Sunday, October 6, 2013

கிழக்கில் தமிழ்க் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கியத்தால் அதிர்ந்து போயுள்ள தென்னிலங்கை!

.எச்.சித்தீக் காரியப்பர்
வடமாகாண சபைத் தேர்தலில் அரசு தரப்பு பாரிய தோல்வியைத் தழுவிய சில நாட்களுக்குள்ளேயே அது எதிர்பாராத இன்னொரு தோல்வியையும் ஏமாற்றத்தையும் எதிர்கொண்டது.
வன்னிப் போரின் இறுதியான சில தினங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு ஒன்றில் தங்கியிருந்த போதே இங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நாடு திருமபிய அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தடைந்ததும் தாய் நாட்டின் மண்ணை முத்தமிட்டு வணங்கிய காட்சியினையும் யாரும் மறந்து விடப் போவதில்லை.
அதேபோன்று இன்றும் அவர் வெளிநாட்டில் இருந்த போதே இரண்டு செய்திகள் அவருக்குச் சொல்லப்பட்டன. வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது என்ற தோல்விச் செய்தியும் கிழக்கு மாகாண சபையில் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிக்கும் பிரேரணை 15 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது என்ற ஏமாற்றச் செய்தியும் அவரது காதுகளைச் சென்றடைந்திருக்கும்.

அவர் இந்தத் தோல்வியையும் ஏமாற்றத்தையும் சுமந்தபடியே கட்டுநாயக்க விமான நிலையத்தை அல்ல.. மத்தள விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்திருந்தார். இந்த இரு விடயங்களும் அவர் மனதை மேலும் வேதனைப்படுத்தும் வகையிலும்  இன்னொரு விடயமும் அமர்ந்திருக்கலாமென்றும் யுகிக்கவும் முடியும். அதாவது, நியுயோர்க் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் அவர் உரையாற்றச் சென்றிருந்த போதே வடக்கிலும் கிழக்கிலும் இந்த விடயங்கள்  நடந்து முடிந்துள்ளன.


இனி விடயத்துக்கு வருவோம், கிழக்கு மாகாண சபையின் அமர்வு கடந்த வாரம் இடம்பெற்றபோது வரலாற்றுப் பதிவுமிக்க ஒரு விடயம் அங்கு இடம்பெற்றது. அரசியல் ரீதியாக மட்டுமின்றி இன ஐக்கியத்தின்பாலும் அதனை முக்கியத்துவமிக்கதான ஒன்றாகவே கருத வேண்டும். தமிழ் பேசும் கட்சிகளின் ஐக்கியம் இதுதான் என்பதற்கோர் எடுத்துக் காட்டாக இருந்ததுடன் இந்த விடயம் தென்னிலங்கையில் எதிர்பார்க்காத மின் தாக்கத்தின் வலுவைக் கொடுத்துள்ளது.


13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை இல்லாதொழிக்கு முயற்சிகளும் அதில் திருத்தங்கைள ஏற்படுத்தும் பிரயத்தனங்களும் தெற்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டினை கிழக்கின் பிரதான இரு தமிழ் பேசும் கட்சிகள் வெளிக்காட்டி எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய நல்ல பல விடயங்களுக்கே கட்டியம் கூறியுள்ளன.


13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்யக் கூடாது என்ற முஸ்லிம் காங்கிரஸின் பிரேரணை ஒன்று கடந்த வாரம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 15 வாக்குகள் கிடைத்ததுடன் எதிராக ஒரு வாக்கு வாக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகளில் ஒன்று ஆளுந்தரப்பைச் சேர்ந்த சிங்கள மாகாண அமைச்சர் ஒருவரது என்பது இன்றைய நிகழ்வின் நாளைய வரலாற்று பொன்னெழுத்துகள் ஆகி விட்டன.


முஸ்லிம் காங்கிரஸினால் முன்னரே கொண்டு வரப்பட்டு நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தப் பிரேரணை விவாத்துக்கு வந்தபோது அதனைப் பலரும் ஆதரித்துப்  பேசியிருந்தனர். விசேடமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தது. தங்களது ஒன்பது வாக்குகளை வழங்கி அவர்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.


கிழக்கு மாகாண சபையை நிறுவது தொடர்பில் முன்னர் ஏற்பட்ட அதிருப்தியான விடயங்களை மறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நடந்து கொண்ட விதம் முஸ்லிம் காங்கிரஸின் மனச்சாட்சியைக் சுள்ளென கிள்ளிச் சென்றிருக்கும். தமிழ் பேசும் சமூகம் என்று வரும்போது நாங்கள் இப்படித்தான் என்பதனைக் கூட்டமைப்பு இதன் மூலம் நிரூபித்துள்ளது.


உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விடயம் தமிழப்பேசும் மக்கள் நலன் என்று வரும் போதேல்லாம் இவ்வாறே செயற்பட வேண்டும், செயற்படுவோம் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைந்து விட்டது. தமிழ்ப் பேசும் மக்களின் பிரதான கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முஸ்லிம் காங்கிரஸினதும் இந்த ஐக்கியம் இன்று தென்னிலங்கையில் புளிக்ரைக்கிறது. இரண்டு சமூகங்களையும் பிரித்து வைத்து தங்களது விடயங்களில் வெற்றி கொள்ள முயற்சித்த சிங்கள பேரினவாதிக்களுக்கு இது ஒரு தோல்வி முகம் என்றே கூற முடியும்.


இந்த இரு கட்சிகளின் ஒற்றுமையானது இந்த விடயங்களுடன் முடிந்து விடக் கூடாது. எதிர்காலத்திலும் தொடர வேண்டும். அதன் மூலமே தமிழ்ப் பேசும் மக்களின் பலத்தினை நாம் வெளிக்காட்ட முடியும்.  இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்கு, பாத்திரம் என்பது அதிகமாகவே தேவைப்படும் ஒன்றாகும் என்பதனையும் கூறியேயாக வேண்டும்.

கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸின் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல்  குறித்த பிரேரணையை சபையில் முன்வைத்து உரையாற்றிய போது காரசாரமான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.


”கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் அங்கும் இங்குமாக சுவீகரிக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றை எமது சபையினால் தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கிறது.அந்த வகையில்தான் புல்மோட்டை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையும் தீர்வின்றி இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதனை அப்பகுதி சார்பான எமது கட்சியின் உறுப்பினர் அன்வர் உணர்வு புர்வாமாக இந்த சபையில் வெளிப்படுத்தியுள்ளார்.


இவ்வாறான நிலைமை தொடருமாயின் கிழக்கின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்திருக்கின்ற எமது முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை மீள்பரிசீலிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.” என்று அவர் அங்கு தெரிவித்திருந்தார்.


கிழக்கில் முஸ்லிம்களின் காணிகள் மட்மல்ல.. தமிழர்களின் காணிகளும் சுவீகரிக்கப்படுகிறது என்பதனை அவர் தனது உரையில் வெளிப்படையாகத் தெரிவித்ததன் மூலம் அவர் அங்கு இன ஐக்கியத்தையும் கிழக்கு தமிழ் மண்ணில் தமிழ்பேசும் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். இது வரவேற்றகத்தக்க விடயமே. 

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவினை வழங்கியது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்ப் பேசும் மக்கள் நலன் குறித்த விடயங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தனது முழு  ஆரவினையும் எதிர்காலத்தில் வழங்க வேண்டும். இதனை உப்பிட்டவரை உள்ளவும் நினைப்பதான நன்றியாக அன்றி இரு சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டதாக நினைத்து முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட வேண்டும். அதேவேளை, வெண்ணெய் திரண்டு வரும் போது சாடியை உடைத்து விட்டுச் செல்லும் ஜாம்பவான்களும் முஸ்லிம் காங்கிரஸுக்குள் இல்லாமல் இல்லை. இவர்கள் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை கவனம் செலுத்த வேண்டும்.


இன உறவை கட்டியெழுப்பும் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அதற்கு ஆதரவு வழங்குவோரை விட அந்த முயற்சியை அழித்து விட முயற்சிப்போரே அதிகம். அவ்வாறானவர்கள் எங்கள் தமிழ்  பேசும் சமூகத்தினரிடையே அதிகமாகக் காணப்படுவதும் ஒன்றும் விசித்திரமல்ல.

மேலும் பள்ளிவாசல் உடைப்பு என்பதெல்லாம் பொய் என்று சொல்லும் முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் கோவில் உடைப்பு என்பது அபாண்டம் என்று கூறும் தமிழ் அரசியல்வாதிகளினதும் மத்தியிலேயே நாம் வாழந்து வருகிறோம். இவ்வாறான எட்டப்பர்கள் தொடர்பில் கவனமாகச் செயற்பட்டு இன ஐக்கியத்தை நிலை நாட்டும் இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பது இரு தரப்பினரினதும் பொறுப்புமிக்க் கடமையாகும்.


நன்றி வீரகேசரி வாரவெளியீடு 06-10-2013

No comments:

Post a Comment