Friday, May 10, 2013


வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினையில் அமைச்சர் றிஷாத் தனித்து விடப்பட்டது ஏன்?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டு வன்னிப் போர் முடிவுற்ற பின்னர் வடபுலத்தில் இடம்பெற்று வரும் பல விரும்பத்தகாத சம்பவங்களுடன் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்குத் தொடர்பிருப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமின்றி தமிழ் மக்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் மீள்குடியேற்றம், தமிழ் அகதிகள் மீள்குடியேற்றம், காணிப் பகிர்வு, காணிகள் ஆக்கிரமிப்பு, இந்திய வீடமைப்புத் திட்ட பங்கீடு, இறுதியாக முல்லைத்தீவில் தமிழ் மக்களின் சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டே வருகின்றன.

இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீனும் பதிலளித்தே வருகிறார். அண்மையில் முல்லைத்தீவு மாட்டத்தில் தமிழ் மக்களின் சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பில் ஊடகவியலாளர் மகாநாட்டை நடத்தி இந்தச் சம்பவத்துடன் தான் தொடர்பில்லை எனக் கூறியிருந்தார். யுத்த இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்காலிலிருந்து வந்த தமிழ் மக்களுக்கு முஸ்லிம்களின் பேரீத்தம் பழத்தை தான் கொடுத்து அவர்களுக்கு உதவியதாகவும் அவர் கூறியிருந்தார்.

எது எப்படியோ இந்த விடயங்கள் தொடர்பில் அலசுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. இப்போது எழுந்துள்ள இந்த நிலைமைகள் தொடர்பில் ஏனைய முஸ்லிம் கட்சிகளின் விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? அதன் போக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை அலசிப் பார்ப்பதே இந்தக் கட்டுரை நோக்கம்.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் வடமாகாணத்தைச் சேர்ந்தவர். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்பதற்காக அவர்தான் வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையில் தலையிட வேண்டுமென்பது சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்ட விடயம் அல்ல. இலங்கை முஸ்லிம்களின் பிரதான கட்சியாகவும் அவரது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பேசப்படவில்லை. ஆனால், வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பில் ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் பாராமுகமாகச் செயற்படுவதன் காரணமாகவே தான் இந்த விடயங்களில் தலையிடுவதாக அவர் வாதிட்டால் நிச்சயம் அதனை ஏற்றுக் கொண்டே ஆக  வேண்டும். உண்மையும்  அதுதான்.
 
இவ்வாறானதொரு நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் மௌனம் காக்கிறது என்பதே இன்றைய கேள்வியாகும். தமிழர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது போல, முஸ்லிம்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்தக் கட்சி வடபுல முஸ்லிம்கள் குடியேற்றம், காணிப் பங்கீடு, இந்திய வீடமைப்புத் திட்ட பங்கீடு தொடர்பில் தனது பங்களிப்பைச் செய்யாமல் இருப்பது ஏன்? முஸ்லிம் காகிரஸின் தலைவரும் ஒரு சிரேஷ்ட அமைச்சராக இருக்கிறார்.  எனவே, அவர் வடபுல முஸ்லிம்களின் விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்து பேசி புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுப்புடனும் செயற்பட்டு இரு சமூகங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாமல் தீர்வினைக் காணும் விடயத்தில் தன்னை ஈடுபடுத்தி இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க ஏன் முன்வரவில்லை என்ற கேள்வி இப்போது மேலாங்குகிறது. 

வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் அமைச்சர் றிஷாத்தின் இக்கட்டான நிலையையும் கருத்தில் கொண்டும் இவற்றில் தன்னை ஈடுபடுத்தி சுமூகத் தீர்வினை ஏன் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கக் கூடாது?
இந்த விடயங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வதன் மூலம் வடபுலத்தைச் சேர்ந்த இரு சமூகங்களுக்கு மத்தியில் மேலும் கசப்புணர்வு ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடும். வடபுலத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் முஸ்லிம்களுக்காகப் போராடினாலும் இப்போதுள்ள நிலையில் அவரால் எதனையும் செய்ய முடியாது. மறுபுறத்தில் அவர் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே  செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இன்று  முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலே தனித்து, ஒதுக்கி விடப்பட்டுள்ளாரோ என்ற சந்தேகங்களும் தோற்றம் பெற்றுள்ளன.

தற்போது வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கண்ணோட்டத்துடன் நோக்குகிறதா? அதாவது, அமைச்சர் றிஷாத்துக்கு எதிரான இன்றைய வடபுல நிலைப்பாடு மேலும் வலுப்பெற்று அவர் அரசியலிலிருந்து ஓரம் கட்டப்பட வேண்டுமென்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதனை கருத்தில் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மௌனம் காக்கிறதா? அல்லது வடபுல முஸ்லிம்கள் தொடர்பில் இந்தக் கட்சி தனது அக்கறையீனத்தை அம்பலப்படுத்துகிறதா? அதுவும் இல்லையெனின் வடபுலத்தில் வாழக் கூடிய தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளும் பிரச்சினைகளும் தொடர்ந்து இருக்க வேண்டுமென இந்தக் கட்சியின் தலைமை விரும்புகிறதா? அப்படியும் இல்லையென்றால் கட்சி வேறுபாட்டுடன் முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தை நோக்கிறதா? இவை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும். 

