ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
“இனி எந்தத் தமிழ் இளைஞனும் சயனைட் குப்பிகளைக் கழுத்தில் தொங்கவிட வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடியதான வழிகளை நாம் ஏற்படுத்துவோம்”. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இவை அவரால் இன்று நேற்றுத் தெரிவிக்கப்பட்டது அல்ல.. வன்னி யுத்தத்தை வெற்றி கொண்ட பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தவையாகும்.
இது மட்டுமல்ல, இவ்வாறான பல கருத்துகளை ஜனாதிபதியும் அவரது அமைச்சரவை சகபாடிகளும் வெளியிட்டு வந்தனர். யுத்தம் முடிந்த பின்னரான வடக்கின் எதிர்கால நிலைமைகள் தொடர்பில் இவர்களால் தெரிவிக்கப்பட்ட இவ்வாறான கருத்துகள் இன்று வெறும் வார்த்தைகள்தான் என்பதனை நிரூபிப்பது போன்ற சம்பவங்களே வடக்கு, கிழக்கில் விசேடமாக, யாழ். மாவட்டத்தில் இடம்பெறுகின்றன.
அந்த மாவட்டத்தில் சிவில் நிர்வாகம் என்பது அரிதான ஒரு விடயமாகவே அமைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் அந்த மக்களின் ஜனநாயக ரீதியிலான உரிமைகளும் இன்று முற்றாக மறுக்கப்படுகிறது அல்லது அவற்றுக்கான அனுமதியே இல்லை என்ற நிலையும் தோன்றியுள்ளது.
யாழ். மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதிக்குப் பின்னராக எழுந்துள்ள நிலைமைகள் இவற்றுக்குச் சான்றாகின்றன. நாட்டின் இறைமை, ஜனநாயகம் ஐக்கியம், தெற்கும் வடக்கும் ஒன்றே என்றெல்லாம் கருத்து வெளியிடும் இன்றைய அரசாங்கம் அதே ஒன்றுபட்ட நாட்டுக்குள் யாழ். குடா. மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கண்டு கொள்ளாது இருப்பது வேதனைக்குரியது. அந்த மக்களின் சட்டரீதியான, சுதந்திரமான செயற்பாடுகளுக்குக் கடிவாளம் இடும் நடவடிக்கையானது இன்று உள்ளுரிலும் சர்வதேசத்திலும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஜனன தினம் தொடர்பான நிகழ்வுடன் ஆரம்பித்த வடக்கின் அசாதாரண நிலை இன்று வடபுல பூமியை ஓர் அச்சத்துகுரிய நிலப்பரப்பாக மாற்றியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள், சிவிலியன்கள் என வகை தொகையின்றி கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் தற்போது வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களது விரைவான விடுதலை என்பது யாராலும் எதிர்வு கூற நிலையில் உள்ளது.
மேலும், கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கும் புனர்வாழ்வு அளிக்காமல் விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு வழங்காமல் இவர்களை விடுவிக்க முடியாது என்ற விடயத்தை தான் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பல்கலைச் சமூகத்துக்கு ஏலவே தெரிவித்து விட்டதாகவும் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, இவர்களைத் தவிர மேலும் பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்ட வண்ணமே உள்ளனர். இவர்கள்மீது இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டமே பாய்கிறது. இதுவரை சுமார் 47 பேர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளி விபரங்கள் கைது செய்தோர் தரப்பால் வெளியிடப்படா விட்டாலும் இவர்களின் கைது தொடர்பில் யாழ். மாவட்டத்தில் செயற்படும் மனித உரிமைகள் பிராந்திய அலுவலகங்களுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.
இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாதுகாப்புத் தரப்பானது தமது பக்க நியாயங்களை முன்வைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் புலி உறுப்பினர்கள், அரசிடம் சரணடையாதவர்கள், புனர்வாழ்வு பெறாதவர்கள், புலி சார்பானவர்கள் என்றெல்லாம் கைதானாவர்கள் குறித்த நியாயப்படுத்தல்கள் தாராளமாகவே கூறப்படுகிறது. இதனை விட தற்போது வெளியாகியுள்ள இன்னொரு செய்தி வடபுல மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் இன்னும் ஆயிரம் பேர் மறைந்து வாழ்கின்றனர் என்றும் அவர்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் எனவும் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இது இன்று தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளன. இதனால் யாழ். இளைஞர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது சுயமானதொரு வீட்டுக் காவல் கைதிகள் நிலைக்குத் தங்களைத் தாங்களே தள்ள வைத்துள்ளனர். பலர் ஒளிந்து மறைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது, நாட்டிலுள்ள சிறைசாலைகள் பலவற்றிலும் ஏலவே 400 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மேலும் தமிழர்களைக் கைது செய்து சிறை நிரப்பும் வேலையையே அரசு செய்து வருகிறது.
