Saturday, January 26, 2013


இலங்கை அரசின் தலைக்கு மேலால் தூக்குக் கயிற்றினை தொங்கவிட்டவர்கள் யார்?                                     
                                                                                                                  ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வானது இலங்கையைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானதொன்றாக நோக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் எதிர்வரும் மார்ச் மாத அமர்வானது இலங்கைக்கு மிகுந்த சோதனைமிக்கதாக அமையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் உள்ளுரில் மட்டுமல்ல.. சர்வதேசத்திலும் உணரப்பட்டுள்ளது. உலக வரைபடத்தின் ஒரு புள்ளியாகக் காணப்படும் இலங்கைத் தீவானது மார்ச் மாத ஜெனீவா பேரவை அமர்வில் மிக முக்கியத்துவம் பெற்ற ஒரு நாடாகவே பேசப்படவுள்ளது.

இலங்கையைப் பொறுத்த வரையில், தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தமிழ் மக்களினதும் அரசினதும் இன்றைய நிலையினை ஜெனீவா அமர்வில் இரண்டாவது சக்திகள் ஊடாக முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை அண்மைக் காலமாக முன்னெடுத்து வரும் அதேவேளை, இலங்கை அரசும் தாங்களும் சளைத்தவர்களல்லர் என்பதனைக் காட்டும் வகையில் தேவையானவற்றைச் செய்து தன்னை நிரபராதியாகக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது
.

இதற்கு மேலாக சர்வதேச ரீதியில் நோக்குமிடத்து, மார்ச் மாத ஜெனீவா அமர்வில் பல நாடுகள் இலங்கைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் சாத்தியமே அதிகம் காணப்படுவதாக தெரிய வருகிறது. அதேபோன்று ஒரு சில நாடுகள் அரசுக்கு ஆதரவாகச் செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் அமைப்புகள் போன்றன ஜெனீவா அமர்வு காலத்தில் நேரடியாக அன்றி பிற வழிகளில் இலங்கைக்கு எதிராகவே வரிந்து கட்டி நிற்கும் என கூறப்படுகிறது. இவற்றின் அண்மைக்கால அறிக்கைகள் மூலம் இது புலனாகிறது. ஆகவே, மார்ச் மாத மனித உரிமைப் பேரவை அமர்வுகள் இம்முறை இலங்கை விவகாரத்துடன் ஆரம்பித்து அதனுடனேயே முடிந்து விடுமா என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
ஏனெனில், இலங்கை அரசானது பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதே அரசியலாளர்களின் முடிவாக உள்ளது. இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கான பொறுப்பையும் அரச தரப்பே ஏற்க வேண்டும். ஏனெனில் முன்னைய மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பில் பல விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

சட்டத்துக்கு மாறாக இலங்கையில் இடம்பெற்றுள்ள கொலைகள், வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை முழுமையாக வாபஸ் பெறல், நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குதல், காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துதல்,மாகாணங்களுக்கான அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், சிவில், சமூகக் கட்டமைப்புகளை வலுவாக்குதல்,சட்ட ஆட்சி முறை தொடர்பிலான வழுக்களை நீக்கிச் சீராக்குதல்,கருத்துச் சுதந்திர உரிமைகளை உறுதிப்படுத்தல்,சர்வதேச சட்டங்கள் இலங்கையில் மீறப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு விரிவான விளக்கமளித்தல், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைச் சிபார்சுகள் நடைமுறைப்படுத்தப்படாமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை மீது சுட்டு விரல் நீட்டப்பட்டிருந்த நிலையில் இவற்றினை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்கா பிரேரணை ஒன்றினையும் சமர்ப்பித்திருந்தது. அந்தப் பிரேரணை 24 நாடுகளின் ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டதும் தெரிந்ததே.

