Sunday, October 20, 2013

அணில் விட்டும் மாங்காய் பறிக்கும் ரணில் முயற்சி தோற்றுப் போனது!


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ரணில்...! இன்று அணில் விட்டும் மாழ்பழத்தைப் பறிக்க முடியாத ஒரு நிலையில் கட்சிக்குள் சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் உள்ளவர்களே வெளியில் சென்று இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு இன்று எதிரிகளாகிப் போயுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப் பதவிக் காலம் குறித்து பின்னர் வரக் கூடிய சந்ததியினர் படிக்கப் போகும் வரலாறு என்பது எப்படியாக அமையும் என்பதனை இப்போதே கூற முடியாது நிலை! இன்னும் பிரச்சினைகள் முடியாத அத்தியாயங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


கடந்த காலங்களில் இவரது தலைமைத்துவத்துக்கும் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து 60 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகி ஆளுந்தரப்புக்கு மாறினர். ஆனால், இன்று அந்த நிலையில் சற்று வித்தியாசமான நடைமுறை ஒன்றினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

கட்சிக்குள் இருக்கிறோம். ஆனால், பதவிகள் வேண்டாம் என்ற நிலையே இப்போது அங்கு உருவாகியுள்ளது.

கட்சியின் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க குண்டசாலை ஐக்கிய தேசியக் கட்சியன் அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா,.. ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளர் செனரத் கப்புகொட்டுவ பொருளாளர் பதவியிலிருந்து இராஜினாமா.... ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஐதேக தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தமை.. தயாகமகேவும் அமைப்பாளர் பதவியை இராஜினாமாச் செய்யப் போவதாகக் கூறியமை.. இப்படி எத்தனையோ விடயங்கள் இன்று இந்தக் கட்சிக்குள் நடக்கின்றன.

இவ்வாறான திடீர் மாற்றங்களுக்கு எல்லாம் என்ன காரணம் என நோக்கும்போது, அண்மையில் நடந்து முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் இந்தக் கட்சி அடைந்த பின்னடைவே என்பது வெள்ளிடைமலை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ரணில் ஏற்ற பின் அவர் முகங்கொண்ட 25 ஐயும் தாண்டிய தோல்வியே  இதுவெனக் கூறப்படுகிறது.

இவ்வாறனதொரு தொடர் தோல்வியை கட்சியின் முக்கியஸ்தர்களே மனங்கொள்ளாத நிலையில் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் எவ்வாறு ஏற்பர் என்பது இன்னொரு கேள்வி.

ரணில் விக்கிரமசிங்வுடன் உள்ள ஒரு சிலரைத் தவிர அனைவரும் இன்று அவர் தலைமைத்துவப் பதவியை விட்டு  விலக வேண்டுமென்பதில் வலுவாக உள்ளனர். இதனை விடவும் அந்தக் கட்சி சார்ந்த மத அமைப்புகள் தொழிற்சங்கங்கள் கூட ரணிலின் பதவி விலகலை வலியுறுத்தத் தவறவில்லை. ஆதரவாளர்கள் வீதியில் இறங்கிப் பேராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர் பதவி விலக வேண்டுமென்பதற்காக பௌத்த விஹாரைகளில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்  செலுத்திய சம்பவங்கள் நடந்தேறியதனையும் நாம் கண்டு கொண்டுள்ளோம்.

ரணிலைப் பதவி விலகுமாறு நிர்ப்பந்திக்கும் வகையிலான பேரணி ஒன்று  அண்மையில் மாத்தறையில் அதே கட்சியைச் சேர்ந்த மாற்றுக் குழு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. ஆனால், அந்தப் பேரணி தனது பயணத்தைத் தொடர முடியாத நிலை தோன்றியிருந்தது. அதே கட்சியைச் சேர்ந்த ரணிலின் ஆதரவாளர்களால் அந்தப் பேரணி தாக்கப்பட்டு, தடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனையடுத்து எழுந்த நிலைமைகள் அனைவரும் அறிந்ததே.

இவ்வாறான நிலைமைகள் கட்சிக்குள்ளிருந்து தோன்றிக் கொண்டிருக்கும் போது ரணிலே தொடர்ந்து கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமென்ற ஒரு பிரார்த்தனைக் குரலும் கேட்காமல் இல்லை. அது அவரது கட்சிக்குள் இருந்து அல்ல. ஆளுங்கட்சிக்குள் இருந்தே அந்த பிரார்த்தனைக் குரல் எழுந்திருந்தது. அதுவும் ஒரு அமைச்சரே ரணிலைப் பிரார்த்தனை செய்திருந்தார்.

ஐக்கிய தேசியக்கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதால் அவர் நீண்ட காலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்க அதிர்ஷ்டம் கிடைப்பதாக என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் பிரார்த்தித்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்டு வருகிறார். இதனால் சதாகாலமும் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க அதிர்ஷ்டம் கிடைக்கட்டும் என்றும் அவர் கூறயிருந்தார்... இப்போது எங்கு கதை போய் முடிகிறதென்பது இதன் மூலம்  தெரிகிறது.
ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தோல்விக்கு மட்டும் காரணம் அல்ல.. அரசின் பலத்துக்கும் அவர்தான் காரணம் என்ற இந்த விடயமும் இன்று அவரது கட்சிக்குள் அவருக்கு எதிராக எழுந்துள்ள நிலைமைகளுக்குக் காரணமாகிறது.

