ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா உட்பட பல்வேறு அமைப்புகள் செயற்பட்டு வருவதனைக் கண்டித்து அண்மையில் ஒரு நாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் இது இடம்பெறுமென ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டாலும் இறுதியில் சில மாவட்டங்களையும் சில பகுதிகளையும் மையப்படுத்தியதாக மட்டுமே இந்த ஒருநாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
விசேடமாக, முஸிம்கள் செறிந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அன்றைய தினத்தின் வழமையான செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டிருந்தன. அதிலும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஹர்த்தால் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
இது தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் சிற்சில இடங்களில் மட்டும் ஓரளவான ஹர்த்தாலே அனுஷ்டிக்கப்பட்டது. சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் பகுதிகளில் இந்த ஹர்தாலுக்கே இடமில்லாமல் போயிருந்த நிலைமையை அவதானிக்க முடிந்தது. இவ்வறான பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் தங்கள் இனத்துக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து தாங்களும் ஹர்த்தாலை அனுஷ்டிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளின் போது தங்களைக் காப்பாற்ற எவரும் வரமாட்டார்கள் என்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்தனர். இதன் காரணமாகவே அவர்கள் இந்த விடயத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடித்ததுடன் அந்தளவுக்கு அவர்கள் முஸ்லிம் அரசியல் தலைமைகளில் நம்பிக்கை இழந்தும் காணப்பட்டனர்.
கொழும்பில் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படப் போகிறது. அதுவே முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறை குறித்த செய்தியை சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தப் போகிறது என்றெல்லாம் மிகையான நம்பிக்கையுடன் இருந்தவர்கள் அன்றைய தினம் பலத்த ஏமாற்றமடைந்தனர். வழமையாகப் பத்து மணிக்குத் திறக்கப்படும் பிரபல முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் கூட அன்றைய தினம் தங்களது நடவடிக்கைகளை அரை மணி நேரத்துக்கு முன்னரே ஆரம்பித்திருந்தனையும் காணக் கூடியதாக இருந்தது. இவ்வாறானதொரு நிலை ஏற்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அமைச்சர் பௌஸி கடையடைப்புச் செய்ய வேண்டாம் என பகிரங்கமாகவே அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது தவிர, கொழும்பில் இந்த ஹர்த்தால் பிசுபிசுத்துப் போனதற்கு வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன. அரச இயந்திரத்தின் அழுத்தம். வெவ்வேறு வழிகளான எச்சரிக்கைகள் என பல்வேறு காரணங்களினாலேயே கொழும்பில் ஹர்த்தால் அனுஷ்டிக்க முடியாது போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் ஹர்த்தாலை ஏற்பாடு செய்தவர்களே ஒளிந்து மறையும் நிலையும் ஏற்பட்டது. கொழும்பு அரசியலின் சக்தி இந்த விடயத்தில் முழுமையாக வெளிப்பட்டதனை அறியக் கூடியதாகவிருந்தது.
ஆனால், கிழக்கு மாகாண நிலை முற்று முழுதாக மாறுபட்டே காணப்பட்டது. இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்கக் கூடாது என சில முஸ்லிம் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த விடயத்தில் கிழக்கு மாகாண அரச தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களை அடக்கியே வாசித்தார்கள். அம்பாறை தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் ஜனாதிபதி உட்பட் அமைச்சர்கள் பட்டாளமே கலந்து கொண்டிருந்த நிலையில் தங்களது பிரதேசத்திலேயே ஹர்த்தாலா? தமது தலைமை தம்மைப் பற்றி எவ்வாறெல்லாம் நினைக்குமோ என்ற அச்ச உணர்வுடன் காணப்பட்டாலும் ஹர்த்தாலை தடுத்து நிறுத்த அவர்கள் முன்வரவில்லை. அதற்கான அர்த்தம் ஹர்த்தாலுக்கு அவர்கள் ஆதரவளித்தார்கள் என்பது அல்ல. ஹர்த்தால் நடத்தக் கூடாது என தாங்கள் வேண்டிக் கொண்டாலும் அந்தக் கோரிக்கை கிழக்கு முஸ்லிம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதில் அவர்கள் ஐயம்திரிபுற நம்பிக்கை கொண்டிருந்தனர். அவ்வாறானதொரு வேண்டுகோள் விடுக்கப்பட்டு அது நிராகரிக்கப்பட்டால் தங்கள் மீது மிச்சம் மிகுதியாகவுள்ள மக்கள் செல்வாக்கு எப்படியானது என்பது அம்பலமாகிவிடும் என்பதனையும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். அது மட்டுமின்றி, அம்பாறை நகரிலுள்ள ஜனாதிபதிக்கே இந்த விடயம் தெரிந்து போனால் அது பெரிய வெட்கக் கேடான விடயமாகி விடும் என்பதும் அவர்களது நேர்மையான எண்ணம்.
