ஏ.எச்.சித்தீக்
காரியப்பர்
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முகங்கொண்டு அதற்கான தீர்வினைக் காணும்
விடயத்தில் அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது
தொடர்பிலும் அதன் அவசியம் குறித்தும் மீண்டும் இப்போது பேசப்படுகிறது. அதாவது,
ஒரு கை ஒருபோதும் ஓசையைத்
தராது. இரு கைகள் இணைந்தாலே சத்தம் வரும் என்பது போன்றதாக செயற்பட வேண்டும் என்ற
எண்ணம் பலரிடம் கருக்கட்டத் தொடங்கியுள்ளது.
ஆகக் குறைந்தது இப்படியானதொரு ஐக்கியம் ஏற்பட்டால் கூட சில விடயங்களை
ஒற்றுமையுடன் நின்று ஒருமித்த குரலில் தெரிவித்து தீர்வினை அல்லது தணிவினைக்
காணலாம் என்ற நம்பிக்கையே தற்போது துளிர்விட்டுள்ளது.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் இன்று துருவப்படுத்தப்பட்டு காணப்படுவதும்
முஸலிம்கள் மீதான அண்மைக்காலச் செயற்பாடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே,
இவ்வாறானதொரு நிலையில்
ஐக்கியமாகச் செயற்பட்டால் அது ஆராக்கியமானதாகவே அமையும்.
இந்த விடயத்தை கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் வரை காத்திராமல்
உடனடியாகச் செய்ய வேண்டும். இதற்கான ஓர் ஆரம்ப அறிகுறியாகவே அண்மையில் முஸ்லிம்
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கையெழுத்திட்டு ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் எடுத்துக் காட்கிறது.
அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக 16 பேர் ஒன்று சேர்ந்து பேசா விட்டாலும்
எங்கெங்கோவிருந்து ஒன்றித்தேனும் கையொப்பமிட்டமையானதும் ஆசியாவின் இன்னொரு
அதிசயமான விடயம்தான். ஆனால், அவ்வாறானதொரு
கடிதம் அனுப்பியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்ற ஏமாற்றமும் மன ஆதங்கமும் ஒரு
பக்கம் உள்ளதும் உண்மைதான்.
இதேவேளை குறித்த 16 முஸ்லிம்
நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியமை
தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் நிலவாமல் இல்லை. சிலர் இதனை நல்ல விடயம்
என்கிறார்கள். இன்னொரு தரப்பார் இதுவும் ஒரு நடிப்புத் தான் என்கிறார்கள். ஆகவே
இது தொடர்பில் இங்கு விவாதிக்கத் தேவை இல்லை. ஒரு பழைய பாடலில் இப்படி ஒரு சில
வரிகள் வருகின்றன. அதாவது ‘கதை கட்ட ஒருவன்
பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..காப்பாற்ற சில பேர் இருந்து
விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு..” என்பதாகும்.
ஆனால், முஸ்லிம்களுக்கு
எதிராக அண்மைக் கால வரலாற்றில் முதலாவதாக எழுந்த தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்தின்
போதே இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறு செய்திருந்தார்களானால் சில வேளைகளில்
இன்றைய மோசமான நிலைமை கட்டுக்குள் வந்திருக்கலாம் என்றும் கூறவும் முடியும்.
இதேவேளை முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான சம்பவங்களுக்காக மட்டும் முஸ்லிம்
அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்படுவது சில விடயங்களுக்கான தற்காலிகத்
தீர்வுக்கானஈ தணிவுக்கான ஒரு வழியாகவே அமையுமே தவிர. அது ஒரு நிரந்தரத் தன்மை
கொண்டதாக இருக்கப் போவதில்லை. அதாவது, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைவது என்பதனை விட முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள்
அனைத்தும் ஒன்றிணைந்து அரசியல் சக்திமிக்க ஒரு கட்சியாக ஒரு தலைமையில் கீழ்
ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்காகச் செயற்படுவது என்பதே சிறந்ததும் தூர நோக்குக்
கொண்டதுமாக அமையும். இந்த விடயம் அம்புலி மாமா வேண்டுமென்று அடம்பிடிக்கும்
குழந்தைக்கு அதை தருவதாக கூறுவது போன்ற கதையாக இருந்தாலும் முயற்சித்தால்
அடையலாம்.