இதேவேளை, படை தரப்பில் இன்னொரு கருத்தும் வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் கருத்தானது ஒரு வகையில் நகைச்சுவையாகவும் உள்ளது, முன்னாள் போராளிகளில் பெரும்பாலானோர் தற்போது சட்டவிரோதச் செயல்களிலும் கொந்தராத்துக் கொலைகளிலும் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். சமூகச் சீரழிவான நடவடிக்கைளிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர் என்றெல்லாம் படை தரப்பு கூறுகிறது.
இலங்கையில் இன்று குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்று அண்மைக்கால அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரில் பெரும் எண்ணிக்கையானோர் இலங்கை இராணுவத்தை விட்டுச் சென்ற படைவிட்டோடிகள் என்பதனையும் அது துல்லியமாகச் சுட்டிக் காட்டியுள்ளது. இவ்வாறானவர்களைச் சுதந்திரமாகச் செயற்பட விட்டு விட்டு முன்னாள் போராளிகளே இவ்வாறு நடக்கிறார்கள் என்று கூறுவதானது நகைச்சுவையானது
யாழ். குடாவில் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது உள்ளுரில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் பகிரங்கமாகத் தெரிந்த உண்மை. அவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைதானவர்களில் எத்தனை பேர் முன்னாள் புலி இயக்கப் போராளிகள் என்ற தரவுகளையும் படை தரப்புத் தெரிவிக்க வேண்டும். அப்பாவி ஒருவரைக் குற்றவாளியாக்க வேண்டும் என்பதற்காக அநியாயங்களைச் சோடித்துச் சொல்வது எந்த வகையிலும் மனு நீதியாகாது.
மேலும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவே உண்மை. அந்த மாணவர்களின் போராட்டத்தை அடக்கி அவ்வாறான நிலை எதிர்காலத்தில் தோன்றாதிருக்கும் ஓர் அச்சமூட்டும் நடவடிக்கையாகவே அரசு இவர்களைக் கைது செய்தது. சாத்வீக ரீதியான போராட்டமானது ஜனநாயக உரிமை என்பதனை நன்கு தெரிந்துள்ள அரசாங்கம், அவ்வாறு செய்தால் தன்மீது பழி நேரும் என்பதற்காக ஏதோவெல்லாம் காரணங்களைக் காட்டியே இவர்களைக் கைது செய்துள்ளது. ஆனால், தெற்கில் இன்று பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் பாரிய தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களை இந்த அரசு கைது செய்கிறதா? இல்லை... அவ்வாறு கைது செய்தாலும் அவர்கள் ஓரிரு தினங்களில் விடுதலை பெற்று விடுவர். அவர்கள் மீது பயங்கரவாதச் சட்டம் பாய்வதில்லை. புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவதும் இல்லை. இருப்பினும் வடக்கில் மட்டும் வேறு நிலை.. தெற்கில் முன்னெடுக்கப்படும் பாரிய போராட்டம் போன்றல்லாது வடக்கில் மென்மையாக முன்னெடுக்கப்படும் சாத்வீக போராட்டங்களுக்கும் அனுஷ்டானங்களுக்கும் இன்று பயங்கரவாத முலாம் பூசப்படுவது வேடிக்கையானது.
யுத்தம் முடிவடைந்து தற்போது மூன்று வருடங்கள் முடிந்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் தரப்பைப் பொறுத்த வரையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று வேண்டும் அவர்கள் இன்னும் கேட்கவில்லை. பாரிய யுத்தத்தினால் காவு கொள்ளப்பட்ட அந்த மக்கள் இன்று கையேந்தி வேண்டி நிற்பதெல்லாம் தங்களது அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வை மட்டுமாவது தாருங்கள் என்பதே. அந்த மக்கள் தொடர்ந்தும் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலைக்கே தள்ளப்பட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் அந்த மக்கள் தங்களது அடிப்படைப் பிரச்சினைகளையும் மறந்து விட்டு புதியதொரு பிரச்சினைக்குத் தற்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. வடக்கில் புலி வேட்டை என்ற பேரில் வேட்டையாடப்படும் தங்களது எஞ்சிய உறவுகளையும் தங்களையுமே பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் திடீரென அவர்கள் தள்ளப்பட்டுள்ளமை மிக வேதனையான விடயம்.