ஆனால், மேற்குறித்தனவற்றில் குறைந்தபட்சத்தைக் கூட இலங்கை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை. வழங்கிய வாக்குறுதியை இலங்கை மீறிவிட்டது என்று கூறி அமெரிக்கா உட்பட பல நாடுகள் இன்றுவரை தங்களது சலிப்பினையே வெளிப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாகவே அமெரிக்கா இன்று இலங்கை மீதான தனது பிடியை இறுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கும் மேலாக அண்மைக் காலமாக இங்கு இடம்பெற்று வரும் பல சம்பவங்கள் இலங்கை மீதான சர்வதேச ஆத்திரத்தை உள்ளிருந்து கனன்று கொண்டிருக்கும் எரிதணல் நிலைக்கு உயர்த்தியுள்ளன. ஆக, மொத்தத்தில் இவையனைத்தும் எரிமலையாக வெடித்து வெளிவரும் தளமாக அமையப் போவது மார்ச் மாத மனித உரிமைப் பேரவை அமர்வுதான் என்று நம்பப்படுகிறது.
இது ஒரு புறமிருக்க, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரான நவநீதன் பிள்ளையும் அமெரிக்க குழுவொன்றும் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் இன்று இலங்கையின் அரசியல் களம் அல்லோலகல்லோம் அடைந்து காணப்படுகிறது.  மார்ச் மாதம்  ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், பிரதம நீதியரசர் பதவி நீக்க விவகாரம் மற்றும் பல சர்வதேச நாடுகளால் முன்னெடுக்கப்படும் நெருக்கடி போன்றனவற்றால் இலங்கை சங்கடத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், அமெரிக்கக் குழுவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதுடன் தீர்வுத் திட்டப் பேச்சுகளை மீள ஆரம்பிக்குமாறு அமெரிக்கக் குழு வலியுறுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நவநீதன் பிள்ளையின் இலங்கை விஜயமும் இதே அடிப்படையைக் கொண்டதாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, ”இவர்கள் அனைவரது வருகையும் இலங்கைக்கு எதிராகவே அமையப் போகிறது. இவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது. வந்தாலும் திருப்பி அனுப்ப வேண்டும். அமெரிக்கா இல்லாவிட்டால் சீனா நமக்குண்டு” என்றெல்லாம் வீர வசனம் பேசி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் காகிதப் பூ சண்டித்தனம் காட்டும் தென்னிலங்கைக் கடுங்கோட்பாட்டுச் சிங்களக் குழப்பவாதிகளையும் மறந்து விடமுடியாது. அதாவது, யானை அடித்துச் சாவதற்கு முன்னர் தானே அடித்துத் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமையை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறானவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்ததன் காரணமாகவும் அரசாங்கம் பல விடயங்களில் தவறிழைத்து வந்துள்ளதனை அவதானிக்க முடிகிறது. பல கட்சிகளின் கூட்டு அரசாங்கம் என்பதனால் அதன் தலையெழுத்து இப்படித்தான் அமையும் என்பதனையும் மறுக்க முடியாது.

இவ்வாறானவர்களை வெறுத்துக் கொள்ளவும் முடியாத, அதேவேளை சர்வதேசத்தை அணைத்துக் கொள்ளவும் இயலாத இருதலைக் கொள்ளி எறும்பான நிலையில் இன்று அரசாங்கம் உள்ளது. இந்த அரசாங்கம் நிறையவே கெட்டுப் போய்விட்டது என யாராவது கூறுவார்களாயின் அதற்கான முக்கிய பொறுப்பினை இந்தச் சிங்கள குழப்பவாதிகளும் ஏற்க வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சர்வதேசப்படுத்தியவர்கள் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் வேறு பல தரப்பினரும் என்று கூறப்படும் நிலையில் சர்வதேச ரீதியில் இந்த நாட்டின் பெயர் அவமானப்பட்டு நாறிக்    கொண்டிருப்பதற்கு யார் காரணம் என்பதும் அறிந்து வைக்கப்பட வேண்டிய விடயமாகும்.
முள்ளிய வாய்க்காலில் தமிழர்களுக்குக் கொள்ளி வைக்கச் சொன்னவர்கள் யார்?

தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கக் கூடாது என ஒற்றைக் காலில் நின்றவர்கள் யார்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயங்கரவாத இயக்கமாகக் கருதி தடை செய்யுமாறு கோரியவர்கள் யார்?
சர்வதேசத்துக்கு எதிராக நா கூசாமல் வசை பாடியவர்கள் யார்?எந்த விசாரணைகளும் இலங்கையிலோ இலங்கைக்கோ தேவையில்லை என்று திமிர் பிடித்துப் பேசியோர் யார்?
தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள அரசுகள் ஓரளவேனும் தீர்த்து வைக்க மனதால் நினைத்த போதும் அதற்குத் தடையாக, எதிராக நின்றவர்கள் யார்?