பொத்துவிலில் பௌத்த விஹாரை ஒன்று அமைப்பது தொடர்பான பிரச்சினை அண்மையில் எழுந்தபோது அமைச்சர் ஹக்கீம் ஒரு குழுவுடனேயே அங்கு சென்று முகாமிட்டு அனைத்துத் தரப்பினருடன் பேசி சுமூக நிலையை ஏற்படுத்தியது போன்று வடபகுதிக்கும் சென்று சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி இந்த விவகாரத்திலும் சுமூக நிலையை ஏன் ஏற்படுத்தக் கூடாது? 

இதனை விடுத்து வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டும். முஸ்லிம்களுக்கும் இந்திய வீடுகள் வழங்கப்பட  வேண்டும் என்றெல்லாம் வெறும் சாட்டுக்காக முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை விடுவதில் அர்த்தமிலை. இன்று வடபுலத்தில் ஏற்பட்டுள்ள இந்த முறுகல் நிலை தொடர்பில் கவனம் செலுத்துவது முஸ்லிம் காங்கிரஸுக்கு ஹலாலாக்கப்பட்ட விடயம். 

வடபுலத்தில் வாழக் கூடிய தமிழர்களும் முஸ்லிம்களும் அமைதியாகவும் சமாதானமாக சந்தேகமின்றி வாழுவதற்கான சூழலை கட்டி எழுப்புவதில் முஸ்லிம் காங்கிரஸ் ஏன் முன்னின்று செற்படக் கூடாது? அரசியல் இலாபத்துக்காக இரண்டு சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளையும் மனக் கசப்புகளையும் யாரும் ஏற்படுத்தக் கூடாது. 

அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ஹக்கீம் அந்த மாவட்டத்தில் தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேறிய முஸ்லிம்களை அவர்களது இடங்களில் மீள்குடியேற்றுவது தொடர்பில் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எந்தத் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் இந்த விடயத்தில் தலையிடவும் இல்லை. விடயத்துக்கு தடைவிதிக்கவும் இல்லை.

இவ்வாறானதொரு செயற்பாட்டை வடபுலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுப்பதே இன்றைய அவசரம். எல்லாம் றிஷாத் செய்வார். அல்லது றிஷாத்துக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் சிந்திக்குமாயின் பாதிக்கப்படப் போவது அங்கு வாழக் கூடிய தமிழ் பேசும் மக்களே. எரியும் வீட்டில் பிடுங்குவதெல்லாம் இலாபம் என்ற நிலையில் முஸ்லிம் காஙகிரஸ் தலைமை இந்த விடயத்தில் இருந்து விடக் கூடாது.

இது ஒரு புறமிருக்க,  அமைச்சர் றிஷாத்தின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

”பொது பல சேனவை விட மிகவும் மோசமான முறையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக வட மாகாணத்தில் செயற்படுகின்றது. பொது பல சேன அறிக்கைகளுடன் மாத்திரம் நின்று விடுகின்றனது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செயல் ரீதியாக ஈடுபடுகின்றனர்". என்பதே அவரது கூற்றாகும். இவ்வாறான பொறுப்பற்ற இன்றைய சந்தர்ப்பத்துக்கு பொருந்தாத விடயங்களைப் பேசுவது சரியானதல்ல. இவை மேலும் பிரச்சினைகளையும் கசப்புணர்வுகளையும் வளர்த்து மேலோங்கச் செய்யுமே தவிர, அவற்றினை ஆகக் குறைந்தது குறைக்கக் கூட உதவப் போவதில்லை. 

ஒரு கட்சியின் செயலாளர் என்ற வகையில் சில விடயங்கள் குறித்த கருத்துகளைப் பொறுப்புடன் தெரிவிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்களின் இதயம் போன்றது. இவ்வாறன வார்த்தைகளின் வலி தமிழர்களையே நேரடியாகவே சென்று தாக்கக் கூடியன. அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் அரசியல்வாதிகளான ஹமீதும் அல்ல.. ஹக்கீமும் அல்ல.. சாதாரண அப்துல்லாஹ்வும் அழகரத்தினமுமே.

முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா நடந்து கொண்ட விதம் தொடர்பில் சம்பந்தனும் சுமந்திரனும் குரல் கொடுத்த போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் யார் என்பதனை ஹமீத் புரிந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக, முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது தமிழ் அரசியல் தலைமைகள் வெறுப்புடன் (அமைச்சர் றிஷாத் உட்பட) செயற்படுவார்களாயின் அவ்வாறான நிலையை உருவாக்கியமைக்கான பொறுப்பு அமைச்சர் றிஷாத் பதியுதீனைச் சாராப் போவதில்லை. முஸ்லிம் காங்கிரஸின் தலைமையையே அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியை உருவாக்குவோம் எனக் கூறி விட்டு ஏமாற்றியது யார்? 

கூட்டமைப்பும் அரசாங்கமும் பேசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அது தொடர்பில் சில கருத்துகளை வெளியிட்டு சிக்கலான நிலையை தோற்றுவித்தது எந்த முஸ்லிம் கட்சியின் தலைமை? இவையெல்லாம் எவருக்கும் தெரியாத விடயங்கள் அல்ல.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 28-05-2013




No comments:

Post a Comment