யாழ். குடா மக்கள் சில தரப்பினரின் அச்சுறுத்தல், அடாவடித்தனங்களுக்கு ஏலவே முகங்கொடுத்துள்ள நிலையில் இன்று அரச பாதுகாப்புப் படையின் நெருக்கடிகளையும் என்றும் இல்லாத அளவில் எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது என்பது எதிர்காலத்தில் இந்த நாட்டில் ஆரோக்கியமான சூழ்நிலையைக் கட்டியெழுப்புமா என்பதும் இப்போது சந்தேகத்துக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவங்களை உற்று நோக்கும் போது யுத்தத்தின் பின்னர் அரச தலைவராலும் அமைச்சர்களாலும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நம்பிக்கைகள் அனைத்தும் இன்று தவிடுபொடியாகி உள்ளன என்ற கசப்பான உண்மையைக் கூறியே ஆக வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் தவறு செய்து விட்டார்கள் என்றால் அந்த அமைப்பைச் சார்ந்த ஒரு சமூகத்தைத் தொடர்ந்தும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும் வக்கிரமத் தனத்தோடு அவர்களை அடக்கி ஆள முயற்சிப்பதும் காலோசிதமான விடயமல்ல. உலக ஜனநாயகத்தைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் அரசு உள்ளுரில் ஒரு சமூகத்தை அடக்கியாள முயற்சிப்பது சுவரில் வீசிய பந்து முகத்தைப் பதம் பார்த்த கதையாகவே முடிந்து விடும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இன்று அரசினது முக்கிய தேவை தமிழ் மக்களின் மனதை வெல்வதே ஆகும். இதனை விடுத்து இவ்வாறான தேவையற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது எந்த வித்ததிலும் பொருத்தமான ஒன்றல்ல.. அது அந்த மக்களுக்கு மேலும் விரக்தியையே ஏற்படுத்தும்.
தமிழ் மக்களின் ஆரம்ப கால சாத்வீக போராட்டத்தின் நதி மூலங்களை நாம் எடுத்து நோக்கும் போது பல்கலைக்கழக விடயமும் அதில் ஒன்றாகவே காணப்படுகிறது. அன்று பல்கலைக்கழகத் தரப்படுத்தலை அறிமுகப்படுத்தியதன் ஊடாக தமிழ் மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பது பரகசியமான விடயம். ஆனால், அது இன்று இன்னொரு வடிவம் பெற்று பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் வேட்டையாக மாறியுள்ளது. இவ்வாறான விடயங்களே போராட்ட உணர்வுகளையும் சமூக விடுதலைக்கான துணிவுகளையும் ஊக்குவிக்கின்றன.
எந்தச் சமூகத்துக்கு எதிராக அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு, ஜனநாயகத்தின் குரல்வளைகள் நெரிக்கப்படுகிறதோ அந்தச் சமூகத்திலிருந்து போராட்டங்களும் புரட்சிகளும் வெடித்துக் கொண்டே இருக்கும் என்பதனையும் அவ்வாறானவற்றை இரும்புக் கரங்கள் கொண்டு அடக்கினாலும் அது பின்னர் மீண்டெழும் என்பதனையும் அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ள முடியாத பால்குடி நிலைக் குழந்தையாக இருப்பது விசித்திரமானதே.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின், “இனி எந்தத் தமிழ் இளைஞனும் சயனைட் குப்பிகளைக் கழுத்தில் தொங்கவிட வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் இனி சிறந்ததொரு வாழ்கையை அமைத்துக் கொள்ளக் கூடியதான வழிகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்போம்” என்று ஜனாதிபதி அன்று கூறிய வார்த்தைகள் அர்த்தமற்றதாகிப் போய்விடுவதுடன் இவ்வாறானதொரு நிலையை மீண்டும் இந்த அரசே ஏற்படுத்தியது என்ற பழியும் வந்து சேரும்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 06-01-2013
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 06-01-2013
No comments:
Post a Comment