ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - ஓர் அரசியல் புலனாய்வு
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
உள்ளுர் அரசியலில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பிலேயே அதிகம் பேசப்பட்டு வருகிறது. கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைகள், விவகாரங்கள் வெளியே வந்து நாற்றமடிக்க ஆரம்பித்து விட்டன. என்ன நடக்கிறது என்ன நடக்கப் போகிறது என்பவற்றை கட்சியின் ஆதரவாளர்கள் திரைப்படத்தில் வரும் திருப்பமான காட்சிகளை ஆதங்கத்துடன் எதிர்பார்ப்பது போன்று அவதானித்துக் கொண்டே உள்ளனர்.
பெரும்பாலும் முன்னர் இந்தக் கட்சியை அதன் ஆதரவாளர்களே அதிகளவில் விமர்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று நிலை வேறு. கட்சியின் போக்கையும் கட்சித் தலைமையின் செயற்பாடுகளையும் புறம் விட்டு விமர்சிக்காமல் முகத்துக்கு நேரே விமர்சிக்கும் நிலை கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. மு.காவுக்கு மீண்டும் இதுவும் ஒரு கெடு காலமோ தெரியவில்லை.
இந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூதுக்கு அமைச்சுப் பதவி வழங்கியமை தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் தற்போது எழுந்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் தனக்கு ஒன்றுமே தெரியாது, ஜனாதிபதி இது குறித்து தன்னிடம் பேசவும் இல்லை என்கிறார் அமைச்சர் ஹக்கீம்.
தலைவர் வெளிநாடு சென்றிருந்ததால், தான் கட்சியின் செயலாளர் நாயகமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலியிடம் கூறி விட்டுத்தான பதவியேற்கச் சென்றேன் என்கிறார் பஷீர் ஷேகு தாவூத்.
ஆனால் கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்களும் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரும் இதுவெல்லாம் தலைவரின் “செட்டப்“ என்கிறார்கள். சிலரோ.. தலைவைரைப் பற்றி எமக்குத் தெரியாதா என்ன என்று கூறி சிரிப்புடன் முதுகைத் தட்டிச் செல்கின்றனர்.
இப்படி கட்சி ஆதரவாளர்களும் முக்கியஸ்தர்களும் இந்த விடயம் தொடர்பில் தங்களது அதிருப்தியினை வெளியிட்டிருக்கும் அதேவேளை, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பஷீர் ஷேகு தாவூத் இருவரும் கடந்த வாரம் மட்டக்களப்பு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்ததனைக் காணக் கூடியதாகவும் இருந்தது.
இவற்றினையெல்லாம் பார்க்கும் போது அந்தக் காலத்தில் வெளியான ஊமைத் திரைப்படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பது போன்ற நிலைமையே இன்று முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினாலும் மிகப் பொருத்தமாகவே இருக்கும்.
அமைச்சர் ஹக்கீம் - பஷீர் ஷேகு தாவூத் தொடர்பில் ஒரு சில உண்மைகளையும் இங்கு முன்வைக்க வேண்டிய தேவை உள்ளது. அமைச்சர் ஹக்கீம் எப்போது இந்தக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டாரே அன்றிலிருந்து பஷீர் மீது ஹக்கீமின் கடைக்கண் பார்வை உள்ளது என்பதன எவரும் மறுக்க முடியாது. தேசியப் பட்டியல் என்றாலும் முதலில் பஷீருக்குத்தான். பிரதியமைச்சர் பதவி என்றாலும் அதுவும் முதலில் பஷீருக்குத்தான் என்றதொரு நிலை காணப்படுவதாகவே அனைவரும் நம்புகின்றனர். உணர்கின்றனர்.
இதனை விட இன்னொரு விடயத்தையும் இங்கு கூறியே ஆக வேண்டும். அதாவது, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தின் போது பஷீர் சேகுதாவூத் தெரிவித்த கருத்தே அது. “தனக்கோ தனது கட்சிக்கோ வாக்களிக்க விரும்பாத எவரும் இருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த அலி சாகிர் மௌலானாவுக்கு வாக்களியுங்கள்“ என்று கூறியிருந்தார் என அன்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
ஒரு பொறுப்புள்ள கட்சியின் தவிசாளரே பகிரங்க மேடையில் இவ்வாறு தெரிவித்தமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் என்ன செய்தது என்பது இன்று வரை ஒரு கேள்விக்குறியாக உள்ளது. பஷீரிடம் இது தொடர்பில் காங்கிரஸ் தலைமை தட்டிக் கேட்காமல் அவரைத் தடவிக் கொடுத்தது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், கிழக்கு மகாண சபையில் திவிநெகு சட்டமூலத்துக்கு ஆதரவளித்தமைக்காக அங்கத்தவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கென ஒரு குழுவே நியமிக்கப்பட்டது. இதில் முக்கிய விடயம் என்னவெனில், அந்த விசாரணைக் குழுவின் ஒருவராக பஷீர் சேகுதாவூத்தும் நியமிக்கப்பட்டிருந்தமையே. இது எந்த வகையில் நியாயமானது என்பது முக்கிய கேள்வியாகும். மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் அது பொன்குடமா?
ஒரு முஸ்லிம் கட்சியானது தனது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகச் செயற்பட வேண்டுமென்பதற்கு மேலாக இஸ்லாமிய சட்ட விதிமுறைகளையும் கவனத்தில் கொள்வது அவசியம் என்ற கடப்பாட்டினையும் முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் அப்பட்டமாக மீறியுள்ளது. நீதி, நியாயம், சமத்துவம், போன்றவை தொடர்பில் இஸ்லாம் மார்க்கம் மிக எச்சரிக்கையுடன் பல விடயங்களைக் கூறியுள்ளதனையும் இங்கு சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால், அவற்றையெல்லாம் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கணக்கில் எடுப்பது இல்லையா என்பதும் இன்று ஒரு கேள்வியாகவே எழுந்துள்ளது.
