Saturday, April 13, 2013

வன்னியில் அமைதி காத்த அமெரிக்கா ஜெனீவாவில் வரிந்து கட்டியது ஏன்?

                                                                                                                    ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொண்டிருந்த இலங்கைத் தூதுக் குழுவின் தலைவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாடு திரும்பியுள்ளார். இவருடன் சென்ற ஏனையவர்கள் ஜெனீவாவில் தங்கியிருக்கும் நிலையிலேயே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். இருப்பினும் தான் மீண்டும் இம்மாதம் 15 ஆம் திகதி ஜெனீவா செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த நாட்களாக ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைப்  பேரவை அமர்வில் கலந்து கொண்ட பல நாடுகள் இலங்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தன. இவற்றுக்கு அவர் தனக்கு கழங்கப்பட்ட நேரத்துக்குள் பதிலளித்தாலும் மேலும் பல விடயங்களுக்கும் அவர் விளக்கமளிக வேண்டியுள்ளது. இதனை அவரே வெளிப்படையாகக் கூறியுள்ளார். எனவே இந்த இடைப்பட்ட ஓய்வு நாட்களில் இவைகள் குறித்து அரச தலைமையுடனும் உள்ளுர் அரசியல் ராஜதந்திரிகளுடனும் கலந்துரையாடி சில தயார்படுத்தலை அவர் மேற்கொள்ளவார் என நம்பலாம்.

இலங்கை திரும்பிய அமைச்சர் ஊடகங்களுக்கு தனது ஜெனீவா பயணம் தொடர்பில் பல்வுறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். விசேடமாக, மனித உரிமைப் பேரவையில் தனது அரசின் நியாயங்களை விளக்குவதற்கு இருபது நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பல நாடுகள் இலங்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்தன. இவ்வாறான நாடுகளின் பிரதிகள் அனைவருக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட நேரத்தினை ஒப்பிடும்  போது பெரும்பாலும் தனி ஒரு மனிதனாகப் போராடிய தனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் போதாது என்பது அவரால் மறைமுக உணர்த்தப்பட்ட அதிருப்தியாக கொள்ள முடியும்.

இலங்கையை நோக்கி பல்முனைகளிலும்  விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்த நிலையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் அனைத்துக்கும் பதிலளிக்க முடியாத ஒரு நிலை அங்கு உருவாக்கியிருக்கலாம். இதற்கு மேலாக பிரித்தானியா தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்“ காணொளி அங்கு காண்பிக்கப்பட்டமையானதும் இலங்கை எதிர்பாராத ஒரு சவாலுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. கடந்த நாட்களில் இடம்பெற்ற ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விடயங்கள் மட்டும் தனித்து ஆராயப்படாத நிலையிலும் கூட இலங்கை குறித்து அங்கு பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்கள் பெரும்பாலும் அரசினைப் பொறுத்த வரை ஒரு சவாலாகவே அமைந்திருந்தன. ஆரம்பமே இப்படியென்றால் அடுத்த கட்டம் மிகப் பொல்லாதது ஆகி விடுமோ என்ற அச்ச உணர்வு நிச்சயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும். 

ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய அமர்வின் இரண்டாம் நிலையிலே இலங்கை தொடர்பில் பிரேரணைகள், விவாதங்கள், வாக்கெடுப்புகள் என பலவும் முன்னெடுக்கப்படவுள்ளன. எனவே, இலங்கையின் தரப்பில் ஒரேயொரு அமைச்சரைக் கொண்ட குழு இந்த விடயங்கள் அனைத்துக்கும் முகங்கொடுத்து வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.

