ஏ.எச்.சித்தீக்
காரியப்பர்
கௌரவம் என்ற பழைய தமிழ் படம் ஒன்றில் ஒரு பாடல் வருகிறது..
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா? காலம் மாறினால்
கெளரவம் மாறுமா? அறிவை
கொடுத்ததோ துரோணரின் கெளரவம். அவர் மேல்
தொடுத்ததோ அர்ச்சுனன் கெளரவம். நடந்தது அந்தநாள் முடிந்ததா பாரதம்? நாளைய பாரதம்
யாரதன் காரணம்? என்பதே அந்தப்
பாடல் இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடியதாக
தீர்க்கதரிசனத்துடன் எழுதியுள்ளார் போல் தெரிகிறது. மேற்சொன்ன பாடல் வரிகள் போன்ற
நிலைமையே இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவுப் ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ளது.
அன்று மகா பாரதப் போரானது
ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தவர்களிடையே ஏற்பட்டது என்பது தெரிந்த விடயமே.
சூதும் வாதும் காவு கொள்ளப்பட்டதன் காரணமாகவே கர்ணனின் இறுதி முடிவு கூட அவ்வாறு
அமைந்திருந்தது. அர்ச்சுனன் எய்த அம்புகள் கர்ணனின் மார்புகளைப் பிளந்த போது தான்
சூழ்ச்சியினால் சூழப்பட்டுள்ளதனைப்
புரிந்து கொண்ட கர்ணன் இறுதியில்
சொல்ல முயற்சித்த வார்த்தைகள் பரிதாபகரமானவையே. எதனையும் அவனால் பெரிதாகக் கூற முயாத
நிலைமையில் தேரின் கீழ் வீழ்ந்து கிடந்தான். அப்போது கண்ணன் பிள்ளையும் கிள்ளி
விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போன்று யுத்த களத்தில் பாசாங்கு செய்தான்.
கண்ணனின் இந்த வேடந்தாங்கலையும் கர்ணன்
முழுமையாக உணர்ந்து கொள்ள அதுவே
சந்தர்ப்பமாகக் காணப்பட்டது. இவ்வாறானதொரு நிலைமையே அமைச்சர் ஹக்கீமுக்கும் இன்று ஏற்பட்டுள்ளது.
தெற்கிலும் கிழக்கிலும் அவர் எதிர்கொண்டுள்ள நிலைமைகள்
மிகவும் சிக்கலானது. எத்தனை முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன. அவைகளும் எத்தனையோ
செய்கின்றன.
அவற்றின் தலைமைகளும்
எதனையெல்லாமோ பேசுகிறார்கள்தான். ஆனால் இன்று பலருக்கும் அரசியல் என்கின்ற
விளையாட்டுத் திடலில் கால் பந்தாக மாறியுள்ளது முஸ்லிம் காங்கிரஸும் அதன்
தலைமைத்துவமும்தான்.
இந்த அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியாக ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டாலும் அந்தக் கட்சியும் ஓர் எதிரக்கட்சி என்ற
அந்தஸ்துடனும் அதற்கான சிறப்புரிமைகளுடனும் இலங்கையின் நாடாளுமன்றத்தில்
காணப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இதனால்தான் அமைச்சர்
ஹக்கீம் விசேட உரையைக் கூட ஆற்ற முடியாத
நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தார். இது அந்தக் கட்சியின் பாரிய பின்னடைவானதொரு
விடயமாகவே நோக்கப்படுகிறது. அது மட்டுமின்றி கௌரவப் பிரச்சினையாகவும்
எழுந்துள்ளது.
தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில்
அறிக்கை ஒன்றை வாசிக்க முனைந்த போது அதற்கான அனுமதியை வழங்க பிரதி சபாநாயகர்
சந்திம வீரக்கொடி மறுத்து விட்டார். இதற்கான பிரதான காரணம் முஸ்லிம் காங்கிரஸ்
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியாக அங்கீகரிக்கப்படாமையே
என்றும் பிரதி சபாநாயகர் விளக்கம் கொடுத்துள்ளார்.