தமிழர்களின் உள்ளுர் பிரச்சினையை உள்ளேயே தீர்க்கவிடாமல் ஊதிப் பெருப்பித்து உலகுக்குக் காட்டியவர்கள் யார்?

இவற்றுக்கெல்லாம் உரிமையாளர்கள் இந்த காகிதப் பூ சண்டித்தனம் காட்டும் தென்னிலங்கைக் கடுங்கோட்பாட்டுச் சிங்களக் குழப்பவாதிகளுமாவர்.
தமிழர் நலன் தொடர்பில் கூட்டமைப்பு பேசினால் அது இனவாதம், கூட்டாச்சியில் தொங்கிக் கொண்டிருப்போர் தமிழர்களுக்கு எதிராகப் பேசினால் அது நாட்டுப்பற்று. இது எந்த வகையில்தான் நியாயமாகுமோ?
ஆனால், இன்று இவற்றுக்கெல்லாம் தலைகொடுக்க வேண்டியது இலங்கை அரசின் தலைவிதியாக மாறியுள்ளது.

இவ்வாறான இனவாதிகளினதும்  சிங்கள பௌத்த கடுங்கோட்பாளர்களதும் கேட்பார் கைப்பிள்ளையானதன் காரணமாகவே இன்றைய இலங்கை அரசின் தலைக்கு மேல் தூக்குக் கயிறு தொங்கவிடப்பட்டுள்ளது.

அதற்காக இவ்வாறானவர்களால்தான் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது உள்ளது என அரசு அவர்களது தலையில் பாரத்தை போட்டுவிடவும் முடியாது. தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விடுவது சிங்கள அரசுகளின் கைவந்த கலைகளில் ஒன்று என்பது தெரியாத ஒரு விடயமல்ல என்பதனையும் இங்கு சொல்லியே வைக்க வேண்டும்.

எது எவ்வாறெனினும், இலங்கை அரசானது தனது கழுத்துக்கு மேலால் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிறிலிருந்து மீண்டுகொள்ளக் கூடிய சந்தர்ப்பமும் இன்னும் அதிகமாக உள்ளது என்றே கூற முடியும். இப்போது கூட அரசாங்கம் நினைத்தால் பல நல்லனவற்றைச் செய்து காட்ட முடியும். நினைத்தவற்றைச் செய்யக் கூடிய பலம் தங்களுக்கு உள்ளது என்பதனை அரசாங்கம் அண்மைக் காலங்களில் நிரூபித்து தனது ஆண்மையைக் காட்டிக் கொண்டே வருகிறது.

ஐ.நா சபையிலோ மனித உரிமைப் பேரவையிலோ அல்லது சர்வதேசத்திலோ இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கான மூலகாரணங்கள் என்ன என்பதனை அரசு புரிந்து கொண்டு அவற்றில் முடிந்தனவற்றைச் செய்வதற்கான திரிகரணசுத்தியுடன் செயலில் ஈடுபட முடியும். அதற்கு  நீண்ட காலம் எடுக்கப் போவதில்லை. ஆனால் முன்னர் குறிப்பிட்ட வீர வசனம் பேசும் காகிதப் பூ சண்டித்தனம் காட்டும் தென்னிலங்கைக் கடுங்கோட்பாட்டுச் சிங்களக் குழப்பவாதிகளை ஒரு பொருட்டாகவே கருதாத நிலையை அரசு முதலில் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அண்மைக் காலத்தில் இலங்கை அரசு கொண்ட வெற்றிகளில் இதுவே இமயமாக அமையும். இதனை அரசு சவாலாக எடுத்துச் செயற்பட வேண்டும். இவற்றினைச் செய்ய மார்ச் மாதத்துக்கு முன்னர் அரசுக்கு மனம் வருமா பொறுத்துத்தான் பார்ப்போம்.

நன்றி வீரகேசரி வாரவெளியீடு 27-01-2013


No comments:

Post a Comment