எது எப்படியிருப்பினும், கிழக்கு மாகாணம் விசேடமாக, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் இந்தக் கடையடைப்பின் மூலம் அரசுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியைத் தெரிவித்து விட்டனர். இந்த நாட்டு முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறை குறித்து இப்போது சர்வதேசமும் அறியத் தொடங்கியுள்ளது.
ஆகவே, அரசாங்கம் இந்த விடயத்தை சிறியதாகக் கருதக் கூடாது. தமிழ் மக்களின் ஆரம்ப காலப் போராட்டங்களும் இவ்வாறானதொரு அஹிம்சை வழியிலேயே முன்னெடுக்கப்பட்டன. அது பின்னர் கூர்மைப்படுத்தப்பட்டதற்கான பொறுப்புகள் அனைத்தும் சிங்கள அரசாங்கங்களையே சார்ந்தது.
இதேவேளை, தென் கிழக்குப் பிரதேசம் தற்போது முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பூமியாக மாறி வருவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இந்தப் பிரதேசங்களைக் கொண்டு இன்று தாயகக் கோட்பாடு ஒன்று உருவாகி வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி வடக்கு, கிழக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது ஹர்த்தால் நடத்தாமல் கார்ட் போர்ட் வீர்ர்களான அஸாத் சாலியும் முஜிபுர் ரஹ்மானும் எங்கிருந்தனர் என்றும் ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது. கசப்பான நிகழ்வுகளை மறந்து ஐக்கியப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு மத்தியில் மேலுமொரு பிரிவினைக்கு வேட்டு வைக்கும் முயற்சியாகவே ஹெல உறுமயவின் இந்தக் கூற்றை நோக்க வேண்டும்.
அது மட்டுமின்றி, ரவூப் ஹக்கீம், பிரபாகரனுடன் உடன்படிக்கை ஒன்றினைச் செய்து செய்து கொண்டு இந்த நாட்டு முஸ்லிம்களைக் காட்டி கொடுத்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து பேசவும் இந்த அஸாத் சாலியாலும் முஜிபுர் ரஹ்மானாலும் முடியாமல் போனது ஏன் என்ற கேள்வியை ஹெல உறுமய எழுப்பியுள்ளது.
அப்படியாயின், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைர் வேலுப்பிளை பிரபாகரனும் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடன்படிக்கை ஒன்றினைச் செய்து கொண்ட போது இந்தச் சிங்கள பௌத்த கடுங்கோட்பாளர்கள் ஏன் மெளனியாக நின்றார்கள் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. ஏன் அவர்கள் அன்று ரணிலின் சிங்கள அரசுக்கு எதிராகத் திரண்டெழுவில்லை என்றும் கேட்கத் தோன்றுகிறது. சிங்கள மக்களை பிரபாகரனிடம் ரணில் காட்டிக் கொடுத்து விட்டார் என்று ஏன் அவர்கள் கொக்கரிக்கவில்லை.
நியாயத்தின் அடிப்படையில் கருத்துகளைத் தெரிவிக்காமல் ஒருதலைப்பட்சமாக இவ்வாறெல்லாம் தெரிவிப்பதானது எந்த வகையிலும் மனு நீதி கொண்ட விடயமல்ல.
