ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ?
கிழக்கு மாகாண சபை தூங்கி வழிகிறதா?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கிழக்கு மாகாண சபை ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்தச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இழுபறிகள், தாமதங்களுக்கு மத்தியில் நிறுவப்பட்ட இந்த மாகாண சபை தொடர்பில் அதிருப்தியான கருத்துகள் இப்போது உள்ளிருந்தே வெளிப்படுத்தப்படுகிறது.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநர் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவ்வாறான குற்றச்சாட்டுகள் தற்போது சபையை ஆளுபவர் மீதே ஆளுந்தரப்பினராலேயே முன்வைக்கப்படுகின்றன. அதிலும் இந்த விவகாரங்கள் அனைத்தும் பெரும்பாலும் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் தரப்பினர் பக்கமிருந்தே எழுந்துள்ளன.
கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் அமைச்சர்கள் தொடக்கம் அதன் உறுப்பினர்கள் வரை இன்று சபை நிர்வாகத்தில் வெறுப்படைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளுநர் தங்களது அதிகாரங்களையும் அவிபிருத்திப் பணிகளையும் தடை செய்கிறார் என்று கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மறைந்து, மாற்றமடைந்து இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரே தங்களுக்கு வில்லனாகிப் போய்விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் மேலோங்கியுள்ளன.
கிழக்கு மாகாண முதலமைச்சரான நஜீப் ஏ. மஜீத், அபிவிருத்திப் பணிகளைச் செய்கிறார் இல்லை. தங்களைச் செய்யவும் விடுவதில்லை என்றும் அவர் மீது இப்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுவும் இந்த அரசின் உறுப்பினர்களும் ஆதரவாளவர்களுமே இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ். அமீர் அலி இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவரால் அடுக்கடுக்காகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாமானவை என்பதனை ஏனைய முஸ்லிம் கட்சி உறுப்பினர்களும் விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்துவோர் திரைமறைவில் ஏற்றுக் கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக் கருத்துத் தெரிவித்திருந்த அமீர் அலி இவ்வாறு கூறியுள்ளார். “ கிழக்கு மாகாண சபை தூங்கிக் கொண்டிருக்கிறது. பிள்ளையான் காலத்தில் சுறுசுறுப்பாக இயங்கிய கிழக்கு மாகாண சபை இன்று முடங்கிப் போயுள்ளது. அபிவிருத்தி என்பது மருந்துக்கும் இல்லை. இவ்வாறாதொரு நிலையில் கிழக்கு அரசியலில் நாம் விரும்பியோ விரும்பாமலோ திடீர் மாற்றம் ஒன்று ஏற்பட்டால் அது தேசிய அரசியலில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும்” என அவர் கூறியுள்ளார்.
அரச சார்பு முக்கியஸ்தரான அமீர் அலி இவ்வாறு கூறியிருப்பதனை வேறு சில முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களின் கூற்றுப் போன்று சாதரணமானதொரு விடயமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது என்பதனை அவரது வார்த்தைப் பிரயோகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
முதலமைச்சர் தொடர்பில் அவரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் மிகப் பாரதூரமானவை. கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அது முஸ்லிம் மாகாண சபை அல்ல. மூன்று இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சபையாகும். அமீர் அலியின் இந்தக் குற்றச்சாட்டுகள் ஏனைய இனங்களின் பிரதிநிதிகளையும் கூடச் சிந்திக்க வைக்கக் கூடியவை. விசேடமாக, கிழக்கு மாகாண சபையில் தமிழ் அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையிலும் அந்த மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்காக தனது சபை தேவையானவற்றை முன்னெடுக்கும் என்று தற்போதைய முதல்வர் நஜீப் ஏ மஜீத் முன்னர் கூறியிருந்தார். ஆனால், இன்று நிலை இவ்வாறு மாற்றமடைந்துள்ளதன் காரணமாக தமிழ் மக்கள் கூட சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாகண சபையின் முதலமைச்சர் நஜீப் மஜீதின் நடவடிக்கைகள்
தொடர்பில் ஸ்ரீலங்கா முஸலிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், அவர்கள் அதனை அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு இரு காரணங்கள் உள்ளன.
தொடர்பில் ஸ்ரீலங்கா முஸலிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், அவர்கள் அதனை அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு இரு காரணங்கள் உள்ளன.
1. நஜீப் ஏ மஜீதை முதல்வராக்குவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஹக்கீமுடன் இறுதியாகக் கலந்துரையாடி போது, அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் ஹக்கீம் ஏற்றுக் கொண்டமை,
2. கிழக்கின் முதல்வராக அமீர் அலியை நியமிக்க வேண்டும் என ஏனைய இரு முஸ்லிம் கட்சிகள் சிபார்சு செய்திருந்த போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அதனை முற்றாக நிராகரித்தமை .
