ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
வடக்கும் கிழக்கும்
இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களுக்கென தனியான தென்கிழக்கு அலகு ஒன்று தேவையென்ற
விடயத்தில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் மிகுந்த அக்கறையுடன் காணப்பட்டார் என்ற
விடயம் அறிந்ததே. அவர் இறக்கும் வரை தென்கிழக்கு அலகு ஒன்றினைப் பெற்றுக்
கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றிருந்தார். இருப்பினும் அவரது
மறைவினாலும் இணைந்த வடகிழக்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டதாலும் இந்த தென்கிழக்கு
என்ற விடயம் பெரிதாகப் பேசப்படாத ஒன்றாகவும் கைவிடப்பட்ட கோரிக்கையாகவும் இன்று
மாற்றமடைந்து காணப்படுகிறது.
இருப்பினும் மர்ஹும்
எம்.எச்.எம். அஷ்ரஃபின் இந்த தென்கிழக்கு கோரிக்கையானது அன்று தென்னிலங்கை
அரசியலில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியே காணப்பட்டது. தென்னிலங்கை சிங்கள
பேரினவாத சக்திகள் இந்த தனி அலகு கோரிக்கையை தனி முஸ்லிம் நாடு என்ற தவறானதொரு
கண்ணோட்டத்தில் வியாக்கியானப்படுத்தி தங்களது கருத்துகளை வெளியிட்டிருந்தன.
தென்கிழக்கு அலகினை கிழக்கிஸ்தான் என்று கூறவும் தயங்கவில்லை. இவ்வாறானதொரு
கோரிக்கை இன்றும் தொடர்ந்து வலியுறுத்தப்படுமானால் அது மறிச்சிக்கட்டி விவாகாரத்தை
விட விகாரமாகத்தான் போயிருக்கும்.
இருப்பினும் மர்ஹும்
எம்.எச்.எம். அஷ்ரஃபின் இன்னொரு கனவான தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
உருவாக்கப்பட்டு இன்று ஆயிரக்கணக்கான
பட்டதாரிகளையும் புத்தி ஜீவிகளையும் தந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் அஷ்ரஃபின்
அரசியல் சாணக்கியத்துக்கு கிடைத்த ஒரு பரிசாகவே இந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
கருதப்படுகிறது.
ஆனால், அந்தப்
பல்கலைக்கழகத்தை இன்று அரசியல் நோக்கங்களுக்காக சில அரசியல்வாதிகள் பயன்படுத்த
முயல்வது ஒரு வேதனையான விடயமே. அதுவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச்
சேர்ந்தவர்களே இவ்வாறானதொரு நோக்கத்தில் அதனைப் பயன்படுத்த முயற்சிப்பது பேரதிர்ச்சி
தருகிறது.
அன்று அமைச்சர் அஷ்ரஃபின்
அரசியல் சாணக்கியத்தால் கிடைத்த தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்று அரசியல்
சாக்கடைக்குள் மூழ்கி விடுமோ என்ற அச்ச நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
தெற்கிலுள்ள பல்கலைக்கழக
மாணவர்கள் தங்களுக்கான உரிமைப் போராட்டங்களில் ஈடுபடும் போதெல்லாம் அவர்கள்
ஜே.வி.பி.காரர்கள். அந்த அமைப்பின் பின்னணியிலேயே செயற்படுகின்றனர் என்றெல்லாம்
கூறப்படுவதும் மாணவர்கள் கைது செய்யப்படும்
தெரிந்த விடயங்களே.
அதேபோன்றே வடக்கில் யாழ்.
பல்கலைக்கழக மாணவர்களும் தங்களது நியாயமான போராட்டங்களை முன்னெடுக்கும் போதெல்லாம்
அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என சாயம் பூசப்பட்டு
வெளிக்காட்டப்பட்ட சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன. சில வேளைகளில் புலிகளும் அவர்களின் பின்னணியில் உள்ளனர் என்று கூட
தென்னிலங்கை பேரினவாத சிங்களச் சக்திகள் வாய் கூசாமல் பேசியதனையும் நாம் அறிவோம்.
இவ்வாறானதொரு
நிலைமையிலேயே, இவற்றினை எல்லாம்
அறிந்து, புரிந்து
கொண்டு எதிர்காலத்தில் தென்கிழக்கு
பல்கலைக்கழகத்தை நேரடியாக அரசியல் மயப்படுத்தும் முயற்சியானது பாரிய விளைவுகளையே
ஏற்படுத்தும். இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள் அந்தப் பல்கலைக்கழக
மாணவர்களை தங்களுக்கான பலிக்கடாக்களாக்க முயற்சிக்கின்றனர்.
முஸ்லிம்களைப் பொறுத்த
வரையில் இன்று அவர்கள் மீது இனவாத தீ எரிந்து
கொண்டிருக்கிறது. அதனை மேலும் சுவாலை
விட்டு எரியும் வகையில் முஸ்லிம்
அரசியல்வாதிகளே அதற்கு எண்ணெய் ஊற்றினால் அதன் முடிவு பயங்கரமாகி விடும். இவ்வாறாள
நிலைகளை உருவாக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகள் பெரும்பாலும் “ முதல் சிந்தனை தெளிவற்றதாக இருக்கும். எதற்கும் மறுசிந்தனை
செய்யுங்கள் என்று ஷேக்ஸ்பியர் கூறியதனை
மனதில் கொள்வது சாலச் சிறப்பானதாகும்.
