ஏ.எச்.சித்தீக்
காரியப்பர்
தேர்தல் ஒன்று வருகிறது
என்பதற்காகவோ அல்லது உண்மையில் மன வேதனை காரணமாகவோ தெரியாது அமைச்சர் ரவுப்
ஹக்கீம் பல விடயங்களை மனம் திறந்து அதுவும் ஆக்ரோஷமான முறையில் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சம்பவங்களை அடிப்படையாக
கொண்டதாகவே அவரது கருத்துகள் அமைந்திருந்தன.
இவ்வாறு அமைச்சர் ரவுப்
ஹக்கீம் மட்டுமல்ல.. முஸ்லிம் தரப்பு அரசியல்வாதிகளில் பலரும் சமூகம் சார்ந்த
கருத்துகளையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்களின்
கருத்துகள், இவர்கள் காட்டும்
சமூக அக்கறையில் முஸ்லிம் மக்கள் பெருவாரியான நம்பிக்கை கொண்டவர்களாக தற்போது
இல்லை என்ற யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, முஸ்லிம்
அரசியல்வாதிகள் பனை மரத்தின் கீழிலிருந்து பாலைக் குடித்தாலும் அதனைப் பால் தான்
என்று நினைக்காத, நம்பாத ஒரு நிமையையே முஸ்லிம்களிடம் இன்று காணப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலைமையைத் தோற்றுவித்தவர்களும் சில முஸ்லிம் அரசில்வாதிகளே.
கடந்த காலங்களில் அவர்கள்
கூறியனவற்றையெல்லாம் நம்பி.. நம்பி
ஏமாந்து கெட்ட சமூகமாகவே முஸ்லிம் சமூகம் இன்றுள்ளது. கிராமப் புறங்களில் வண்ணானை
முதலை பிடித்த கதை ஒன்று கூறுவார்கள். அது போன்றுதான் முஸ்லிம் அரசியல்வாதிகளின்
இன்றைய நிலைமை. கடந்த கால அவர்களது செயற்பாடுகளில் உண்மைத் தன்மைகள் காணப்படாமை
காரணமாக இன்று அவர்கள் சரியாக நடந்து கொண்டாலும் அதனை நம்புவதற்கு முஸ்லிம் மக்கள்
தயங்குகிறார்கள். ஒரு பழைய பாடல் இருக்கிறது.. “உண்மை எது பொய்யெதுண்டு ஒன்றும் புரியல்ல நம்ம
கண்ண நம்மால நம்ப முடியல்ல“
என்பது போன்றதொரு
நிலைமையே இன்று முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
“இன்றுள்ள நிலைமையை பார்க்கும்போது அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாம்“ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்
நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் தெரிவித்தார்.
அண்மையில் அவர்
காத்தான்குடி பிரதேசத்தில் ஆற்றியிருந்த உரையில் தனது கட்சி சார்ந்த சில
விடங்களையும் பகிரங்கமாகவே கூறியிருந்தார். ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைய வேண்டிய
நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டது. கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, அதன் காரணமாகவே
இணைய வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.
அரசாங்கத்துடன்
இணைவதுதான் பொருத்தமென கட்சியின் பெரும்பாலானவர்களின் கருத்தும் அப்போது இருந்தது.
கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதில் பெரிய உடன்பாடு எதுவும் இருக்கவில்லை.
கட்சியில் எஞ்சியுள்ளவர்களையும் காப்பாற்றவேண்டிய சூழ்நிலையிருந்தது.
அரசாங்கத்துடன் இணைந்து
மூன்றரை வருடங்களாகின்றன. ஆனால், இன்றுள்ள நிலைமைகளை பார்க்கின்றபோது அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாமென்று எண்ணத்தோன்றுகின்றது.“ இவ்வாறு அவர்
தெரிவித்துள்ள கருத்துகள் சிந்திக்கப்பட வேண்டியவை.
அரசாங்கத்துடன் இணைவதற்கு
நிர்ப்பந்தங்களே காரணம் என அவர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இந்த நிர்ப்பந்தம்
அரசு பக்கமிருந்து ஏற்பட்டதாகவும் அவர் அழுத்திக் கூறவுமில்லை. அரசாங்கத்துடன்
இணைவதுதான் பொருத்தமென கட்சியின் பெரும்பாலானவர்களின் கருத்து என்றும் அதேவேளை, கட்சியில்
எஞ்சியுள்ளவர்களையும் காப்பாற்றவேண்டிய சூழ்நிலையிருந்ததாகவும் அவர்
தெரிவித்துள்ளதன் மூலம் கட்சியின் பலத்தினை விட பலவீனமே அவர்களை அரசாங்கத்தின்
பால் இழுத்துச் சென்றுள்ளது என்பது வெளிப்படையாகிறது.
