- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகசபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது எவ்வித களைப்பும் இன்றி தொடர்ச்சியாகக் கூடி தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. குறுகிய காலத்துக்குள்ளேயே அது தனது அறிக்கையைச் சமர்ப்பித்துச் சாதனையே படைத்தது என்றும் கூறலாம்.
இவ்வாறானதொரு
நிலையில் இன்னொரு பாராளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் மீண்டும் பேசப்படுகிறது. “தேசியப்
பிரச்சினை“ என இலங்கை அரசினால்
அடையாளப்படுத்தப்பட்டுள்ள தமிழர் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பது தொடர்பிலானதே
அந்த நாடாளுமன்றக் குழுவாகும். சுமார் ஒரு வருட காலமாகப் பேசப்பட்ட இந்த விடயம், இலங்கை அரசியலில்
அண்மைக்காலமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த வேறு சில நிகழ்வுகளால் மறக்கப்பட்டிருந்தது.
ஆனால், மீண்டும் அதுதற்போது தூசு தட்டப்பட்டுள்ளது.
தேசியப்
பிரச்சினை தொடர்பான இந்தப் பாராளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் அமைச்சரான நிமால்
சிறிபால டி சில்வா அண்மையில் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துகள் பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சுட்டு விரல்
நீட்டப்பட்டதாகவே அமைந்திருந்தன. தேசியப் பிரச்சினைக்கான தீர்வு
இழுத்தடிக்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என அவர் நேரடியாகவே
குற்றஞ் சுமத்தியிருந்தார். தங்களது அழைப்பினை ஏற்று பாராளுமன்றத் தெரிவுக்
குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டிருந்தால் தமிழ் மக்களின்
பிரச்சினைக்கு இன்று தீர்வைக் கண்டிருக்க முடியுமென அவர் ஒருபடி மேலே சென்றும்கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியிருப்பதானது, அமைச்சர் நிமல் சிறிபால டி
சில்வாவின் இன்னொரு அதி உச்ச அரசியல் நகைச்சுவையே
என்பதனை கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்
மக்களின் பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பு சிந்திக்குமாயின் அல்லது அவர்கள்
மக்களின் பிரதிநிதிகள் எனத் தங்களைக் கருதுவார்களாயின் பாராளுமன்றத் தெரிவுக்
குழுவுக்கு வரவேண்டும். இதனை விடுத்து அமெரிக்காவுக்கோ பிரித்தானியாவுக்கோ
ஓடுவதால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஆட்சியிலிருக்கும்
தென்னிலங்கை சிங்கள அரசியல் தலைமைகள் தமிழர் பிரச்சினை தொடர்பில் இவ்வாறெல்லாம்
கூறுவது ஒரு புதிய விடயமல்ல.
ஆனால், உள்ளுர் பிரச்சினைக்காக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கோ பிரித்தானியாவுக்கோ சென்று
தீர்வினைக் காணமுடியாது என அவர் தெரிவித்திருப்பது வேடிக்கையான விடயமே. தமிழ்
மக்களின் பிரச்சினைகளைச் சர்வதேசப்படுத்தியவர்கள் யார் என்பதனை அமைச்சர் நிமால்
புரிந்து கொள்ளாமல் அல்லது தெரிந்து கொண்டே
தெரியாதவர் போன்று கருத்துத் தெரிவித்துயள்ளார்
போல் தெரிகிறது. முன்னர் ஒரு தடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்க்ளின்
பிரச்சினைக்கான எந்தத் தீர்வும் இறக்குமதி செய்யப்பட்ட தீர்வாக அமையாது என்றும்
தான் 13 அல்ல.. அதனை விட ஒருபடி மேலே சென்று 13 பிளஸ் வழங்கப் போவதாகக்
கூறியிருந்தமையையும் இங்கு குறிப்பிடுவது சிறந்ததே.
தமிழர்களின்
பிரச்சினைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தீர்வு முடிவாக அமையாவிட்டாலும் சர்வதேச
மத்தியஸ்தம் அல்லது அனுசரணை இல்லாமல் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும்
எட்டப் போவதில்லை என்பதனை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். இது தமிழ் தேசியக்
கூட்டமைப்பினால் மட்டுமல்ல.. தமிழ் மக்களினாலும் புரிந்து கொள்ளப்பட்ட விடயம். உண்மை.
கடந்த கால கசப்பான அனுபவங்களை நோக்கினால் இதன் தேவையை உணர்ந்து கொள்ளவது கடினமான ஒரு விடயமல்ல.
தமிழர்
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக எனக் கூறி இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில்
எத்தனையோ பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள்
இடம்பெற்றிருந்தன என்பது அனைவரும் அறிந்த விடயமே. இவ்வாறான பேச்சுவார்தைகள் முறிவுக்கு வந்தமை அல்லது முடிவுக்குக்
கொண்டு வரப்பட்டமை எந்தத் தரப்பிலிருந்து என்பதனை அனைவரும் அறிவர்.
1. ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள்.
2. அனைத்துக் கட்சிகள் மகாநாடு.
3. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மகாநாடு.
4. பாராளுமன்ற தெரிவுக்குழு (மங்கள முனசிங்க)
5. அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் (திஸ்ஸ விதாரண)
6. அரசு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு.
என
அண்மைக் காலத்தில் சுழற்சியாக இடம்பெற்ற
பேச்சுவார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், கிட்டிய பலன் எதுவுமே இல்லை.
காலத்தை இழுத்தடித்து தமிழர்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு தந்திரமாகவே
இவை அமைந்திருந்தன.