இது ஒரு புறமிருக்க, அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டாலும் அது பெரிதாக எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்ற செய்திகள் தற்போது வெளிவந்துள்ளன. இதற்குக் கட்டியம் கூறுவது பொன்று இந்தியப் பிரதமர் மன்மாகன் சிங்கின் உரையும் அமைந்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக் கொண்டு வரப்படவுள்ள அமரிக்கப் பிரேரணையின் உள்ளடக்கமே இந்தியாவின் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார், இலங்கையுடன் மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்கும் இந்தியாவானது அமெரிக்கப் பிரேரணையின் உள்ளடக்கத்தை அறிந்து கொண்டதன் காரணமாகவே இப்படி போட்டுக் கூறியுள்ளது. ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட அமெரிக்க பிரேரணை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் மன்வைக்கப்படவுள்ள பிரேரைணையில் காணப்படும் வாசகங்களில் தனக்குத் திருப்தி இல்லை என்ற கருத்தினை வெளியிட்டுள்ளார். மனித உரிமைப் பேரவையின் அமெரிக்காவுக்கான தூதுவர் தெரிவித்திருந்த ஒரு கருத்தினையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சந்தேகத்துடன் நோக்கியுள்ளார், அதாவது, இலங்கையுடன் இணைந்து செயற்பட முடியும் என தாம் நம்புவதாக அமெரிக்காவுக்கான தூதுவர் தெரிவித்த கருத்து மற்றும் இறுதிக் கட்ட யுத்தத்தில் பங்கு கொண்ட இராணுவ அதிகாரி  ஒருவருக்கு அமரிக்க இராணு பல்கலைக்கழகத்தில் கலகழத்தில் உரையாற்ற அனுமதித்தமை போன்றவை தொடர்பிலேயே சுரேஷ் எம்.பி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் அமெரிக்காவைச் சந்தேக்க் கண்ணுடனும் நோக்கவேண்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜெனீவாவில் இலங்கை அரச பிரதிநிதிகளுக்கும் அமெரிக்கப்
பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது என்றும் அதன் பொது பல விடயங்களில் இரு தரப்பும் இணக்கம் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும் அந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்படும் விடயங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு 2016 ஆம் ஆண்டு வரை காலக்கெடுவினை வழங்க அமெரிக்கா இணக்கம்  தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கால எல்லைக்குள் இலங்கை அரசு குறித்த விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதும் அதுவரை இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள்  பாதுகாப்புச் சபை  ஊடகவோ அல்லது வேறு வழிகளிலோ எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்ற விடயத்துக்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்புலத்துக்கு மத்தியிலேயே அண்மையில் இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் ஆசிய வலயங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி உதவி நிர்வாக அதிகாரி ரெனிஸ் ரொலின்ஸ் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் அரசியல் நிலைப்பாடு வேறு, இலங்கைக்கு உதவி வழங்கும் விடயம் வேறு என பாலையும் தண்ணீரையும் பிரித்தறியும் அண்ணப் பறவை போல் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் தமிழர் பிரதேச அபிவிருத்திக்கும் அமெரிக்கா தனது உதவிகளை தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் அபிவிருத்திக்குப் பணிகளுக்கு 10.5 மில்லியன் டாலர்களைத் தனது அரசு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான நட்புறவை ஊறதிப்படுத்துவதே இந்த நிதியுதவி வழங்கலின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

இவற்றுக்கும் மேலாக இன்னசிற்றி பிரஸ் ஒரு கேள்வியையும் அமெரிக்காவை நோக்கி வைத்திருந்தது அதாவது, வன்னியில் 2009 ஆண்டு இடம்பெற்ற போரின் போது அமைதி காத்த அமெரிக்கா தற்போது மட்டும் ஏன் இலங்கைகு எதிராகச் சர்வதேச மட்டத்தில் இவ்வாறு வரிந்து கட்டிச் செயற்பட வேணடும் என்பதே தன் கேள்வியாகும்.

எனவே இவைகளை எல்லாம் நொக்கும் போது ஜெனீவா மனி உரிமைப் பேரவையில் இலங்கைகு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பில் ஆரம்பத்தில் காணப்பட்ட சட்டியில் போட்ட அப்பளத்தின் நிலை போன்று அல்லாது காற்றுப் போன அப்பளமான நிலையில்தான் இருக்கும் என்றே எதிர்வு கூறமுடியும்.

நன்றி :வீரகேசரி வாரவெளியீடு 10-03-2013





No comments:

Post a Comment