உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாகாடு: எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதா?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னெடுப்புகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இப்போது அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த மகாநாட்டினை நடத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் எடுக்கப்பட்டு விட்டது.
இந்த மகாநட்டை ஸ்ரீலங்கா முஸலிம் காங்கிரஸ்தான் பின்னணியில் நின்று நடத்தவிருந்தாலும் இலங்கையிலுள்ள சகல முஸ்லிம் கலை, இலக்கிய ஒன்றியம் ஒன்றை அமைத்து அதனூடாக நடத்துவது என அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த மகாநாடு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்துவது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீமும் கலந்து கொண்டார். அமைச்சர் ஹக்கீம் ஓர் அரசியல்வாதி என்பதற்கு மேலாக நல்லதொரு இலக்கிவாதியுமாவார். சிறந்த கவிஞர். கற்பனைத் திறன்மிக்கவர். ஆக்ரோஷமாகப் பேசுவதில் வல்லவர். அப்படிப்பட்ட அவர் இந்தக் கூட்டத்தின்போது சில விடயங்களை தெரிவித்திருந்தார். அதாவது, சங்கடமான ஒரு கட்டத்திலேயே இந்த மகாநாடு நடத்தப்படுவதாகவும் முஸ்லிம்களின் அடையாளத்தை வலியுறுத்த வேண்டிய காலகட்டத்தில் இருந்து கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை இலங்கையில் நடத்துவதனை காரணம் காட்டி முஸ்லிம்களுக்கெதிராக அனைத்தையும் மிஞ்சிய மேலாதிக்கத் தாக்கம் நடத்தப்படலாம். இன்று சிங்கள தேசியவாதம் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
2002 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்திய போது அது விடுதலைப் புலிகளின் பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் இன்றைய சூழலில் தற்போது நடத்தப்படவுள்ள மகாநாட்டினை சிங்கள சமூகம் சந்தேகக் கண்கொண்டு நோக்கலாம். அதிலும் சிங்கள தேசியவாதம் இந்த விடயத்தில் மிஞ்சிய மேலாதிக்க சக்திகளாகவும் செயற்படலாம் என்பதும் அவரது கருத்தாகும்.இவற்றினை எல்லாம் தெரிந்து கொண்டும் அனைத்துக்கும் சவால் விடுக்கும் நிலையிலேயே அவர் இந்த மகாநாட்டின் பின்னணியின் முக்கிய நபராகச் செயற்படவுள்ளார்.
பொதுபலசேனா அமைப்பு தற்போது முஸ்லிம்கள் விடயத்தில் சற்றுப் பின்வாங்கியுள்ளமை தொடர்பில் பலத்த சந்தேகங்களே காணப்படுகின்றன. அமைச்சர் ஹக்கீம் கூட இதனை நன்கறிவார். புலி பதுங்குவது பாய்வதற்கு என்றும் கூறுவார்கள்.
இந்த மகாநடு நடைபெறுவதற்கு முன்னரான ஏற்பாடுகள் தெரிந்தால் கூட அதனைக் கூடச் சந்தேகக் கண்ணோடு பார்த்து குழப்பிவிடும் நிலையும் எதிர்நோக்கப்படலாம். சிங்கள கடுங்கோட்பாட்டாளர்களதும் சிங்கள பௌத்த இனவாதிகளினதும் கழுகுப்பார்வை இப்போது முஸ்லிம்களை நோக்கி இருப்பதன் காரணமாக இந்தச் சமூகத்துக்கு எதிரான அவர்களின் இன்னொரு முன்னெடுப்புக்கு சம்பந்தப்பட்டோர் வழிவகை செய்து விடக் கூடாது என்பதில் கவனம் தேவை.
அதுமட்டுமின்றி, இந்த மகாநாட்டினை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதும் இவ்வாறான இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு இன்னொரு பலமான களமாக அமைந்து விடும். தென்கிழக்கு என்ற பெயர் அல்லது சொல் சிங்கள இனவாதிகளைப் பொறுத்தவரை ஒரு கசப்பு மாத்திரை போன்றது. இந்தச் சொல் அவர்களுக்கு ஒவ்வாமையைக் கொடுத்து வருகிறது. இது இன்று நேற்றான விடயமல்ல. அமைச்சர் அஷ்ரப் காலத்திலிருந்தே தென்கிழக்கு என்ற சொல் சர்ச்சையை ஏற்படுத்தியே வந்தது.
தென்கிழக்கை இலங்கையின் கிழக்கிஸ்தான் என சிங்கள இனவாதிகள் வர்ணித்ததனையும் மறந்து விடமுடியாது. இந்தத் தென்கிழக்கானது முஸ்லிம்களின் தனியான ராஜ்ஜியம் என அவர்கள் கூறி வந்ததும் தெரிந்ததே.
