இலங்கையின் கதவைத் தட்டிச் செய்தியைக் கூறிச் சென்ற அமெரிக்கா
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக இன்னொரு பிரேரணை அமெரிக்காவின் அனுசரணையுடன் முன்வைக்கப்படவுள்ளமை தொடர்பாக முன்னர் வெளிவந்து செய்திகள் தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அமெரிக்காவே ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இதில் முக்கிய விடயம் என்னவெனில் இலங்கைகு விஜயம் மேற்கொண்டிருந்த அந்நாட்டின் உதவிச் செயலாளர்கள் மூவரும் இங்கேயே வைத்துத் தெரிவித்தமையாகும்.
இவ்வாறானதொரு பிரேரணையை இலங்கைகு எதிராக அமெரிக்கா கொண்டு வருவதற்கான காரணத்தையும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். கடந்த வருடம் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை சக்திமிக்கதாக்கி அவற்றில் கூறப்பட்டவற்றினை சிறிலங்கா அரசு செய்தே ஆக வேண்டும் என்பதில் தாங்கள் திடமாக உள்ளோம் என்பதனையும் அதன் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற சில விடயங்களையும் முன்வைத்தே இன்னொரு பிரேரணை இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ளதாக அவர்கள் தெளிவுபடுத்திக் கூறியுள்ளனர்.
ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றப் பிரேரணை அதன் பின்னரான நிகழ்வுகள் கூட இந்தப் பிரேரணைக்கான தூண்டுகோலாக இருந்தமை பற்றியும் அவர்கள் கூறியுள்ளனர்.
தங்களது இலங்கை விஜயத்தின் போது முன்னர் அமெரிக்காவினால் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தே பல தரப்புடன் கலந்துரையாடியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இவற்றையெல்லாம் மொத்த உருவில் பார்க்கும் போது, முன்னர் அமெரிக்காவினால் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையை விட முன்வைக்கப்படவுள்ள பிரேரணையானது கடுமையானதாகவிருக்கும் என்றே நம்பலாம்.
சர்வதேசத்துக்கு தாங்கள் அடிபணியப் போவதில்லை, அவர்கள் எங்களது உள்ளுர் விடயங்களில் தலையிடவும் முடியாது என்றெல்லாம் பேசப்பட்டாலும் எதிர்காலத்தில் இலங்கை அரசினால் அதே பல்லவியை தொடர்ந்து பாடமுடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு அரசு தள்ளப்படும் நிலை வருமென்றே எதிர்வு கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலைக்குப் பிரதான காரணமாக அமைந்தது இலங்கையின் சர்வதேச சண்டித்தனப் போக்கே ஆகும். அத்துடன் வன்னி யுத்தத்தில் கிடைத்த வெற்றியின் மமதையுமே இன்று இலங்கை தன்னை சர்வதேச சண்டியனாக காட்டிக் கொள்கிறது வைத்துள்ளது.
இதற்கு மேலாக, தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை அமெரிக்காவுக்கு உள்ளதோ இல்லையோ இலங்கை தொடர்பான தனது பிரேரணையை இந்த அரசினால் கிடப்பில் போடப்பட்டதனை அமெரிக்கா ஒரு கௌரவப் பிரச்சினையாகவே நோக்குகிறது என்பது நிச்சயம்.ஆகவே, அமெரிக்காவின் இலங்கை மீதான பிடி என்பது நிச்சயம் இறுக்கமடைந்தே காணப்படும்.
தங்களுக்கு எதிரான நாடுகளின் கடல் பரப்புக்குள் யுத்தக் கப்பலை அனுப்பி முள்ளோட்ட எச்சரிக்கை விட்டும் அமெரிக்கா, இலங்கை விடயத்தில் தனது பிரதிகளை அனுப்பி இந்த நாட்டிலேயே வைத்து தங்களது நிலைப்பாட்டினைச் துணிச்சலுடன் தெளிவுபடுத்தியுள்ளமை தொடர்பில் இலங்கை அரசு இன்னும் அடுப்பங்கரைப் புனையாகவோ அல்லது அலட்டிக் கொள்ளும் தன்மையுடனோ இருக்க முடியாது என்பதும் இன்று தெளிவாகியுள்ளது.