கிழக்கு மாகாண சபை
உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தென்கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பில் பல
கருத்துகளை அண்மையில் பகிரங்கமாக வெளியிட்டிருந்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள
இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களை
கையாள்கின்ற தளமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என
கூறியிருந்தார். இந்தக் கருத்தானது, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு நச்சுக் கனியை உண்ண
கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.
தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்தை சமூக நலன் கருதி உருவாக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட அன்றைய
போராட்டம் வேறு., முஸ்லிம்
சமூகத்தின் சவால்களைக் கையாளும் தளமாக அதனை மாற்றியமைக்க இன்று
முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் வேறு. இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால்
பாதிக்கப்படப் போவது அரசியல்வாதிகளல்லர். அங்கு கல்வி பயிலும் மாணவர்களே.
இவ்வாறானதொரு நிலையில்
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது உரிமைக்கான போராட்டம் ஒள்றினை
எதிர்காலத்தில் முன்னெடுத்தாலும் அது அரசியல் நோக்கம் கொண்டதென வெளிக்காட்டப்படுவதுடன் அந்த மாணவர்களின்
நியாயமான போராட்டங்களே கொச்சைப்படுத்தப்பட்டு விடும். அது மட்டுமின்றி கைதுகள்
தடுப்புகள், பல்கலைக்கழகத்தை
மூடிவிடல் போன்றவற்றினால் அந்த மாணவர்களின் எதிர்காலம் கூட கேள்விக்குறியாகும்
நிலை ஏற்படும் சாத்தியங்களும் இல்லாமல் போகாது.
பல்கலைக்கழகம் வெறுமனே
பட்டதாரிகளை உருவாக்கி வெளியேற்றுகின்ற வேலையைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட
ஒன்றல்ல. அவ்வாறு உயர் கல்வியை மாத்திரம் நோக்காகக் கொண்டிருந்தால் நாம் பெரும்
போராட்டங்களை செய்து, பல்வேறு
தியாகங்களுக்கு மத்தியில் இப்படியொரு பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருக்கத்
தேவையில்லை என்று கூறியுள்ள ஏ.எம்.ஜெமீல்,தென்கிழக்கு பல்கலைக்கழகம் எந்த நோக்கத்திற்காக
உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கில் பயணிப்பதற்கு தயார்படுத்தப்பட வேண்டும். அதற்கான
முயற்சிகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். அன்று ஒலுவில் பிரகடனத்தை வெளியிட்டு
சர்வதேச மட்டத்தில் வரலாறு படைத்த இப்பல்கலைக்கழகம், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கின்ற பொதுபல
சேனா போன்ற பேரினவாத சக்திகளின் பாரிய சூழ்ச்சிகளையும் திட்டங்களையும்
முறியடிப்பதற்காக நமது சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற
தளமாக மீண்டும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து
இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தக் கருத்துகள்
தெற்கின் சிங்கள இனவாத சக்திகளைச் சென்றடைந்தால் நிலைமைகள் பாரதூரமாக அமைந்து
விடும். அரசியல்வாதிகள் இவ்வாறான கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிப்பதன் மூலம்
எதிர்காலச் சந்ததிதான் அதற்கு விலைகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன்
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை அல் கைதாக்களாகவும், தலிபான்களாகவும்
தென்னிலங்கை சிங்கள சக்திகள் விமர்சிக்க கூடிய அநியாயமானதொரு நிலைமையினை உருவாக்க
எவரும் முயற்சிக்க கூடாது.
அமைதியாகவும் எவ்வித
இடையூறுகளுமின்றி செயற்பட்டுக் கொண்டிருக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை
இனவாதிகளின் எரிமலையாக காண்பிக்க அரசியல்வாதிகள் முனையக் கூடாது. மாணவர்
சமூகத்தின் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம்.
இன்று முஸ்லிம்களுக்கு
ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் எம்பிக்களுக்கே ஒன்றையும்
செய்ய முடியாத நிலையில் பல்கலைக்கழக மாணவ சமுகத்தையும் இதற்குள் சிக்க வைப்பது
தேவையற்றதொரு விடும்.
தங்களது கையாலாகாத
தனத்துக்காக மாணவ சமூகத்தை தவறான வழியில் இட்டுச் செல்ல எந்த அரசியல்வாதிகளும்
முயற்சிக்க்க் கூடாது என்பதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.
அநியாத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை. ஆனால், நியாயத்திற்கு இறைவனின் கருணை மட்டும் போதும் என்பதனை
சம்பந்தப்பட்டவர்கள் மனதிலிருத்தி செயற்பட
வேண்டும்.
நன்றி வீரகேசரி
வாரவெளியீடு (04-05-2014)


No comments:
Post a Comment