முன்னர் செய்யப்பட்ட ஒலுவில் பிரகடனம் கூட தென்னிலங்கைச் சிங்கள கடுங்கோட்பாட்டாளர்களால் எவ்வாறு வர்ணிக்கப்பட்டது என்பதனையும் யாரும் மறந்து விடவில்லை. அமைச்சர் சம்பிக்க ரணவக்க தென்கிழக்கு மற்றும் ஒலுவில் பிரகடனம் என்பவை தொடர்பில் ஒரு நூலை வெளியிட்டு முஸ்லிம்களையும் அவர்களது தலைமைகளையும் விமர்சித்திருந்ததனையும் வரலாறு அறியும். இவ்வாறெல்லாம் சர்ச்சைக்குரியதான சொல்லைக் கொண்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இந்த மகாநாட்டை நடத்தும் தீர்மானம் சரியானது என்று கூறமுடியாது.
மேலும், இந்த மகாநாட்டுக்கு நிச்சயமாக வெளிநாட்டு முஸ்லிம்கள் அழைக்கப்படுவர். அவ்வாறானவர்களில் பெரம்பாலானோர் வெள்ளை ஆடை உடுத்தி ஜுப்பாவையும் அணிந்து கொண்டு (அது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாகா நாடுதானே என்பது வேறு வியடம்) இங்கு வரும்போது நிச்சயமாக சிங்கள இனவாதிகளின் கண்களில் அவர்கள் ஒஸாமாக்களாகவும் தலிபான்களாவும் சித்திரிக்கப்படலாம்.அருண்டவன் கண்களுக்கு இருண்டவை எல்லாம் பாம்பு என்பதனைப் போலவே இது அமைந்து விடலாம்.
அண்மையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சில விடயங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதாவது முஸ்லிம், அரபு நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 மத போதகர்கள் இங்கு வந்துள்ளதாகவும் அவர்கள் முஸ்லிம் மதரஸாக்களில் போதனை நடத்துவதாகவும் கூறியதுடன் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி களங்கம் கற்பிக்கும் சம்பிக்க போன்றோர் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாகாட்டுக்கு வருவோர் தொடர்பில் ஆழமான விமர்சனங்களை முன்வைக்க நிச்சயம் தவறப் போவதில்லை.
அத்துடன் இன்னொரு அரசியல் புலனாய்வுக் கண்டுபிடிப்பாளரான அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது, இன்று முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் ஒரு வகையான அடிப்படைவாதம் உள்ளதை நாம் அறிவோம்.எனினும் அதனைப் பாதுகாப்பு தரப்பு கவனித்துக் கொள்ளும். 30 வருட பயங்கரவாதத்துக்கு எதிரான போரை நிறைவு செய்து நாட்டை மீட்ட இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் எம்மிடம் உள்ளன. எனவே எவ்வகையான அடிப்படைவாதமாக இருப்பினும் அதனை முறியடிக்கக் கூடிய சக்தி எம்மிடம் உள்ளது எனக் கூறியுள்ளார். அமைச்சர் விமலின் கருத்தின்படி இந்த வியடம் எங்கு போய் முடியப் போகிறது என்பதற்கு இன்னொரு விளக்கவுரையை இங்கு எழுதத் தேவையில்லை.
இதற்கு மேலாக இன்னொரு விடயத்தையும் இந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாகாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நாட்டு முஸ்லிம்களின் உணர்வுகளை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அவர்களுக்கு இவ்வாறானதொரு மகாநாடு தேவைப்படாது என்றே கூறமுடியும். ஏனெனில், இன்றைய காலகட்டத்தில் இந்த மகாநாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என்பதனை முஸ்லிம் அரசியல்வாதிகளை விடவும் மக்கள் நன்கறிந்து வைத்துள்ளனர். அரசியல்வாதிகள் குளிரூட்டி அறைகளுக்குள் இருந்து எதனையும் பேசலாம். எந்தத் தீர்மானத்தையும் எடுக்கலாம். வாய்ச்சவாடல்களையும் விடலாம். ஆனால், அடிபடப்போவது அவர்கள் அல்லர். அப்பாவி மக்கேளே.
மேலும், இன்று இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறு விதமானது. அண்மைக் காலத்தில் அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், சவால்கள் எண்ணிறைந்தவை. இப்போது அவை தணிந்திருந்தாலும் அந்த தணிவு நிரந்தரமானது அல்ல என்றே அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நாட்டில் கிழக்கில் மட்டும் முஸ்லிம்கள் வாழவில்லை. சிங்களப் பிரதேசங்களிலும் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களது பாதுகாப்பும் முக்கியம். இந்த மாகாநட்டை நடத்துவோரோ அல்லது கிழக்கிலங்கை முஸ்லிம்களோ இதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கப் போவதில்லை. வெளியிலுள்ள முஸ்லிமகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் சிங்களப் பகுதிகளிலே அதிகம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்டவர்களும் அங்கு வாழும் முஸ்லிம்களே. இந்த மகாநாட்டை சிங்கள கடுங்கோட்பாளர்கள் வேறு திசையில் மாற்றி பிரசாரங்களைச் செய்து சிங்கள இனவாதிகளைத் தூண்டிவிட்டால் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை யார் பொறுப்பேற்பது, இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
ஏனெனில், இந்த விடயத்தில் பொல்லைக் கொடுத்தவன் அடிவாங்கப் போவதில்லை. வழியால் செல்லும் அப்பாவியே வாங்கிக் கட்டவேண்டும் என்பதனை புரிது கொள்ளவது அவசியம்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 14-05-2013

No comments:
Post a Comment