நியதிச் சட்டத்தின் அடிப்படையில் கட்சித்தலைவர் என்ற
வகையில் அறிக்கை ஒன்றை விடுக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் ஹக்கீம் கேட்டுக்
கொண்ட போதும் அதற்கான அனுமதி கடைசி வரை வழங்கப்படவில்லை.
தான் தலைமைத்துவம் செய்யும் கட்சியை நாடாளுமன்றத்தை
பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக அங்கீகரிக்காமை அபத்தமானது என ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.அப்படியாயின் தனக்கு ஏன் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டது ஏன்
என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இவ்வாறான அறிக்கை ஒன்றை விடுக்கும் முன்னர் இந்த விடயத்தை
ரவூப் ஹக்கீம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டுமென்று பிரதி சபாநாயகர்
தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த விடயம் முற்றுப பெற்று விட்டது.
இருப்பினும் அவர்
பேசுவதற்காக வாய்ப்பு மறுக்கப்பட்டதானது
ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே அமைந்துள்ளதாக பலரும் அபிப்பராயம் கொண்டுள்ளனர். இது
கூட ஹக்கீம் சார்ந்திருக்கும் அரச தரப்பிலிருந்தே சொல்லப்பட்டு, செய்யப்பட்ட ஒரு
விடயமாகவும் பலராலும் பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இலங்கை
நாடாளுமன்றமானது சிறப்புரிமை கொண்ட ஓர் அதியுயர் சபை என்பதால் நாடாளுமன்ற
செயற்பாடுகள் குறித்து விமர்சனங்களைச் செய்ய முடியாது என்ற அடிப்படையில் இது தொடர்பில் கருத்து எதனையும் சிலாகிக்க
முடியாது.
ஆனால், நீண்ட கால நாடாளுமன்ற அனுபவம், சட்டவாதி, நாடாளுமன்ற
குழுக்களின் பிரதி தலைவராக பதவி வகித்த
அனுபவம். இவை மூன்றினையும் கொண்டுள்ள அமைச்சர் ஹக்கீம் இலங்கை நாடாளுமன்றத்தின்
இந்த நடைமுறை, சட்ட திட்டங்களை
அறிந்திருக்காமை ஏன் என்பதுதான் கேள்வி!
தனது கட்சி இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு
எதிர்க்கட்சிக்குரிய அந்தஸதுடன் இல்லை என்பது அமைச்சர் ஹக்கீமுக்கு இப்போதுதான்
தெரிய வந்துள்ளதா?
நீண்ட கால நாடாளுமன்ற அனுபவத்தைக் கொண்டுள்ள அமைச்சர்
ஹக்கீம் இதற்கு முன்னரும் இவ்வாறே அரசின் பங்காளிக் கட்சியாக செயற்பட்டுள்ளார்.
எனவே, முன்னர்
எப்போதாவது அவர் இவ்வாறான விசேட உரைகள், அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் ஆற்ற முயன்ற போது
தடுக்கப்பட்டுள்ளாரா அல்லது அவ்வாறு எந்த உரையையும் ஆற்றவில்லையா என்ற கேள்விகளும்
எழுத்தான் செய்கின்றன.
இந்த மூன்று விடயங்கள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் சரியான
விளக்கங்களை மக்கள் முன்வைக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினை
ஹக்கீமுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையிலான ஒரு விடயமல்ல, அந்தக் கட்சியை
ஆதரிக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கௌரவப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.
இன்று இந்த நாட்டின் முதலாவது சிறுபான்மைச் சமூகமான தமிழ்ச்
சமூகம் இனக்குழுமம் என்று குறித்துரைக்கப்பட்டு அரசியல்
செயற்கைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று நாளை முஸ்லிம் சமூகத்தை ஓர் இனக்குழுமம் கூட இல்லை என்று கூறினாலும் அதனையேனும் நிரூபிக்க
ஆதாரம் இல்லாமல் போகும் நிலையும் தோன்றலாம் என்பதனையும் இங்கு கூறுவது கடமையாகும்.
