Sunday, January 20, 2013


சரத் பொன்சேகாவின் தனிவழி அரசியலுக்கு துணை போவாரா ஷிராணி?

                                                                                                   ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

இலங்கை அரசியலில் கடந்த சில மாதங்காளகச் சூடு பிடித்துக் காணப்பட்ட  ஒரு விடயம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. பிரதம நீதியரசராகப் பதவி வகித்த ஷிராணி பண்டாரநாயக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அதிகாரமும் நிறைவேற்று அதிகாரமும் நீதித்துறையை மிஞ்சிய நிலையில் காணப்படுகின்றன என்பதனை இது எடுத்துக் காட்டினாலும் இந்தப் பதவி நீக்கமானது அரசியலமைப்புக்கு முரணானது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும்  அரசுக்குத் தலையிடியாகவிருந்த அல்லது தேவையாகவிருந்த ஒரு பிரச்சினைக்கு இப்போது முடிவு காணப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடயம் தொடர்ந்தும் பேசப்படப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.  இலங்கை அரசியலில் இவையெல்லாம் சாதாரண விடயங்கள்தான்.

ஷிராணி பண்டாரநாயக்காவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதென எப்போதோ எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னராக இடம்பெற்ற நிகழ்வுகள் நாம் அறிந்தவையே. அரசின் இந்த முடிவுக்கு உள்ளுரில் மட்டுமல்ல. சர்வதேசத்திலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்திருந்தன. இலங்கை உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் உச்சியில் கறுப்புக் கொடி கட்டப்பட்டது முதல் நீதிமன்ற வளாகத்தில் மெழுகுவர்த்தி போராட்டம் வரையில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், எதற்கும் அரசாங்கம் அஞ்சவில்லை.  சர்வதேச நாடுகள் கூட இந்த விடயத்தில் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்த நிலையில் அதனையே பொருட்படுத்தாத இலங்கை அரசுக்கு உள்ளுர் எதிர்ப்பு என்பது என்ன இமய மலையா?


இராணுவத் தளபதியாகவிருந்த ஜெனரல் சரத்பொன்சேகா அரசுடன் முரண்பட்ட நிலையில், தான் வகித்த முப்படைகளின் பிரதானி என்ற பதவியைத் துறந்து அரசுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு அரசியலுக்கு வந்ததன் பின்னர் அவருக்கு நேர்ந்த கதி உலகம் அறிந்ததே. உள்ளுரிலும் சர்வதேசத்திலும் அவருக்கு ஏற்பட்டிருந்த அனுதாபம், அவருக்காக எழுப்பப்பட்ட ஆதரவுக் குரல்கள் எதுவுமே அரசாங்கத்தினால் கண்டு கொள்ளப்படவில்லை. அன்று அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் கருத்துத்துத் தெரிவித்திருந்த அரசு, இந்த விடயங்களை நீதிமன்றமே முடிவு செய்யும். நீதித்துறையில் தாம் தலையிட முடியாது என திட்டவட்டமாகத் கூறியதனையும் நாம் அறிவோம். இன்று அவரின் நிலை என்ன என்பதும் வெளிச்சமானதே.

வன்னி யுத்தத்தில் அவரது வகிபாகம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே. தான் அடைந்த இராணுவ வெற்றியை முன்வைத்து கொந்தராத்து அரசியலில் ஈடுபட்ட அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதும் வெற்றி பெற முடியாத நிலையே காணப்பட்டது. தென்னிலங்கையில் கூட அவரால் கணிசமான வாக்குகளைப் பெற முடியாதிருந்தது. இன்று அவர் அரசியலில் முகவரியற்ற ஒரு நபராகவும் தென்னிலங்கை மக்களிடமிருந்தே மறந்து போகும் ஒரு சாதாரண சிவிலியானகவும் மாறிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறானவர்கள் மீதான மக்கள் பிரபல்யம் அனுதாபங்கள் என்பன அவர்களுடன் நிலைத்து நிற்கக் கூடியனவல்ல. இதுவெல்லாம் தற்காலிக நீர்க்குமிழிகள். இதனைச் சரத் பொன்சேகா தற்போது நிச்சயமாக உணர்ந்திருப்பார் என நம்பலாம்.

இந்த அடிப்படையிலேயே முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் விடயத்தையும் நோக்க முடியும். இன்று அவருக்கு அனுதாப அலைகள் மேலெழுந்து காணப்படலாம். மக்கள் ஆதரவும் தம்பக்கம் உள்ளதாக  அவர் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவையெல்லாம் சிறிது காலத்துக்கே.

