல்ல. இது இன்னொரு பிரச்சினைக்கே வழிவகுக்கும். அதுவும் வலிந்து இழுத்துச் சண்டைக்குச் சென்றதாக அமைந்து விடும்.
கருத்து மோதல்கள், முரண்பாடுகள் காணப்பட்டால் அவற்றினைப் பேசித் தீர்ப்பதே அனைவருக்கும் சிறந்த வழி. ஆனால் ஒரு தலைப்பட்சமாகத் தீர்மானங்களையும் முடிவுகளையும் எடுத்துக் கொண்டு சட்டத்தையே கேலிக் கூத்தாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். 

இதேவேளை, முஸ்லிம்களின் சில தரப்பினர் தொடர்பிலும் இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.  முஸ்லிம்களின்
சில பிரிவினர் அதே சமூகத்தின் இன்னொரு பிரிவினர் மீது சில பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தார். முஸ்லிம்களின் சில பிரிவினரால் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுவதாக அவர்  தெரிவித்திருந்தார். குச்சவெளி, மாதம்பை பிரதேசங்களில் இடம்பெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகளையும் அவர் சுட்டிக் காட்டத்  தவறவில்லை.

இவ்வாறான பிரச்சினைகள் எழும்போது பொதுபல சேனா உட்படலான  அமைப்புகளுக்கு இது தீனி போடுவதாகவே அமைந்து விடும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் தரப்புகள் கவனமாகச்  செயற்பட வேண்டும். அதேவேளை, தங்களுக்குள்ளாகவே மோதியும் சேதங்களையும் ஏற்படுத்தி விட்டு பொதுபல சேனாவின்  கணக்கில் அதனையும் எழுதி விடும்  நிலையும் உருவாகலாம். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் முழு முஸ்லிம் சமூகமும் அதற்கு விலை கொடுக்கும் நிலையும் ஏற்படலாம்.

இவ்வாறான நிலைமைகளில் போது எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும்  என்பது கூட தெரியாதிருக்கலாம். எனவே, சம்பந்தப்பட்ட தரப்புகள் நிலைமைகளைப் புரிந்து செயற்படுவதே சிறந்ததாகும். 
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 27-04-2014

No comments:

Post a Comment