Saturday, April 13, 2013

அமைச்சர் ஹக்கீமின் அம்புலி மாமா கதை!
  
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

எமது சிறியபராயத்தில் நமது அம்மா, அப்பா எங்களை வீட்டுக்கு வெளியே செல்லாமல் தடுப்பதற்காக ஒரு சன்னியாசி கதை கூறுவார்கள், அதாவது, “அந்தா வாரன் சந்நியாசி, இந்தா வாரான் சந்நியாசி “ என்று கூறி எம்மைப் பயம் காட்டி வீட்டுக்குள் வைப்பார்கள். இந்தக் கதை இன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட அமெரிக்கப் பிரேரணையின் இறுதி நிலையை ஞாபகப்படுத்துகிறது. நடைபெற்று முடிந்த ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்தே அமெரிக்கப் பிரேரணை தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இது ஒரு சாராருக்கு கிடுகிடுப்பையும் இன்னொரு சாராருக்கு கிளுகிளுப்பையும் நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும்.

இம்முறை அமெரிக்காவினால் சமர்ப்பிக்கவுள்ள பிரேரணைக்கு இரண்டு கால்கள்தான் உள்ளன என்று சிலர் கூறினாலும்.. இல்லை.. இல்லை அதற்கு மூன்று கால்கள் உள்ளன என்று கூறி அதனை மிகைப்படுத்தி சந்தோஷம் அடைந்தவர்களும் இல்லாமல் இல்லை. கற்பனையில் அந்தப் பிரேரணையைக் கடுமைப்படுத்திப் பார்த்தவர்கள் அநேகர். இவ்வாறானதொரு மிகையான எதிர்பார்ப்புகள் ஆரூடங்கள், அளவு கடந்த நம்பிக்கைகள் போன்றனவற்றுடன் காணப்பட்ட அமெரிக்கப்  பிரேரணையின்  இறுதி வடிவமானது பெரிதாகப் பேசப்பட்ட அளவுக்கோ பேசப்படும் நிலையிலோ அமையவில்லை. அதேவேளை, இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் ஓரளவு நிம்மதிக்கு வழிவிட்டுள்ளது என்றும் கூறலாம். அந்தளவுக்கு இந்தப் பிரேரணையானதுவலுவிழந்து காணப்படுகிறது.

தமிழர் தரப்பைப் பொறுத்த வரையில், அவர்களின் எதிர்பார்ப்புடன் ஒப்பிடும் போது இது ஒரு பலத்த ஏமாற்றம் என்றே  கூறமுடியும். அமெரிக்கப் பிரேரணையின் மென்மைத்தன்மை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் தங்களது அதிருப்தியினை முன்பிருந்தே தெரிவித்து வந்த நிலையில், இலங்கை அரசாங்கம் கூட அது எதிர்பார்த்திராத அளவு மென்மைத்தன்மை கொண்டநீர்த்துப் போன இந்தப் பிரேரணைக்குக் கூட தனது  வெறுப்பை வெளிக்காட்டியுள்ளது. இது கூட தேவை இல்லை என்பதே அரசின் கருத்தாகவுள்ளது. இருப்பினும் இலங்கைக்கு இந்தப் பிரேரணை ஒரு வெற்றி என்றே கூறலாம்.

குறித்த பிரேரணையில் ஆரம்பத்தில் காணப்பட்ட வீரியம் பின்னர் எவ்வாறு இழக்கச் செய்யப்பட்டது என்பது தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். விசேடமாக, உள்ளுர் மற்றும், வெளியூர் தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இந்த விடயத்தில் இந்தியாவையே சந்தேகக் கண்ணோடு நோக்குவதனை அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது. இந்தப் பிரேரணையை மேலும் வலுவாக்குவதோ அல்லது வலுவிழக்கச் செய்வதோ இந்தியாவின் கையில்தான் உள்ளது என்ற உண்மையான அதீத நம்பிக்கை இவர்களிடம் காணப்பட்டது.