நூறு
தடவைகளுக்கும் மேலாகக் கூடிய பேராசிரியர், அமைச்சர்
திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் பல விடயங்களுக்கு ஒட்டு மொத்த இணக்கப்பாடு காணப்பட்டன.
தமிழ்பேசும் மக்களுக்கு குறைந்தபட்ச அனுகூலங்களையாவது வழங்கக் கூடியதான தீர்வுகளைக் கொண்ட இந்தக் குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்
கையளிக்கப்பட்டு பல வருடங்கள் சென்ற
நிலையிலும் அது தொடர்ந்தும் தூசு தட்டப்படாத நிலையிலே உள்ளது. இந்தக் குழுவின்
சிபார்சுகளில் சிலவற்றினையேனும் நடைமுறைப்படுத்தியிருந்தால் தமிழர் பிரச்சினைக்கு இன்று ஓரளவேனும் தீர்வு எட்டப்பட்டிருக்கலாம்.
இது
ஒருபுறமிருக்க, ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதும் சர்வதேசத்தால் மிகுந்த அவதானத்துடனும் நோக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அறிக்கையின்சிபார்சுகளுக்கு என்ன நடந்தன? அவையும் கிடப்பிலேயே
உள்ளன. இந்த ஆணைக் குழுவின் அறிக்கையைச் செயற்படுத்துமாறு இலங்கை அரசை சர்வதேச
நாடுகள் கேட்டுக் கொண்டிருந்தும் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளன.
ஆக, விடயங்கள் அனைத்தும் இவ்வாறிருக்க, இவைகளை மறந்த நிலையில் இன்று தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் மீதோ அல்லது சர்வதேசத்தின் மீதோ
குற்றஞ் சுமத்துவது என்பது ஓர் அரசியல் நாகரிகமிக்க செயலெனக் கொள்ள முடியாது.
ஈரானிலிருந்து
எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா
உத்தரவிட்டதும் அதனிடம் சரணாகதி அடைந்து அந்த நாடு
சொன்னது போல் நடந்து கொண்ட இலங்கை அரசானது, தமிழர் பிரச்சினைக்கு
ஏதாவது தீர்வை வழங்குங்கள் என அதே அமெரிக்கா கேட்டால் சர்வதேச சண்டித்தனம் பேசுவது எந்த வகையில் நியாயமானது?
ஆகவே, தமிழ் மக்களின்
பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே
பின்னடிக்கின்றது என்ற இந்த விவாதம் வெறும் வெட்டிப் பேச்சே தவிர யதார்த்தமானதல்ல
என்பதனை சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல.. அண்மைக் காலத்தில் உள்ளுரில் பேசிப் பேசியே புண்ணாகிப் போன தமிழர் விவகாரத்துக்கு
ஒரு தீர்வு கிட்ட வேண்டுமென்றால் அது சர்வதேச நாடொன்றினதோ அல்லது ஐ.நாவின்
மத்தியஸ்தத்துடனோ இடம்பெற வேண்டும்.
மேலும், தமிழர் பிரச்சினை தொடர்பில் எதிர்காலத்தில் எந்தப் பேச்சுவார்த்தைகள்
நடைபெறுவதாக இருந்தாலும் முதலில் அரச தரப்பானது தனது நிகழ்ச்சி நிரல் ஒன்றினை முன்வைக்க
வேண்டியது அவசியம். எந்த விடயங்கள் தொடர்பில் பேசுவது, பேச முடியும் என்பதனை
அரசாங்கம் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். இவை இரண்டும் இல்லாத தமிழர் பிரச்சினைக்கான
எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் நிச்சயமாக தலையைச் சுற்றி வந்தும் மூக்கைத் தொட
முடியாது நிலையிலேயே காணப்படும்.
தென்னாபிரிக்காவில்
நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தகாலத்தில் அன்றைய தென்னாபிரிக்க அரசு ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு
அனைத்துப் பிரச்சினைகளையும் மிக இலகுவாகத் தீர்த்து வைத்தமை உலகறிந்த விடயம்.
அவ்வாறான தீர்வானது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினாலும் காணப்பட்ட இணக்கத்தின்
அடிப்படையிலேயே எட்டப்பட்டது. இன்று அந்த நாட்டில் நல்லிணக்கமும் ஐக்கியமும் கட்டியெழுப்பப்பட்டு
அமைதிமிக்கதொரு நாடாக அது திகழ்கிறது.
தென்னாபிரிக்க
அரசின் விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வுமே இவ்வாறானதொரு அமைதி நிலை அங்கு கட்டியெழுப்பப்பட்டதற்கு
பிரதான காரணங்களாகின. தென்னாபிரிக்க அரசின் இந்தச் செயல் இன்று முழு உலகின் அரசியல் முன்னுதாரணங்களில் ஒன்றாகவே பேசப்படுகிறது. ஆனால், தென்னாபிரிக்க
அரசின் இந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது
அந்த நாட்டுக்குச் செல்வதனைக் கூட குற்றம் கண்டுள்ள இலங்கை அரசு அபாண்டங்களையும் சுமத்தி
வருகிறது.
எனவே,
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றினை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் இலங்கை
அரசு முதலில் திரிகரணசுத்தியுடன் செயற்பட வேண்டும் என்பதும் அவசியமாகும். இதனை விடுத்து இவ்வாறான
சந்தர்ப்பவாத பேச்சுகளைப் பேசுவதனால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை. தலையில்
கழிவை வைத்துக் கொண்டு தன்னைப் புனிதவான் என நினைக்கும் இறாலின் நிலையிலிருந்து
அரசு முதலில் மீள வேண்டும்.



No comments:
Post a Comment