பதவி ஆசை கொண்டவர்களும்
சமூகம் குறித்த கரிசணையற்றவர்களும் கட்சிக்குள் இருந்து கோலோச்சுவதன் விளைவுதான்
இந்த அரசுடனான இணைவு என்பது தெளிவாகிறது. அரசுடன் சேராதிருந்திருந்தால் நிச்சயமாக
ரவுப் ஹக்கீமும் இன்னும் ஒரு சிலரும் தனித்து விடப்பட்ட நிலையும் ஏனையோர் அரசுடன்
ஒட்டிய நிலைமையுமே காணப்பட்டிருக்கும். இதனை அமைச்சர் ஹக்கீம் “கற்றுக் கொண்ட
பாடங்களும் அதனால் ஏற்பட்ட நல்லிணக்கமும்“ என்று அரசியல் நகைச் சுவையாகக் கூறமுடியும்.
முஸ்லிம் காங்கிரஸின் சில
அரசியல்வாதிகளின் பேச்சுகளை முஸ்லிம் மக்கள் நம்பத் தயங்குகிறார்கள் அல்லது
நம்புகிறார்களில்லை என முன்னர் கூறியதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகவே
கொள்ளப்பட வேண்டும்.
பொதுபல சேனா குறித்தோ
வேறு சில சிங்கள இனவாத கடும் போக்காளர்கள் குறித்தோ குரல் எழுப்ப தயக்கம்
காட்டுபவர்கள் கூட முஸ்லிம் காங்கிரஸுக்குள் இல்லாமல் இல்லை. பொதுபல சேனாவை
எதிர்த்தால் தங்களுடன் அரசாங்கம் கோபித்துக் கொள்ளும். அதனால் தங்கள் இருப்பு
கேள்விக் குறியாகி விடும் என்பதன் காரணமாகவே இவர்கள் இவ்வாறானதொரு
நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளனர் என்பது தெளிவான விடயம்.
இதனை அரசாங்கமும் நன்கு
புரிந்து கொண்டு செய்றபடுவதன் காரணமாகவே இன்று முஸ்லிம் காங்கிரஸின்
குரலுக்கு மதிப்பில்லாமல் போயுள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை “அழிந்த
கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?“ என்ற நிலையில்தான் பார்க்கிறது. கண்ணாடி
வீட்டுக்குள்ளிருந்து கொண்டே கல்லெறியும் கூட்டமே வெளியில் உள்ளவர்களுக்கும்
கல்லைக் கொடுத்து எறியச் செய்யும் ஒரு நிலைமை இன்று முஸ்லிம் காங்கிரஸுக்குள்
எழுந்துள்ளது.
அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்
என்ற வகையிலும் முஸ்லிம்களின் பிரதான கட்சி ஒன்றின் தலைவர் என்ற நிலையிலும்
அமைச்சர் ரவுப் ஹக்கீம் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்துள்ள
நிலைமைகள் தொடர்பில் எத்தனையோ தடவைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.
அரச தலைமையைச் சந்தித்துப் பேசியிருந்தார். ஆனால், ஒன்றையேனும் கட்டுப்படுத்தும் எந்தவித
நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள்
அதிகரித்தே வருகிறதென்றால் அதற்கான காரணத்தை ஒரு பக்கத்தில் மட்டும் சிந்திக்காமல்
மறுபக்கமும் சிந்திக்க வைக்கும் நிலைமையை அந்தக் கட்சிக்குள் உள்ள சிலர் உருவாக்கி
விட்டனர் என்று கூறுவதிலும் தவறு காணமுடியாது.
இது இன்றைய கால
கட்டத்தைப் பொறுத்த வரையில் விரும்பத்தகாத ஒன்றாகவே நோக்கப்பட வேண்டும். முஸ்லிம்
காங்கிரஸ் என்ற கட்சி இன்று கடிவாளத்துக்கு கட்டுப்படாத நிலைமைக்குள்
தள்ளப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்
புலிகளுடன் அரசாங்கம் ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது அரசு தரப்பு பிரதிநிதிகளில்
ஒருவராகக் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம், முஸ்லிம்கள் தொடர்பில் கூற முயன்ற போது அன்டன் பாலசிங்கம்
ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். “உங்களது கட்சிக்குள் முதலில் ஒற்றுமையை ஏற்படுத்தி விட்டு
வாருங்கள் பின்னர் முஸ்லிம்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவோம்” என்று..
இவ்வாறானதொரு கூற்றை இன்று அரசாங்கமும் முஸ்லிம் காங்கிரஸுக்கு கூறி விடுமோ என்ற
நிலைமையே அந்தக் கட்சிக்குள் காணப்படுகிறது. ஆனால், ஓர் உண்மையை
இவ்வாறானவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதாவது, அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க
வேண்டும் என்பதனை.
எனவே, அமைச்சர்
ஹக்கீமின் மனக் குறைகளுக்கான முதல் மருந்து கட்சிக்குள்ளேயே உள்ளது. அதன் பின்னரே
அடுத்த விடயங்களை அவரால் கவனிக்க
முடியும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையை விட முஸ்லிம்
சமூகத்துக்கு இன்று முக்கியமான ஒன்றாகும்.
நன்றி வீரகேசரி
வாரவெளியீடு 25-05-2014

No comments:
Post a Comment