ஆகிய இரு காரணங்களினாலுமே முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த விடயத்தை அடக்கி வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களால் ஆமோதிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட முதலமைச்சரால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்றைய நிலைமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிப்படையாக அதிருப்தியினைத் தெரிவித்தால் அது வெட்கம் கெட்ட வேலையாகி விடும் என்பதுடன் அது தங்களையே மாறி அடிக்கும் என்பதனையும் அவர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை, கிழக்கு முதல்வர் தொடர்பில் அமீர் அலி முன்வைத்த கருத்துகளை தாங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையிலும் அதனைப் பகிரங்கமாகக் கூறினால் தங்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரின் கருத்தினை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதாக முடிந்து விடும் என்ற கௌரவச் சிக்கலும் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது.
இருப்பினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான அமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு மாகாண சபையால் எதனையும் செய்ய முடியவில்லை என்பதனை வெளிப்படையாகவே கூறியுள்ளதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் அதேபோன்று ஆளுந்தரப்பைச் சேர்ந்த அமைச்சரான விமலவீர திசாநாயக்க, கிழக்கின் முதல்வர் எதனையும் செய்வதாக இல்லை என்று குமுறியிருக்கிறார்.
எது எப்படியிருப்பினும் கிழக்கின் ஆளுநரான சிங்கள இராணுவ அதிகாரி மீது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் குற்றம் சாட்டுவதிலிருந்து இன்று அவர் பாதுகாக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கிடையிலேயே அதிகார இழுபறிகளும் அபிவிருத்தியில் படுகுழிகளும் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே உணரப்படுகிறது. ஆனால், ”ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா” என்பதனையும் நாம் இங்கு மறந்து விட முடியாது.
இது ஒருபுறமிருக்க, நஜீப் ஏ மஜீதை முதல்வராக நியமிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய ஆதரவானது யானை தன் தலையில் தானே மண்ணைப் வாரிப் போட்டதற்கு ஒப்பான செயலாக இப்போது தெரிவதாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை கிழக்கு முதல்வராக நியமித்தால் கிழக்கு மாகாணத்தில் தனது செல்வாக்கு கேள்விக்குறியாகி விடும் என்பதற்காகவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த அமீர் அலியை முதல்வராக நியமித்தால் அது தனக்குச் சவாலாகி விடும் என்பதற்காகவும் அமைச்சர் ஹக்கீமினால் சிந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலான தீர்மானத்தின்படியே நஜீப் ஏ மஜீதுக்கு ஆதரவு வழங்கியிருந்த நிலையில் அந்த முதல்வர் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார் என்பது உண்மையானால் இதற்கான முழுப் பொறுப்பையும் அமைச்சர் ஹக்கீமே ஏற்க வேண்டும்.
இதேவேளை, தான் கிழக்கு மாகாண சபையின் முதல்வராக செயற்படும் அதேவேளை, அவிபிவிருத்திப் பணிகளைச் செய்யாமலும் செய்ய விடாதும் இருப்பதன் மூலமாக அரசின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி அரசிடம் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்ள முடியும் என கிழக்கு முதல்வர் நினைத்துச் செயற்படுவாரானல் அதற்கு அடுத்த தேர்தலில் மக்கள் தகுந்த பதிலை வழங்குவர் என்பதனையும் இங்கு கூறவேண்டும்.
இது இவ்வாறிருக்க, கிழக்கு அரசியலில் நாம் விரும்பியோ விரும்பாமலோ திடீர் மாற்றம் ஒன்று ஏற்பட்டால் அது தேசிய அரசியலில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும் என அமீர் அலி தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு மாற்றம் விரைவாக எப்போது இடம்பெறப் போகிறது என்பதும் இப்போது பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள கேள்வியாகும். அவ்வாறானதொரு மாற்றமானது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான தமிழ் பேசும் மக்களால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் எதிர்பார்க்கப்பட்டது போன்று அமையுமா? அந்த மக்களின் அபிலாஷையை நிறைவேற்றக் கூடியதாக இந்த மாற்றம் இருக்குமா? இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதான பாத்திரம் வகிக்குமா என்பது குறித்த கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.
ஆக, கிழக்கு மாகாண சபை தொடர்பில் அமீர் அலியால் எதிர்வு கூறப்பட்டுள்ள மாற்றம், நிச்சயமாக தமிழ்பேசும் மக்களுக்கு ஏமாற்றமாக அமையக் கூடாது என்பதனை இங்கு தெரிவிக்கவே வேண்டும்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 21-04-2013
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 21-04-2013


No comments:
Post a Comment