Sunday, April 20, 2014

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம்! உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்!!

                                                                         ஏ.எச்.சித்தீக் காரியப்பர்



ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணாஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா..நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு..என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு..என்பது அவன்தான மனிதன்படத்தில் வரும் கண்ணதாசனின் பாடல். இந்தப் பாடலை நினைக்கும்போது பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளுக்கான பின்னணிகளே நினைவுக்கு வருகின்றன.

இந்த அமைப்பின் முஸ்லிம் விரோத போக்குகள் அத்துமீறிப் போனமை தொடர்பில் இன்று அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களே இந்த அமைப்பினை வெறுப்புடன் விமர்சிக்கத் தலைப்பட்டுள்ளதுடன் இதன் பின்னணிகள் தொடர்பிலும் தங்களது கருத்துகளை பொத்தி, பொத்தி வைக்காமல் பகிரங்கமாகத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.

இதற்கு மேலாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வழங்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்துள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கவும் அதனை நிலைபெறச் செய்யும் நோக்கிலும் உருவாக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் தனக்கு பிற மதங்களாலும் அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலராலும் மரண அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் சில சந்தர்ப்பங்களில் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், தனது உயிர் பாதுகாப்புக்காகக் கைத்துப்பாக்கி ஒன்றையும் 50 தோட்டாக்களையும் வழங்குமாறும் கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு சிறுபான்மைச் சமூகமே ஒரு குழுவினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நிலையில் அந்தக் குழுவே தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி ஆயுதங்கள் கேட்கும் நிலைமை எந்த நாட்டிலும் இல்லை. ஆனால் இந்த நாட்டில் இன்று உருவாகி விட்டது.  நமது முன்னோர் அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்என்று கூறியது இதற்கும் பொருத்தமாகத்தான் அமைகிறது.

இதேவேளை, பொதுபல சேனா நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சில கருத்துகளை ஒளிவு மறைவின்றி தெரிவித்துள்ளார்.

ஏனைய இனங்களின் மதத் தலங்களுக்குள் பலவந்தமாக புகுந்து பொதுபல சேனா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த அமைப்பின் செயற்பாடுகளுக்கு நிச்சயமாக அரசாங்கத்தின் ஒத்துழைப்பு உள்ளது எனவும் அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார் என செய்திகள் வெளிவந்துள்ளன.

கலகொட அத்தே ஞானசார தேரருக்குச் சட்டத்தை செயற்படுத்த அனுமதிப்பதன் மூலம் நாட்டின் ச ட்டத்திற்கும் மத நல்லிணக்கத்துக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார். இதேபோன்றே அமைச்சர் திலான் பெரேராவும் பொதுபல சேனா தொடர்பில் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

பல சிங்கள, ஆங்கில ஊடகங்கள் கூட இந்த அமைப்புக்கு எதிராக தங்களது வன்மையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றன.

ஞானசார தேரரால் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று குழப்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பௌத்த மதத்தை பாதுகாப்பதாக கூறும் இந்த ஞானசார தேரர் போன்றோர் பௌத்த மத வளர்ச்சிக்காக எதனை செய்திருக்கிறார்கள்இவ்வாறான இனவாத அமைப்புக்களுக்கு எங்கிருந்த நிதி கிடைக்கின்றன. இந்த விடயத்தில் சந்தேகமே நிலவுவதாக அவைகள் தெரிவித்துள்ளன.

சிறுபான்மை இனத்தவர்களை தாக்கும் இலக்கை கொண்டு செயற்பட்டு வரும் இவ்வாறான அமைப்புகளினால் பௌத்த மதத்துக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதேவேளை, இலங்கையின் பௌத்த மதத்தின் தலைவர்களாக கருதப்படும் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்கர்கள் கூறும் கருத்துக்களும் நகைச் சுவையாகே  காணப்படுகின்றன.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும் கசினோவும் ஒழிக்கப்படும் போது சமூகத்தில் ஒழுக்கம் பேணப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.எனினும் தமக்கு கீழ் உள்ள பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்த முடியாதிருக்கும் போது நிறைவேற்று அதிகாரத்தை குறை கூறி எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் ஓர் ஆங்கில பத்திரிகை  ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது.