இது இவ்வாறிருக்க, அமைச்சர் அஷ்ரஃப் காலத்தில் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்கள் கிழக்கு மாகாணத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக பொதுபல சேனா அமைப்பு இன்னொரு புதிய கதையைக் கூறியுள்ளது. 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது கதிர்காம அழகி மனம்பேரி நிர்வாணமாக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் கூர்மையடைந்த ஜே.வி.பியின் பேராட்டம் 1989 இறுதிக் காலம் வரை இந்த நாட்டில் இடையிடையே தொடர்ந்த போதெல்லாம் அவர்களால் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம் ஜே.வி.பி யினரால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை வழங்கியவர்கள் யார்? அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் கொண்ட கொள்கலன்கள் எவ்வாறு வந்தன என்பது தொடர்பில் பொதுபல சேனா ஏன் புலனாய்வை நடத்தவில்லை? மாத்தளை வைத்தியசாலை காணியில் தோண்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனித எச்சங்ளுக்குரியவர்களின் இறப்புக்கான சூத்திரதாரிகள் யார்? பொதுபல சேனாவின் புலனாய்வுக் கண்ணாடிக்குள்ள ஜே.வி.பியின் அட்டகாசம் தெரியாமல் போனது விசித்திரமானதே.
மாளிகாவத்தையிலிருந்து கிழக்கு முஸ்லிம்களைத் தூண்டி விடுவதாக ஹெல உறுமய கூறுகிறது. ஆனால், இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, அதே மாளிகாவத்தை பிரதேசத்திலுள்ள ஒரு பௌத்த விஹாரையின் காணியிலிருந்து பாதுகாப்புப் படையினரால் நவீன ஆயுதங்கள் ஒரு தொகை கைப்பற்றப்பட்டனவே அவைகள் எந்தக் கொள்கலன்களில் யாரால் யாருக்குக் கொண்டு வரப்பட்டன என்பதனையும் ஹெல உறுமய விளக்க வேண்டும்.
இவ்வாறான நச்சுக் கருத்துகள், அடிப்படையற்ற தகவல்களைக் பகிரங்கமாகக் கூறும் போது அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பது இந்த பொதுபல சேனாவுக்கும் ஹெல உறுமயவுக்கும் தெரியாத விடயமல்ல. பனை மரத்துக்குக் கீழ் நின்று பாலைக் குடிப்பவனைப் பார்த்து கள்ளைக் குடிக்கிறான் எனக் கூறும் போது சிலவேளைகளில் அதன் பின் அவன் கள்ளே குடித்து கெட்டுப் போகும் நிலைக்கு அவன் தள்ளப்படுவான் என்பதனையும் இந்தச் சேனாவும் உறுமயவும் தெரிந்தே வைத்துள்ளன.
இது இவ்வாறிருக்க, அண்மைக் காலமாக இலங்கை முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடாவடிகள், அபாண்டங்கள் குறித்து அரசாங்கம் ஒற்றைக் கண்பார்வையுடனேயே தொடர்ந்தும் உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தோற்றுவாய்கள் தொடர்பில் சிங்கள அரசு தலைமைகள் நன்றாகத் தெரிந்துள்ள நிலையிலும் இன்னுமொரு இனத்தின் மீதான அடக்குதலின் ஆரம்ப வெளிப்பாடுகள் குறித்து மௌனித்திருப்பது இனவாதிகளுக்கு உற்சாகத்தையே அளிக்கும் என்பதனை அரச தரப்பார் அறியாமலும் இல்லை.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீத் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். அதாவது, அடுத்த ஜெனீவா கூட்டத் தொடரில் முஸ்லிம்களும் ஒரு தரப்பினராக இருக்க வேண்டும் என்ற பொதுபல சேனாவின் நோக்கம் நிறைவேற வேண்டுமா? இல்லையா? என்பது அரசின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதே அவரது கருத்தாகும். இது சில வேளைகளில் சாத்தியப்படவும் முடியும்.
ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நயவஞ்சகத்துடன் நடந்து கொள்ளாமல் இருந்திருப்பின் இந்நாட்டு முஸ்லிம்களின் இன்றையப் பிரச்சினைகள் சிலவேளைகளில் முன்னரே சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதனையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹமீத் புரிந்து கொள்ளவும் வேண்டும்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 31-03-2013

No comments:
Post a Comment