கால அவகாசம் இருந்த போதே குறித்த பிரேரணையில் திருத்தங்களைச் செய்தோ அல்லது மேலதிக விடயங்களைச் சேர்த்தோ அதனை வலுப்படுத்தக் கூடிய பல சந்தர்ப்பங்களை இந்தியா தவற விட்டு விட்டு, இறுதிக் கட்டத்தில் உள்ளுர் அரசியல் நிலைவரங்களைக் கருத்தில் கொண்டு சில  திருத்தங்களை புதுடில்லி அரசு செய்ய முயற்சித்தும் அது கைகூடாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. இது இந்தியாவால் தெரிந்து செய்யப்பட்ட தவறு.

இந்தியாவைப் பொறுத்த வரையில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க வேண்டுமென திரிகரணசுத்தியுடன் செயற்பட்டிருந்தால்  இன்று இவ்வாறான எந்த நிலைமையும் எழுந்திருக்காது. இவ்வாறானதொரு பிரேரணைக்கான எந்தத் தேவையும் கூட ஏற்பட்டிருக்காது. என்பதனையும் மனதில் கொள்ள வேண்டும். தேசிய நலனை நோக்கிய இந்தியாவின் பிராந்திய ஆதிக்கவாதம்மற்றும் காலூன்றல்கள் போன்றன மிகை ஓங்கி நின்றமையும் இன்று இந்த நாட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகள் பூதாகாரம் பெற்றதற்கான பிரதான காரணம் என்றே கூறலாம்.
ஆகவே, பூகோளப் படத்தில் எந்தநாட்டை நம்பினாலும் சரி, ஆனால் இந்தியாவை மட்டும் நம்பி தமிழர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணமுடியும் என யாரேனும் நினைத்தால் அது  இலங்கை – இந்திய நாடுகளின் அண்மைக்கால வரலாறு மற்றும் வலுவான நட்பு தொடர்பில் அவர்கள் எதனையும் அறியாதவர்கள் என்றே கூறமுடியும்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றுக்குப் பல தரப்பாலும் அழுத்தம் கொடுக்கப்படும் ஒரு நிலைமையையே  நாம் அண்மைக் காலமாக அவதானித்து வருகிறோம்.ஆனால், வன்னி யுத்தகள அவலங்களை இந்தியா அன்றே தடுத்திருந்தால் இவ்வாறானதொரு சர்வதேச விசாரணைக்கான தேவை இன்று ஏற்பட்டிருக்குமா என்பதும் சந்தேகமே. முன்னால் நீட்டிய கையில் புல்லையும் பின்னால் மறைத்து வைக்கப்பட்ட கையில் கத்தியையும் வைத்துக் கொண்டு கசாப்புக் கடைக்காரன் பசுமாட்டை அழைப்பது போன்றே தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு அமைந்துள்ளது.முள்ளிவாய்க்கால் கதறல்களைத் தடுக்க முடியாத இந்தியா,குண்டடிபட்டு, குடல் கிழிந்து தமிழன் சாவதற்குக்ஆயுதங்களை வழங்கிய வரலாற்றினை மறந்து விட முடியாது.

முள்ளியவாயக்காலில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் வரையில் தமிழர் தரப்பால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், கெஞ்சல்களைக் கூட காதில் போட்டுக்கொள்ளாத இந்தியா மீது இன்னும் நம்பிக்கை வைத்திருப்பது என்பது வாத்து பொன் முட்டையிடும் வரை பார்த்துக் கொண்டிருப்பதற்கு ஒப்பானதே.
இன்று இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் தனது கால்களை ஊன்றிக் கொண்டு தனது நாட்டின் தேசிய நலன்களின் ஒரு மையப் புள்ளியாக இலங்கையைக் கணிக்கும் இந்தியாவானது இலங்கைக்கு எதிரான கடுமையான தொனி கொண்ட எதனையும்செய்யவோ ஆதரிக்கவோ போவதில்லை என்பதனையும் இங்கு கூறிக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலே அமெரிக்கப் பிரேரணைக்கு நிகழ்ந்த கதியையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா நினைத்திருந்தால் அமெரிக்கப் பிரேணையை மேலும் வலுவாக்கியிருக்கலாம். ஆனால், அதனை நிச்சயமாக இந்தியா செய்யமாட்டாது என்பது மட்டும் உண்மை. இலங்கைக்கு எதிராக கடுமையாகச் செயற்பட்டால் தனது பிராந்திய வல்லாதிக்கம் கெட்டுப் போய் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆதிக்கம் இலங்கையில் ஓங்கி விடும் என்ற தனது ராஜதந்திர நகர்வை இந்தியா இலங்கைத் தமிழர்களுக்காகக் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயம்.

தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளே தமது மத்திய அரசை ஏதோ வகையில் விரட்டிப் பார்த்தும் கூட அதனையே கருத்தில் கொள்ளாத இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்காக எதனையும் இழக்குமா என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டியது. இந்திய மத்திய கூட்டரசாங்கத்தின் முக்கிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் கூட அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு தனது அமைச்சர்களையும் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வைத்தது. அந்த இராஜினாமாக்களைக் கூட இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட நிலையில், இலங்கையிலுள்ள தமிழ்த் தலைவர்கள் கோரிக்கையை ஏற்று இங்குள்ள தமிழர்களுக்கு இந்தியா உதவுமா என்பதனை மேடை போட்டு, கூட்டம் கூடி விவாதிக்க வேண்டிய தேவையே இல்லை.

போர் முடிந்து நான்கு வருடங்களாகும் நிலையில் இந்தியாவினால் இலங்கைத் தமிழருக்கு எதனைச் செய்ய முடிந்து? ஐம்பதாயிரம் வீடுகளையும் சில உதவிகளையும் வழங்கி விட்டு இலங்கைத் தமிழர் விடயத்தில் நாங்கள் மிக அவதானமாகவும் கரிசனையுடனும் இருக்கிறோம். அவர்களின் நலன்களை நாங்கள் கவனித்து வரும்கிறோம் என்று பறையடிப்பதான் தமிழர் பிரச்சினைக்கு வழங்கக் கூடிய தீர்வா? அல்லது அழுத்தமா?
தமிழர் பிரச்சினைக்கான முழுமையான தீர்வுக்கு 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுலாக்க வேண்டும். இது தொடர்பில் இலங்கை அரசுடன் பேசி வருகிறோம் என்று கடந்த நான்கு வருட காலமாக அறிக்கை விடுவதே புதுடில்லிக்குப் பழகிப் போன விடயம்.

ஆகவே, இலங்கையிலுள் தமிழ் தலைமைகள் தொடர்ந்தும் இந்தியாவை நம்பிக் கொண்டிருப்பதும் அவர்களால் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமெனதொடர்ந்தும் இலவு காத்த கிளியாக எதிர்பார்த்திருப்பதும் தற்போது எஞ்சிப் போயுள்ள தமிழர்களின் தாயகப் பிரதேசங்களையும் இல்லாமல் செய்து விடும் நிலையைத் தோற்றுவிக்கலாம். நிச்சயமாக இலங்கை அரசை எதிர்த்துக் கொண்டு இந்தியா எதனையும் செய்யப் போவதும் இல்லை. அதேபோன்று எதிர்காலத்தில் இலங்கை அரசை எதிர்த்துக் கொண்டு தமிழர் தரப்பால் எதனையும் செய்யவும் முடியாது என்றதொரு நிலைக்கான களநிலைப் பரிசோதனையின் முடிவு தற்போது கிடைத்துள்ளது. இந்த விடயத்தில் தமிழர் தரப்பு தெளிவு பெற வேண்டிய காலம் இது. அதற்கேற்ற வகையிலான எதிர்கால முன்னெடுப்புகளே இனித் தேவை. நம்பிக் கெட்ட சமூகம் தமிழர் சமூகம் என்பதனை அமெரிக்கப் பிரேரணையில் இந்தியாவின் பங்களிப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழர்களுக்கு உரிய தொப்பிள் கொடி உறவானது தமிழகத்துடன் மட்டும் இருக்கட்டும். அது புது எல்லிய வரை நீண்டு விடக் கூடாது என்ற வியடத்தையும் இந்திய மத்திய அரசு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு  17-03-2013


No comments:

Post a Comment