இதனை விடவும் வேடிக்கையான சில விடயங்களும் இந்தக் கட்சிக்குள் நடந்தேறியுள்ளன. எல்லா விடயங்களிலும் இன்று மூக்கை நுழைக்கும் பௌத்த தேரர்கள் கூட அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் நுழைந்து தங்களது அதிகாரத்தைப் பலப்படுத்தியுள்ளனர். டி. எஸ். சேனநாயக்கா முதல் டிங்கிரி பண்டா விஜயதுங்க வரையான காலப்பகுதி வரை இல்லாத, பொல்லாத விடயங்கள் எல்லாம்  இப்போது அந்தக் கட்சிக்குள் தாராளமாக, தாமாகவே அழைப்பின்றி  நுழைந்து கொள்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஐக்கிய பிக்குகள் முன்னணிக்குமிடையே மிக முக்கியமானதொரு கலந்துரையாடலும் அண்மையில் நடைபெற்றிருந்தது. அங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறியாக வேண்டும் என்ற கோரிக்கையே பிரதானமாக முன்வைக்கப்பட்டிருந்தது.

அது மட்டுமின்றி கட்சியின் வெற்றிக்காக தங்களது பிக்குகள் முன்னணி முன்வைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் எதனையும் தங்களது கலந்தாலோசனை இல்லாமல் நடைமுறைப்படுத்த முயற்சிக்கக் கூடாது என்றும் ரணிலுக்கு பிக்குகள் முன்னணி கடிவாளமிட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் ஐக்கிய பிக்குகள் முன்னணி இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் ஆனந்த தேரர், தேசிய அமைப்பாளர் உலப்பனை சுமங்கல தேரர் உட்பட ஒரு டசின் தேரர்கள் பங்கேற்றனர். இவ்வாறான கருத்துகள், கட்டளைகளால் பெட்டிப் பாம்பாக அடங்கிப்போன ரணில் விக்கரமசிங்க, கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக ஒப்புக் கொண்டதாக தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்திருந்தது. அத்துடன் அவர் 14 நாட்களுக்குள் கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக ஒப்புக் கொண்டார் என்றும் பிக்குகள் முன்னணி கூறயிருந்தது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இறுதிக் கட்ட முயற்சியாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்தித்து அவர்களுக்கு சில பதவிகளை வழங்கி தனது தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ரணில் விக்கிரமசிங்க எடுத்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இருவர் மூலம் மற்றவர்களைச் சமாதானப்படுத்தலாம் என்ற ரணிலின் அணில் விட்டு மாம்பழம் பறிக்கும் முயற்சியும் அவருக்குத் தோல்வியையே கொடுத்துள்ளது.

ரணிலுடனான சந்திப்பில் அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பில் எவ்வித இணக்கப்பாட்டினையும் தாம் எட்டவில்லை என் சஜித் பிரேமதாச, மூடிய கதவுக்குள் நடந்த விடயங்களை வெளியில் அம்பலப்படுத்தியிருந்தார்.

இறுதியாக,  கட்சிக்குள் உயர் சபையை  நிறுவுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸா ஆகியோர் இணைந்தே இந்த சபையை நிறுவவுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

எது எப்படியிருப்பினும் ரணிலின் தலைமைப் பதவி என்பது உயர் சபையிலும் பிரஸ்தாபிக்கப்படக் கூடியதொன்றே. அவரே தலைவராக இருக்க வேண்டுமென்றால் இவ்வாறானதொரு உயர் சபையை நிறுவும் தேவை எழுந்திருக்காது.

ரணிலை அந்தக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவராக நியமித்து விட்டு பிரதான தலைவராக பிறிதொருவரை நியமிப்பது தொடர்பில் கலந்தாலோசனைகள் இப்போது இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் அவர் எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்றத்தில் செயற்படலாம் என்பதிலும் கருத்தொற்றுமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்த வரையில் இன்றைய நிலையில் அவருக்கு சிரேஷ்ட தலைவர் பதவி என்பதும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட விடுவது என்பதும் போதாதாவைகள்  அல்ல. ஏனெனில் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டவனுக்கு ஆயுட் சிறைத் தண்டனை அறிவிப்பு எதிர்பாராத நிம்மதியைத் தரக்கூடியது. அதுபோன்றே இந்த விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் திருப்தி கொள்வதே அவருக்கும் கட்சிக்கும் நலன் பயக்கும்.

கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களதும் கட்சி ஆதரவாளர்களின் விருப்பத்துக்கு இணங்க அவர் இன்று செயற்படுவதனை விட வேறு வழியில்லை. இன்னும் அவர் தன்னைத் தாழ்த்தி, வீழ்த்திக் கொள்ளாமல் இந்த விடயத்தில் ஒரேயொரு தீர்க்கமான முடிவினையே அவர் எடுக்க வேண்டும்.

தனது தலைமையின் கீழ் இந்தக் கட்சி 25க்கு மேற்பட்ட தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்பதனை அடுத்து வரும் தேர்தல் முடிவுகளின் ஊடாக கட்சியினரும் கட்சி ஆதரவாளர்களும் தெரிந்து கொள்ளக் கூடியதான ஒரு சந்தர்ப்பத்தினை அவர் வழங்க வேண்டும்.

கட்சியின் புதிய தலைமையின் கீழும் எதிர்காலத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றுப் போகுமானால் நெஞ்சை நிறுத்தி நிற்கும் துணிவை ரணில் பெற்றுக் கொள்ள முடியும். 
அது போன்றே எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுமாயின் கட்சியின் கடந்த காலத் தோல்விகளுக்குத் தானே பொறுப்பு என்பதனையும் அவர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இவை இரண்டினையும் களப் பரிசோதைனைக்கு உட்படுத்தும் பொறுப்பு ரணில் விக்கிரமசிங்கவிடமே உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

வீரகேசரி வாரவெளியீடு 20-10-2013

No comments:

Post a Comment