ஷிராணி பண்டாநாயக்காவைப் பதவியிலிருந்து நீக்கிய மறுதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார். ஆனால், அங்கு ஜனாதிபதி பக்கமிருந்தோ அல்லது சட்டத்தரணிகள் பக்கமிருந்தோ முன்னாள் பிரதம நீதியரசர் தொடர்பில் பெரிதாகப் பேசப்படவில்லை. இதற்கு மாறாக, சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள் சிலர் அங்கு வேறு விதமான கருத்துகளையே தெரிவித்திருந்தனர். அதாவது, சில குழுக்கள் தங்கள் சங்கத்துடன் சேர்ந்து அரசியல் இலாபம் தேட முயற்சித்தனர் என்றும் கடந்த காலங்களில் நீதித்துறை தொடர்பாக இடம்பெற்ற செயற்பாடுகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் கருத்துத் தெரிவித்திருந்தனர் எனச் செய்திகள் வெளிவந்திருந்தன. ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பின் போது சட்டத்தரணிகள் சங்கத் தலைவரான விஜயதாஸ ராஜபக்ஷவும் ஜனாதிபதிக்கு அருகில் காணப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஷிராணி பண்டாரநாயக்கா விடயத்தில் விஜயதாச ராஜபக்ஷ காட்டிய அக்கறையையும் அவருக்காக குரல் கொடுத்து வந்ததனையும் எவரும் இலகுவில் மறந்து விட முடியாது. 

இது ஒரு புறமிருக்க, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளும் புதிய நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர்  மொஹான் பீரிஸ் பதவியேற்றுக் கொண்ட சில மணி நேரத்துக்குள்ளேயே வாபஸ் பெறப்பட்டன. 

ஆகவே, இவற்றினை ஆரம்பமாகக் கொண்டு பார்க்கும் போது ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு ஆதரவாக எழுந்துள்ள, அனுதாபம், ஆதரவு என்பவை சிறிது காலத்துக்கே நீடிக்கும். இவைகள் தனக்குத் தொடர்ந்து வழித்துணை புரியுமென நம்பிக் கால் வைத்து ஏதாவது காரியத்தில் அவர் இறங்கினால் அதன் பிரதிபலனை வேறு வடிவங்களிலும் அவர் அனுபவிக்க நேரிடலாம். 

உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறும் போது அவர் ஊடகவியலாளர்களுடன் பேசியுள்ளார். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தனது குடும்பத்தைப் பாதுகாப்பர் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் தான் மக்களுடன் தொடர்ந்து இருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். “மக்களுடன் தொடர்ந்தும் இருப்பேன்“ என அவர் தெரிவித்தமையானது, அரசியலாளர்களிடையே தற்போது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. எதிர்காலத்திலும் இவரும் அரசியல் குதிப்பாரோ என்பதே அந்தச் சந்தேகம்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூட அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுடன் இணைந்து அரசியல் பயணம்  செய்ய தான் தயாராக உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் மற்றும் தீர்ப்புகளே தானும் அரசியலுக்கு வர காரணமாக அமைந்திருந்தன என்றும் தனக்கு அன்று ஏற்பட்ட அதே நிலையே முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு இன்று நேர்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சூடு கண்ட புனை அடுப்பங்கரை நாடாது என்பதனைச் சரத் பொன்சேகா நன்கு அறிந்திருந்த நிலையிலும் தொடரும் தனது அரசியல் பயணத்துக்கு ஷிராணி பண்டாரநாயக்காவையும்  துணைக்கு அழைத்துள்ளார். இது தொடர்பில் ஷிராணியே முடிவு செய்ய வேண்டும்.

ஆகவே, தனது எதிர்காலம் தொடர்பில் சுய விமர்சனம் ஒன்றினைச் செய்து கொண்டும் மற்றவர்களின் கடந்த கால படிப்பினைகளைக் கருத்திலெடுத்தும் தனது அடுத்த காலடியை அவர் நிதானமாக முன்வைக்க வேண்டும். 

இது இவ்வாறிருக்க, தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பில் ஓரிரு நாட்களில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதானது அரச தரப்பில் இன்னொரு தலையிடியைத் தோற்றுவித்துள்ளது. அவர் எவ்வாறான விடயங்களை வெளியிடப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பையும் அச்ச உணர்வையும் அரசுக்கு ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் சமாளிக்கப்பட்டு விடும். அவைகளும் சில நாள் சலசலப்பே. ஜல்லிக்கட்டுக் காளையின் கொம்பையே பிடித்து நிறுத்தியவனுக்கு அதன் மூக்கைத் தொடுவது என்பது பெரிய வேலையல்ல.

எது எப்டியிருப்பினும் முன்னாள் பிரதம நீதியரசர் ஊடகவியலாளர்களுக்கு முக்கியமானதொரு கருத்தினை இறுதியாகத் தெரிவித்திருந்தார். அதாவது,  இந்தப் பதவியை தற்போது யார் வகிப்பது என்பது அல்ல முக்கியம். தொடர்ந்தும் நீதித்துறை சுதந்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டியதே அவசியம் என்பதே அவர் தெரிவித்திருந்த கருத்தாகும். அவரின் இந்தக் கருத்தானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். இலங்கையின நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய சவால்களின் போது முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்திருந்த இந்த கருத்து மட்டும் நிச்சயம் பேசப்படும் என்பது உண்மை. சம்பந்தப்பட்ட தரப்புகள் இந்த விடயத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் செயற்பட வேண்டியது அவசியம். 

நன்றி வீரகேசரி வாரவெளியீடு  20-01-1013

No comments:

Post a Comment