இதற்கும் மேலாக,பௌத்த அமைப்பான பொதுபல சேனா ஒரு பயங்கரவாத அமைப்புஎன பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு (TRAC) என்ற அமைப்பினால் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தளவுக்கு அதன் நடவடிக்கைகள் இன்று கட்டுமீறிப் போயுள்ளதுடன் முஸ்லிம்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விட்டது.  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அவர்களது செயற்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியர்கள் கைகட்டிப் பார்த்து நிற்கின்றனர். இந்த பொதுபல சேனா என்ற அமைப்பு இன்று நாட்டுக்குள்ளேயே இன்னொரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டு கோலோச்சுகிறது.

இதன் நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் அரசியல் தலைமைகள், அமைப்புகள் குரல்கொடுத்தும் இன்று அவை காற்றடிக்கும் நேரம் உப்பு விற்கப் போனவன் கதையாகவே உள்ளது.

அண்மையில் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்துகள் முஸ்லிம் சமூகத்தை வேதனையில் ஆழ்த்தியுள்ளன. அவர் அங்கு முஸ்லிம்களையும் புனித குர்ஆனையும் சாடி கருத்துகளை வெளியிட்டு முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியிருந்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸன் அலி, பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தபோது இந்த அமைப்பானது இலங்கையில் மியன்மார் நிலைமையை உருவாக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்ததுடன் இவர்களின் பின்னணி  தொடர்பிலும் சில விடயங்களைச் சூசகமாகக வெளியிட்டிருந்தார்.

எது எப்படியிருப்பினும் இலங்கை முஸ்லிம்களின் பிரதான கட்சியான முஸ்லிம் காங்கிரஸினாலோ அல்ல வேறு எந்தக் கட்சியினாலோ பொதுபல சேனா தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத நிலைமை இன்று தோன்றியுள்ளது. யாரிடம்தான் கூறி என்னதான் நடக்கப் போகிறது என்ற விரக்தி நிலைமைக்கு முஸ்லிம் கட்சிகள்  தள்ளப்பட்டுள்ளன.

ஒரு நாட்டில் அனைத்து இனமக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பில்  அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் கடந்த கால கசப்பான அனுபவங்களின் பின்னணிகள் என்ன என்பது தெரிந்த விடயங்கள். அதன் ஊடாக கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாக வைத்தேனும்  எதிர்காலத்தில்  சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பு மற்றும் மத உரிமைகளை  உறுதிப்படுத்த வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாகும்.

பயங்கரமான நிலைமைகள் நாட்டில் இடம்பெற்ற பின்னர் யாரையும் பயங்கரவாதிகள் என்று கூறுவதில் அர்த்தமில்லை. 

மேலும் இந்த நாட்டின் மூன்று பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன இந்த விடயத்தில் ஒன்றாகச்  செயற்பட்டால் ஏதாவது நடக்குமென்று இன்றுவரை எதிர்பார்த்திருந்த முஸ்லிம்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். குளத்துடன்  கோபித்துக் கொண்டவர்கள் எதனையோ செய்யவில்லை என்ற நிலையில் இந்த மூன்று கட்சிகளும் உள்ளன.

இந்த விடயத்தில் குறித்த மூன்று கட்சிகளின் தலைமைகளும் ஒன்றாக நின்று அரசியல் தலைமையிடம் ஒன்றாகவே குரல் கொடுத்தால் ஓரளவேனும் நல்லது நடக்குமென்ற  எதிர்பார்ப்புக் கூட இன்று ஏமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளன.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 20-04-2014

No comments:

Post a Comment