ஏ.எச். சித்தீக் காரியப்பர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக மர்ஹும் அமைச்சர் இருந்த காலத்தில் இந்தக் கட்சியின் பேரம் பேசும் சக்தி என்பது எவ்வாறானது என்பதனை முஸ்லிம்கள் மறந்து விடப்போவதில்லை. அஷ்ரஃபை அழைத்து இத்தனை அமைச்சுப் பதவிகள்.. இத்தனை பிரதியமைச்சுப் பதவிகள்.. இத்தனை அரச உயர்மட்ட பதவிகள் தருகிறோம் எம்முடன் இணைந்து ஆட்சியமைக்க உதவுங்கள். அல்லது எமக்குப் பெரும்பான்மைப் பலத்தைத் தாருங்கள் என்றெல்லாம் தென்னிலங்கை அரசியல் சக்திகள் கெஞ்சி மன்றாடி அவரை கல்முனையிலிருந்து அரச செலவிலேயே ஹெலிக்கப்டரில் கொழும்புக்கு அழைத்து வந்த காலம் ஒன்று இருந்தது.
அவ்வாறானதொரு நிலையில் அவர் தனது பேரம் பேசும் சக்தியின் வலிமையைப் புரிந்து கொண்டவராக எவ்வாறாறெல்லாம் செயற்பட்டார் என்பதும் அறிந்த விடயமே. ஆனால், அவர் அமைச்சுப் பதவிகளிலும் அரச உயர்மட்டப் பதவிகளில் மட்டுமே இலக்காக இருந்து அவற்றினைப் பெற்றுக் கொள்ளவில்லை. மேலும் பல நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தே அவர் தனது கட்சியை ஆளுந்தரப்புடன் இணைத்துக் கொண்டு வெற்றி கண்டார்.
அதற்கான துணிவும் ஆளுமையும் கொண்டவராகவே அவர் காணப்பட்டார். தான் சார்ந்த சமூகத்தினாலேயே தானும் தனதும் கட்சியும் இந்த நிலைமையடைந்தது என்ற நன்றி மறவாத தன்மையை அவர் ஒரு போதும் வெளிக்காட்டத் தவறவில்லை
அப்படிப்பட்ட ஒரு தலைவரால் வளர்த்தெடுக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போன நிலைக்கு வந்துள்ளது. மூன்று பிரதியமைச்சர் பதவிகள் தாருங்கள் சேர்... இரண்டு டிப்பிட்டியு மினிஸ்டர் போஸ்ட் போதாது சேர்.. என்று கெஞ்சும் கேவல நிலைக்கு வந்துள்ளது. வெளியேறி விடுங்கள் என்றாலும் அரசை விட்டு விலமாட்டோம் என்று அடம்பிடிக்கும் நிலைக்குள் தன்னை ஆக்கிக் கொண்டதுதான் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம். இது முஸ்லிம்களையே இன்று தலை குனிய வைத்துள்ளது.
அமைச்சர் அஷ்ரஃபினால் அன்று கட்டுக் கோப்பாக வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்று காட்டெருமைக் கோலத்தில் அலைந்து தெரியும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எங்களது கோரிக்கைகளை ஏற்று அவற்றினைச் செயற்படுத்தாவிட்டால் நாங்கள் அரசிலிருந்து விலகி விடுவோம். அது அரசுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றெல்லாம் கட்சிக்குள்ளிருந்து இன்று அரசுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் இவ்வாறான கருத்துகள் தொடர்பில் அரசாங்கம் அலட்டிக் கொள்ளவே இல்லை என்பதும் தெரியாத விடயம் அல்ல. அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகிச் சென்றாலும் இன்றைய அரசு இவர்களை இனி ஒரு தடவை வெற்றிலை வைத்து அழைப்பிதழ் அனுப்ப தயாரற்ற நிலையிலேயே உள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் நாங்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே மாட்டோம் என்று விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதைகளும் முஸ்லிம் காங்கிரஸுக்குள் ரொம்பவும் பேசப்படுகிறது.
இந்த நிலைக்குக் காரணம் என்ன? ஏன் இவ்வாறான நிலைமைகள் உருவாகின என்பது தொடர்பில் ஆராயும்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் பலவீனங்களே இவற்றுக்குக் காரணங்களாகின்றன.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் தவறுகள் எனற விடயத்தை அலசும் போது அதனை இரண்டாகப் பிரிக்க முடியும்.
1. அரசுடனான முரண்பாடு.
2. வாக்களித்த முஸ்லிம் மக்களுடனான நிலைப்பாடு.
இந்த இரு விடயங்களிலும் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தொடர்பில் கடுமையான விமர்சனங்களே முன்வைக்கப்படுகிறன.
அரசுடனான நிலைப்பாடு குறித்து ஆராயும்போது முஸ்லிம் காங்கிரஸ் எவ்வளவு
பலவீனப்பட்டுப் போயுள்ளது என்பதனை இலகுவில் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. கிழக்கு மாகாண சபையை அமைப்பதற்காக அரசுடன் பேரம் பேசப்பட்ட ஒரு சில சிறிய விடயங்களைக் கூட இதுவரை செய்து கொள்ள முடியாத நிலைமையிலேயே இந்தக் கட்சியின் தலைமை உள்ளது என்பது இதற்கொரு சான்றாகிறது. இவ்வறானதொரு நிலையில் அமைச்சர் அஷ்ரஃப் இருந்திருந்தால் நிலைமை என்னவாகவிருக்கும் என்பதனைப் புரிந்து கொள்ள முடியும்.
