பதின்மூன்றுக்கு பதில் மூன்று என்ன?
“ ஒய்யாரப் கொண்டையில் தாழம் பூவாம்
உள்ளே இருப்பது ஈறும் பேனாம்”
ஏ.எச். சித்தீக் காரியப்பர்
‘தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விடல்” என்ற உள்ளுர் பழமொழியானது இன்றைய அரசினைப் பொறுத்தவரை அதன் பிரதான உள்ளுர் ராஜ தந்திரமாகப் போயுள்ளது. தான் ஒரு விடயத்தைச் சாதிக்க வேண்டுமாயின் அதனை தனது ஆதரவுச் சக்திகள் மூலம் தூண்டி விட்டுத் தன்னை நல்ல பிள்ளையாக்கி நடித்துக் கொள்வதில் அபார திறமை கொண்ட அரசாங்கமாக இன்றைய அரசு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.
விசேடமாக, உள்ளுர் தமிழர் அரசியல் தொடர்பிலேயே அதன் ராஜதந்திர நகர்வுகள் இந்தப் பழமொழியைக் ஒத்துக் காணப்படுகின்றன. இதற்கு உதாரணங்களாக மூன்று விடயங்களை இங்கே முன்வைக்க முடியும்.
1. தமிழ் மக்கள் வாழ் பிரதேச எல்லைகளை மாற்றுதல், தமிழ் பேசும் மக்களின் குடிப்பரம்பலை சிதைத்தல் உட்படலான பல தீமைகளைக் கொண்ட சட்ட மூலமான திவிநெகும சட்டமூலத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ உட்படலான முக்கிய அமைச்சர்கள் ஊடாக நிறைவேற்றி அதன் மூலம் தனது இலக்கை அரசு அடைந்தமை.
2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது அதனைக் குழப்பியடிக்கும் வகையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்ற விடயத்தை புகுத்துவதற்காக ஒரு கேடயமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைப் பயன்படுத்தி அவர் ஊடாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் தேவையை முன்வைத்து அதன் மூலமே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ற நிலைமையை அரசு உருவாக்கியமை. பின்னர் அமைச்சர் டக்ளஸ் கேட்டுக் கொண்டதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கிறோம் என கூறியமை.
3. இப்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் முக்கிய சில திருத்தங்களைச் செய்வதற்காக தான்சார்பு அரசியல் சக்திகளையும் அரச அதிகாரிகளையும் தூண்டி விட்டு, இந்தச் சட்டமூல திருத்தத்தின் மகாபெரிய அவசியம் குறித்து பல்வேறு கருத்துகளையும் பரப்பி விட்டு இன்று அந்தச் சட்டமூலத்தில் திருத்தங்களைச் செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போன்ற விடயங்களைக் குறிபிட முடியும்.
இப்போதுள்ள 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் கீழ் வடக்கில் மாகாண சபைத் தேர்தலொன்று இடம்பெற்றால், அங்கு மீண்டும் புலிகள் ராஜ்யம் உருவாகி, தமிழீமே உயிர்பெற்று விடும் என்று பேய்க் கதைவிடும் அளவுக்குப் பிரசாரங்கள் இன்று முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போதிருக்கும் 13 ஆவது திருதச் சட்டத்தில் மிச்சம் மீதியாகவுள்ள சில விடயங்களையும் இல்லாமல் செய்யும் இந்த விடயத்துக்கு “ மாகாண சபைகளின் அதிகாரங்களைச் சீரமைப்பது” என்ற ஒரு கௌரவமான வார்த்தையையும் அரசு தரப்பார் இப்போது தேடிப்பிடித்துப் பயன்படுத்தி வருகிறார்கள். “ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம் உள்ளே இருப்பது ஈறும் பேனாம்” என்ற கூறுவதற் ஒப்பானதுதான் அரச தரப்பாரின் இந்த வார்த்தை ஜாலம்.
இலங்கை – இந்திய (ராஜீவ் – ஜே .ஆர்) ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட இந்த 13 ஆவது திருத்தச் சட்டமூலமானது பல தடவைகள் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சட்டமூலம். ஏலவே பலவீனமடைந்து காணப்படும் இந்தச் சட்டமூலத்தில் மேலும் கைவைக்க முயல்வதானது, மீண்டும் அது தமிழ்பேசும் மக்களை விசேடமாக, வடமாகாண தமிழர்களை, அவர்களின் அதிகாரங்களை, உரிமைகளை இலக்கு வைப்பதாகவே உள்ளது. இன்று வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறுமோ இல்லையோ 13 ஆவது திருத்தத்தில் மேலும் திருத்தம் வரும் என்பது மட்டும் உறுதியாகி விட்டது.
தமிழ்த் தேசியக் கூட்மைப்பு வடமாகாணத்தில் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுக்குச் சவாலாகி விடும் என்ற ஒரே நோக்கத்திலேயே இந்தத் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. பொலிஸ், காணி அதிகாரங்களை அவர்கள் பயன்படுத்தினால் நமது கதி என்னாவது என்று தூக்கத்திலும் புலம்பிக் கொண்டிருக்கும் இந்த அரசு இதன் மூலம் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை இப்போதே தீர்மானித்து விட்டது போலும் தெரிகிறது.
மேலும் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் பிரதானமாக இரண்டு விடயங்களிலும் பொதுவாக மூன்று விடயங்களிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றினை இவ்வாறு குறிப்பிடலாம்.
1. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டு சரத்துக்களைச் (விடயங்கள்) சீர்திருத்தத்துக்கு உட்படுத்தல். (இல்லாது ஒழித்தல்)
(ஏ) பொலிஸ் அதிகாரம்.
(பி) காணி அதிகாரம்.
2. மாகாண சபைகள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது அனைத்து மாகாண சபைகளினதும் ஆதரவு தேவை என்ற பதத்துக்குப் பதிலாக, பெரும்பான்மையான மாகாண சபைகளின் ஆதரவுடன் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற பதத்தை உள்வாங்கல்
மேற்சொன்ன இரண்டு விடயங்களும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை குறிவைத்துச் செய்யப்படும் திருத்தங்களாகும். இந்தச் சரத்துகள் நீக்கப்படும் பட்சத்தில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் அதிகாரம் என்பது வெறும் பதவி அலங்கரிப்பாகவே இருக்குமே தவிர வேறெதனையும் அவற்றினால் சாதிக்க முடியாது.
3. இது தவிர, பொதுவான திருத்தத்துக்குள்ளாகும் மூன்றாவது விடயமாக உள்ளதானது, இரண்டு அல்லது மூன்று மாகாண சபைகளை இணைத்து ஒரே மாகாண சபையாக செயற்படுத்தும் அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியின் தத்துவாதத்தை இல்லாமல் செய்வதாகும். ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்தல் என்ற மாயையிலான ஒரு பம்மாத்தாகவே இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்டவுள்ளது. இதனைக் குறைத்தாலும் பயனில்லை குறைக்காவிட்டாலும் பயனில்லை. ஏனெனில் முன்னர் நிறைவேற்றப்பட்டு தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் “திவிநெகும“ சட்ட மூலமானது பிரதேச எல்லைகளை, மாகாண எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகரிக்கும் அதிகாரம் தன்னகத்தே கொண்டதாகவுள்ளது.
இது இவ்வாறிருக்க, இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கினாலும் பரவாயில்லை என்ற நிலைக்கும் அரசு வந்துள்ளது. இதற்கான கோரிக்கையை முன்வைக்க தான்சார்ந்த அரசியல் சக்திகளின் ஊடாக முன்வைக்க அரசின் மேற்கொண்டுள்ள முனைப்புகளும் தெரியாத விடயமல்ல. அமைச்சர் தினேஷ் குணவர்தன உட்பட பலர் இன்று 13 ஆவது திருத்தச் சட்டமூலம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.
ஆக, மொத்தத்தில் வட மாகாணத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்டும் இந்த மாற்றங்கள் என்பது அங்கு தமிழர்கள்தான் ஆண்டாலும் அதிகாரம் அவர்களிடம் இருக்கக் கூடாது என்பதனையே காட்டுகிறது. அதாவது அரசியல் ரீதியில் வட மாகாணத் தமிழர்கள் தொடர்ந்தும் மத்திய அரசிடம் பிச்சையேந்தும் பாத்திரங்களாக இருக்க வேண்டுமென்பதே இன்றைய அரசின் நோக்கம், விருப்பம், திமிர்த்தனம் என்பது மட்டும் நிச்சயம்.
இதேவேளை, இனப்பிரச்சினையத் தீர்த்து வையுங்கள், தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்குங்கள் என்று கூறும் இந்தியா உட்படலான சர்வதே சமூகம் இந்த விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்பதுதான் இன்றைய கேள்வி. அதேவேளை, இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தத் திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அல்லது சட்டமூலமே முற்றாக நீக்கப்படுமாயின் அது அந்த நாட்டுக்கு ஒரு வெட்கக்கேடான விடயம் மட்டுமல்ல.. கௌரவப் பிரச்சினையாகவும் அமைந்து விடும்.
இந்தியா எம்மைப் பகைத்தால் சீனா எமக்கு ஆதரவு வழங்குமென்ற ஒரு நப்பாசை நம்பிக்கையுடன் இந்தியாவை மீறியும் இலங்கை அரசு இந்த விடயங்களை முன்னெடுக்கவும் துணியலாம்.
மேலும், பொலிஸ், காணி அதிகாரங்கள் கொண்ட 13 ஆவது திருத்தச் சட்டமூலத்துடன் வடமாகாண தேர்தல் நடத்தப்படுமானால் அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பிரிவினைவாதத்துக்கு வித்திடும். முப்பது வருட யுத்தத்தை வெற்றி கொண்டதன் பயனை இல்லாமல் செய்துவிடும் என்றெல்லாம் அரசதரப்பார் கூறி வருகின்றனர். அப்படியாயின் இவையெல்லாம் ஏற்படாத வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறானதொரு நியாமான தீர்வை வழங்க முடியும் என்பதனையும் அவர்கள் சொல்ல வேண்டுமல்லவா?
தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச அதிகதரங்களைக் கொண்ட 13 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கே திருத்தம் என்றால், எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு ஒன்றினை அரசு ஒருதலைப்பட்சமாக முன்வைக்குமாயின் நிச்சயமாக அது ஒரு கண்துடைப்பான தீர்வுப் பொதியாகவே அமையும் என்பது மட்டும் நிச்சயம்.
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 09-06-2013

உண்மையான நிலயினை கண்ணாடியில் காட்டியுள்ளீர்கள் நன்றி
ReplyDeleteநல்ல்தொரு அலசல் கட்டுரை.
ReplyDeleteஉங்கள் எழுத்து தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.