மூன்று கட்சிகள். மூன்று தலைமைகள், முன்னூறு கொள்கைகள் என்றிராமல் ஒரே
கட்சி, ஒரு தலைமை, ஒரே கொள்கை என்றிருந்தால் அதன் பலம், பயன் அதிகமானதே. இந்த எதிர்பார்ப்பினைக் கற்பனை
செய்து பார்க்கும் போது கூட மகிழ்ச்சியாகவே உள்ளது.
இந்த நாட்டின் தேசிய அரசியலில் தம்மை இணைத்துக் கொண்டுள்ள சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரஸ், அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ்
ஆகிய பிரதான கட்சிகள் மூன்றும் ஒன்றிணைந்து முன்னர் சொன்னது போல் ஒரு கட்சியாக ஒரு
தலைமையின் கீழ செயற்படும் பட்சத்தில் அது இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த
முஸ்லிம்களின் நலனுக்கு மிகுந்த ஆரோக்கியமானதாகவே அமையும். இவ்வாறு இணைந்து செயற்படும் போது அரசாங்கத்தில்
பங்காளிகளாக இருப்பதா இல்லை என்பது ஒரு பாரிய பிரச்சினையாகவும் எழவும் மாட்டாது
என்றும் நம்பலாம். ஏனெனில் அனைவரும் ஒன்றிணையும் போது அரசுடன் இருந்தாலும் சரி
இல்லாவிட்டாலும் சரி சக்திமிக்க தமையைக் கொண்ட ஒரு கட்சியாகவே அது நோக்கப்படும்.
இந்த விடயத்தில் ஹாரி ஏ ஹோஃ என்ற பேரறிஞர் கூறிய சில வார்த்தைகளைப் பதிவிடுவது
சிறந்ததாக இருக்கும். அதாவது, ”எந்த முடிவையும் எடுக்காமல் காலம்
கடத்துவது தவறான ஒரு முடிவை எடுப்பதனைக் காட்டிலும் பெரிய
ஆபத்தாக பல சமயங்களில் முடியும்” என்பதே அந்த
தத்துவ வரிகளாகும்.
இவ்வாறானதொரு நிலை ஏற்படுமாயின் யாரிடமும் வரவா என்று கேட்கும் தேவை முஸ்லிம்
தரப்புக்கு இருக்காது. மாறாக வாருங்கள்.. எங்களுடன் சேருங்கள்.. அல்லது நீங்கள்
எங்களை விட்டுப் போகாதீர்கள் என்று கெஞ்சும் நிலைமையை நிச்சயம் கண்டு கொள்ளலாம்.
இதற்கு மேலாக உங்களது பிரச்சினைகளைச் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற வரவேற்பும்
நிச்சயம் எதிர்பார்க்க கூடியதொன்றே.
எனவே இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தலைமைத்துவங்கள் சிந்தித்து
விரைவானதொரு தீர்மானத்துக்கு வருவதே சிறந்தது, அது அவர்கள் சார்ந்த சமூகத்தின் நலனையும்
பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்தும் என்பதில்லை ஐயப்பட ஒன்றும் இல்லை.
தன்னித்து நின்று இதுவரை ஏதோ குரல் கொடுத்தும் ஒன்றுமே பெரிதாக நடக்காத இந்த
நிலையில் ஒருமித்து ஒரு தலைமையில் கீழ் நின்று குரல் கொடுத்தால் நிச்சயம் ஏதாவது
நடக்கும் என்றே நம்பலாம். இதுவே இன்றைய முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
“கடந்த சென்ற நேற்றைய நாள் இன்றைய நாளை பாழ்படுத்த ஒரு போதும்
அனுமதிக்காதீர்கள்..“ என்று ரிச்சர்ட்
எச். நெல்சன் தெரிவித்த கருத்து சிந்தனையைத் தூண்டட்டும்.
நன்றி வீரகேசரி ஞாயிறு வெளியீடு 01-06-2014

No comments:
Post a Comment