அரசாங்கத்திலிருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சிக்கும் ஒரேயொரு கட்சியென்றால் அது முஸ்லிம் காங்கிரஸாகத்தான் இருக்க முடியும். இதனை எந்த அரசாங்கமும் விரும்பமாட்டாது என்ற விடயத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை புரிந்து கொண்டுள்ள போதும் இவ்வாறு நடப்பது ஏன் என்ற கேள்வி பல்வேறு சந்தேகங்களுடன் எழுகிறது.
கிழக்கு முஸ்லிம் பொதுசனத்தார் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டே மறுபுறத்தில் தனிப்பட்ட தங்கள் அரசியல் கஜானாவைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தெற்கில் அரசினை துதிபாடும் இந்தச் செயற்பாடுகள் கூட முஸ்லிம் காங்கிரஸ் மீது முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல.. இன்று அரசாங்கமே கொண்டுள்ள வெறுப்புக்குப் பிரதான காரமணமாகிறது.
சிறுபான்மை இன சமூகமான முஸ்லிம் சமூகம் தொடர்பான விடயங்களை தென்னிலங்கை சிங்கள சக்திகளுடன் கையாள்வதில் மிக நிதானமாகச் செயற்பட வேண்டிய இன்றைய கால கட்டத்தில் இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் பயங்கரமானவை என்பதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இன்னும் உணரவில்லை போலும்.
இவ்வாறன சந்தர்ப்பங்களில் எங்கள் சமூகம் சார்ந்த விடயங்களை முடித்துக் கொள்வதற்கு இசைவுடன் செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டானத் தேவையாகும்.
தங்களது கையாலாகத் தனத்தை மூடி மறைப்பதற்காக குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் பிறர் மீது ஒரு போதும் மர்ஹும் சுமத்தியதே இல்லை. அவர் முஸ்லிம்களின் விடயங்கைள தந்திரமாகவும் சாணக்கியமாகவும் செயற்பட்டு அன்று வென்றெடுத்துக கொடுத்தமை காரணமாகவே இன்று மஸ்லிம் சமூகம் ஓரளவு தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமையோ தான் மட்டுமல்ல தான் சமூகத்தையும் தலைகுனியச் செய்யப் பார்க்கிறது. இது மிக வேதனையான விடயம்.
சில சிரேஷ்ட அமைச்சர்கள் முஸ்லிம் பிரதேச அபிவிருத்திப் பணிகளுக்குத் தடை விதிக்கிறார்கள். அரசாங்கம் எங்கள் மக்களுக்கு ஒன்றையுமே செய்யவில்லை. எங்களைப் புறக்கணிக்கிறது என்றெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் மேடைகளிலும் அறிக்கைகளிலும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அவ்வாறெனின் அவர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளுக்கும் சுகபோகங்களுக்குமாக மட்டுமே அரசுடன் ஒட்டியுள்ளார்கள் என்பது மறுபுறத்தலிருந்து பெறக் கூடியதான தெளிவாக உள்ளது.
இது ஒரு புறமிருக்க, வாக்களித்த முஸ்லிம்களுடனான முரண்பாடு என்பது இன்று விரிவடைந்து போகிறது. அந்த மக்கள் இன்று முஸ்லிம் காங்கிரஸினால் மறக்கடிக்கபட்டுள்ளனர்.
விசேடமாக, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் நிலைமை இதுவாகவே உள்ளது. அபிவிருத்திகளையும் அரச தடைகளையும் ஒரு புறத்தில் வைத்து அந்த மக்களைச் சந்திபதற்கோ பேசுவதற்கோ இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு நேரம் இல்லாமல் போயுள்ளது. கிழக்கு மகாணத்தில் இடம்பெறும் அரசியல் கூட்டங்களுக்கும் பரிசளிப்பு விழாக்களுக்கும் மட்டுமே செல்லும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அந்தச் சந்தர்ப்பத்திலேனும் மக்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி குறைந்தது அவர்களது குறைகளையாவது கேட்டறிந்து அவர்களை சற்றளவேனும் சந்தோஷப்படுத்தும் மனநிலை கூட இல்லாமல் காணப்படுகிறது.
பதவி என்று வரும் போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அரசுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிப்பதும் மக்கள் பணி என்று வரும் அரசினை விமர்சித்துக் கொண்டு அதன் மீது குற்றம் போடுவதும் இன்று முஸ்லிம் காங்கிரஸுக்கு வாடிக்கையானதும் வேடிக்கையானதுமான விடயங்களாகி விட்டன.
மொத்தத்தில் இன்று தனக்கு ஏற்றவாறு கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கி் கொண்டு மக்களிடம் கூவி விற்கும் நிலையிலே முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உள்ளது. ஆனால் இவற்றினை இனியும் முஸ்லிம் வாங்குவார்களா என்பது கேள்விக்குரியதே.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தெற்கில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று என்ன காரணத்துக்காக போர்க்கொடி ஏந்தி பாத யாத்திரைக்கு தயாரானார்களோ அது போன்றதொரு நிலைமை கிழக்கிலிருந்த உருவாகும் சாத்தியம் இன்று ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிரான இவ்வாறானதொரு போக்கு கிழக்கில் ஏற்படுமானால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தன்னைத் திருத்திக் கொள்வதே இன்றைய தேவை. தவறின் மக்கள் திருத்தமாட்டார்கள் அகற்றி விடுவார்கள் என்றே கூறலாம்.
இன்று முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிப்பானது மர்ஹும் அஷ்ரஃபுக்காகவும் அவர் ஸ்தாபித்த கட்சி என்பதற்காக மட்டுமே என்பதனையும் இங்கு கூறிக் கொள்வது அவசியம்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 13-10-2013


No comments:
Post a Comment