அமெரிக்கப் பிரதிநிதிகளின் வருகை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சில கருத்துகளை முன்வைத்திருந்தார். அமெரிக்கா உட்பட பலநர்டகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்து செல்கின்றனர். இது ஒரு புதிய விடயமல்ல. இலங்கைகு அச்சுறுத்தலானதும் அல்ல. யுத்த காலத்திலும் இச்சாறானவர்கள் வந்தே சென்றனர். இவர்கள் எவரும் அரசுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று ஒரு நாட்டின் அரச தலைவர் என்ற வகையில் குருத்துத் தெரிவிக்க வேண்டிய முறையில் அவர் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க, இலங்கை அரசின் முக்கிய அமைச்சரான விமல் வீரவன்ச, அமெரிக்கப் பிரதிநிதிகளின் விஜயம் தொடர்பில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தைக் கவிழக்க அமெரிக்கா சதி செய்வதாக அவர் கண்டு பிடித்துள்ளார். அத்துடன் இல்கையின் நீதித்துறையில் வீழச்சி கண்டுள்ளதால் ஒபாமாவுக்குத் தூக்கம் வரவில்லை என்பது அமைச்சர் விமலின் இரவு நேரக் கண்டு பிடிப்பாகும்.
இலங்கைகு எதிரான போக்குடைய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இலங்கை வரும் பொதெல்லாம் அமைச்சர் விமல் வீரவன்சவின் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதும் கண்டுபிடிப்புகளும் என்பது சிங்கள மக்களுக்கும் சலித்துப் போன ஒரு விடயமே. விமல் வீரவன்சவினால் அடிக்கடி தூசு தட்டப்படும் கருத்துகள் சர்வதேசத்தின் காதுகளுக்குத் தேவையற்ற விடயமாக அரசியலாளர்களும் கருதுகின்றனர்.
இதேபோன்றே அரசின் பங்காளிக் கட்சியான ஹெல உறுமயவும் அமெரிக்காவுக்கு எதிரான தனது கருத்துகளை வெளியிட்டு தனது பங்களிப்பையும் செய்துள்ளது.. ஆனால் அமெரிக்கப் பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்தின் உள்நோக்கம் தங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை என்று கட்சி கூறியுள்ளதனையும் கருத்தில் கொணள்ள வேண்டும்.
எது எப்படியிருப்பினும் தனது பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றாமை தொடர்பில் அமெரிக்கா இன்று கௌரவப் பிரச்சினைக்குள் சிக்கியுள்ளது. இந்த அடிப்படையிலேயே எதிர்காலத்தின் அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வும் முன்னெடுக்கப்படும் என்பது நிச்சயம்.
மார்ச் மாத மனித உரிமைப் பேரவை அமர்வுடன் இலங்கை தொடர்பா தனது காரியத்தை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளுமா என்பதும் சந்தேகத்துக்குரியது.
இதேவேளை, அடுத்த மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைகு எதிராக பல நாடுகள் ஒன்று திரளக் கூடிய சாத்தியங்களும் அதிகமகவே காணப்படுகின்றன. கடந்த முறை இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்ட நாடுகளில் இம்முறை எதிரான நிலைப்பாட்டினை முன்னெடுக்கலாம். காரணம் முன்னர் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை ஒரு மனத்தாங்கல் அந்த நாடுகளின் மனதளவில் இருக்கக் கூடும்.
அதுமட்மின்றி, கடந்த மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய பல நாடுகளில் இம்முறைய அமர்வில் பங்கேற்வில்லை. இது இலங்கைக்குப் பாதகமான அம்சமாக நோக்கப்பட வேண்டும்.
மேலும் தற்போதைய நிலையில் ஒபாமாவின் ஆட்சிக் காலம் இரண்டாவது தடவையாகவும் தொடர்வதால் பல நாடுகள் தங்களது நாட்டின் தேசிய நலனைக் கருத்திற் கொண்டு அமெரிக்காவுக்கு ஆதரவான போக்கையே கடைப்பிடிக்கும். இதன் பிரதிபலிப்பும் மார்ச் மாத மனிதப் உரிமைப் பேரவை அமர்வில் இலங்கை விவகாரத்தின் போதும் தெரிய வரும்.
இதற்கு மேலாக மேலும் பல மேற்கத்தைய நாடுகளும் பல சர்வதேச அமைப்புகளும் இலங்கைகு எதிராகவே செயற்படவுள்ளமை காரணமாக ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வானது நிச்சயமாக பல்நாட்டு உதவியுடனான வன்னி யுத்தகள வெற்றி போல் இலங்கைக்கு அமையாது என்றே கூறமுறலாம்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 03-02-2013
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 03-02-2013

No comments:
Post a Comment