மேலும்,கிழக்கு மாகாண சபைத் தேர்லில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக கட்சித் தலைமையினால் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், கட்சி வெற்றி பெற்றவுடன் அதே தலைமை நடந்து கொண்ட விதம் குறித்தெல்லாம் எல்லோரும் அறிந்துள்ள நிலையில், அவரால் கூறப்படும் எதனையும் மக்கள் நம்பாத நிலை உறுதியாகி, இன்று கட்சிக்குள்ளேயே அவர்மீதான நம்பிக்கையீனம் துளிர் விட்டுள்ளதனை அண்மைக்கால விமர்சனங்கள் கோடி காட்டுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் பஷீர் சேகு தாவூத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை தனக்குத் தெரியாது என்றும் இது தொடர்பில் அரசு தலைமை தன்னுடன் பேசவில்லை என்றும் ஹக்கீம் கூறுவதனை கட்சியின் ஆதரவு வெகுசனத்தாரோ கட்சியின் பிரதானிகளோ நம்ப முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.
1. அமைச்சர் ஹக்கீம் கூறுவது போன்றுதான் நடந்துள்ளது என்றால் ஏன் அவர் இது தொடர்பில் அரச தலமையிடம் தனது வேதனையையும் ஆட்சேபனையையும் வெளிப்படுத்தவில்லை?
2. அரசின் பங்காளிக் கட்சியான தனது கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கலில் அந்தக் கட்சியின் தலைவரான தன்னிடம் கேட்காமல் தன்னைப் புறந்தள்ளிய நிலையிலேயே அரசு இவ்வாறு நடந்து கொண்டது என்றால் அதனை ஒரு தன்மானப் பிரச்சினையாகக் கருதி அவர் ஏன் தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லை.?
3. ஆகக் குறைந்தது பஷீர் சேகுதாவூதிடமாவது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமாச் செய்யுமாறு கூட கேட்டிருக்கலாம். அதனைக் கூடச் செய்யாதது ஏன்?
ஆகவே, இவ்வாறனதொரு நிலையில் பஷீர் சேகுதாவூத் தொடர்பில் ஹக்கீமினால் பூசி, மெழுகி, முலாமே மீண்டும் பூசப்பட்டுத் தன்னைப் பாதுகாக்கும் நிலையுடன் கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும் அவை எவராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதும் ஒரு கேள்விக்குறியான விடயமே.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, முஸ்லிம் காங்கிரஸுக்குள் இவ்வாறான பாரிய பூகம்பங்கள் ஏற்படும் போதெல்லாம் கட்சியின் தலைவர் நாட்டில் இருக்காமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முன்னைய அரசு வெளிநாடொன்றில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீமும் அரச தரப்பில் அதில் பங்கேற்றிருந்தார். அப்போது கொழும்பிலுள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் அவசர, அவசரமாகக் கூடிய கட்சியின் அரசியல் உயர்பீடம் ரவூப் ஹக்கீமை தலைமைப் பதவியிலிருந்து நீக்கத் தீர்மானித்திருந்தது. இதனையறிந்த அவர் அனைத்தையும் விட்டு விட்டு நாடு திரும்பியிருந்தார்.
2. அமைச்சர் ஹக்கீம் வெளிநாடொன்றுக்குச் சென்றிருந்த போது கிழக்கு மாகாண சபையில் “திவிநெகும“ சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் இதனை மேலும் படித்துப் பார்ப்பதற்கு கால அவகாசம் கோருமாறும் அமைச்சர் ஹக்கீமினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் கூட கட்சி உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஆதரவாக வாக்களித்தமை..
3. இறுதியாக அமைச்சர் ஹக்கீம் வெளிநாடு சென்றிருந்த போது அவரது கருத்தைக் கேட்டறியாமல் கட்சியின் தவிசாளரான பஷீர் ஷேகு தாவூதுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினை வழங்கியமை. போன்ற இந்த மூன்று முக்கிய விடயங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் வெளிநாடுகளில் தங்கியிருந்த போதே இடம்பெற்றுள்ளன. அதாவது கட்சிக்குள் பெரிய, பெரிய விடயங்கள் எல்லாம் இடம்பெற்றமை அமைச்சர் ஹக்கீம் வெளியே இருந்த போதே.
இருப்பினும் அமைச்சர் ஹக்கீம் வெளிநாடு சென்றிருந்த நிலையில் இவ்வாறெல்லாம் நடந்தமைக்கு சர்வதே சதி என்று எல்லாவற்றுக்கும் சிலர் கூறுவது போன்று இதற்கும் கூற முடியாது. அப்படியாயின் இது உள்ளுர் சதியா?
இதில் அரசாங்கத்தின் பாத்திரம் என்ன?
உள்ளுர் அரசியலின் பங்கு என்ன?
அல்லது கோழி திருடிய கள்வனே கூட உலாவும் கதையா?
எது எப்படியிருப்பினும் அமைச்சர் பஷீர் ஷேகு தாவூத் அரசாங்கத்தை நன்கு புரிந்து கொண்டுள்ளமை போன்றே அரசாங்கமும் அவரைப் புரிந்து கொண்டு கவனித்து வருகிறது என்ற உண்மையையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 10-02-2013

No comments:
Post a Comment