நிலை இவ்வாறிருக்க எரிகிற வீட்டில் பிடுங்குவதெல்லாம் லாபம்
என்ற தோரணையில் ஐக்கிய தேசியக் கட்சியும் அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக
நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான
முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
30 வயதுக்கும்
மேற்பட்டவர்கள் சட்டக் கல்லூரியில் அனுமதி பெற்றுக் கொள்ள முடியாது என புதிய
நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லாமல்
அமைச்சர் ஹக்கீம் இவ்வாறான ஓர் நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ள நிலையில் இந்த
விடயத்தை வைத்தே ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்ல பிரேரணை ஒன்றினை அவர் மீது
கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐ.தே.க வுடன் ஆளுங் கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சேர்ந்தே கொண்டு வரவுள்ளனர் என தெரிய வருகிறது.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அது பெரும்பாலும் அமைச்சர்
ஹக்கீமுக்கு பாதகமான விளைவுகளையே ஏறபடுத்தும் என்றே நமபலாம். ஏனெனில் அமைச்சர்
ஹக்கீமைச் சுற்றி இன்று கோழி திருடிய கள்வர்களும் கூடவே உலாவுவதுடன் பிள்ளையையும்
கிள்ளி தொட்டிலையும் ஆட்டுபவர்களும் அவருடன் உள்ளனர்.
இது இவ்வாறிருக்க அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினால்
அரசுக்கு எதிரான பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்ட போது அதற்கு எதிராகச் செயற்பட்டவர்
அமைச்சர் ஹக்கீம். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டினையும் அவர்
கடுமையாக விமர்சித்திருந்தார். அரசுடன் அவருக்குள் பாசத்தை அவர் எதிர்க்கட்சியினருக்கு விட்டுக் கொடுக்கவில்லை.
ஆனால் ஹக்கீம் அரசின் மீது காட்டும் பாசம் போன்று அரசும்
ஹக்கீம் மீது காட்டுமா என்பதனை ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பிக்கை இல்லா பிரேரணை
வாக்கெடுப்பின் போதே தெரிய வரும்.
நிலைமை தெற்கில் இவ்வாறெல்லாம் இருக்க கல்முனையின் பிரதேச செயலாளராக
சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை பல்வேறு
வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியுள்ளதுடன் இந்த விவகாரமும் முஸ்லிம் காங்கிரஸினையும்
அதன் தலைமையையும் இணைத்தே இன்று பேசப்படுகிறது அந்தக் கட்சியினதும்
தமைமைத்துவத்தின் இயலாமை மற்றும் கட்சியின்
செல்வாக்கி வீழ்ச்சி ஆகியன காரணமாகவே இவ்வாறனதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகப் பலத்த
விமர்சனங்களும எழுந்துள்ளன.
கல்முனையின் பிரதேச செயலாளராக சிங்கள இனத்தைச் சேர்ந்த
ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை சவாலை ஏற்படுத்தும் செயல் என அமைச்சர் ஹக்கீம்
விமர்சித்துள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசப் போவதாகவும்
அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு பல விடயங்களை
அமைச்சர் ஹக்கீமும் அவரது கட்சியும்
சவாலாக எதிர்கொண்டுள்ள நிலைமையானது அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில்
நம்பிக்கை இன்மையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளதனையும் உணர்வுபுர்மாக
அவர்கள் வெளியிடும் கருத்துகள் வெளிக்காட்டுகின்றன.
இப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் என்பது இன்று முள்ளில் சிக்கிய
துணியாக போய்விட்டது. சேலையை இழுத்தும் எடுக்கலாம் மெதுவாகவும் எடுக்கலாம். ஆனால்
இழுத்தெடுத்தால் நஷ்டம் மெதுவாக
எடுப்பதும் கஷ்டம் என்ற நிலைமையே
தோன்றியுள்ளது. ஒரு பக்கத்தில் புலிவால் பிடித்த கதைதான். வாலைப்
பிடித்திருப்பதும் ஆபத்து. விட்டால் அதனை விட ஆபத்துதான்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 08-06-02014

No comments:
Post a Comment